பங்கேற்பாளர்: சத்குரு, ஒவ்வொருவரும் அவரவருக்கான வாழ்க்கை, சுதந்திரம்‌, தர்மம் இவற்றை மற்றவர்களின் தர்மத்துடன் மோதல் இல்லாமல் ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். ஆனால் இன்றைய சூழ்நிலை இதற்கு நேர்மாறாகத்தானே இருக்கிறது... அவரவர் இயல்புக்கேற்ப அவரவர் தர்மத்தை வைத்துக் கொள்வதால்தானே ஒருவரோடொருவர் மோதுவதே நேர்கிறது?

சத்குரு: இதனால்தான் தர்மம் என்பதே நுட்பமான ஒரு சிந்தனை என்கிறோம். நமது தேவைகள் சாதாரணமானதாக இருக்கும்போது, நமது தர்மத்தையும் அந்த தேவைகளைச் சுற்றியே அமைத்துக்கொண்டால், நிச்சயமாக யாருடனாவது நமக்கு மோதல் ஏற்படும். இதனால்தான் தங்கள் வாழ்வின் உச்சபட்ச நோக்கமானது, மற்ற யாருடைய தனிப்பட்ட தர்மத்துடனும் மோதுவதாக இல்லாதபடி மக்கள் பார்த்துக் கொண்டனர். ஆனால் தெருவில் நடந்து செல்ல, வீட்டிற்குள் வாழ, வியாபாரத்தில் ஈடுபடும்போது என பொதுவில் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒரு தர்மம் இருக்கிறது. சாலை போக்குவரத்தில், நாம் செல்ல வேண்டிய திசைக்கு ஏற்ப, சாலையின் எந்தப் பகுதியை பயன்படுத்த வேண்டும் என்பது நிறுவப்பட்டு இருக்கிறது. அனைவருக்கும் பொதுவான இந்த தர்மத்தை, உங்களுக்கென தனியாக ஒரு தர்மம் இருக்கிறது என்பதற்காக நீங்கள் உடைக்கக்கூடாது.

தர்மம் என்பதில் பல அடுக்குகள் இருக்கிறது.

உங்கள் தனிப்பட்ட தர்மம் என்பது உங்கள் உச்சபட்ச இயல்பை அடைவதற்கானது. அடிப்படையில், இது உங்கள் உள்நிலையில் நடப்பதால் மற்ற யாருடைய தர்மத்துடனும் மோதுவதாக இது இருக்காது. இதற்கு நேர்மாறாக வெளியுலகில், அனைவருக்கும் பொதுவான தர்மம் என்பதில், அதற்கான விதிமுறைகள், நியதிகளை அனைவரும் அப்படியே பின்பற்ற வேண்டியிருக்கிறது. ஆனால் அதிலேயே நாம் கேள்வி எழுப்பும்போது, மோதலும் பிரச்சினையும் எழுகிறது. தர்மம் என்பதில் பல அடுக்குகள் இருக்கிறது. குடும்பத்தில் வாழ ஒரு தர்மம், துறவறம் மேற்கொள்ள ஒரு தர்மம், அரசனாக இருக்க ஒரு தர்மம், வணிகனாக இருக்க‌ ஒரு தர்மம் என இப்படியே பல தர்மங்கள் இருக்கிறது. ஆனால் ஒரு உயிராக, உங்களுக்கான ஒரு தர்மத்தை தேர்ந்தெடுத்து, அதை அப்படியே பற்றிக்கொள்ளும் சுதந்திரம் உங்களுக்கு இருக்கிறது. உச்சபட்ச விடுதலை என்பது குறிப்பிட்ட ஏதோ ஒன்றை மட்டும் செய்வதால் நிகழ்வதில்லை, எதாவது ஒன்றினை அசைவின்றி பற்றிக்கொள்வதால் நிகழ்கிறது - நிச்சல தத்வம், ஜீவன் முக்தி. தினமும் உங்கள் திசையை மாற்றிக்கொண்டே இருந்தால், நீங்கள் அதே இடத்திலேயே வட்டமிட்டுக் கொண்டிருப்பீர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பங்கேற்பாளர்: சத்குரு, நீங்கள் உச்சபட்ச இயல்பு மற்றும் தர்மம் பற்றி பேசியதில் இருந்து, தர்மம் என்பது ஒரு குறிப்பிட்ட விதிமுறைகள் என்பதாக புரிந்து கொண்டிருக்கிறேன். நாம் ஏன் வாழ்க்கையை, சூழ்நிலையை அது வரும்போது பார்த்துக்கொள்ளக்கூடாது? எதற்காக விதிமுறைகளை முன்னதாகவே வகுக்க வேண்டும்?

