மஹாபாரதம் பிற பகுதி

இதுவரை:  பாண்டவர்களின் புதல்வர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது அஸ்வத்தாமன் அவர்களை கொல்கிறான். இதற்கு பழிதீர்க்கும் விதமாக, அஸ்வத்தாமன் நெற்றியில் சூடியிருந்த மாய பதக்கத்தை அர்ஜுனன் வெட்டிவிடுகிறான். அதை இழந்தவுடன் அஸ்வத்தாமன் சித்த சுவாதீனமற்றவன் ஆகிறான்.

கேள்வியாளர்: சத்குரு, நீங்கள் கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனின் உறவை நரன் நாராயணனோடு தொடர்புபடுத்தி இருந்தீர்கள். இதைப் பற்றி எங்களுக்கு இன்னும் சற்று விளக்க முடியுமா?

சத்குரு: இந்த நரன்/நாராயணன் எனும் மையக்கரு பலவாறாக வடிவெடுக்கிறது. இதன் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அந்த கடவுளே ஆனாலும், இந்த மனிதனின் உலகத்திற்கு வந்தால், அவருக்கு மனிதனின் துணை தேவைப்படுகிறது. கடவுள் உங்கள் வீட்டிலேயே வாழ்கிறார் என்றாலும் கூட, அவருக்கு உங்களின் உதவி தேவைப்படுகிறது - இல்லையென்றால் அங்கே வேலை நடக்காது. உங்களிடம் தெய்வீகமே குடியிருக்கலாம், ஆனால் உங்கள் ஒத்துழைப்பு இல்லாமல் அதனால் பலன் ஏற்படாது. இதுவே இந்த இணை வெளிப்படுத்தும் செய்தி.

வெவ்வேறு பெயர்கள், ஒரே கருத்துரு

நரன்/நாராயணன், இருவரும் ஜோடியாக பலமுறை இதை நடத்தியிருக்கிறார்கள். அப்படியானால் அர்ஜுனன்/கிருஷ்ணன் இருவரும் அதே மனிதர்கள் தானா? அர்ஜூனனை பொறுத்தவரையில், அதே உயிர் என நாம் கூறமுடியும். ஒரு குறிப்பிட்ட அளவு ஞாபகப் பதிவுகள் அவனை தாங்கிச் செல்வதுடன், ஒரு குறிப்பிட்ட எலும்பு உறுதியையும் அளிக்கிறது. இதை நாம் கர்மா என அழைக்கிறோம். கிருஷ்ணரைப் பற்றி பிறகு பார்ப்போம், ஏனென்றால் கிருஷ்ணர் என்று ஒன்றுமில்லை. கிருஷ்ணர் ஒரு மிக மெல்லிய ஆச்சரிய கொத்து போன்றவர். அனைத்திற்கும் எது அடிப்படையாக இருக்கிறதோ, அது ஒரு குறிப்பிட்ட விதத்தில் தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்கிறது; எந்த நேரத்திலும் அது தன்னை கட்டவிழ்த்துக்கொள்ள முடியும். இதையே வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நரன் என்றால், அதே மூலமானது, சற்று நிர்பந்தமான தன்மையோடு வடிவெடுத்திருக்கிறது - நாராயணன் என்றால், அதே மூலமானது இன்னும் சற்று விழிப்புணர்வான தன்மையில் வடிவெடுத்திருக்கிறது.

நரன் என்றால், அதே மூலமானது, சற்று நிர்பந்தமான தன்மையோடு வடிவெடுத்திருக்கிறது - நாராயணன் என்றால், அதே மூலமானது, இன்னும் சற்று விழிப்புணர்வான தன்மையில் வடிவெடுத்திருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

