32 நாடுகளைச் சேர்ந்த 800 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், ஆனந்தம் நிறைந்த, மனஅழுத்தமற்ற புதிய பாதையை சாதனாவின் மூலம் தங்கள் வாழ்க்கையில் தாங்களே அமைத்துக் கொள்ள பிரதிஷ்டை செய்யப்பட்ட தலமான கோவை ஈஷா யோகா மையத்தில் ஒன்றிணைந்துள்ளார்கள். சாதனாபாதை பங்கேற்பாளர்கள் அனைவரும் தீவிரமான மற்றும் கட்டுக்கோப்பான சாதனாவில் ஈடுபட்டு, பயிற்சிகளை முறையே செய்து, தங்களின் திறமைகளை ஈஷாவின் செயல்பாடுகளில் ஒரு அர்ப்பணிப்பாக வழங்குவதன் மூலம் பங்கெடுத்து, ஆசிரமத்தில் நடக்கவுள்ள பல்வேறு நிகழ்வுகள் மற்றும் கொண்டாட்டங்களில் திளைக்க உள்ளார்கள். அடுத்த ஏழு மாதங்கள் அவர்கள் மேற்கொள்ள உள்ள சாதனாபாதை பயணத்தில் சந்திக்கும் ஏற்ற தாழ்வுகளின் பின் உள்ள நிகழ்வுகளை இந்த வலைப்பதிவுத் தொடரின் மூலம் நாம் அறிய இருக்கிறோம்...

பாதையில் இணைய உற்சாகம்

இப்போதுதான் கல்லூரிப்படிப்பு முடித்த துடிதுடிப்புடன் இருப்பவர்கள் முதல் வணிக நிறுவன உரிமையாளர்கள், தொழிற்துறையில் வல்லுநர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், இசைக்கலைஞர்கள், பொதுத்துறையில் பணிபுரிவோர், விஞ்ஞானிகள் என பங்கேற்பாளர்களின் பின்னணிகள், சாதனாபாதை வழங்கும் சாத்தியக்கூறுகளைப் போலவே பன்முகத்தன்மையுடன் உள்ளது.

life-in-sadhanapada-from-home-to-ashram-vol-in-q

life-in-sadhanapada-from-home-to-ashram-orientation

"நான் அங்கேதான் சென்று கொண்டிருக்கிறேன், இது கனவல்ல. நிஜம்!"

“உண்மையில், இங்கு வந்து சேரும் வரை, நான் தேர்வு செய்யப்பட்டேன் என்பதையே என்னால் முழுமையாக நம்ப முடியவில்லை. இங்குள்ளவர்கள் மிகவும் கண்டிப்பானவர்களாக இருப்பார்கள் என்றே நான் நினைத்திருந்தேன். அதிலும் இதற்கு முன்பு நான் ஒருபோதும் ஆசிரமத்தில் தன்னார்வத் தொண்டராக எவ்வித செயலும் செய்ததில்லை என்பதால், ஒருவேளை, அவர்கள் என்னை வெளியேறச் சொன்னாலும் சொல்லலாம் என்றிருந்தேன். ஆனால், நான் சந்தித்த முதல் தன்னார்வலரான ஒரு அக்கா, புன்னகையுடன் ‘நமஸ்காரம்’ என்று கைகுவித்து வணங்கி வரவேற்றதில் ஒரு ஆத்மார்த்தமான உண்மை இருந்தது. அந்தத் தருணத்திலிருந்து எல்லாம் மாறிவிட்டது, என் பகுத்தறிவற்ற அச்சங்கள் விலகிவிட்டன. நான் இங்கே இருப்பது நம்பமுடியாதது போலவே உள்ளது. ஆசிரமத்திற்கு வரும் வழியில் கூட, விளம்பர பலகைகளில் சத்குருவின் புகைப்படங்களைப் பார்த்தபோது, நான் இப்படித்தான் நினைத்துக் கொண்டேன், "ஆம்!! நான் உண்மையிலேயே அங்கு சென்று கொண்டிருக்கிறேன்! இது கனவல்ல.. நிஜம்!"–  பீம், 18, ஜார்க்கண்ட், இந்தியா

"நான் தேர்வு செய்யப்பட்ட போது, நிலவின் மேலிருப்பதைப் போல உணர்ந்தேன்..."

