புரட்சி, வன்முறை - பிரிக்க முடியாததா?
புரட்சி, போராட்டம், வன்முறை இவைகளை பிரித்து பார்க்க முடியாதா? வன்முறை இல்லாத புரட்சி சாத்தியமா, இல்லையா? சத்குரு விளக்குகிறார்.

கேள்வி:
தமிழ்நாட்டில் போராட்டங்கள் மூலமாக பல விஷயங்களை சாதித்துள்ளோம். ஆனால் அமைதியாக துவங்கும் புரட்சி சில நேரங்களில் வன்முறையில் வந்து முடிகின்றது. சோசியல் மீடியா, செய்தி சேனல்கள், மீடியா இவை அனைத்திலும் ட்ரெண்டிங் ஆகிவிடுகிறது, அனைவராலும் பேசப்படுகிறது. அப்படி பார்க்கும்போது, புரட்சி, போராட்டம், வன்முறை இவைகளை பிரித்து பார்க்க முடியாதா? வன்முறை இல்லாத போராட்டம் சாத்தியமா, இல்லையா?
சத்குரு:வன்முறைக்கும், புரட்சிக்கும் சம்பந்தமே கிடையாது
புரட்சியும் வன்முறையும் ஒருபோதும் ஒன்றாக இருக்க முடியாது. வன்முறையில் எந்த புரட்சியும் இல்லை. பழங்காலம் தொட்டு வன்முறை நடந்து கொண்டுதான் இருக்கிறது. வன்முறை நவீன கால பிரச்சனை அல்ல. மனிதர்கள் தோன்றிய காலம் முதல் வன்முறை நடந்துகொண்டு தான் இருக்கிறது. பேச்சில் ஆரம்பித்த பிரச்சனை, கைகளால் அடித்துக்கொள்வது, குச்சியில் அடிப்பது, கற்கள், குண்டுகள், துப்பாக்கி என இதுவரை வந்துவிட்டது. இது வன்முறைதான். இதில் புரட்சி எங்கு இருக்கிறது?
Subscribe
புரட்சி பற்றிய தெளிவான புரிதல்
புரட்சி என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் தான் வன்முறையும் புரட்சியும் ஒன்று என்று நினைக்கிறார்கள். புரட்சி என்றால் “இதுவரை மனிதர்களால் சாதிக்க முடியாததை சாதித்து காட்டுவது தான்.” இத்தனை கோடி வருடங்களாக இந்த பூமியில் மனிதர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். ஆனால் இரண்டே இரண்டு மனிதர்கள் சேர்ந்து வாழ முடிவதில்லை. அப்படி சேர்ந்து வாழ்ந்தால் அது புரட்சி. அதிசயமான புரட்சி. இப்படி 100 பேர் சேர்ந்து வாழ்ந்தால் மகத்தான புரட்சி. இப்படி 1000 பேர் சேர்ந்து வாழ்ந்தால் அது சொல்ல முடியாத புரட்சி. இந்த புரட்சியை தான் நாம் இங்கே ஆசிரமத்தில் செய்வதற்கு முயற்சி செய்துகொண்டே இருக்கிறோம். இன்னும் அது முழுமை அடையவில்லை. ஒரு படி முன்னே, ஒரு படி பின்னே என்று போய்க் கொண்டிருக்கிறோம். ஆனால் புரட்சி செய்ய வேண்டும் என்ற முயற்சி நடந்துகொண்டே இருக்கிறது.
நான் சரி, நீங்கள் சரி இல்லை - இதுவா புரட்சி?
நீங்கள் சரி இல்லை. நான் தான் சரி என்று சொல்லிக்கொள்வதா புரட்சி? பண்டைய காலம் முதல் இப்போது வரை, அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சனை இது. இதில் எந்த புரட்சியும் இல்லை. இதுவே வன்முறையாக மாறுகிறது. எனவே புரட்சிக்கும் வன்முறைக்கும் சம்பந்தமே இல்லை.
ஏன் இந்த ஆயுத புரட்சி?