சத்குரு: வாழ்க்கையில் தானாகவே எல்லாம் நடந்துவிடுவதில்லை - வாழ்க்கை தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. நேற்று நீங்கள் உருவாக்கியது இன்று உங்கள் மீது வந்து விழுகிறது, அல்லது நீங்கள் இப்போது தீவிரமாக உருவாக்கிக் கொண்டு இருக்கிறீர்கள். இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றுதான் நடக்கிறது. தானாகவே எதுவும் உங்களிடம் வந்துவிடுவதில்லை. இதில் இரண்டு அம்சங்கள் இருக்கிறது - தர்மம் மற்றும் கர்மா. சரியான கர்மாவை (செயல்) செய்ய வேண்டுமானால் அதற்கு ஒரு தர்மம் வேண்டும். தர்மம் எனும் அடிப்படை இல்லாதபோது, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஷணமும் உங்கள் செயல்கள் குழப்பங்களாலேயே பின்னப்பட்டதாக இருக்கும். எந்த வழியில் உங்கள் செயல் (கர்மா) நடக்க வேண்டும் என்பதை உங்கள் தர்மம் தீர்மானிக்கும்போது உங்களுக்கு எந்த திசையில் வேண்டுமோ, அந்த திசையில் வாழ்க்கையை நீங்கள் எடுத்துச்செல்ல முடியும். வாழ்க்கையை உருவாக்குவது என்றால் உங்கள் கார், வீடு, கணவன் அல்லது மனைவியை தேர்ந்தெடுப்பதைப் பற்றியல்ல. இவையெல்லாம் இரண்டாம் பட்சம்தான். நீங்கள் எப்படிப்பட்ட உயிராக இருக்கிறீர்கள் என்பதே எல்லாவற்றையும்விட முக்கியமானது. இதுவே நீங்கள் யார் எனும் தரத்தை, உங்கள் வாழ்க்கையின் தரத்தை, ஒருவேளை நீங்கள் நன்றாக வாழ்ந்தால் இங்கு மற்றும் இதற்கு பிறகு என எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது. நீங்கள் யாருடன் இருக்கிறீர்கள், உங்களைச்சுற்றிலும் என்னென்ன வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள், நீங்கள் அரண்மனையில் இருக்கிறீர்களா இல்லையா, நீங்கள் உணவுக்கு பதிலாக தங்கத்தை எடுத்துக் கொள்கிறீர்களா என எதுவுமே எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. என்ன தங்கத்தை சாப்பிட்டால் விரைவில் இறந்து விடுவீர்கள்! முதலில் உங்களுக்கு வாழ்க்கை என்றால் என்ன? எங்கே இருக்கிறது? என்பதே புரியவில்லை. தவறான எல்லா கதவுகளையும் தட்டித்தட்டி பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். அது வேலையும் செய்யப்போவதில்லை. உங்களுக்கான தர்மத்தை நிலைநிறுத்துவது, அடிப்படையான வாழ்க்கை செயல்முறையில் இருந்து உங்கள் கர்மா விலகிச் சென்றுவிடக்கூடாது என்பதை உறுதி செய்து கொள்வதற்காகத்தான். ஒரு குறிப்பிட்ட வழியில் உங்கள் வாழ்க்கை நடப்பதே தர்மம் என்பதை அது எப்போதும் நினைவூட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

