கேள்வியாளர்: சத்குரு, கர்ணனும் பரீட்சித்தும் அவர்கள் பெற்ற சாபத்தால் இறந்தார்கள். ஒருவருக்கு சாபமிட வேண்டுமென்றால் அதற்கு என்ன தகுதி தேவை? கர்ணனுக்கு சாபமிட்ட பிராமணரோ அல்லது பரீட்சித்திற்கு சாபமிட்ட யோகியின் சீடரோ, அவர்கள் இருவரை விடவும் வலிமையானவர்களா?

சத்குரு:

சத்குரு: ஒரு சூத்திரர் உங்களை சபித்தால், எதுவும் நடக்காது என்று கூறப்படுகிறது. அதுவே, ஒரு வைசியர் உங்களை சபித்தால் நீங்கள் உங்களின் ஒரு வேளை உணவை தவறவிடுவீர்கள். ஒரு சத்ரியர் உங்களை சபித்தால், உங்களுக்கு உடல் ஊனமோ அல்லது உயிரிழப்போ ஏற்படலாம். ஒரு பிராமணர் உங்களை சபித்தால், நீங்கள் அனைத்தையும் இழக்கக்கூடும்.

யாருடைய சாபத்திற்கு சக்தி அதிகம்?

பிராமணர், சத்ரியர், வைசியர் மற்றும் சூத்திரர் என்பவர்கள், இன்று புரிந்துகொள்ளப்படுவதைப் போல ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்தவர்களை குறிக்கும் பிரிவுகள் அல்ல, ஒரு குறிப்பிட்ட தகுதியைப் பற்றிய விளக்கங்களாகவே இவை உண்மையில் வழங்கப்பட்டு வந்தது. சூத்திரர் என்பவர் மிகவும் அடிப்படையான தொழில்களில் ஈடுபடுபவராக இருந்தார்; அவர் தனது உடலைப் பற்றி மட்டுமே அறிந்தவராக இருந்தார். வைசியர் என்பவர் தனது உடலை பயன்படுத்திக் கொள்வதோடு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு தனது மனதையும் பயன்படுத்துகிறார். பெரும்பாலும் உணர்ச்சிகளிடமிருந்து விடுபட்டவராக, தனது குடும்பத்தவர்களிடம் மட்டுமே உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தன்மையில் இருப்பவர். அவரது உடலும் அவரது கணக்கீடுகளும் அவரது இயல்பை ஆட்சி செலுத்துகின்றன. ஒரு சத்ரியர் என்பவர், தனது உயிராற்றலையும் ஈடுபடுத்திக்கொள்ளும் அளவுக்கு தீவிரத்தோடு இருப்பவர். பெரும்பாலும் அவரது இதயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்; இல்லையென்றால் அவரால் ஆட்சி செய்யவோ அல்லது தான் நம்பும் ஒன்றிற்காக தன் உயிரையே தியாகம் செய்யவோ முடியாது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
நீங்கள் யாரை சபித்தாலும் அல்லது ஆசிர்வதித்தாலும் இரண்டு வழிகளிலும் நீங்கள் சம்பாதித்த ஒன்றை செலவு செய்கிறீர்கள்.

ஒரு வைசியர் தனது உயிரை ஒருபோதும் தியாகம் செய்யமாட்டார் - பேச்சுவார்த்தை நடத்தி தேவையான எந்த ஒரு ஒப்பந்தத்தையும் சுமூகமாக ஏற்படுத்திக்கொள்வார். ஒரு சத்ரியனுக்கு அவனது கௌரவமே அனைத்தையும் விட முக்கியமானது. எனவே பேச்சுவார்த்தைக்கு வராமல் இறக்கவும் துணிவார். அவரைப் பொறுத்தவரையில் சமரசம் பேசுவதும் மரணமும் ஒன்றுதான். பிராமணர் என்று யாரை அழைப்பார்கள் என்றால், பிரம்மத்தைத் தொட்டவரை அல்லது தனக்குள் இருக்கும் உயர்ந்த நிலையை அடைந்த ஒருவரையே பிராமணர் என்பார்கள். அப்படிப்பட்ட ஒருவர் உங்களை சபித்தால், அது நிச்சயமாக பலிக்கும்.

