நாகப்பாம்பிடம் நாகமணி இருப்பது உண்மையா? (Nagamani in Tamil)
நாகப்பாம்புகள் இருக்கும் இடத்தில் நாகமணி எனப்படும் ஒரு அரிதான ரத்தினக் கல்லை அவை காவல் காக்கும் என்றும், அதை எப்படியாவது நாம் அடைந்துவிட்டால், அரசனாக மாறமுடியும் என்றும் பல்வேறு கருத்துகள் நம் ஊர்ப்பகுதியில் பேசக் கேட்டிருப்போம். இந்த நாகமணியைக் கண்டது பற்றியும், அதன் சிறப்பு பற்றியும் சத்குரு கூறுகிறார்.

பாம்பு அல்லது புனித சர்ப்பம்... எப்பொழுதுமே ஞான உணர்வுக்கான ஆதாரமாக, வாழ்க்கையின் பல அம்சங்களுக்கான திறவுகோலாகப் போற்றப்படுகிறது. ஏன், இப்பொழுது உயிரியல் விஞ்ஞானிகள், குறிப்பாக விலங்கியலாளர்களும் கூட பாம்புகளைப் பற்றி சில வியப்பான உண்மைகளைத் தெரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் இவை எல்லாம் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது. உதாரணமாக, இப்பொழுதும் கூட நிறைய கடல் பாம்புகளில், அல்லது குறிப்பிட்ட சில கடல் பாம்புகளில் pineal foramen என்று ஒன்று இருக்கிறது. அதாவது, அதன் நெற்றியில் ஒரு துளை இருக்கும். அந்த இடத்தில் ஒளியை உணரும் சென்சார்கள் இருக்கின்றன. அதனால்தான் அதை 'pineal கண்' என்று சொல்கிறார்கள். சமீப காலம் வரை, இந்த pineal கண் நூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே அழிந்துவிட்டது என்று பெரிய அளவில் நம்பப்பட்டது. ஆனால் இப்போது சில விஞ்ஞானிகள் - சில பாம்புகளில் இந்த pineal கண் அல்லது pineal foramen இன்னும் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். Foramen என்றால் லத்தீன் மொழியில் 'தலையில் இருக்கும் ஒரு துளை' என்று அர்த்தம்.
எனக்கு ஒரு 21 - 22 வயது இருக்கும், அப்போது இது நடந்தது, நான் அப்போது காக்கனாக்கோட்டே காட்டிற்குள் இருந்தேன்.
அடர்ந்த காடுகள்... புலிகள் ராஜ்யம்... ராஜ நாகங்களின் பிரதேசம்... அங்கு நான் இந்த பழங்குடி மக்களுடன் நாட்கணக்காக காட்டிற்குள் நடந்துகொண்டிருந்தேன்...
அங்கே ஒருவர், தன்னிடம் நாகமணி இருப்பதாகச் சொன்னார், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பலர் இதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். பல பெண்களுக்கு நாகமணி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். நாகமணி என்பது நாகப்பாம்பில் இருந்து வரும் ஒரு ரத்தினம், ஒரு முத்து போல... அது விலைமதிக்க முடியாத ஒரு கல். ஆனால் எப்படி பாம்பால் ஒரு ரத்தினக் கல்லை உருவாக்க முடியும்?
Subscribe
நாகமணி எப்படி உருவாகிறது?
ஒரு நாகப்பாம்புக்கு வயதாகும்போது, குறிப்பாக தென்னிந்தியாவில் காணப்படும் பழுப்புநிற நாகப்பாம்புகள் - நான் நேரடியாகப் பார்த்ததால் சொல்கிறேன்... வயதான பாம்புக்கு, வேட்டையாடுவது மிக மிக கடினமாக ஆகிவிடுகிறது. ஏனெனில் இளம் வயதில் அதற்கு இருந்த சுறுசுறுப்பு இப்போது இல்லை. அதனால் அது தன்னுடைய விஷத்தைச் சேமித்து வைக்க ஆரம்பிக்கிறது, விஷம் என்பது மிகவும் சிக்கலான புரதங்களைக் கொண்டது. இன்று பாம்பு விஷம், தேள் விஷம், சிலந்தி விஷம் எல்லாவற்றையும் வைத்து பல்வேறு மருந்துகள் தயாரிக்க நிறைய ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கிறது. ஏனெனில், இந்த விஷங்களில் இருக்கும் புரதச்சத்து கலவை, பூமியிலேயே மிகவும் சிக்கலான ஒன்று.