“நான் சாதனாபாதைக்கு தேர்வு செய்யப்பட்டதை அறிந்ததும், நிலவின் மேலிருப்பதைப் போல உணர்ந்தேன்! உள்நிலை ஆன்மீக வளர்ச்சிக்குத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் உறுதுணை மிகுந்த இத்தகைய மகத்தான சாத்தியம் இருப்பதைக் கண்டு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொரு பெற்றோரும், தங்கள் மகள்களை சிறிதும் தயக்கமின்றி, முழு நம்பிக்கையுடன், இவ்வளவு காலம், தங்கி இருக்க அனுமதித்து அனுப்பக்கூடிய ஒரே இடம் இதுதான்.” சுவாதி, 42, லண்டன், இங்கிலாந்து

முதல் தடைகளைக் கடந்தது...

சாதனாபாதைக்கு தேர்வு செய்யப்பட்டதன் மகிழ்ச்சி சிலருக்கு தடைகள் இல்லாமல் கிடைத்து விடுவதில்லை. ஒரு ஆசிரமத்தில் வந்து தங்குவது என்பது பொதுவாக வழக்கத்திற்கு மாறான படியாக தோன்றலாம், பெரும்பாலானவர்களுக்கு இது ஒரு கடினமான ஒன்றாகவும் இருக்கலாம். பங்கேற்பாளர்கள், தங்கள் முதலாளிகளை சமாதானப்படுத்த வேண்டும், தங்களுக்கான நிதிகளை நிர்வகிக்க வேண்டும், மேலும் இந்த சாத்தியத்தின் முக்கியத்துவத்தை அவர்களது குடும்பத்தினருக்குப் புரிய வைக்கவும் வேண்டியிருக்கிறது.

“நான் வெளியேறுவதில் எனது வர்த்தக பங்குதாரர்களுக்கு மகிழ்ச்சி இல்லை.”

“நான் சிலகாலமாக ஈஷாவின் செயல்பாடுகளில் தன்னார்வத் தொண்டு செய்து வருகிறேன். நான் சாதனாபாதையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் அது எனக்கானது இல்லை என்றுதான் நான் எப்போதுமே நினைத்தேன். ஒரே சமயத்தில் பல தொழில்களை செய்து கொண்டு, வீட்டில் வயதான தாயையும் கொண்டுள்ள என்னைப் போன்ற ஒருவருக்கு, 7 மாதங்கள் விலகி இருப்பதென்பது மிக நீண்ட காலம்தான்.

நான் வெளியேறுவது குறித்து எனது வணிக பங்குதாரர்களுக்கு உடன்பாடு இல்லை. ஆனால் என்னை நானே வலுப்படுத்தி, மேலும் திறமையானவனாகவும், ஆற்றலுடையவனாகவும் மாறவே இந்தப் படியை நான் எடுக்கிறேன் என்பதை அவர்களுக்கு உணர்த்தியபோது அவர்கள் சமாதானம் அடைந்தனர். மேலும் என் தாயை கவனித்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளையும் என்னால் செய்ய முடிந்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தவிர, வீட்டில் இருக்கும்போது எனது சாதனா நான் நினைத்த அளவுக்கு நடக்கவில்லை. எனவே இங்கு வந்துவிட்டோம் என்பதிலேயே நான் மகிழ்ச்சியடைகிறேன், எனது உள்நிலை மாற்றத்தை இப்போதே உணர ஆரம்பித்துவிட்டேன்.” - ஸ்ரீகுமார், 48, கேரளா, இந்தியா

எல்லோரும் எனக்கு கிறுக்கு பிடித்துவிட்டதாக நினைத்தார்கள்.

“நான் 7 மாதங்களுக்கு ஆசிரமத்திற்குச் செல்ல உள்ளதாக நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்களிடம் சொன்னபோது, யாரும் என்னுடன் உடன்படவில்லை. எல்லோரும் எனக்கு கிறுக்கு பிடித்துவிட்டதாக நினைத்தார்கள். மற்றொரு கவலை 7 மாத இடைவெளிக்குப் பிறகு எனது வேலை வாய்ப்புகள் என்னாவது என்பது பற்றியது. ஆசிரமத்தில் நான் உள்ள இந்த காலம், எனது பயோ டேட்டாவில் கூடுதல் மதிப்பு சேர்க்கும் என்று நான் எனது பெற்றோருக்கு உறுதியளித்தேன்.

