தியானலிங்கம் - இது மூன்று பிறவிக்கதை பகுதி 9

இளமையில், ஜீன்ஸ் - டீ-சர்ட் சகிதம் கல்லூரி மாணவராக வலம் வந்த சத்குரு, தொழிலும் தொடங்குகிறார். இதற்கிடையில் ஒருநாள், சாமுண்டி மலையில் அவரைச் சாதாரண மனிதரிலிருந்து ஞான மனிதராக உணரச் செய்த அந்த நிகழ்வை பற்றி இந்த வாரப் பகுதியில் விவரிக்கிறார் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள்.

பட்டுக்கோட்டை பிரபாகர்:

கல்லூரிக் காலத்தின் மூன்றாண்டுகளில் எல்லா இளைஞர்களைப் போல ஜீன்ஸ் பேன்ட் மோகம், பாப் இசை ஆர்வம் என்று இருந்தாலும்... மற்ற இளைஞர்களிலிருந்து மாறுபட்டுச் சிந்தித்திருக்கிறார், செயல்பட்டிருக்கிறார் சத்குரு.

எதைப்பற்றிப் பேசினாலும் இறுதி நோக்கம், இந்த உலகத்தை மனித வாழ்க்கைக்கு இனிதானதாக இன்னும் சிறப்பாக எப்படியெல்லாம் மாற்றி அமைப்பது என்பதாகத்தான் இருக்கும்.

கல்லூரிக்குள் ஒரு நந்தவனம் உண்டு. அங்கு ஒரு அரச மரம். அதன் அடியில் சத்குருவும் அவரின் நண்பர்களும் கூடுவார்கள். அவர்கள் ‘பேன்யன் ட்ரீ (Banyan tree - அரசமரம்) கிளப்’ என்று ஒரு சங்கத்தைத் துவக்கினார்கள். அந்த மரத்தின் அடியில் யார் வந்து உட்கார்ந்து அவர்களிடம் பேசினாலும் அவர்கள் அதில் உறுப்பினர்கள். சங்க உறுப்பினர்களின் ஒரே வேலை சகல விஷயங்களைப் பற்றியும் தீவிரமாக, ஆழமாகப் பேசுவதுதான். எதைப்பற்றிப் பேசினாலும் இறுதி நோக்கம், இந்த உலகத்தை மனித வாழ்க்கைக்கு இனிதானதாக இன்னும் சிறப்பாக எப்படியெல்லாம் மாற்றி அமைப்பது என்பதாகத்தான் இருக்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குருவுக்குப் பிடித்த மற்றொரு விஷயம், பயணம்! திடீரென்று புறப்படுவார். முன்கூட்டி எல்லா ஏற்பாடுகளும் செய்து கொள்வது என்பதெல்லாம் கிடையாது, கோவா செல்லலாம் என்று நினைத்துவிட்டால் போதும்... ஒரு பையில் சில துணிகளோடு பைக்கை எடுத்துக்கொண்டு சில நண்பர்களையும் அழைத்துகொண்டு பத்தாவது நிமிடமே புறப்பட்டுவிடுவார்.

அவருக்கு உலகம் முழுவதும் சுற்றிப் பார்க்க அளவில்லாத ஆசை. அதற்கு நிறையப் பணம் வேண்டுமே, அந்தப் பணத்துக்காகவே ஒரு தொழிலைத் துவங்கினார். அந்தக் காலகட்டத்தில் அங்கு லாபகரமாக இருந்த தொழில் என்பதால் கோழிப் பண்ணை துவங்கினார். குடும்பத்தில் இவர் கோழிப் பண்ணை துவங்கியதில் அத்தனை மகிழ்ச்சி இல்லை. ஆனால் எதைச் செய்தாலும் திறம்பட, சிறப்பாகச் செய்கிற சத்குரு, கோழிப் பண்ணையை முழுக் கவனத்துடன், ஈடுபாட்டுடன் நடத்தியதால்... நிறைய பணம் சம்பாதிக்கத் துவங்கினார்.

சில நண்பர்களோடு சேர்ந்து வேறு சில தொழில்களும் துவங்கினார். அந்தத் தொழில்கள் தொடர்பாக பல பிரமுகர்களைச் சந்திக்கவும், நண்பர்களுடன் சேர்ந்து விவாதித்து தொழில்ரீதியான முடிவுகள் எடுக்கவும், பார்ட்டிகள் தரவும் சத்குரு தேர்வு செய்த மலை, சாமுண்டி மலை!