விழிப்புணர்வு என்ற சுமையால் நாராயணன் சுயமாக நிகழ்த்தும் செயல்கள் குறிப்பிட்ட அளவில் மட்டும் இருக்கிறது. இன்னும் சற்று நிர்பந்தமான நிலையில் உள்ள நரனை அவர் செயல் செய்வதற்கு தேர்வு செய்கிறார். இதே மையக்கரு மற்ற கலாச்சாரங்களிலும் வெளிப்படுகிறது - கடவுளும் அவரது மகனும் இணைந்து செயல்படுவது. நரன்/நாராயணன் என்றால் இதுதான் - ஒரே மூலம் இன்னும் சற்று அல்லது முழு விழிப்புணர்வோடு தன்னை ஒரு நிலையில் கட்டமைத்துக் கொள்கிறது, மற்றொரு நிலையில், கட்டாயங்களுக்கு உட்பட்ட நிர்பந்தமான நிலையோடு தன்னை கட்டமைத்துக் கொள்கிறது. ஒரு நிர்பந்தத்தில் உள்ள உயிரானது செயல் செய்வதற்கு இன்னும் ஆற்றலோடு இருக்கிறது; ஒரு விழிப்புணர்வான உயிர் தீவிர செயலில் இருக்கக்கூடாது. இதுதான் குறியீடாக வெளிப்படுகிறது.

கிருஷ்ணர் ஒரு தேரோட்டியாக மட்டுமே வருகிறார்; அவர் போர் செய்யவில்லை; அவர் செயலில் ஈடுபடவில்லை. நீங்கள் விழிப்புணர்வான நிலை மற்றும் செயல் என ஒரே நேரத்தில் இரண்டிலும் ஈடுபடும் "குற்றத்தை" செய்யும்போது, பல வழிகளிலும், உங்களை நீங்களே முடக்கிக்கொண்டு, உங்கள் வாழ்நாள் மற்றும் நீங்கள் அடையக்கூடிய வாய்ப்பு, உங்கள் வாழ்க்கை வெளிப்படுத்தும் ஆச்சரியம் ஆகியவற்றை குறுக்கிக் கொள்கிறீர்கள். எனவே அவர்கள் இருவரும் இணைந்து செயல்படுகிறார்கள். இதுவே கிருஷ்ணர் தானே செயல்படுவது என தேர்வு செய்திருந்தால் அப்போது, அவர் யார், அவரது வீச்சும் காலமும் எந்தளவு நீடிக்க முடியும் என்பதற்கான வரையறையும் குறைந்துவிடும். ஆனால் இந்த வாழ்க்கையில், எவ்வளவு காலம் இருக்கிறது என்பது அவருக்கு ஒரு பொருட்டாக இல்லை; அவரது வீச்சு எவ்வளவு தூரத்துக்கு இருக்க முடியும் என்பதை மட்டுமே பார்க்கிறார்.

செயல் - ஆம், பலன் - இல்லை

இந்த மனித மனம் மற்றும் மனித உடல் - இவை மட்டுமே தனித்துவமானவை. எனவே இங்கே, "இன்னும் கொஞ்சம் அதிகமாக" என்பது உடல் மற்றும் மனதைக் கடந்தது, உலகமயமானது, கிருஷ்ணர்/நாராயணன் என்ற வடிவத்தில் வருகிறது. அந்த 'இன்னும் கொஞ்சம் அதிகமாக' என்பது எப்போதுமே அர்ஜுனன்/நரனுடன் பயணிக்கிறது. கிருஷ்ணர், "ஓ அர்ஜுனா, நான் உனக்கு கட்டுப்பட்டவனாக இருக்கிறேன். உன் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நான் உன்னுடன் இருப்பேன், நீ செய்யும் அனைத்திலும் உன்னுடன் இருப்பேன். நீ செய்வதை என்னிடம் விட்டுவிடு. தயக்கம் வேண்டாம்; வெறுமனே செயல்படு" என்கிறார். இந்த வார்த்தைகளுக்கு பின்னால் உள்ள புத்திசாலித்தனத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். சாதாரணமாக இது பற்றிய புரிதல், கிருஷ்ணரே "நீ செய்வதை என்னிடம் விட்டுவிடு" என்று சொல்லிவிட்டார். எனவே நான் செய்வதை விட்டுவிட்டு படுத்து தூங்குவேன் என்பதாகவே இருக்கும். நான் யாரிடமாவது, "எதற்கும் கவலைப்படாதீர்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று கூறிவிட்டால் போதும், அந்த முட்டாள்கள் எதையும் செய்யமாட்டார்கள்.

