IYO-Blog-Mid-Banner

விஷுத்தியும் மறைஞானமும்

சத்குரு: மறைஞானத்தில் திறனுடன் இருப்பது என்றால், அடிப்படையாக, உங்கள் சக்தி நிலை விஷுத்தியில் மையம் கொண்டிருக்கிறது அல்லது உங்களுடைய விஷுத்தியின் மீது உங்களுக்கு குறிப்பிடத்தக்க ஆளுமை இருக்கிறது என்பது பொருள். இதனால் நீங்கள் வித்தியாசமான ஒரு தளத்தில் இயங்குவீர்கள். உங்களைச் சுற்றியுள்ள மக்கள், உங்களை ஏதோ அபூர்வ சக்திகள் வாய்ந்த மனிதர் என்று நினைப்பார்கள், ஆனால் நடந்திருப்பதென்னவோ முற்றிலும் வேறு வழிகளில் இயங்குவதற்கு நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் என்பதுதான். பல வழிகளிலும் ஆதியோகி விஷுத்தியின் பிரதிநிதியாகவே இருக்கிறார். இது எந்தளவுக்கு என்றால், விஷகண்டன், நீலகண்டன் போன்ற பல பெயர்களும் அவர் விஷுத்தியே உருவானவர் என்பதை விளக்குவதாகவே அமைந்துள்ளது. அந்த ஒரு தன்மையை மட்டுமே அவர் கொண்டிருந்தார் என்பதற்காக இந்த பெயர்கள் அவரை வந்தடையவில்லை, மக்களின் புரிதலுக்கு அப்பாற்பட்டவையாக இருந்த அந்த விஷயங்களுக்காக மக்கள் அவரை அப்படிப் பார்த்தார்கள். இது எப்படியென்றால், நீங்கள் இயேசு என்றதுமே - அவர் என்னவெல்லாம் செய்தார் என்பது நமக்குத் தெரியாது - மக்களின் மனங்களில் தோன்றும் முதல் விஷயம், அவர் நீர்ப்பரப்பின் மீது நடந்தார் என்பதுதான்.

விஷுத்தியும் ஆதியோகியும்

அதேவிதமாக, மற்றவர்களுக்கு சாத்தியமில்லாதது அல்லது சாமான்ய திறனுக்கு அப்பாற்பட்டது என்று மக்கள் நினைத்த விஷயங்களை செய்ததற்காகவும் ஆதியோகி அல்லது சிவன் பிரபலமானவராக இருக்கிறார். ஆகவே, அவரது விஷுத்தி திறனுக்காக மக்கள் அவரை அங்கீகரித்தனர். அவரது மற்ற திறன்கள் அவர்களால் கவனித்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிகவும் சூட்சுமமாக இருந்தன. தாங்கள் சாதாரணமாகக் கருதியவைகளைத் தாண்டிய வேறொன்றை, வேறு வார்த்தைகளில் கூறவேண்டுமென்றால், அமானுஷ்யமான வேறொன்று நிகழும் என மக்கள் எதிர்பார்த்தனர், விஷுத்தி சாதனாவுக்கு மக்களை நீங்கள் உட்படுத்தினால், நீங்கள் “அமானுஷ்யமானவர்களை”விருத்தி செய்கிறீர்கள். “அமானுஷ்யமானவர்”என்று நீங்கள் யாரை வரையறுப்பீர்கள் என்பது பார்க்கப்படும் கோணத்தில்தான் இருக்கிறது. நீங்கள் தினமும் உங்களது முகத்தை சுரண்டிக்கொள்ளும் வழக்கம் உள்ளவராக இருக்கிறீர்கள், வேறொருவர் சுரண்டவில்லை என்றால், உங்களது புரிதலில், அவர் அமானுஷ்யமான ஒருவராக இருப்பார். அல்லது இதையே வேறு வார்த்தைகளில் கூறவேண்டுமென்றால், ஒரு சமூகத்தில், ஒரு குழந்தை பிறந்தவுடன், அதன் மூக்கை வெட்டிவிடும் “புனித”சடங்கை பின்பற்றுவதாக வைத்துக்கொள்வோம். அனைவருமே இதையே செய்துவரும் நிலையில், திடீரென்று ஒரு நபர் தனது இயல்பாக வளர்ந்த திருத்தமான மூக்குடன் அங்கே வந்தால், திடீரென்று அந்த ஒருவர் அமானுஷ்யமானவராகத் தெரிவார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒருவரது விஷுத்தி செயல்படத் துவங்கினால், சக்தி நிலையின் திறன்கள் பல விஷயங்களை உருவாக்குவதற்கு உங்களை அனுமதிக்கும். ஒருவர் ஏதோ ஒன்றைப் பரிமாறி, தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளை மாற்றியமைக்க விரும்பினால், விஷுத்தியின் மீது அவருக்கு குறிப்பிட்ட ஆளுமை இருப்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. ஆனால், விஷுத்தியின் மீது கவனம் குவித்துள்ள ஒருவருக்கு, சமூகக் கட்டமைப்புகளுக்குள் பொருந்துவது சற்றே கடினமாக இருக்கிறது. ஆதியோகியின் இத்தகைய கதைகளை நீங்கள் கேள்விப்பட்டுள்ளீர்கள் - சில நேரங்களில் அவர் மிகவும் ஒளி படைத்தவராக, பிரமாதமானவராக, ஆண்தன்மையின் அவதாரமாக இருக்கிறார். மற்ற நேரங்களில், அவர் முழுக்க அமானுஷ்யமானவராக, பித்தேறிய நிலையில் இருக்கிறார். இந்தக் கதைகள், அவரை வெவ்வேறு தன்மைகளில் மக்கள் பார்த்ததை விவரிக்கின்றன. விஷுத்தி தன்மையில் அவர் இருப்பதை மக்கள் பார்த்தபோது, அமானுஷ்யத்திலும் அமானுஷ்யமானவராக அவர் சுடுகாட்டில் இருந்தார். அவரைச் சுற்றிலும் பூதகணங்களும், எல்லாவிதமான உயிர்களும் இருந்தன. ஏனென்றால் விஷுத்தி செயல்படத் துவங்கும் கணமே, உடலற்ற உயிர்கள் இயற்கையாகவே உங்களை நோக்கி ஈர்க்கப்படுகின்றன.

