சத்குரு: ராஜசுய யாகத்திற்காக, துரியோதனன் மற்றும்‌ அவனது வம்சத்தினர் உட்பட அனைவரும் இந்திரபிரஸ்தத்திற்கு வருகை தந்தார்கள். யாகத்தில், ஒருவர் கௌரவ விருந்தினராக பங்கேற்க வேண்டியிருந்தது. யுதிஷ்டிரன் நேராக அனைவரிலும் மூத்தவரான பீஷ்மரின் பாதம் பணிந்து, "பிதாமகரே, நீங்கள்தான் யார் கௌரவ விருந்தினராக இருக்கவேண்டும் என்பதைக் கூற வேண்டும். என் மனதை பொறுத்தவரை அது நீங்கள் தான். ஆனால் கௌரவ விருந்தினரை முடிவு செய்வதில் உங்கள் விருப்பத்திற்கு நடக்க விரும்புகிறேன்" என்றான்.

பீஷ்மர், "இங்குள்ள அனைத்து ஆடவர்களிலும் நான் மூத்தவனாக இருக்கலாம். ஆனால் உயர்ந்தவனென்றால் அது கிருஷ்ணன் தான், ஏனென்றால் அவன் ஒரு ஆணுக்கு அதிகமானவன். எனவே இயல்பாகவே கிருஷ்ணர் தான் கௌரவ விருந்தினர்." பீஷ்மர் இப்படிப்பேசி முடித்த ஷணமே கிருஷ்ணரின் பங்காளியான சிசுபாலன் ஆவேசமாக எழுந்தான். சேடி தேசத்தின் அரசன் சிசுபாலன். சிசுபாலன் "சேடியின் காளை" என அறியப்படுபவன். ஏனென்றால் அவன் அசாதாரண அளவிலான பெருவுருவம் கொண்டவனாக இருந்தான்‌.

சிசுபாலனிடம் கொப்பளிக்கும் கோபம்

கடந்த காலங்களில் சிசுபாலனுடன் தொடர்ந்து சிக்கல்கள் ஏற்பட்டிருந்தது. அதில் முக்கியமானது, சிசுபாலன் ருக்மிணியை திருமணம் செய்வதாக இருந்த நேரத்தில் நடந்திருந்தது. ருக்மிணியின் சகோதரன் ருக்மி, தன் நண்பன் சிசுபாலனிடம், தன் சகோதரி ருக்மிணியை மணமுடித்து தருவதாக வாக்களிக்கிறான்.

நேரடியாக ஒரு திருமணத்தை நடத்துவதற்கு பதிலாக, அவர்கள் ஒரு சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள். ஒரு சுயம்வரத்தில், மணமகள்தான் தனக்கான மணாளனை முடிவு செய்வாள். ஆனால் அவர்கள் ஒரு போலியான சுயம்வரத்தை ஏற்பாடு செய்தார்கள், ருக்மிணியின் சகோதரன் தன் தேர்வை ஏற்கனவே முடிவு செய்திருந்தான். சுயம்வரம் நடத்துவதன் மூலம் அனைவரையும் சமாதானப்படுத்தவும்‌, அதைப் பயன்படுத்தி ஒரு வலிமையான கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ளவும் அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள்.

கடந்த காலங்களில் சிசுபாலனுடன் தொடர்ந்து சிக்கல்கள் ஏற்பட்டிருந்தது. அதில் முக்கியமானது, சிசுபாலன் ருக்மிணியை திருமணம் செய்வதாக இருந்த நேரத்தில் நடந்திருந்தது.