இப்படி விஷத்தைச் சேமித்து சேமித்து, அதைத் திட நிலைக்கு மாற்றுகிறது, அதைத் தனது நெற்றியில் சேமித்து வைக்கிறது. நட்சத்திர வெளிச்சத்தில் அது, நீல-பச்சை நிற ஒளியை வெளிப்படுத்தி ஜொலிக்கும். வெளிச்சத்தைப் பார்த்து பூச்சிகளும் சிறிய பிராணிகளும் அதை நோக்கி வரும். அதாவது, உணவு தானாக வருகிறது! பொதுவாக, ஒரு பாம்பு 12ல் இருந்து 14 நாட்களுக்கு ஒரு முறை சாப்பிடும். ஆனால் வயதாக ஆக, இந்த இடைவெளி 16ல் இருந்து 24 நாள் வரை அதிகரிக்கும். இறுதியாக 32 நாள் வரை சாப்பிடாமல் இருக்கும். அப்போது என்ன செய்யும் என்றால், ஒரே இடத்தில் உட்கார்ந்து இரவு நேரத்தில் ஒளிவிடும். பெரிய பூச்சிகளும், எலி போன்ற சிறிய பிராணிகளும் அந்த வெளிச்சத்தை நோக்கி வரும். அப்படி வரும் பிராணிகள் மூலமாகத் தன்னுடைய உணவுத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளும். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம், இந்தியப் பாரம்பரிய கதைகளிலும் இதைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த நாகமணி மிகவும் அரிதான விஷயம், மக்கள் அந்த ரத்தினத்தை எப்படியாவது பாம்பிடமிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். இப்போதெல்லாம் துரதிர்ஷ்டவசமாக, வியாபார நோக்கங்களுக்காக, பாம்புகளைப் பிடித்து, அதன் நெற்றியிலிருந்து இந்த மணியை வெளியே எடுக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் அதை பாம்பின் தலையிலிருந்து, நீங்கள் பிடுங்கி எடுத்தால், அது முதிர்ச்சி அடையாத ஒரு கல்லாகத்தான் இருக்கும். அது ஒரு ஸ்படிகமாக இருப்பதால், நீங்கள் அதை கல் என்று சொல்லலாம், அந்தக் கல் பிரயோஜனம் இல்லாததாகத்தான் இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக அது பாம்பின் சொத்து, உங்களுடையது இல்லை. ஆனால் காலப்போக்கில் பாம்பே அதை உதிர்த்துவிடும். அதனால் நீங்கள் பாம்பு குடியிருந்த இடங்களில் போய்த் தேடினால், உங்களுக்கு கிடைத்தாலும் கிடைக்கலாம்.
நாகமணியைக் கண்டு வியந்த சத்குரு
நான் இந்த பழங்குடி மக்களுடன் இருந்தபோது, அவர்கள் எல்லாம் ஒருவரை மிகவும் உயர்வாகப் பார்த்தார்கள், அவர் ஒரு இளைஞர், ஒரு 30 வயதுக்கு மேல் இருக்கலாம், அவரை எல்லோரும் ஒரு பெரிய மரியாதையுடன் பார்க்கிறார்கள்.
நான் கேட்டேன், “இந்த நபரிடம் அப்படி என்ன சிறப்பாக இருக்கிறது?”
அவர்கள் சொன்னார்கள், “அவர் நாகமணி வைத்திருக்கிறார்”.
நான் இதைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தக் காலத்தில், நான் எதையும் சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் ஆள். நேரடியாகக் கண்ணால் பார்க்காமல் எதையும் நம்பமாட்டேன். "இதெல்லாம் கட்டுக் கதை... எனக்குக் காட்டு பார்ப்போம்" என்று சவால் விட்டேன்.