கிருஷ்ணர், "அதை என்னிடம் விடு, வெறுமனே செயல்படு" என்று கூறும்போது, அவர், "முடிவை என்னிடம் விடு. செயலை என்னிடம் விடாதே" என்று தான் கூறுகிறார். செயல் இப்போதும் உங்களிடமேதான் இருக்கிறது.

கிருஷ்ணர், "என்னிடம் விட்டுவிடு, வெறுமனே செயல்படு" என்று கூறும்போது அவர், "முடிவை என்னிடம் விட்டுவிடு. செயலை என்னிடம் விடாதே. செயல் என்பது இப்போதும் முழுவதுமாக உன்வசமே இருக்கிறது. அந்த செயலையும் என்னிடம் விட்டுவிடுவதாக இருந்தால், உன் இருப்பே தேவையில்லை. நானே எல்லாவற்றையும் செய்துகொண்டு விடுவேன் - எனக்கு நீ ஏன் தேவை? செயலின் விளைவாக விளையும் பலனை என்னிடம் விட்டுவிடு - செயலை உன்வசமே வைத்துக்கொள்" என்கிறார். நீங்கள் இதை புரிந்துகொள்வதும், வாழ்வில் ஒவ்வொரு கணமும் இது பற்றிய விழிப்புணர்வோடு இருப்பதும் மிக முக்கியம் - அதாவது செயல் உங்களுடையது, அந்த செயலின் விளைவாக விளையும் பலன் உங்களுடையது அல்ல. உங்கள் புரிதல், புலன் உணர்வு, கற்பனை இதையெல்லாம் கடந்து பல சக்திகள் இருக்கிறது. இந்த பிரபஞ்சத்தில், இந்த சூரிய குடும்பம், அதிலுள்ள பூமி கிரகம் என்பது வெறும் ஒரு சிறு தூசுதான்.

செயலும் விழிப்புணர்வும்

இப்போது இந்த பூமியின் மீது செயல்பட்டுக் கொண்டிருக்கும் விசைகள் உங்கள் புரிந்துணர்வில் இல்லை. இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஏதோ ஒரு சக்தி ஏதாவது செய்யலாம் - நீங்கள் காணாமல் போய்விடக்கூடும், இந்த பூமி கிரகம் காணாமல் போகக்கூடும், இந்த சூரிய குடும்பமே காணாமல் போகலாம், ஏன் இந்த பிரபஞ்சமே காணாமல் போய்விடலாம். இந்த அண்டத்தில், இந்த பிரபஞ்சமே மிகச் சிறிய ஒரு நிகழ்வுதான். இதனால் தான் அந்த யட்சன் யுதிஷ்டிரனிடம், "மிக ஆச்சரியமான விஷயம் எது?"என்று கேட்டபோது, "தாங்கள் ஒருநாள் இறந்துவிடுவோம் என்பது தெரிந்திருந்தும், தங்களை நிரந்தரமானவர்கள் என்றும் தாங்களே எல்லாமும் என்று இந்த மனிதர்கள் நினைத்துக் கொள்கிறார்களே இதுதான் அனைத்திலும் ஆச்சரியமானது" என்று யுதிஷ்டிரன் பதில் கூறுகிறார். அறியாமை என்பது தான் மிக ஆச்சரியமான விஷயம். நீங்கள் எத்தனை முறை நினைவூட்டினாலும், சமாளித்துக்கொண்டு, எப்படியாவது மக்கள் அறியாமையில் இருந்து கொண்டிருப்பார்கள்.