ஆனால் ருக்மிணியோ, அவள் இதுவரை சந்தித்தேயிராத கிருஷ்ணர் மீது காதல் கொண்டிருந்தாள். கிருஷ்ணரைப் பற்றி கேட்டறிந்ததிலேயே அவள் காதலில் விழுந்திருந்தாள். ருக்மிணி தன்னை விரும்புவதை கிருஷ்ணர் அறிந்திருந்தார். சிசுபாலனும் ருக்மியும் இணைந்து போலி சுயம்வரம் நடத்த ஒரு முன்னுதாரணமாக மாறுவதையும் அவர் விரும்பவில்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சுயம்வரத்திற்கு சென்ற கிருஷ்ணர் இளவரசியை கவர்ந்தார். ருக்மியும் சிசுபாலனும் இணைந்து துரத்த, இருவரையும் தோற்கடித்தார் கிருஷ்ணர். ருக்மிணியின் சகோதரன் என்பதற்காக ருக்மியை கிருஷ்ணர் கொல்ல விரும்பவில்லை‌. ருக்மியின் ஆயுதங்களை பறித்து, மொட்டையடித்து, புருவங்களை, மீசையை மழித்து திருப்பி அனுப்பினார். ஒரு ஷத்ரியனுக்கு நீங்கள் ஏற்படுத்தக்கூடிய பெரும் அவமானம் இதுதான்.

அதேபோல், சிசுபாலனையும் கொல்லாமல் விட்டார், ஏனென்றால், பல ஆண்டுகளுக்கு முன்பு சிசுபாலனின் தாய் கிருஷ்ணரிடம் வாக்குறுதி ஒன்றை பெற்றிருந்தார். சிறு வயதில், தன் அகங்காரத்தால் வேண்டுமென்றே கிருஷ்ணரைப் பற்றி அவதூறாக பேசி வந்தான் சிசுபாலன். சற்றே எரிச்சலுற்ற கிருஷ்ணர் "இது தேவையில்லாத வேலை" என்றார். கிருஷ்ணர் யார் என்பதை உணர்ந்திருந்த சிசுபாலனின் தாய் கெஞ்சி, "சிசுபாலனை எப்போதுமே கொல்ல மாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்து கொடு" என கேட்க, கிருஷ்ணர், "அவன் என்னை நூறு முறை அவதூறாக பேசினாலும் நான் அவனைக் கொல்ல மாட்டேன்" என பதிலளித்திருந்தார்.

இது நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, பீஷ்மர் கிருஷ்ணரை ராஜசுய யாகத்தின் சிறப்பு விருந்தினராக அறிவித்ததுமே சிசுபாலன் தூண்டப்பட்டான். அவனுக்குள் புதைத்து வைத்திருந்த எல்லாக் கோபமும் அவமானமும் வெடித்துக் கிளம்ப, எழுந்து நின்று கிருஷ்ணரை வசை பாடலானான்‌. குறுக்கிட்ட பீஷ்மர், "இப்படிப்பட்ட ஒரு நிகழ்வில் கௌரவ விருந்தினரை வசை பாட வேண்டிய அவசியமில்லை. அவரைத் தேர்வு செய்தது நான் தான்" என்றார்.

உடனே கிருஷ்ணரையும் மட்டுமின்றி, பீஷ்மரையும் சேர்த்து தகாதபடி வசை பாட துவங்கினான் சிசுபாலன். புன்னகை தவழ அமர்ந்திருந்த கிருஷ்ணர் அவனது வசைகளை எண்ணிக் கொண்டிருந்தார். தொன்னூற்றி ஒன்பதாவது முறையாக சிசுபாலன் வசைச் சொல்லாடியதும் "உன் அன்னையிடம் நீ நூறு முறை வசை பாடினாலும் உன்னைக் கொல்ல மாட்டேன் என்று வாக்குறுதி அளித்திருந்தேன்‌. அதில் உனக்கு இன்னும் ஒன்று மிச்சமிருக்கிறது. அதைக் கடந்தால் நீ இறப்பாய்" என்றார்.