கையில் துப்பாக்கி கொண்டு மற்றவர்களை சுட்டுத்தள்ள வேண்டும் என்பது உங்கள் ஆசை என்றால் முதலில் உங்களை சுட வேண்டும். அது குற்றமாகிவிடும் என்பதால் புரட்சி என்ற பெயரில் சுட்டுக்கொள்கிறோம். கையில் ஆயுதம் இல்லாத மனிதரை சுடுவது சரியல்ல. இருவரின் கைகளிலும் ஆயுதம் இருந்தால் சுட்டுக்கொள்ளலாம். சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் மனிதர்களை சுடுவதெல்லாம் புரட்சி ஆகாது. இதை வேண்டும் என்றால் பைத்தியம் என்று சொல்லலாம். கையில் ஆயுதம் வந்துவிட்டால் இதுபோன்று பைத்தியமும் சேர்ந்து வந்துவிடும். இது ஏனென்றால் ஆயுதம் ஒருவித சக்தியைக் கொடுத்துவிடுகிறது. சக்தியை யார் மீதாவது பயன்படுத்த வேண்டும் என்று ஆசை வந்துவிடுகிறது. இதை நான் லெபனானில் பார்த்தேன்.
அங்கு சீடர் மரங்கள் இருக்கின்றன. அந்த நாட்டின் தேசிய சின்னமே இந்த சீடர் மரங்கள் தான். 3000 வருடங்களுக்கு மேலாக ஒரு மரம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவ்வளவு அழகாக இருக்கிறது. அங்கு ஏதோ புரட்சி நடந்த பின் அனைவரின் கைகளிலும் துப்பாக்கி வந்துவிட்டது. துப்பாக்கி வந்தவுடன் செய்வதறியாமல் அந்த மரத்தை தோட்டாவால் சுட்டுக்கொண்டே இருந்தனர். 3000 வருடங்களாக வாழ்ந்து வந்த மரம். இவர்களுக்கு துப்பாக்கி பயிற்சி எடுக்க வேண்டுமென்றால் வாழ்ந்து கொண்டிருக்கும் மரத்தின் மீது சுடுகிறார்கள். அந்த மரம் அவ்வளவு பெரியது, கண் இல்லாதவர்கள் கூட சுட முடியும். அவ்வளவு பெரிய மரம் அது. 3000 வருடங்களில் எத்தனையோ முட்டாள்கள் இந்த உலகத்தில் வந்திருந்தாலும், எவருக்கும் இதுபோன்ற உணர்வு வரவில்லை. புரட்சி என்ற பெயரில் பெரிய முட்டாள்தனம் வந்துவிட்டது.
ஆயுத புரட்சி நமக்கு தேவையா?
நமக்கு புரட்சி அவசியம். அதற்கு எதிர்மறையாக நான் பேசவில்லை. ஆனால் வெளிநாட்டிலிருந்து வந்து நம்மை ஆள முயற்சி செய்யும்போது ஆயுத புரட்சி செய்ய வேண்டிய அவசியம் வரலாம். ஆனால் அப்படி ஒரு நிலைமை வந்தபோது கூட நாம் ஆயுத புரட்சி செய்யாமல் வேறு வழியில் அதை முடித்துக்கொண்டோம். ஆனால் நம் நாட்டிற்கு உள்ளேயே ஆயுத புரட்சியை செய்வது நமக்கு நன்மை விளைவிக்காது. அதோடு ஆயுத புரட்சியின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது. இனி அதற்கு வாய்ப்புகளும் இல்லை.
இப்போது நமக்கு தேவையான புரட்சி எது?
நம் நாட்டில் ஆயுத புரட்சியை உருவாக்க பல முயற்சிகள் நடந்திருக்கிறது. புரட்சி நிச்சயம் தேவை தான். நம் நாட்டில் இரண்டு புரட்சிகள் தேவையாக உள்ளது. அவை, பொருளாதாரப் புரட்சி மற்றும் ஆன்மீகப் புரட்சி. பாதிக்கும் மேற்பட்ட மக்கள் ஏழ்மையில் இருக்கிறார்கள். மற்றொரு பாதி மக்களிடம் பணம் இருக்கிறது. ஆனால் பணம் சேர்ந்து போவதால் அவர்கள் முட்டாள்களாக மாறிவிடுகின்றனர். அதனால் அவர்களுக்கு ஆன்மீகப் புரட்சி தேவையாகிறது. ஏழ்மையில் உள்ளவர்கள் ஆயுதப் புரட்சியில் ஈடுபட்டால் மீதமுள்ள மக்களின் உயிரை எடுக்கவேண்டி வரும். அதற்கு மாற்றாக, அவர்களுக்கு பொருளாதாரப் புரட்சி. பணம் இருப்பவர்களுக்கு ஆன்மீகப் புரட்சி. இதன் மூலம் தீர்வு கிடைக்கும், வாழ்க்கையும் நல்லபடியாக நடக்கும்.