விஷுத்தியின் ஈர்ப்பு

நாம் தியானலிங்க பிரதிஷ்டையில் ஈடுபட்டிருந்தபோது, வெவ்வேறு சக்கரங்களுக்கும் மக்களை தயார் செய்துகொண்டிருந்தோம். ஆனால் விஷுத்திக்காக யாரையும் பயிற்சியளித்து தயார் செய்ய முடியவில்லை. ஏனென்றால், நமக்கிருந்த குறிப்பிட்ட காலக்கெடுவின் கட்டுப்பாட்டால் துரிதமான மாற்றத்திற்கு ஏற்ற போதுமான அமானுஷ்யத் தன்மையுடைய ஒருவரும் நமக்குக் கிடைக்கவில்லை. எனவே, விஷுத்தியில் ஒருவிதமான வலிமையை அடைந்திருந்த ஒரு குறிப்பிட்ட உடலற்ற உயிரை ஒரு யோகியை பயன்படுத்த நாம் முடிவு செய்தோம். இதை நாம் செய்யத் துவங்கிய கணத்திலேயே சுமார் நானூறு பேர் அமர்ந்திருந்த கூட்டத்தினூடே யார் கவனத்திற்கும் சிக்காமல் ஒரு நல்லபாம்பு எப்படியோ ஊர்ந்து நாம் ஏதோ செய்வதற்காக ஏற்படுத்தியிருந்த ஒரு சிறிய பள்ளத்திற்குள் வந்து அமர்ந்துகொண்டது. நம்முடன் இலவசமாக பயணம் மேற்கொள்ள இந்த பயலும் முயற்சிப்பதைப் பார்த்ததும், அவனை எடுத்து ஒரு சாக்குப்பைக்குள் வைத்து, காட்டுக்குள் கொண்டு விடுமாறு அனுப்பி வைத்தோம். அவர்களும் அவ்வாறே செய்தனர். சில மணி நேரங்களுக்குப் பிறகு, மீண்டும் அதே சர்ப்பம் அதே பள்ளத்திற்குள் இருந்தது. அவனுக்கு அங்கே இருக்கவேண்டும் என்று ஆசை, ஏனென்றால் இதை அவனுக்கான வாய்ப்பாக அவன் பார்த்தான்.