யாகம் மோசமாக மாறுகிறது

ஆனால் சிசுபாலன் எதையும் கவனிக்கும் நிலையிலோ கிருஷ்ணரின் எச்சரிக்கைக்கு செவிசாய்க்கும் மனநிலையிலோ இல்லை. கொதித்துப் போய் வசைகளை கொப்பளித்துக் கொண்டிருந்தான். எனவே கிருஷ்ணர் தனது புகழ் பெற்ற ஆயுதமான சுதர்சன சக்கரத்தை கையிலெடுத்தார். மஹாபாரதத்தில் கிருஷ்ணர் இந்த ஆயுதத்தை பெற்றது எப்படி என்பதைப் பற்றி பேசும் போது, ஜராசந்தனின் தாக்குதல் காரணமாக மதுரா நகரை விட்டு நீங்குவதற்கு முன் கிருஷ்ணர் மலை மீது சென்று உலோகங்களை பற்றிய ஆராய்ச்சியில் இருந்த ஒரு முனிவரை சந்தித்ததாகவும், அவர்தான் அந்த மலையில் கிடைக்ககூடிய ஒருவிதமான செம்மை படர்ந்த பழுப்பு நிறப் பாறையிலிருந்து அதுவரையில் யாரும் அறிந்திராத கடினமான உலோகத்தை பிரித்தெடுக்கும் முறையை கற்றுத்தந்தார் என்றும் கூறப்படுகிறது. அதுவரையில் ஆயுதங்களை உருவாக்க பித்தளையை பயன்படுத்தி வந்தனர். இப்போது, முதன்முறையாக கிருஷ்ணர் இரும்பை வடித்து, தனக்கான ஆயுதத்தை சக்கர வடிவில் தயார் செய்தார். மிக சூட்சுமமாக இதை கிருஷ்ணர் பயன்படுத்தியதைப் பார்த்த மக்கள், பல விதமான மந்திர சக்திகளை அந்த சக்ராயுதம் பெற்றிருந்தது என பேசத் துவங்கினார்கள். கிருஷ்ணர் சக்ராயுதத்தை எறிய, அது சிசுபாலனின் தலையையும், உடனிருந்த அவனது பல நண்பர்களின் தலையையும் கொய்தது.

ஜராசந்தனை கொன்றதற்காக ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த மக்கள்‌ அனைவரும் தங்கள் வாளை உருவினார்கள். பாண்டவர்கள் நிராயுதபாணிகளாக இருந்தார்கள். ஆனால் பாண்டவர்கள் பக்கம் நின்ற மக்களின் எண்ணிக்கை, வாளை உருவியவர்களின் எண்ணிக்கையை மிஞ்சுவதாக இருந்ததால், அவர்களால் பெரும் வன்முறை ஏற்படாமல் தடுக்க முடிந்தது. ஆனால், ஒரு அரசனின் வாழ்வில் மிக மேன்மையானதாகவும், அழகானதாகவும் நிகழ்ந்திருக்க வேண்டிய ராஜசுய யாகத்தின் சூழல் அசிங்கமானதாக மாறியது. கிருஷ்ணர் சகோதர முறை கொண்ட தன் பங்காளியை கொல்ல நேர்ந்தது ஒன்று, மற்றொன்று, கிட்டத்தட்ட அந்த சூழலே போர்க்களமாக மாறவிருந்தது. அப்போது அங்கே பெரும் உயிரிழப்பு ஏற்படாமல் தடுத்ததில் கிருஷ்ணரின் யாதவ படையினரின் பங்கு முக்கியமானதாக இருந்தது.

களஞ்சிய காவலன்

ராஜசுய யாகத்தின் போது, குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு பொறுப்பு வழங்கப்பட்டது, சொந்த பந்தங்கள் இதை தங்கள் வீடாக நினைக்க வேண்டும் என்பதற்காக. இந்தியாவில் நடக்கும் திருமணங்களில் ஒரு வழக்கமாக இன்றளவும் இது நடைமுறையில் இருக்கிறது. சிலர் உண்மையாகவே தங்கள் வீட்டு நிகழ்வாக எண்ணி முக்கியமான பொறுப்பை எடுத்துக் கொள்வார்கள், மற்றவர்கள் சாதாரணமான செயல்களை கவனிப்பார்கள்.

