தியானலிங்கம் - இது மூன்று பிறவிக்கதை பகுதி 19

தியானலிங்க பிரதிஷ்டையில் உடலற்ற ஒரு யோகியை பயன்படுத்தினாரா சத்குரு?! இது எப்படி நிகழ்ந்தது? விடை சொல்கிறது இந்த வாரப் பகுதி!

பட்டுக்கோட்டை பிரபாகர்:

நவீன விஞ்ஞானத்தில் பாதரசத்தைக் கெட்டிப்படுத்த எந்த வழிமுறையும் கிடையாது. ஆனால் இந்த தியானலிங்கத்துக்குக் கீழே கெட்டிப்படுத்தப்பட்ட பாதரசம் இருக்கிறது. அந்தப் பாதரசத்தை எப்படிக் கெட்டிப்படுத்த முடிந்தது? இந்தியாவின் பாரம்பரிய முறையான ரச வைத்திய முறையைக் கையாண்டு பாதரசம் கெட்டிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த தியானலிங்கத்தின் பல சிறப்புகளில் இதுவும் ஒரு முக்கியமான சிறப்பாகும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
பிராணப் பிரதிஷ்டை என்பது ஆழ்ந்த சூட்சுமமான தந்திரம் அல்லது நுட்பம்.

இதெல்லாம் சாத்தியம்தானா என்ற வியப்பும், அச்சமும், சந்தேகமும் தோன்றும். ஆனால், ஆழமான ஆன்மீக சாதனைகளில் எதுவும் சாத்தியமே என்கிறார் சத்குரு. நமக்குத் தெரியாதது, நாம் உணராதது என்று மட்டுமே பகுத்தறிவுகொண்டு இதை யோசிக்கலாம். இதைவிட விசித்திரமான அதிசயத்தக்க ஆன்மீக சாதனைகளைச் செய்த பெரியவர்கள் பலர் இந்த பூமியில் உண்டு என்கிறார் சத்குரு.

தியானலிங்கப் பிரதிஷ்டை என்பது பொதுவான மக்களின் பார்வையில் ஒரு பூஜை அல்லது சடங்கு, சம்பிரதாயம். ஆனால், பிராணப் பிரதிஷ்டை என்பது ஆழ்ந்த சூட்சுமமான தந்திரம் அல்லது நுட்பம். பிராணப் பிரதிஷ்டையின் நிகழ்வுகளின்போது சத்குரு உடலற்ற ஓர் உயிரைக் கைப்பற்றினார் என்றும் அதை தியானலிங்கத்தின் ஒரு பகுதியாக ஆக்கினாரென்றும் பலருக்குத் தெரியாது.

தியானலிங்கத்தில் ஏழு சக்கரங்களிலும் சக்தி நிலையை உச்சத்துக்குக் கொண்டுசென்று அதை அங்கே நிலைநிறுத்துவதற்காக சக்தி நிலையைப் பூட்ட வேண்டியது பிரதிஷ்டையின் ஒரு முக்கியமான காரியமென்று பார்த்தோம். மற்ற சக்கரங்களில் சக்தியைப் பூட்ட பலரின் சக்தி நிலைகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் விசுத்தி சக்கரத்தில் சக்தியைப் பூட்ட மிகப் பெரிய ஆத்ம சாதனை செய்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட சாதகர் கிடைப்பதும் அரிது. ஏனென்றால் அது மிகுந்த வலிமையான சக்கரம். அந்தச் சக்கரத்தை பிரதிஷ்டை செய்ய வலிமையான ஆத்ம சாதனையாளர் யாரும் கிடைக்கவில்லை. ஆகையால் உடல் கடந்த ஒரு பக்குவ நிலையில் இருந்த ஒரு யோகியை அதற்குப் பயன்படுத்தினார் சத்குரு.

ஒரு மனிதரை முக்தியடையச் செய்ய வேண்டும் என்றால் அதற்காக பத்தாயிரம் உயிர்களைக் கூட தரலாம் என்கிறார் கிருஷ்ண பரமாத்மா.

அந்த யோகி உடல் கடந்த நிலையில் தன் முக்திக்காகக் காத்திருந்தார். அவரிடம் சத்குரு தன் விருப்பத்தையும் அவரை எப்படிப் பயன்படுத்தப் போகிறார் என்கிற விபரத்தையும் தெரிவித்ததும், அவர் ஆர்வத்துடன் தன் இசைவைத் தந்தார். அதன் பிறகே அவரை சத்குரு இந்தப் பிரதிஷ்டையில் ஒரு சக்தி வாய்ந்த கருவியாகப் பயன்படுத்தினார். இப்படி ஒரு யோகியின் உயிரை பிராணப் பிரதிஷ்டையில் பயன்படுத்தியது குறித்து சாதகர்களுடனான ஒரு கலந்துரையாடலின்போது இவ்வாறாக விளக்கமளிக்கிறார் சத்குரு.

‘‘சிறைப்பிடித்தல் எதுவும் இங்கு நிகழவில்லை. அவரின் சக்திநிலையை மட்டும் பயன்படுத்தியிருக்கிறோம். அதுவும் அவரின் சம்மதத்துடன். உடலை நீக்கிய ஆத்ம சாதனையை எப்போது அவர் செய்தாரோ, அப்போதே அவரை அவர் என்று குறிப்பிடவும் முடியாது. முக்திக்காகக் காத்திருந்த ஓர் உன்னதமான உயிர். அவ்வளவே. ஒரு மனிதரை முக்தியடையச் செய்ய வேண்டும் என்றால் அதற்காக பத்தாயிரம் உயிர்களைக் கூட தரலாம் என்கிறார் கிருஷ்ண பரமாத்மா. போர்க்களத்தில் அர்ச்சுனனிடம் கீதை சொல்லும் கிருஷ்ணன் இதைச் சொல்கிறார். அந்த யோகி உடலுடன் இருக்கும்போதுதான் பாலியல் அடையாளம் வருகிறது. அவன், அவள் என்பதெல்லாம் ஆத்ம சாதனை செய்பவர்களுக்கு இல்லை. அவரைப் பொறுத்தவரை அவரின் சக்தி நிலை தனி மனித அடையாளத்துடன் அங்குமிங்கும் முட்டாள் போல அலைந்து கொண்டு இருந்தது. அந்தத் தனித்தன்மையை நான் சிதைத்து தியானலிங்கத்தோடு கலக்கச் செய்தேன்.”

அடுத்த வாரம்...

மற்ற கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சக்தி ரூபங்களுக்கு பூஜைகளும் சடங்குகளும் தேவைப்படும்போது தியானலிங்கத்திற்கு மட்டும் ஏன் பூஜைகள் தேவைப்படுவதில்லை. அடுத்த வாரப்பகுதியில் விளக்குகிறார் எழுத்தாளர்.

இத்தொடரின் பிற பதிவுகள்: தியானலிங்கம் - இது மூன்று பிறவிக்கதை