நீண்ட மணி நேரங்கள் தொடர்ந்து தியானம் செய்வது எனக்கு வழக்கமாக இருந்தபோது, நாம் சாமுண்டி மலையில் அல்லது மைசூரில் இருந்த அலோகா என்ற ஒரு சிறிய காட்டில் அமர்ந்திருப்போம். பெரும்பாலும் மதியப்பொழுதுகளில், சில நேரங்களில் பின்னிரவுகளில் அங்கே அமர்ந்திருப்பதை எப்படியோ தேர்ந்தெடுத்திருந்தோம். மதிய வேளையில் அமர்ந்து, ஒரு சில மணி நேரங்கள் தியானம் செய்துவிட்டு, பிறகு கண்களைத் திறந்து பார்த்தால், பன்னிரண்டிலிருந்து பதினைந்து நாகங்கள் இலவச சவாரி செய்ய நம் முன் காத்துக்கொண்டு அமர்ந்திருக்கும். விஷுத்தி செயல்படத் துவங்கும் கணத்திலேயே, அவைகள் அங்கே வந்துவிடும். ஆதியோகியின் கழுத்தைச் சுற்றியிருக்கும் சர்ப்பமானது, விஷுத்தி செயல்படத் துவங்கும்போது செல்ல வேண்டிய பாதையையும், எப்படியெல்லாம் விஷயங்கள் நிகழும் என்பதையும் சுட்டிக்காட்டும் ஒரு குறியீடாக இருக்கிறது

விஷுத்தி அனைவருக்குமானது அல்ல

பெரும்பாலான மக்களுக்கு நாம் ஏன் விஷுத்தியை தவிர்க்கிறோம் என்பதற்கான மற்றொரு காரணம், தன்னையுணர்தலைத் தேடும் ஒருவர் இப்படி எல்லா செயல்களிலும் ஈடுபடத் தேவையில்லை. வாழ்வின் நுட்பங்களைத் தேடிக் காண விரும்பும் ஒருவர், ஏதோ ஒன்றை மற்றவர்களுக்குப் பரிமாற விரும்பும் ஒருவர், எதிர்காலத்திற்கான ஒரு களஞ்சியமாக இருக்க விரும்பும் ஒருவர் மட்டும்தான் இந்த அனைத்தையும் உணரவேண்டியுள்ளது. வெறுமனே தன்னையுணர்தலை மட்டும் வேண்டுபவருக்கு, இந்த விஷயங்கள் எதுவுமே தேவையில்லை - உங்கள் தலை மீது ஒரு தட்டு தட்டுவதிலேயே அது நிகழவேண்டும். அது அவ்வளவு சிக்கலானது அல்ல. ஆனால் உங்களது படைப்பின் இயல்பை, ஒருவிதத்தில் பெரு அண்டத்தின் சிறு பிண்டமாக அல்லது நுண்ணிய பிம்பமாக நீங்கள் இருப்பதை கண்டறிய விரும்பினால், அது முடிவில்லாத ஒரு தேடலாய் இருக்கிறது.

எல்லையே இல்லாத ஒரு தேடலாக அது இருப்பதால், புரிந்துகொள்வதற்காக நாம் சக்கரங்களை இனம் பிரித்திருக்கிறோம். வெவ்வேறு பரிமாணங்கள் நிகழத் துவங்கும்போது, அவற்றை எப்படி அடையாளம் காண்பது என்பதை நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். இல்லையென்றால், இனம் பிரிப்பதற்கான அவசியம் இல்லை. உங்களது அனுபவத்தின் வலிமையினால் மட்டுமே சக்கரங்களை அடையாளம் காண முடியுமே தவிர, அவைகளைப் பற்றிய உங்களது காரண அறிவினால் ஒருபோதும் அடையாளம் காணமுடியாது. இருப்பினும், மனித மனதின் இயல்பு எப்படிப்பட்டதென்றால், அது அமைதியாக இருக்கமுடியாதது; எப்போதும் புதிதாக ஏதோ ஒன்றுக்காக அது பசித்திருக்கிறது. ஏதோ ஒரு வழியில் நீங்கள் அதை திருப்திப்படுத்த வேண்டியுள்ளது; இல்லையென்றால் அது எதனுடனும் தங்கியிருக்காது. உங்களது மனதை சிறிதளவுக்கு புத்திசாலியாக நீங்கள் உணரச் செய்யவேண்டும்; இல்லையென்றால், அது உங்கள் வாழ்வில் ஒவ்வொன்றிலும் குறுக்கிடும். விதிவிலக்கில்லாமல் ஒவ்வொருவரும், தாங்கள் புத்திசாலி என்றே எங்கோ உள் ஆழத்தில் நம்புகின்றனர். மற்றவர்கள் முன்னிலையில் நீங்கள் பணிவானவராக இருப்பதற்கு பயிற்றுவிக்கப்பட்டு இருக்கலாம், ஆனால் உங்களுக்குள், நீங்கள் புத்திசாலி என்றுதான் நினைக்கிறீர்கள்.