"துரியோதனனுக்கு என்ன பொறுப்பை வழங்கட்டும்?" யுதிஷ்டிரன் கிருஷ்ணரிடம் கேட்டான். புன்னகை தவழ, "உனது கருவூலக் களஞ்சியத்தை நிர்வகிக்கும் பொறுப்பை கொடுக்கலாமே" என்றார் கிருஷ்ணர். அப்பாவித்தனமாக அப்படியே செய்தான் யுதிஷ்டிரன். அடுத்த சில நாட்களுக்கு கருவூலத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்ற துரியோதனன் அங்கு குவிந்து கிடந்த செல்வ வளத்தைக் கண்டு மலைத்தான் - அவனால் கனவு கூட காண முடியாத அளவுக்கு அங்கு அனைத்துமே குவிந்து கிடந்தது. இதையெல்லாம் பார்க்கப்பார்க்க அவனது பொறாமைக்கு எல்லையே இல்லாமல் போனது.

ராஜசுய யாகம் நிறைவடைந்து அனைத்து விருந்தினர்களும் விடைபெற்று கிளம்பிய பிறகு, யுதிஷ்டிரன் தனது இயல்புப்படி, அதிலும் குறிப்பாக, துரியோதனனையும் அவனது சகோதரர்களையும் மேலும் சில நாட்களுக்கு தங்கியிருந்துவிட்டு செல்லும்படி கேட்டுக்கொண்டான். "எங்களது விருந்தினர்களாக இருங்கள் - இரத்த பந்தங்களை கண்ணால் பார்த்தே நீண்ட நாட்களாகிறது" என்றான். அவ்வளவு நல்ல மனிதன் யுதிஷ்டிரன்.

இப்போது நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டபடியால், அரண்மனை முழுவதையும் சுற்றிக்காட்ட அவர்களுக்கிருந்த நேரத்தில் மாய சபையை பார்வையிட அழைத்துச் சென்றார்கள். அப்படிப்பட்ட ஒரு மாய அரங்கை யாரும், வேறு எங்கும் பார்த்திருக்கவில்லை, ஏனென்றால் வேறெங்கிருந்தோ வந்திருந்த கட்டிட கலைஞனின் கை வண்ணத்தில் அது உருவாகியிருந்தது. பார்ப்பவர்களுக்கு தோற்றப் பிழையை - மாயையை உருவாக்கும் விதத்தில் அது வடிவமைக்கப்பட்டிருந்தது.

அடி தவறிய துரியோதனன்

மாய சபையில், இருக்குமிடமே தெரியாதபடி பரிகாரத்தை கொண்டு மிக மெல்லிய திரை போன்ற தடுப்புகளும், அங்கிருந்த தண்ணீர் தடாகங்களின் மேற்பரப்பு சலனமற்ற பளிங்கு தரையைப் போன்றும் வடிவமைக்கப்பட்டிருந்தன. மிக கவனமாக இருந்தாலன்றி ஒருவரது கண்களே அவரை ஏமாற்றி விடும். துரியோதனனை நீங்கள் எந்த சுற்றுலாவுக்கும் வழி நடத்தி அழைத்துச் சென்றுவிட முடியாது. இதை சில நேரங்களில் நீங்கள் காண முடியும் - நீங்கள் வழிகாட்டியாக இருந்து ஒரு இடத்தை மக்களுக்கு சுற்றிக் காட்டும்போது, பொதுவாக பெண்கள், குழந்தைகள், சில ஆண்கள் வழிகாட்டியோடு சேர்ந்து நடந்து வருவார்கள். ஆனால் ஒரு சிலர் இருப்பார்கள், பெரும்பாலும் அது ஆண்களாகவே இருக்கும், அவர்களால் அனைவரோடும் இணைந்து வரவே முடியாது.