உங்கள் தர்மத்தை நிலைநிறுத்த

இது இந்த பிரபஞ்சத்தின் விதிகளைப் பற்றியது, பிரபஞ்சத்தின் தர்மம் பற்றியது. ஏனென்றால் நீங்கள் என்ன செய்தாலும், உங்கள் இதயம் இயங்கும் முறை, நீங்கள் சுவாசிக்கும் முறை, உங்கள் உடல் இயங்கும் முறை என எல்லாமே பிரபஞ்சத்துடன் ஆழமான தொடர்பில் இருக்கிறது. நீங்கள் விழிப்புணர்வாக பிரபஞ்சத்தின் விதிமுறைகளை பின்பற்றும்போது, உங்கள் செயல்கள் தனிச்சிறப்பாக வெளிப்படும். இப்போது நீங்கள் உடலளவில் அல்லது மனதளவில் ஏதோ ஒரு அசௌகரியத்தை உணர்வது, பிரபஞ்சத்தின் அடிப்படையான விதிகளை நீங்கள் கவனமின்றி பின்பற்றாமல் இருப்பதால்தான். இது விழிப்புணர்வாகவோ அல்லது கவனமின்றியோ எப்படி நடந்தாலும் கிடைக்கும் பலன் ஒன்றுதான். இந்த இருப்பின் இயல்பு இப்படித்தான் இருக்கிறது. நீங்கள் விழிப்புணர்வுடன் கூரையில் இருந்து விழுந்தாலும், கவனமின்றி அது நிகழ்ந்தாலும், ஒரேவிதமான வலியே ஏற்படும். நீங்கள் விழிப்புணர்வுடன் விழும்போது ஒருவேளை உங்கள் கால்களில் நிற்க நீங்கள் முயற்சி செய்ய முடியும், ஆனால் கவனமின்றி விழும்போது தலை முதலில் தரையிறங்கும் வாய்ப்பும் இருக்கிறது. இதைத்தவிர வலி மற்றும் வேதனை தரும் அனுபவத்தில் வேறு எந்த வேறுபாடும் இருக்காது. கவனமின்றி தடம் மாறினாலும் நீங்கள் தடம்புரண்டு கவிழவே நேரிடும். தர்மம் என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டுவிட்டதாக நினைத்துக்கொள்ளும் ஒருவருக்கு அது வேலை செய்யாது. தர்மத்தை நடைமுறைப்படுத்தி, தர்மமாகவே மாறும் ஒருவருக்கே அது வேலை செய்யும்.

முதலில் தர்மம் பிறகே கர்மா

பீஷ்மர், "எனது தர்மம் கடுமையானது - இதை என் கையில் எடுத்ததும், என் தர்மமாகவே நான் மாறிவிட்டேன். என்ன நடந்தாலும் சரி, என் உயிரையே கொடுக்க நேர்ந்தாலும், என் தர்மத்தை நான் மாற்றிக்கொள்ள முடியாது. ஏனென்றால், என் தர்மம் என்பது தனியாக இல்லை, அது நானாகவே மாறிவிட்டிருக்கிறது" என்றார். நீங்கள் இப்படி இருந்தால், உங்கள் தர்மத்தை நிலைநிறுத்தி, உங்கள் வாழ்க்கையின் வழியை நிலைநிறுத்துகிறீர்கள். யோகஸ்தஹ குரு கர்மனி என்றால், முதலில் நீங்கள் எந்த வழியில் செல்ல வேண்டுமோ, அதை உறுதிசெய்வது - அதன்பின் செயல்படுவது. முதலில் உங்கள் தர்மம் - அதன் பின்னால் உங்கள் கர்மா. இப்போது உங்களுடைய தர்மம் உங்களுக்கே தெரியாததாக இருப்பதாலேயே பெருமளவு கர்மாவை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள் - இதுதான் பிரச்சனை.

நல்வாழ்வை விட்டு கர்மா‌ உங்களை வெளியே எடுத்துச்செல்லாமல் இருக்க வேண்டுமானால் உங்கள் தர்மத்தை நீங்கள் நிலைநிறுத்த வேண்டும்.