விஷுத்தியும் நீலவண்ண மேனியர்களும்

ஒருவரது சக்தி நிலைகள் விஷுத்தியில் மையம் கொண்டிருக்கும்போது, அவர் நீலவண்ண ஒளியுடலைப் பெறுகிறார். இந்தக் காரணத்தினால்தான், கடந்த காலத்தின் செயலூக்கம் மிகுந்த, திறன்மிக்க உயிர்களாகிய இராமன், கிருஷ்ணன் போன்றோரும், நிச்சயமாக சிவனும், எப்போதும் நீலநிற மேனியர்களாக இந்தியாவில் வர்ணிக்கப்படுகின்றனர். நீங்கள் தன்னையுணர்ந்தவராகவும், செயலின் உச்ச நிலையிலும் இருக்க விரும்பினால், உங்களுக்கு நீலவண்ண ஒளியுடல் தேவை; அதாவது உங்களது விஷுத்தி சக்கரம் செயல்பட தேவை இருக்கிறது. இல்லையென்றால், சாமான்யமான திறனைத் தாண்டிய வழிகளில் உங்களால் செயல்பட முடியாது. தேவையான விழிப்புணர்வுடன் இருந்தவர்கள் இந்த உயிர்கள் நீலவண்ண ஒளியுடலைக் கொண்டிருந்ததை பார்த்த காரணத்தினால், அவர்களை நீலவண்ண மேனியர்களாக வர்ணித்தனர். இதை கவனித்த ஓவியக் கலைஞர்கள் அவர்களது உச்சி முதல் பாதம் வரை நீலத்தால் வர்ணம் கொடுத்தனர். அவர்களது தோல் நீல நிறமாக இருந்தது என்று இதற்கு அர்த்தமில்லை.

தேளின் விஷம் உங்கள் ஒளியுடலுக்கு நீல வண்ணம் வழங்கும் என்பதால், தேள்கொட்டுகளை தாமாகவே வலிய எடுத்துக்கொள்ளும் யோகிகளும் இருக்கின்றனர். நல்லபாம்பின் விஷம்கூட உங்கள் ஒளியுடலை நீலமாக்குகிறது. நாகத்தின் விஷத்தை உங்களால் கையாள முடியவில்லையென்றால், ஒரு தேளிடம் கொட்டுப் பெறுவது மேலானதாக இருக்கலாம், ஏனென்றால் அது உங்களைக் கொல்லாது; குறிப்பிட்ட சில விஷயங்களை மட்டும் உங்களுக்கு ஏற்படுத்தும். நீல உடலானது, இனிமையான உணர்ச்சி நிலைக்கும், பகுத்துணரும் மனதிற்கும் இடையேயான தீவிரமான செயல்பாட்டைக் குறிக்கும் குறியீடாக இருக்கிறது. அளவுக்கதிகமான உணர்ச்சியின் இனிமை நிகழ்ந்தால், இந்த உலகுடன் ஈடுபட உங்களுக்கு விருப்பம் இருப்பதில்லை; நீங்கள் இப்போது இருக்கும் நிலையே உங்களுக்கு சுகமாக இருக்கிறது. ஒரு கட்டத்தில், மனதின் பகுத்துணர்தல் அல்லது காரண அறிவைக்கொண்டு ஒவ்வொன்றையும் தெள்ளத் தெளிவாக பார்க்கும் நிலை உருவானால், அப்போதும் நீங்கள் யாருடனும் ஈடுபாடுகொள்ள விரும்புவதில்லை. நீங்கள் தனிமையானவராக இருக்கிறீர்கள்.

உங்கள் விஷுத்தி செயல்பட்டால் மட்டுமே, நீங்கள் “நீலவண்ண மேனியனாக” இருந்தால், அப்போது உணர்ச்சியின் இனிமையும், மனதின் பகுத்துணர்தலும் உங்களிடம் இருக்கமுடியும். நீங்கள் விரும்பும் விதத்தில் உலகத்துடன் நீங்கள் நினைத்தபடி எல்லாம் விளையாடினாலும், அவற்றால் தொடப்படாமல் இருக்கவும் முடியும்.