பகல் நேரத்தில் அவர் அதைக் காட்டியபோது பார்க்கச் சிறிய கூழாங்கல் போலத் தெரிந்தது, ஒளி ஊடுருவாமல், கருப்பு நிறத்தில், நீல-கருப்பு நிறமாக இருந்தது.
நான் கேட்டேன் “இதற்கு என்ன இப்பொழுது?”
அவர் சொன்னார், "இல்லை, நீங்கள் இரவு நேரத்தில் வாருங்கள், என்னவென்று காட்டுகிறேன்.”
நாங்கள் காட்டில் முகாமிட்டுத் தங்கியிருந்தோம். அது யானைக் காடு. காட்டெருமை இருக்கிறது. ஆமாம், புலிகளும் இருக்கின்றன. ஆனால் புலி பரவாயில்லை, அது 15 நாட்களுக்கு ஒரு தடவைதான் சாப்பிடும். ஆனால் யானைகள் அப்படி இல்லை. அது 15 நாட்களுக்கு ஒரு தடவை மட்டும்தான் மனிதர்களை மிதித்துவிட்டுப் போகும் என்று இல்லை. அதனால் நாங்கள் முகாமைச் சுற்றி இப்படி நெருப்பு மூட்டி வைத்திருந்தோம்.
பிறகு அந்த நபர் வந்து, தன்னுடைய நாகமணியைக் காட்டுவதாகச் சொன்னார். ஆனால் நெருப்பு வெளிச்சம் வேண்டாம் என்றார், அதனால் நாங்கள் காட்டின் இருண்ட பகுதிக்குச் சென்றோம். அங்கு நட்சத்திர வெளிச்சம் கூட, மிகவும் குறைவாகத்தான் இருந்தது. அவர் நாகமணியை ஒரு இலைமேல் வைத்து, அதற்கு மேல் மிகவும் மெலிதாக இருக்கும் ஒரு வெள்ளைத் துணியைப் பிடித்தார். என்னால் நம்பவே முடியவில்லை, அது அப்படியே ஜொலித்தது, மயில் தோகையின் நடுப்பகுதி போல. அந்த நீல-பச்சை நிறம், பளிச்சென்று தெளிவாக இருந்தது. துணியை எடுத்துவிட்டுப் பார்த்தால், அது ஒரு சாதாரண கருப்புக் கல். ஆனால் அதற்கு மேல் துணியைப் போட்டால், அது நீல-பச்சை நிறமாக மாறிவிடுகிறது.
அவர் இதை பாம்பு குடியிருந்த இடத்தில் தேடிக் கண்டுபிடித்ததாகச் சொன்னார். இதை யாருக்கும் கொடுக்க விருப்பம் இல்லை அவருக்கு, ஏனெனில் இது அவரை இந்தியாவின் அரசனாக ஆக்கிவிடும் என்று நம்பினார். ஏனெனில் எப்போதுமே அப்படி ஒரு நம்பிக்கை இருக்கிறது, "நாகமணி கிடைத்தால், நீங்கள் ராஜாவாக ஆகிவிடுவீர்கள், செல்வந்தனாக ஆகிவிடுவீர்கள், சக்தி வாய்ந்தவனாக ஆகிவிடுவீர்கள், எல்லாமே ஆகிவிடுவீர்கள்" என்று. அதற்குப் பிறகு அவருக்கு என்ன ஆனது என்று எனக்குத் தெரியாது.
நாகமணி இருந்தால் பாம்பு கடிக்காதா?
ஆனால் ஒன்று - எல்லோரும் சொல்கிறார்கள், நாக மணியை உடலில் வைத்துக்கொண்டிருந்தால், பாம்பு கடிக்காது என்று. அதற்கு வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால், ஒரு சிலர் அதை செய்து காட்டி நானே பார்த்திருக்கிறேன். என் வாழ்க்கையில் ஆரம்ப காலத்தில் பாம்புகள் என்னைக் கடித்திருக்கிறது. ஆனால் அதன்பிறகு நிறைய சந்தர்ப்பங்கள் இருந்தும் கூட எப்போதுமே கடிக்கவில்லை.