அவருக்கு பல காலமாக மிகவும் பிடித்தமான மலை அது. பல முறை போய் வருகிற மலையும் கூட. சாமுண்டி மலைதான் சத்குருவுக்கு அவர் ஒரு ஞான வித்தின் தொடர்ச்சி என்பதை நினைவூட்டியது, ஞானம் தந்தது, ஒரு புதிய ஆன்மீகப் பாதையில் அவரை வழி நடத்தியது.

‘நான்’ என்பது என்ன என்கிற அர்த்தம் புரிந்த தருணம்! உடல் வேறு, உயிர் வேறு என்பதை உணர்ந்தபொழுது... மலை, செடி, பாறை, வானம், பறவை எல்லாமும், நானும் ஒன்று என்று உணரவைத்து ஞான வெடி வெடித்து...

குறிப்பிட்ட ஒரு நாள் தனிமையில் சத்குரு சாமுண்டி மலையின் ஒரு பாறையின் மேல் அமர்ந்திருந்த போது... திடீரென்று அவருக்குள் ஏதேதோ மாற்றங்கள்! பரவச நிலை! வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு பூரணத்துவமான உணர்வு நிலை! கண்களிலிருந்து அருவிபோல கொட்டும் கண்ணீர்! ‘நான்’ என்பது என்ன என்கிற அர்த்தம் புரிந்த தருணம்! உடல் வேறு, உயிர் வேறு என்பதை உணர்ந்தபொழுது... மலை, செடி, பாறை, வானம், பறவை எல்லாமும், நானும் ஒன்று என்று உணரவைத்து ஞான வெடி வெடித்து... உடலெல்லாம், மனசெல்லாம் பரவசப் பூக்கள் ஒரே கணத்தில் பூத்த நிலை! அதுவே சத்குரு தன்னை உணர்ந்த சமயம்!

அவருடைய நினைவின் அனுபவத்தில் அந்தப் பரவச நிலையை ஒரு சில நிமிடங்களாக உணர்ந்திருக்கிறார். ஆனால் உண்மையில் ஏழு மணி நேரம் அந்த அனுபவம் அவருக்குள் நிகழ்ந்திருக்கிறது.

‘அது என்ன என்பதே முதலில் அவருக்குப் புரியவில்லை. எதற்காகவும் அழுதிராத என் கண்களில் ஏன் இத்தனை கண்ணீர்? எந்தக் கோயிலுக்கும் சென்றிராத எனக்குக் கிடைத்த இந்த அனுபவத்துக்கு என்ன பொருள்?’

சத்குருவைக் கேள்விகள் கொத்தின. அதே போன்ற பரவச தருணங்கள் அதன் பிறகு அவருக்கு வீட்டிலும் வெளியிலும் பலமுறை ஏற்படத் துவங்கியதும்... அவருக்குள் முன்னிரண்டு ஜென்மங்களின் ஏதேதோ தொடர்பற்ற நினைவுகளின் வெள்ளம் பெருக்கெடுத்து மனதில் ஓடத் துவங்க, கோழிப் பண்ணையோ, வேறுதொழிலோ செய்வதற்காக வழங்கப்படவில்லை இந்தப் பிறப்பு என்பதை முதலில் தெளிவாக உணர்ந்தார்!

தியானலிங்கம் அமைப்பதே இந்தப் பிறப்பின் லட்சியம் என்பதை உணர்ந்த சத்குரு உடனடியாக சில காரியங்களைச் செய்தார்!


அடுத்தவாரம்...

தன் மனதில் அலைமோதும் முன்று ஜென்மங்களின் நினைவுகள் உண்மைதானா என்பதை சத்குரு எப்படிக் கண்டறிந்தார்? தியானலிங்கம் அமைப்பதற்கு சத்குரு மேற்கொண்ட முதற்கட்ட முயற்சிகள் என்னென்ன? என்பவற்றை எடுத்துரைக்கிறது அடுத்த வாரப்பகுதி! சுவை மிகுந்த அடுத்தடுத்த பதிவுகளுக்குக் காத்திருங்கள்!

இத்தொடரின் பிற பதிவுகள்: தியானலிங்கம் - இது மூன்று பிறவிக்கதை