"என்னை நானே அழித்துக் கொள்ளும் சில பழக்கங்கள் என்னிடம் இருந்ததை என் அப்பா கவனித்துக் கொண்டுதான் இருந்தார். நான் என்னை மேம்படுத்திக் கொள்ள விரும்புகிறேன், என் தூக்கத்தைக் குறைத்துக்கொண்டு, இன்னும் அதிக கவனத்துடன், தீவிரமாகவும் சமநிலையோடும் இருக்க விரும்புகிறேன் என்று அவரிடம் சொன்னேன். எனது நோக்கத்தையும், உறுதியையும் பார்த்து, அவர் ‘சரி. நீ சென்று வா. நல்லதே நடக்கட்டும்” என்றார். அதனால்தான் இப்போது நான் இங்கே இருக்கிறேன்!” – சாந்த்னு, 29, காஷ்மீர், இந்தியா 

"நான் 7 மாதங்கள் உங்களை விட்டு விலகி இருப்பேன் என்று சொன்னபோது என் குடும்பத்தினர் மிகவும் தயங்கினர்."

"நான் இதற்கு முன்பு பலமுறை ஆசிரமத்திற்கு வந்துள்ளேன், இங்கு வருவது எப்போதுமே அருமையான ஒன்றாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் இந்தமுறை 7 மாதங்கள் விலகி இருப்பேன் என்று சொன்னபோது எனது குடும்பத்தினர் மிகவும் தயங்கினர். நான் எனது வாழ்க்கையில் பணி நிமித்தமான அடுத்தபடி எடுப்பதற்கு முன், சிறிது காலம் முதலீடு செய்து, என்னை நானே மேம்படுத்திக் கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களுக்குப் புரியவைக்க பெரும் சிரமமாக இருந்தது.

"நான் இந்த ஆண்டுதான் பட்டம் பெற்றுள்ளதாலும், பல வாய்ப்புகளும் கிடைத்தாலும், நான் அவைகளை நிராகரிப்பதை என் குடும்பத்தினர் விரும்பவில்லை. ஆனால் நான் என் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வதாக இருந்தாலும் அதற்கு முன் ஒரு நிலையான அடித்தளத்தை அமைத்துக் கொள்ள என்னை தயார் செய்து கொள்ளவேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தேன்” - சுபாங்கி, 22, ஜோத்பூர், இந்தியா

குரு பௌர்ணமி மற்றும் “குருவின் மடியில்” நிகழ்வுகளின் திரைக்குப் பின்னால்

life-in-sadhanapada-from-home-to-ashram-lom-sadhgurupic

life-in-sadhanapada-from-home-to-ashram-lom-sadhguru-with-participants

ஜூலை 16, 2019, மகத்துவம் வாய்ந்த குரு பௌர்ணமி நன்னாளில் சாதனாபாதை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. இருப்பினும் பங்கேற்பாளர்கள் "குருவின் மடியில்" நிகழ்வில் கலந்துகொள்ள சில நாட்களுக்கு முன்னதாகவே வந்து சேர்ந்திருந்தனர். ஆயிரக்கணக்கான ஈஷா தியான அன்பர்கள் இரண்டு நாட்கள் குருவின் அருள் மடியில் திளைத்திருக்க ஆசிரமத்தில் திரளும் நிகழ்வு இது . இந்த அளவிலான ஒரு நிகழ்வை நிறைவுடன் நிகழ்த்த, எண்ணற்ற செயல்கள் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் நூற்றுக்கணக்கான சாதனாபாதை பங்கேற்பாளர்கள், சரியான சமயத்தில் வந்து சேர்ந்து, தங்களை தன்னார்வத் தொண்டில் (சேவையில்) ஈடுபடுத்திக் கொண்டதால் எந்தவித இடையூறும் இல்லாமல் ஏற்பாடுகள் நிறைவாக நடந்தது. பின்னர் குரு பௌர்ணமியின் தெய்வீக இரவில், சத்குருவுடன் சத்சங்கத்தில் அவர்கள் பங்கேற்றனர்.

life-in-sadhanapada-from-home-to-ashram-lom-vol-pic1

life-in-sadhanapada-from-home-to-ashram-lom-vol-pic2

life-in-sadhanapada-from-home-to-ashram-lom-vol-pic3

"ஆசிரமத்தில் உள்ள அனைவரும் எவ்வாறு சோர்வே இல்லாமல் உழைக்கிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு சிறிய பார்வையை இது எனக்குக் கொடுத்தது."