கர்மா என்பது இந்த உலகில் நீங்கள் செய்யும் செயல்களில் மட்டும் இல்லை - அது உங்கள் தலைக்குள் நீங்கள் நடத்திக்கொள்ளும் பல முட்டாள்தனங்களிலும் இருக்கிறது. இதுவே கர்மா. கர்மா என்றால் செயல். உடல்ரீதியான செயல், மனரீதியான செயல், உணர்ச்சி ரீதியான செயல், சக்தி ரீதியான செயல் என இது நான்கு நிலைகளில் நடக்கிறது. வாழ்வின் ஒவ்வொரு ஷணத்திலும் கர்மாவின் நான்கு பரிணாமங்களிலும் நீங்கள் செயல் செய்கிறீர்கள். நீங்கள் சாப்பிடும் போதும் கர்மா நடக்கிறது; நீங்கள் நடக்கும் போதும் கர்மா நடக்கிறது; நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போதும் கர்மா நடக்கிறது - நீங்கள் விழித்திருந்தாலும் சரி, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாலும் சரி, தொடர்ந்து நான்கு பரிணாமங்களிலும் உங்கள் கர்மா நடந்தே இருக்கிறது. நல்வாழ்வை விட்டு கர்மா‌ உங்களை வெளியே எடுத்துச்செல்லாமல் இருக்க வேண்டுமானால் உங்கள் தர்மத்தை நீங்கள் நிலைநிறுத்த வேண்டும். ஏனென்றால் பெரும்பாலும் விழிப்புணர்வு இல்லாமலே உங்கள் கர்மா நடக்கிறது. ஆனால் உங்கள் தர்மத்தை நீங்கள் நிலைநிறுத்தும் போது, உங்கள் கர்மா பழகியதடத்தில் இயல்பாக தர்மத்தை பின் தொடர்கிறது - அதில் உங்கள் கர்மாவிற்கு ஒரு ஒழுங்கு, ஒரு திசை, ஒரு இலக்கு, ஒரு நிறைவு இருக்கும். உங்கள் தர்மத்தை நீங்கள் நிலை நிறுத்தாதபோது, உங்கள் கர்மா எல்லா பக்கமும் அலைபாய்கிறது. நீங்கள் எதைப் பார்த்தாலும் உங்கள் உடல், மனம் மற்றும் உணர்ச்சிகள் அதன் பின்னாலேயே ஓட நேரிடலாம். இதனால் நீங்கள் ஒரு குழப்பமான உயிராகிவிடுகிறீர்கள். இந்த உடலை விட்டு உயிர் நீங்கும்போது, அது எங்கே செல்லவேண்டும் என்பதே தெரியாமல் போய்விடுகிறது, ஏனென்றால் அது குழப்பத்திலேயே இருக்கிறது. நாம் குழப்பமான மனதை பற்றி பேசவில்லை, அதைப்பற்றி தான் உங்களுக்கு நன்றாகவே தெரியுமே - நாம் குறிப்பிடுவது குழப்பத்தில் இருக்கும் உயிரை. தர்மம் என்பதே இல்லாதபோது உயிர் குழம்பிவிடுகிறது. இந்த உடலை விட்டு நீங்கள் நீங்கும்போது, இந்த உயிர் எங்கே செல்வது என்றே தெரியாமல் நிற்பதுதான் மாபெரும் கொடுமை. ஒரு மனிதனுக்கு நடக்கக்கூடிய மோசமான நிலை அதுவே. எதிர்பாராத விதமாக இன்று இது பெருமளவிற்கு நடக்கிறது, ஏனென்றால் மக்கள் சுதந்திரம் என நினைத்துக்கொண்டு தங்களுக்கான எந்தவிதமான தர்மத்தையும் நிலை நிறுத்துவதில்லை.

பரம்பரையாக தொடரும் விளையாட்டுகளை ஒதுக்கும் வழி

சுதந்திரம் என்ற பெயரில், சாலையின் எந்த பக்கத்தில் நீங்கள் வண்டி ஓட்டவேண்டும் என்ற விதியை நாம் அகற்றுவதாக வைத்துக்கொள்வோம், யார் வேண்டுமானாலும் எந்த பக்கம் வேண்டுமானாலும் அவரவர் விருப்பத்திற்கு வண்டியை ஓட்டலாம் என்பதால் மக்களுக்கு சுதந்திரம் கிடைத்து விடாது - அவர்கள் சிக்கிக்கொள்வதே நடக்கும். விதிகளை முறிப்பதால் சுதந்திரம் வருவதில்லை, தெள்ளத்தெளிவான பாதையில் இருக்கும் போதுதான் சுதந்திரம் தானாகவே வெளிப்படுகிறது. எனவே, வாழ்க்கையில் எல்லாமே சும்மா வருகிறது, அது வரும்போது உங்கள் விருப்பத்திற்கு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கவேண்டாம். அதை உடனுக்குடன் செயல்படும் தன்மை என்றும் நினைத்துக்கொள்ள வேண்டாம் - அது கட்டாயத்தின் காரணமாக செயல்படுவது. உடனுக்குடன் சட்சட்டென முடிவெடுக்க வேண்டுமானாலும் அதற்கான வலுவான அடித்தளம் இருக்கவேண்டுமே. காலூன்றி நிற்க வலுவான அடித்தளமே இல்லாதபோது, அங்கே கட்டாயதன்மை மட்டுமே இருக்கும், அங்கே உடனுக்குடன் முடிவெடுக்கும் தன்மை வெளிப்படாது. ஏனென்றால் உங்கள் உடல் அமைந்துள்ள விதம் என்பதும்கூட உங்களால் நிர்ணயிக்கப்படவில்லை. உங்கள் உடல் இன்னும் கிருஷ்ணனின் துவாபர யுகத்தில் வாழ்ந்த நம் முன்னோர்களைப் போலவே‌ உள்ளது. இடையில் மக்கள் கலந்துவிட வாய்ப்பு இருந்திருந்தாலும், உங்கள் முன்னோர்களின்‌ மரபணுக்கள் உங்களிடம் விளையாடிக்கொண்டுதான் இருக்கிறது.