கர்ணன் இரண்டு பிராமணர்களிடம் இருந்து சாபம் பெற்றிருந்தான். ஒன்று மிகவும் சக்தி வாய்ந்தது; மற்றொன்று சாதாரணமானதாக இருந்தாலும் இரண்டு சாபங்களுமே பலித்தது. கர்ணனின் தேர் சக்கரங்கள் சிக்கிக்கொள்ளும் என்று மட்டுமே இரண்டாவது பிராமணர் சாபமிட்டிருந்தார். தனது தேர் சக்கரங்கள் சிக்கிக்கொண்டாலும் மந்திரங்களை நினைவில் வைத்திருந்தால் கர்ணனால் அர்ஜுனனை கொன்றிருக்க முடியும். ஆனால் இன்னொரு பெரிய சாபத்தை பரசுராமரிடம் இருந்து பெற்றிருந்தான் கர்ணன். அதனாலேயே தக்க சமயத்தில் மந்திரத்தை மறந்து தனது அஸ்திரத்தை கர்ணனால் பயன்படுத்த முடியாமல் போனது.

தனது தேரின் சக்கரங்கள் சிக்கிக்கொண்ட போதிலும், கர்ணனால் தேரிலிருந்து கீழே குதித்து தொடர்ந்து சண்டையிட்டிருக்க முடியும். ஆனால் பிரச்சனை என்னவென்றால், கர்ணன் மந்திரத்தை மறந்துவிட்டான். தேரின் சக்கரங்களை விடுவிக்க முயற்சித்துக்கொண்டே மந்திரத்தை நினைவுக்கு கொண்டுவரவும் முயற்சித்துக் கொண்டிருந்தான் கர்ணன். அதைப் பற்றி எந்தளவுக்கு சிந்தித்தானோ, அந்தளவுக்கு குழப்பமடைந்தான். அதுவே மரணத்தை உறுதி செய்தது.

வரத்திற்கும் சாபத்திற்கும் என்ன விலை கொடுக்கிறீர்கள்?

நீங்கள் யாரை சபித்தாலும் அல்லது ஆசிர்வதித்தாலும் இரண்டு வழிகளிலும் நீங்கள் சம்பாதித்த ஒன்றை செலவு செய்கிறீர்கள். நீங்கள் கட்டமைத்துக் கொண்டுள்ள உங்கள் உயிருக்கு நேர்மறையான ஆற்றலிலிருந்து ஒரு பகுதியை நீங்கள் செலவு செய்ய நேரிடும். ஒரு சாபத்திற்கோ வரத்திற்கோ எவ்வளவு சக்தி செலவாகிறது என்பது அது எவ்வளவு தூரத்திற்கு செயல்படுகிறது என்பதை பொறுத்து இருக்கிறது. இதனால் தான் பாரதத்தில் நீங்கள் எந்த ஒரு முனிவரை தேடிச் சென்றாலும் அவர் முதலில் உங்களை பார்ப்பார், வேறுபக்கம் திரும்பி, ஜெய் ஹோ என்பார்கள். மிக அபூர்வமாகவே அவர்கள் உங்களைப் பார்த்து விஜயீ பவ என்று ஆசீர்வதிப்பார்கள், ஏனென்றால் அதற்கு இன்னும் அதிக சக்தி செலவாகும். ஜெய் ஹோ என்பது உங்கள் உள்நிலையில் வெற்றி அடைவதற்கு, அதுதான் உண்மையான வெற்றி.