இன்னொரு விஷயம் என்னவென்றால், ஆதிகாலத்தில் இருந்தது போல ஒளி உணர் foramen அல்லது pineal கண் இப்போது அவ்வளவாக வளர்ச்சி அடையவில்லை. ஆனாலும் ஒளி உணர் செல்கள் அதில் இருக்கின்றன. எப்போது அது ஸ்படிகமாக உருவாகிறதோ, அப்போது அது ஒளியைப் பிரதிபலிக்கும். அதனால்தான் பொருள்தன்மை இல்லாத விஷயங்களையும் பார்க்க முடியும். அதனால்தான் பாம்புகளால் மனிதர்களின் சக்தி உடலைப் பார்க்க முடிகிறது. எப்போது ஒருவருடைய சக்தி பொங்கி வழிந்து பிரகாசிக்கிறதோ அல்லது உற்சாகமிக்கதாக இருக்கிறதோ, பாம்புகள் இயல்பாகவே அந்த திசையை நோக்கி நகரும். ஏனென்றால் அவற்றால் பொருள் உடலுக்கு அப்பாற்பட்டதையும் பார்க்க முடியும்.
நாகப் பாம்பு மட்டும்தான் பகல் நேரத்தில் ஆகாய தத்துவத்தைப் பார்க்க முடிந்த ஒரே உயிரினம். நீங்கள் எவ்வளவு உயர்ந்த யோகியாக இருந்தாலும், பகல் நேரத்தில் இதைப் பார்ப்பது மிகவும் கடினம் - மிக மிக அபூர்வம். உத்தராயண தக்ஷிணாயன காலங்களில் சில மாற்றங்கள் நடக்கும்போது பார்க்க முடியலாம். ஆனால் சாதாரண நாட்களில் கடினம், இருளில் மட்டும்தான் பார்க்க முடியும். ஆனால் நாகப்பாம்பு ஒன்றால் மட்டும்தான் இதைப் பார்க்க முடியும். அதனால்தான், எங்கெல்லாம் மக்கள் ஆன்மீகத் தேடலில் இருக்கிறார்களோ, எங்கெல்லாம் உயிர் பற்றிய ஆழமான அனுபவங்கள் இருந்ததோ, அங்கெல்லாம் பாம்பு உருவம் எப்போதுமே இருந்தது.
நாக வழிபாடின் முக்கியத்துவம்
மனித உடம்பிற்குள் ரெப்டீலியன் மூளை என்று ஒன்று இருக்கிறது. இதுதான் நமக்குச் சம்பந்தப்பட்டது. ரெப்டீலியன் மூளைதான் உங்கள் இதயத்துடிப்பு, சுவாசம், உடல் வெப்பநிலை, உடலின் சமநிலை இதுபோன்ற அத்தியாவசிய செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது. இந்த ரெப்டீலியன் மூளை மட்டும்தான் உங்கள் அணுகுதலில் இருக்கிறது என்றால், உங்கள் உடல் நம்பகமானதாக ஆகிவிடும். ஆனால் அதேசமயம் மிகவும் இறுக்கமாக, கட்டாயங்களுக்கு உட்பட்டதாக ஆகிவிடும். ஒருவிதத்தில், விழிப்புணர்வு அடைய வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு, விழிப்புணர்வின் உச்சநிலைகளை உணர்ந்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு, உடலின் கட்டுப்பாடுகளில் இருந்து விடுபடுவது, உடலின் கட்டாயங்களில் இருந்து விடுதலையாவது மிகவும் முக்கியமான விஷயங்களில் ஒன்று.