துரியோதனனின் நெஞ்சில் ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த பொறாமை, குமுறல், கோபம், ஆத்திரம் என எல்லாவற்றிற்கும் இந்த அவமானம் மேலும் நெய் வார்த்தது.

துரியோதனன் அப்படிப்பட்ட ஒரு குணமுடையவனாக இருந்தான். யாரோ ஒருவரை பின் தொடர்ந்து செல்வதும், அவரது குறிப்புகளை கேட்டு நடப்பதும் துரியோதனனால் முடியாத ஒன்றாக இருந்தது. அவன் ஒரு அரசனாக வேறு இருந்தானே. ஆனால், படிகார தடுப்புகளில் சென்று இடித்துக் கொண்டான். அது போதாதென்பதைப் போல, கடினமான தரை என்று நினைத்து சலனமற்ற தண்ணீர்‌ தடாகத்தில் காலடி வைத்து‌ நிலை தடுமாறி விழுந்தான்.

அப்போது அந்த வழியாக வந்த திரௌபதி, அங்கே அமர்ந்திருந்த பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் என அனைவருமே இதைப் பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் விழுந்துவிழுந்து சிரித்தார்கள். யுதிஷ்டிரனின் அழுத்தமான ஒற்றைப் பார்வையில் சகோதரர்கள் நால்வரும் அமைதியானார்கள். ஆனால் திரௌபதி சிரிப்பை அடக்க முயற்சித்ததிலேயே தொடர்ந்து பீறிட்டது. அதற்கு மேல், "ஒரு குருடன் மகனிடம் வேறு என்ன எதிர்பார்த்தீர்கள்?" என்று வேறு கேட்டுவிட்டாள். துரியோதனனின் நெஞ்சில் ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த பொறாமை, குமுறல், கோபம், ஆத்திரம் என எல்லாவற்றிற்கும் இந்த அவமானம் மேலும் நெய் வார்த்தது. அவளது கணவர்கள் மட்டும் அப்போது அங்கே இல்லையென்றால் அவன் திரௌபதியை துவம்சம் செய்திருப்பான்.

அவமானத்தால் விழுங்கப்பட்டவனாக அங்கிருந்து வெளியேறினான் துரியோதனன். ஹஸ்தினாபுரம் திரும்பும் வழியில் அவன் பல நாட்களுக்கு எதுவும் உண்ணவில்லை. அவன் இறந்துவிட நினைத்தான். "இந்த அவமானத்தை என்னால் தாங்கவே முடியாது, அவர்களது நகரம் செல்வச் செழிப்பில் மிதக்கிறது, இப்போது ராஜசுய யாகமும் செய்து விட்டார்கள் - இதை இனி என் வாழ்நாளில் செய்யவே முடியாது. எல்லாவற்றிற்கும் சிகரமாக அந்த பெண் வேறு சிரித்தாளே! நான் இறந்துவிட வேண்டும்." என்றான். ஹஸ்தினாபுர அரண்மனையை அடைந்ததும் அப்படியே அமர்ந்து விட்டான். பல வாரங்களுக்கு அவன் எதுவும் சாப்பிடாமல் கிடந்தான். குளிக்கவில்லை, உடை மாற்றவில்லை, பித்துப்பிடித்தாற் போல் அப்படியே அமர்ந்திருந்தான்.

தன் மகன் இப்படி சித்தம் கலங்கிப் போவதை அறிந்து கவலையுற்றான் திருதராஷ்டிரன். யார் என்ன சொன்னாலும் துரியோதனன் எதையும் கேட்கும் நிலையில் இல்லை. இறந்தால் போதும் என்று நினைத்தான். இந்த சூழ்நிலையை வேறு எப்படி சரி செய்வது என்றும் அவனுக்குத் தெரியவில்லை. அப்போது சகுனி உள்ளே வந்தான்.

தொடரும்...