பொதுவாக அவர்கள் வழங்கும் ஆசிர்வாதம் இந்த நோக்கத்திற்காக தான். அதாவது, அவர்கள் உண்மையான முனிவராகவோ அல்லது துறவியாகவோ இருந்தால். காவி நிற சீருடையை அணிந்து கொண்டிருப்பவர்கள், ஆனால் உண்மையில் பிச்சைக்காரர்களாகவோ அல்லது வியாபாரியாகவோ இருப்பவர்களின் நோக்கம் வேறுவிதமானது. அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். எப்படியும் உங்களிடம் எதுவும் இல்லை என்றால் உங்கள் கருவூலத்தை எப்போதுமே திறந்த நிலையில் வைத்துக்கொள்ளலாம். உங்களிடம் மதிப்பான எது ஒன்று இருந்தாலும் அப்போதுதான் அது முக்கியமாகிறது.

எனவே ஆசிர்வாதம் என்பது பொதுவாக ஆன்மீக நல்வாழ்வை நோக்கியே வழங்கப்படுகிறது. நீங்கள் யாரோ ஒருவரை பொருள் சார்ந்த நல்வாழ்வுக்காக ஆசீர்வதிக்க வேண்டுமென்றால் அதற்கு இன்னும் நிறைய சக்தியை செலவு செய்ய வேண்டும், ஏனென்றால் வெளியுலகில் அது உருவெடுக்க வேண்டும். உங்கள் உள்நிலை நல்வாழ்வுக்கு ஆசிர்வதிக்க ஒரு யூனிட் சக்தி செலவாகிறது என்று வைத்துக்கொள்வோம். இப்போது, நீங்கள் படிக்காத பரீட்சையில் தேர்ச்சி பெறுவதற்காக நான் உங்களை ஆசீர்வதிக்க வேண்டியிருந்தால், அதற்கு 100 யூனிட் சக்தியை செலவு செய்ய வேண்டியிருக்கும்.

ஆசீர்வாதங்கள் உண்மையில் எப்படி வேலை செய்கிறது?

பரீட்சைக்காக ஆசீர்வாதம் வேண்டி நீங்கள் என்னிடம் வந்தால், நான் உங்கள் இறுதித் தேர்வில் தேர்ச்சியடையவே ஆசீர்வதிப்பேன், பத்தாம் வகுப்பு தேர்வுக்கு அல்ல. நீங்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைகிறீர்களா இல்லையா என்பது எனக்கு ஒரு பொருட்டே இல்லை. நான் பரீட்சை எழுத அமர்ந்தபோதும் அது எனக்கு ஒரு பொருட்டாக இல்லை. எனவே இதுபோன்ற காரணங்களுக்காக என்னிடம் வராதீர்கள். புற உலக நல்வாழ்வுக்காக ஆசீர்வாதம் பெறுவதை விட, அருளுடன் வாழ்வதே சிறந்தது.

உங்கள் வாழ்க்கை அருளினால் இயக்கப்படும்போது, உங்கள் சக்திகள் மலர்ந்து, உங்கள் பொருளாதார வாழ்க்கையை நீங்களே சிறப்பாக உருவாக்கிக்கொள்ள முடியும். ஆனால் நீங்கள் கண்மூடித்தனமாக தவறு செய்யும் ஒரு முட்டாளாக இருந்து, எதையுமே செய்யாமல் எல்லாமே நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், உங்களை ஆசீர்வதிப்பவருக்கு தான் அதிகளவு சக்தி செலவாகும். அவர்களால் அதை திரும்பப் பெறவும் முடியாது. அது வரமாக இருந்தாலும் சரி, சாபமாக இருந்தாலும் சரி, அவர்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியை திறந்து வைத்திருக்கிறார்கள், அதை திடீரென்று மூடிவிட முடியாது.