உலகம் முழுக்க நடக்கிற இந்த நாக வழிபாடு, இது எதற்கென்றால் - மக்கள் அவர்களுக்கு இருக்கும் உடலின் கட்டாயங்களில் இருந்து விடுபட முயற்சி செய்கிறார்கள். நம் உருவாக்கத்துக்கு அடிப்படையான, இது ஒன்றும் சிறிய விஷயம் இல்லை. நாம் உருவாகியிருப்பதற்கு அடிப்படையே இதுதான். எல்லா உடல் கட்டாயங்களும், உங்கள் சுவாசம், உணவு, பசி, இனப்பெருக்கம் - இவை எல்லாம் வாழ்க்கையின் முக்கியமான அம்சங்கள். இவை எல்லாம் இல்லாமல் நம்மால் இருக்கவே முடியாது. இருக்க முடியாது என்று சொல்லும்போது, சில விஷயங்களை நம்மால் மாற்ற முடியும் - ஒரு நாளைக்கு ஐந்து தடவை சாப்பிடுவதற்குப் பதிலாக ஒரு வேளை அல்லது இரண்டு வேளை சாப்பிடலாம், எட்டு மணி நேரம் தூங்குவதற்குப் பதிலாக மூன்று மணி நேரம் தூங்கலாம். இவை எல்லாம் செய்ய முடியும். ஆனால் நீங்கள் இங்கு இருப்பதும் வேறு யாரோ ஒருவருக்கு இருந்த கட்டாயத்தால்தான். அவர்களை நீங்கள் அம்மா அப்பா என்று அழைக்கிறீர்கள். அவர்களுக்குக் கட்டாயங்கள் இருந்ததால்தான் நீங்களும் நானும் இங்கு இருக்கிறோம். இந்த எல்லா கட்டாயங்களையும் நிர்வகிப்பது ரெப்டீலியன் மூளைதான். ஒருவேளை இந்த ரெப்டீலியன் மூளை கொஞ்சம் - என்ன சொல்வது - பற்று விட்டுவிட்டால், திடீரென்று, இவை எல்லாமே போய்விடும்.
உங்கள் விஷத்தை சேமித்து வையுங்கள்
உயிரை அணுகுவதற்கு யோகாவில் இரண்டு வேறுபட்ட வழிகள் இருக்கின்றன. ஒன்று ரெப்டீலியன் மூளையை அடக்கி ஆளுவது. இன்னொன்று ரெப்டீலியன் மூளையைக் கடந்து போவது. அடக்கி ஆளும்போது, அது ஒருவிதமாக வேலை செய்யும். கடந்துபோனால், உயிர் வேறுவிதமாக வேலை செய்யும். ஆனால் நீங்கள் ரெப்டீலியன் மூளையிலேயே வேரூன்றி இருந்தால், வெறும் உடம்பாக மட்டும்தான் இருப்பீர்கள். உங்களுக்கு மூளை இருப்பதாக நினைப்பீர்கள், பரவாயில்லை, அது ரெப்டீலியன் மூளைதான். ஆனால் நீங்கள் இதைக் கடந்து போனால், இந்த pineal foramen உங்களுக்குள்ளும் வேலை செய்ய ஆரம்பித்துவிடும். நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், நீங்கள் தினமும் உங்கள் விஷத்தைப் பயன்படுத்தாமல் இருந்தால், அது எல்லாம் சேர்ந்து, சேர்ந்து படிகமாக மாறி, நீங்களும் ஜொலிப்பீர்கள். ஆனால் நான் நினைக்கிறேன், நீங்கள் தினமும் அதை விரயமாக்கிக்கொண்டே இருக்கிறீர்கள்.
அதனால்தான், பாம்பை எழுப்பிவிடுவது, நாம் ஒரு ஊர்வன உயிராக மாறுவதற்கோ, அல்லது விஷ ஜந்துவாக மாறுவதற்கோ இல்லை. நம் உடலில் நடக்கிற எல்லா செயல்பாடுகளும் - இதயத்துடிப்பு, சுவாசம், உணர்வுகள், நடமாட்டம், சமநிலை - இவை எல்லாம் ரெப்டீலியன் மூளையுடன் தொடர்புடையது. இவை எல்லாம் தானாக, சிரமமே இல்லாமல் நடக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அப்போதுதான் நாம் வாழ்க்கையில் இன்னும் ஆழமான, உயர்ந்த விஷயங்களில் கவனம் செலுத்த முடியும். இல்லையென்றால், உடம்பு நம்மை வரம்புக்குள் மட்டுமே வைத்திருக்கும். அதனால்தான் நம் நோக்கமே இந்த சர்ப்ப குணத்தைப் பயன்படுத்தி நம் உடல் வரம்புகளைக் கடப்பது மட்டுமல்லாமல், இப்போது நம்மால் அடைய முடியாத இடங்களுக்கும், உணர்வு நிலைகளுக்கும் நம்மை கொண்டுபோக வேண்டும், pineal கண்ணின் உதவியால்.