உங்களுக்கான தர்மத்தை நீங்களே‌ நிலைநிறுத்துவது என்றால், இறந்தவரை இறந்தவர்களிடமே விட்டுவிட்டு உங்களுக்கான புதிய பாதையை‌ நீங்களே செதுக்குவது. இதுவே விடுதலை.

10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இங்கே வாழ்ந்து மறைந்த மனிதர்களின் மரபணுக்கள் இன்றும் உங்களிடம் விளையாடிக்கொண்டேதான் இருக்கிறது. உங்களுக்குள் இருந்துகொண்டு, உங்களை தொடர்ந்து ஆட்டுவிக்கும் ஒன்றை விட்டு விலகி உங்கள் தர்மத்தை நீங்கள் நிலைநிறுத்துவது என்பது சாதாரணமானதல்ல. "இது எனது தர்மம்" என உறுதியாக நிற்கும்போது, நீங்கள் உங்களது தந்தை, தாத்தா, மூதாதையர் என அனைவரையும் தாண்டிச் செல்கிறீர்கள். உங்களது மரபணுக்கள் வழி வந்த பண்பை நிராகரித்து, உங்களுக்கான ஒரு பாதையை நீங்களே உருவாக்குகிறீர்கள். பீஷ்மர் தனது தந்தையாரின் தொடர்ந்த குறிப்பிட்ட சில பழக்கவழக்கங்கள் காரணமாக அவர் "அடிக்கடி காதலில் விழுந்துவிடும்" கட்டாயத்தில் சிக்கி இருப்பதை கண்டுகொண்டார். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அவர் காதலில் விழுந்திருந்தாலும், அது பீஷ்மரின் கர்மாவாகவும் இல்லை, தர்மமாகவும் நிற்கவில்லை. "எனது தர்மத்தை விட்டு நான் என்றும் விலகமாட்டேன். என் வாழ்க்கை இந்த தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, இவ்வளவுதான் நான்" என்று தனது மரபுணுக்களின் அமைப்பு வழியில் இருந்து விலகி தனக்கான பாதையை தானே ஏற்படுத்திக் கொண்டார். ஆன்மீக சாதனா என்பது இதுதான் - கடந்தகாலம் உங்கள் எதிர்கால வாழ்க்கையில் ஆளுமை செய்ய முடியாதவாறு நிகழ்காலத்தில் உங்களின் தனிப்பட்ட தர்மத்தை நிலைநிறுத்துவது.

உங்களுக்கு இது தெரியும்தானே, யாரோ ஒருவர் இயேசுவிடம், தாம் சென்று தனது தந்தையாரின் உடலை அடக்கம் செய்யவேண்டும் என்று தெரிவித்த போது, "இறந்தவரை இறந்தவர்களிடமே விட்டுவிடு" என்றார். தனது தந்தையை இழந்துவிட்ட ஒருவரிடம் இந்த வார்த்தைகளை கூறுவது என்பது மனிதத்தன்மை அற்ற, இரக்ககுணமே இல்லாத செயல் போல தோன்றலாம், ஆனால் அவர் அப்படித்தான் சொன்னார், ஏனென்றால் அவர் இறந்த தந்தையை மட்டும் குறிப்பிடவில்லை, இன்னும் உங்களுக்குள் நடனமாடிக் கொண்டிருக்கும் இறந்துபோன மூதாதையர்கள் அனைவரையுமே விட்டுவிடுங்கள் என்ற பொருளிலேயே அப்படி சொன்னார். ஒருவேளை நீங்கள் இறந்தவரை இறந்தவர்களிடமே விடவில்லை என்றால், உங்களுக்கான தர்மம் என்பது மட்டும் உங்களிடம் இல்லாமல் போகாது, உங்களுக்கான வாழ்க்கையுமே உங்கள் சொந்த வாழ்க்கையாக இருக்காது. யாரோ‌ ஒருவர் உங்கள் மூலமாக வாழ முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதாகவே இருக்கும். உங்களுக்கான தர்மத்தை நீங்களே‌ நிலைநிறுத்துவது என்றால், இறந்தவரை இறந்தவர்களிடமே விட்டுவிட்டு உங்களுக்கான புதிய பாதையை‌ நீங்களே செதுக்குவது. இதுவே விடுதலை.

தொடரும்...