ஒரு ஆசீர்வாதத்திற்கு எவ்வளவு சக்தி செலவாகும் என்பது அதை பெறுபவரின் புத்திசாலித்தனம், திறமை, அர்ப்பணிப்பு, இவை எல்லாவற்றையும் பொறுத்திருக்கிறது. உதாரணத்திற்கு, நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள ஏதோ ஒரு குறிக்கோளில் நீங்கள் வெற்றி அடைவதை உறுதிசெய்ய விரும்பி நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் புத்திசாலியாக, திறமையானவராக, குறிக்கோளை அடைந்தே தீரும் அர்ப்பணிப்போடு இருந்தால் எனக்கு மிகக் குறைவான சக்தியே செலவாகும். நீங்கள் உண்மையான கவனத்தோடும் தீவிரத்தோடும் இருந்தால் உங்களால் கடக்க முடியாத சில தடைகளை சந்திக்க நேர்கையில் மென்மையாக உந்திவிடுவதற்கு ஆசீர்வாதம் உதவும். ஆனால் நீங்கள் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு உங்கள் வீட்டிற்கு சென்று உங்கள் சொந்த முட்டாள்தனங்களை செய்யத் துவங்கினால், தினமும் அது என் சக்தியை உறிந்துவிடும். உங்களை ஆசீர்வதிக்கும்போது மட்டுமல்ல அதற்கு பிறகும் தொடர்ந்து என்னுடைய சக்தி செலவாகிக் கொண்டிருக்கும்.

யார் சபிக்கப்படுகிறார் என்பது, ஏன் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது?

வரம், சாபம் இரண்டிற்குமே ஒருவரின் சக்தி உபயோகிக்கப்படுகிறது. ஆனால் சாபத்திற்கு இன்னும் அதிகமான சக்தியை செலவழிக்க நேரிடும். உங்களுக்கு என்ன வேண்டுமோ அது நிறைவேறுவதற்காக நான் ஆசீர்வதிக்கும் போது, எனது ஆசீர்வாதத்தைத் தாண்டி நீங்களும் அந்த நோக்கத்திற்காக உழைப்பீர்கள். ஒரு ஆசீர்வாதம் வழங்கும்போது நீங்களும் அதற்காக உழைப்பீர்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. ஆனால் நான் உங்களுக்கு சாபமிட்டால், நீங்கள் அதற்கு எதிராக வேலை செய்வீர்கள். எனவே ஒரு ஆசீர்வாதத்தை விட சாபத்திற்கு பத்து மடங்கு அதிகமான சக்தி செலவாகும். ஏனென்றால் நீங்கள் அந்த சாபத்திற்கு எதிராக வேலை செய்ய முயற்சிக்கும் அதேசமயம், என்னுடைய சக்தி சாபத்தை நிறைவேற்ற முயற்சி செய்கிறது.

மந்திரங்களை உபயோகிக்கும் தருணத்தில், அவற்றை மறந்துபோகும் படியான சாபத்தை கர்ணன் பெற்றிருந்தான். எனவே, தேவையான போது அந்த மந்திரம் அவனுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காக தினமும் ஆயிரம் முறைக்கு மேல் அந்த மந்திரத்தை கர்ணன் உச்சரித்திருப்பான் என்று என்னால் நிச்சயமாக கூறமுடியும். அந்த சாபம் பலிக்கக்கூடாது என்பதில் கர்ணன் உறுதியாக இருந்தான். ஆனால் சாபம் பலித்துவிட வேண்டும் என்பதில் பரசுராமரும் உறுதியாக இருந்தார், எனவே அவருக்கு இன்னும் அதிக சக்தி செலவாகியிருக்கும். யார் சாபத்தை பெறுகிறாரோ, அவரது உறுதி மற்றும் திறமையைப் பொறுத்து, வரத்தைவிட சாபத்திற்கு அதிகப்படியான சக்தி செலவாகிறது.

தொடரும்...

மஹாபாரதம் தொடரின் பிற பகுதிகள்

ஆசிரியர் குறிப்பு: கோவை ஈஷா யோக மையத்தில் கடந்த 2012ம் ஆண்டு மஹாசிவராத்திரியின் போது, சத்குரு விவரிக்க, நடன நாட்டிய நிகழ்ச்சி வடிவில் நடைபெற்ற மஹாபாரதம் பெருங்கதையின் கட்டுரை வடிவமாக இந்த தொடர் மலர்கிறது. காலத்தை வென்ற இந்த பெருங்காவியத்தின் பல்வேறு கதாப்பாத்திரங்கள் மற்றும் கதைகளின் ஊடே நம்மை மறைஞானத் தேடலுக்கு அழைத்துச் செல்கிறார் சத்குரு.