எனவே அர்ஜுனன் முழுவதும் செயல் மயமானவன். கிருஷ்ணர் விழிப்புணர்வானவர். கிருஷ்ணர் தொடர்ந்து தனது 'செயல் கருவி'யான அர்ஜுனனிடம் இதைப்பற்றி நினைவூட்டிக்கொண்டே இருக்கிறார். ஆனால் அந்த செயல் செய்யவேண்டிய கருவியானது, தன் இருப்பை தானே நிகழ்த்துவதாக நினைக்கத் துவங்குகிறது. எங்கிருந்தோ திடீரென்று இந்த பூமியில் முளைத்தீர்கள், ஒருநாள் மீண்டும் இந்த பூமிக்குள் திரும்பி சென்றுவிடுவீர்கள், ஆனால் உங்களையே முழுமையான உலகம் என்று நீங்களே நினைத்துக் கொள்கிறீர்கள். உங்கள் புரிதலின்படி, நீங்கள் இல்லாமல் இந்த பிரபஞ்சமே இருக்கமுடியாது. நீங்கள் உறங்கும்போது இந்த பிரபஞ்சம் எப்போதாவது ஆவியாகி காணாமல் போயிருக்கிறதா?

ஒரே வழி

இப்போது நீங்கள் இருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் இந்த சக்கரவியூகத்தில் சிக்கியிருக்கிறீர்கள். நீங்கள் எப்படி இதற்குள் வந்தீர்கள் என்று தெரியாது; நிச்சயமாக இதிலிருந்து எப்படி வெளியேறுவது என்றும் தெரியாது. ஆனால், நீங்களே இல்லை என்றாகும்போது, நீங்கள் அதிலிருந்து விடுபடுகிறீர்கள். இப்போது நீங்கள் ஒரு அறையில் அமர்ந்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்; எல்லா கதவுகளும் பூட்டப்பட்டிருக்கிறது; எப்படி வெளியேறுவது என்று உங்களுக்கு தெரியவில்லை. ஆனால் நீங்கள் அப்படியே கரைந்துபோனீர்கள் என்றால், நீங்கள் விடுதலை அடைந்துவிட்டீர்கள். நீங்கள் உள்ளேயும் இல்லை வெளியேயும் இல்லை, ஆனால் நீங்கள் வெளியேறிவிட்டீர்கள். எனவே நாம் எப்படி இருப்பு இல்லாமல் போவது என்பதை தெய்வீகமாக்கினோம். எந்த ஒரு செயலாக இருந்தாலும் அது பரவாயில்லை, ஆனால் அதைக் கடந்து செல்லவேண்டும் என்றால், எல்லோருமே சிவனை நோக்கி திரும்புகிறார்கள். எது இல்லையோ அது மட்டுமே அனைத்திலிருந்தும் விடுபட்டதாக இருக்க முடியும். எது ஏதோ ஒன்றாக இருக்கிறதோ, அது ஏதோ ஒரு வகையான வலையில் அகப்பட்டிருப்பதாகவே இருக்கமுடியும்.

எது ஏதோ ஒன்றாக இருக்கிறதோ, அது ஏதோ ஒரு வகையான வலையில் அகப்பட்டிருப்பதாகவே இருக்கமுடியும்.

தான் செல்லும் இடமெல்லாம் தன்னோடு உடன் எடுத்துச் சென்று கொண்டிருந்த தனது தனிப்பட்ட லிங்கத்தை துதித்து வணங்காமல் கிருஷ்ணர் தனது வாழ்நாளில் ஒரு நாளைக்கூட துவங்கியதில்லை. என்ன நடந்தாலும் சரி, எங்கிருந்தாலும் சரி, 18 நாட்கள் போர்க்களத்தில் இருந்தபோதும் கூட, மற்றவர்கள் எல்லோரும் அவரை கடவுளாக பார்த்தபோதும், தனது நாளை துவங்கும் முன்பாக கிருஷ்ணர் எப்போதும் தனது லிங்கத்தை வணங்கினார். ஏனென்றால் இதிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி இல்லாமல் போவதுதான். சிவா என்றால் எது இல்லையோ அது. எது ஏதுமற்றதாக இருக்கிறதோ அது மட்டுமே அனைத்திலிருந்தும் விடுதலை அடைந்ததாக இருக்கமுடியும். எது ஏதோ ஒன்றாக இருக்கிறதோ, அது ஏதோ ஒரு வகையான வலையில் அகப்பட்டிருப்பதாகவே இருக்கமுடியும்.