“எனது தன்னார்வத் தொண்டு குருவின் மடியில் நிகழ்ச்சியில் இருந்து துவங்கியது. எந்தவிதமான குறையும் சொல்லாமல், ஆசிரமத்தில் உள்ள அனைவரும் எவ்வாறு சோர்வே இல்லாமல் உழைக்கிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு பார்வையை இது எனக்குக் கொடுத்தது. அவர்கள் தங்கள் சேவையைச் செய்வதில் மிகவும் உறுதியானவர்களாகத் தோன்றினார்கள், அதைப் பார்த்து, என்னையும் சாதானாபாதையில் முழுமையாக இணைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். ஆசிரமத்தில் இருக்கும் இந்த கடந்த சில நாட்கள் எனக்குள் ஒரு விழிப்பு நிலையை உருவாக்கி உள்ளது. ஒவ்வொரு நாளும் என் விழிப்புணர்வு வளர்ந்து வருவதை நான் உணர்கிறேன். இந்தச் சூழ்நிலையில் இருப்பதே மிகவும் அற்புதமாக உள்ளது, இந்த இடத்தில் ஒரு துடிப்பான ஆற்றல் தொடர்ந்து உள்ளூர பரவிக் கொண்டிருப்பதை நான் உணர்கிறேன்.” - க்ஷிதிஜ், 28, பெங்களூரு, இந்தியா

சூறாவளி ஆரம்பம்

குரு பௌர்ணமிக்குப் பிறகு, பங்கேற்பாளர்கள் ஒரு தீவிரமான ஒருமுனைப்படுத்தல் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டனர். அங்கு அவர்கள் ஹட யோகா பயிற்சிகளைக் கற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல், ஈஷா யோக வகுப்பின் அம்சங்கள் அனைத்தையும் மீண்டும் ஒருமுறை திரும்பி பார்க்கவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஈஷா யோகா வகுப்பின் அடிப்படைத் தன்மையை ஆழமாக உணர கிடைத்த இந்த வாய்ப்பை அவர்களின் அடுத்த 7 மாத சாதனாவிற்கு அடிப்படையாக இருக்கும். இந்த தீவிரமான செயல்முறையானது, இதுவரை பார்த்திராத சத்குருவின் பல வீடியோக்களைக் கொண்டதாகவும், குரு பூஜையை ஒரு நேரடி செயல்முறையாக உணரும் விதமாகவும், ஆதியோகி பிரதக்ஷ்ணா மற்றும் பல்வேறு செயல்முறைகள் மூலம் தீவிரத்தை சுடர்விடச் செய்யும் ஒரு சூறாவளியாகவே இருந்தது. இந்தச் சூழலில், எதிர்பாராத ஆச்சரியமாக, தனது நெருக்கடியான நிகழ்ச்சி அட்டவணைகளுக்கு மத்தியிலும், பங்கேற்பாளர்களைச் சந்தித்த சத்குரு அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கு தயாராக தேவையான, உத்வேகத்தை அவர்களுக்கு அளித்தார்.

“சாதனாபாதையின் துவக்கத்திலேயே சத்குருவுடனான ஒரு வகுப்பு நடைபெற்றது ஒரு மிகப்பெரிய ஆசீர்வாதம்."

"ஓரியன்டேஷன் வகுப்பின் போது, ஈஷா வகுப்பின் அம்சங்களை மீண்டும் திரும்பிப் பார்க்கக் கிடைத்த அந்த வாய்ப்பு எனக்கு மிகவும் தேவையான ஒன்றாக இருந்தது. இது எனது ஷாம்பவி பயிற்சியை மேலும் ஆழப்படுத்த உதவியது, மேலும் இந்த எளிமையான கருவிகள், எவ்வளவு பெரிய வித்தியாசத்தை நமக்குள் ஏற்படுத்த முடியும் என்பதைப் புரிந்துகொள்ளவும் எனக்கு உதவியது.

"ஹட யோகப் பயிற்சிகளை இங்கே பயிற்சி செய்தபோது, ஆசனங்களை மேலும் செம்மைப்படுத்திக் கொள்ளவும் ஒவ்வொரு ஆசனத்திலும் என்னை அதிகம் ஈடுபடுத்திக் கொள்ளவும் உதவியது. மேலும் குரு பூஜா வகுப்பை இரண்டாவது முறையாகக் கற்றுக் கொண்டது மிகவும் உதவியாக இருந்தது. ஏனெனில், அதன் உண்மையான முக்கியத்துவத்தை இதற்குமுன் நான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இறுதியாக, நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே சத்குருவுடனான ஒரு சந்திப்பு நடைபெற்றது ஒரு மிகப்பெரிய ஆசீர்வாதம்”- நேஹா, 26, ஜெய்ப்பூர், இந்தியா

“சத்குரு எனக்கு வழங்கும் எல்லாவற்றிற்கும் தகுதியானவளாக இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்."

“சத்குரு போன்ற ஒருவர், தனது விலைமதிப்பற்ற நேரத்தையும், சக்தியையும் எனக்காக செலவழிப்பது என்பது ஒரு மகத்தான விஷயம். அவரது கருணையும், அக்கறையும், இதை நமக்கு வழங்குவதற்காக அவர் கொண்டுள்ள கூர்ந்த கவனமும், எல்லாவற்றையும் கடந்து நாம் செல்ல வேண்டும் என்கிற அவரது தீவிர ஆசையும், அருளும் - என்னை உள்ளிருந்து உருக்குகிறது. என்னவானாலும் சரி, சத்குரு எனக்கு வழங்கும் எல்லாவற்றிற்கும் தகுதியானவளாக இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.”– அஸ்வினி, 27, ஹைதராபாத், இந்தியா

life-in-sadhanapada-from-home-to-ashram-practice-session

life-in-sadhanapada-from-home-to-ashram-adiyogi-prathakshana

life-in-sadhanapada-from-home-to-ashram-adiyogi-prathakshana2

சாதனாபாதை பங்கேற்பாளர்களிடம் சத்குரு சொன்ன செய்தி

"சாதனாவின் அடிப்படையான அம்சம் இதுதான் - நான் தீண்டும் எல்லாவற்றுடனும் முழுமையான, தீவிரமான ஈடுபாடு காட்டுவது. ஆனால், என்மீது பற்றற்ற தன்மையுடன் இருப்பது. இந்நிலையில்தான், வாழ்க்கை உங்களுக்கு வழங்கியுள்ள கருவிகளை நீங்கள் சரியான வழியில் பயன்படுத்த முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் உடலும் மனமும் உங்களின் கருவிகளாக மாறிவிட வேண்டும், அதுதான் சாதனாவின் அடிப்படைத்தன்மை. ஆனால், இப்போது, உங்கள் கருவிகளை யார் வேண்டுமானாலும் ‌என்ன வேண்டுமானாலும் செய்துவிட‌ முடியும் என்ற நிலை இருக்கிறது. உங்கள் உடலும் மனமும் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது சூழ்நிலைகளே தீர்மானிக்கின்றன. சாதனா என்பதன் சாரம் என்னவென்றால், என் உடல் என்ன செய்ய வேண்டும், என் மனம் என்ன செய்ய வேண்டும் என்பதை முழுக்க முழுக்க நானே தீர்மானிக்கிறேன் என்பதுதான்.”

அடுத்து வருவது…

சாதனாபாதை 2019 இன் முதல் இரண்டு வாரங்கள் காற்றைப்போல கடந்து நிறைவடைந்து விட்டன. உள்நிலை மாற்றத்திற்கான சக்திவாய்ந்த கருவிகள் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இப்போது சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள நேரம் கிடைக்கிறது என சூழ்நிலை பழகி அவர்கள் நினைக்கத் துவங்கும்போது, அவர்கள் மேற்கொள்ள வேண்டிய யோகப் பயிற்சிகள் மற்றும் தன்னார்வ சேவை அடங்கிய ஒரு தீவிரமான கால அட்டவணை அவர்களுக்காக தயாராகி காத்துக்கொண்டு இருக்கிறது. இந்தத் தொடரின் அடுத்தப் பகுதியில், அவர்கள் எவ்வாறு ஆசிரம சேவையின் தீவிரத்தில் (ஆசிரமத்தில் வார இறுதி நாட்கள் என்பதே இல்லை!) ஒன்றாகக் கலந்துவிடக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதையும், சாதனபாதை வடிவத்தில் சத்குரு அவர்களுக்கு வழங்கிய அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்தி, தங்கள் விருப்பு வெறுப்புகளைக் கடந்து எவ்வாறு தங்களை மேம்படுத்திக் கொள்கிறார்கள் என்பதையும் பார்க்க இருக்கிறோம்.

ஆசிரியர் குறிப்பு : சாதனா பாதை பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும், அடுத்த வருடத்திருக்கான சாதனா பாதைக்காக முன்பதிவு செய்வதற்கும் இங்கே கிளிக் செய்யவும்.