எது இருக்கிறதோ, அது ஏதோ ஒரு சக்கரத்தில், ஒருவிதமான வட்டச்சுற்றில் இருக்கிறது, அதில் ஏதோ ஒருவிதமான சுழற்சி எப்போதும் நடந்துகொண்டே இருக்கிறது. நீங்கள் என்ன செய்தாலும் சரி, ஒரு சக்கரத்தில் இருந்து வெளியேறி, இன்னொரு சக்கரத்துக்குள் முடிவில்லாமல் தொடர்ந்து புகுந்துகொண்டே இருக்கிறீர்கள். இதை நீங்கள் விரும்பினாலும் சரி, விருப்பவில்லை என்றாலும் சரி, நீங்கள் அதில் ஒரு பாகமாக இருக்கிறீர்கள். உதாரணத்திற்கு, நாட்டில் தொடர்ந்து மிக மோசமாக அரசியல் நடக்கிறது என்றால், நீங்கள் அதை விரும்பினாலும், விரும்பவில்லை என்றாலும் நீங்கள் அதில் ஒரு பாகமாக இருக்கிறீர்கள். அது எப்போது கட்டுப்பாட்டை தாண்டிச் செல்கிறதோ, அப்போது அது உங்களை உள்ளே இழுத்துக்கொள்ளும். "நாங்கள் இங்கே வெள்ளியங்கிரி மலையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். அங்கே வெளியே நடந்து கொண்டிருக்கும் முட்டாள்தனங்களைப் பற்றி எங்களுக்கு எந்த அக்கறையும் இல்லை" என்று இருப்பது உண்மையாக முடியாது. அது எப்போது கட்டுப்பாட்டை இழக்கிறதோ, அப்போது அது உங்களை நிச்சயமாக உள்ளே இழுத்துக்கொள்ளும். எனவே எப்படியும் நீங்கள் ஏதோ ஒரு சக்கரத்தில் ஒரு பாகமாக இருக்கிறீர்கள். அதனால் நீங்கள் அங்கு விழிப்புணர்வாக இருப்பதே சிறப்பு. இந்த எல்லா சக்கரங்களையும் விட்டு நீங்கள் வெளியேற வேண்டும் என்றால், நீங்கள் இல்லாமல் ஆகவேண்டும்.

வாழும் சூத்திரம்

ஒவ்வொரு நாளும், கிருஷ்ணரே சிவன் தான் வழி என்று தனக்குத்தானே நினைவூட்டிக் கொண்டிருந்தார். இருப்பே இல்லாமல் போவது தான் இருக்கும் ஒரே வழி. இந்த காயம் எனும் உடலானது எப்படியும் இறந்துவிடும்; எப்படியும் இது இல்லாமல் போய்விடும்; இந்த பூமி அதை உறிஞ்சிக்கொள்ளும். நீங்கள் ஒரு யுதிஷ்டிரனாக இருந்தாலும், ஒரு துரியோதனனாக இருந்தாலும் அல்லது ஒரு கிருஷ்ணராக இருந்தாலும் - இந்த பூமி உங்களை உறிஞ்சிக்கொள்ளும். காயம் பிரச்சனை அல்ல; நீங்கள் என்பதன் இன்னொரு அம்சம்தான் பிரச்சனை. அதை இல்லாமல் போக செய்வதுதான் இந்த மொத்த விளையாட்டுமே. அதற்கான அடிப்படையான சூத்திரத்தை கொடுப்பதற்கு தான் கிருஷ்ணர் முயற்சி செய்கிறார். இது ஒரு போதனை போல் அல்ல. அவர் தனது வாழ்க்கையே ஒரு சூத்திரமாக, இந்த உடல் கடந்த ஒன்றை இல்லாமல் போகச் செய்வதற்காக வழங்க முயற்சிக்கிறார். ஏனென்றால் இது ஒன்றுதான் நீங்கள் விடுதலை அடைவதற்கான ஒரே வழி.

தொடரும்...

மஹாபாரதம் பிற பகுதி