மா சந்திரஹாசா - இவர் ஈஷாவின் முதல் எட்டு பிரம்மச்சாரிகளில் ஒருவர். முதல் பெண் ஈஷா யோகா ஆசிரியர். தமிழ்நாட்டு கிராமப்புறங்களில் கிராமப் புத்துணர்வு இயக்கத்தை செயல்படுத்திய முதல் ஆசிரியர். தமிழக கிராமங்களுக்குப் புத்துயிரூட்டும் சத்குருவின் கனவால் தூண்டப்பட்டு, தங்கள் நல்வாழ்விற்காக யோகப் பயிற்சிகள் செய்ய கிராமப்புற மக்களை பெரிதும் ஊக்கப்படுத்தியவர். ஆறு நாள் வகுப்புக்காக வீடுவீடாகச் சென்று மக்களை அழைத்ததோடு, இலவச மூன்று நாள் வகுப்புகளுக்கு ஒலிப்பெருக்கியைப் பயன்படுத்தி மக்களுக்கு அழைப்பு விடுத்தவர்.

இயற்கையாகவே மக்களுடன் சுலபமாக ஒன்றிவிடும் சுபாவம் இருந்ததால், கிராம மக்கள் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறியிருந்தார். “தன் அம்மாவைக் கண்டு பயப்படுவதைப் போன்றே என்னைக் கண்டும் அவர்கள் பயந்தனர்,” என்று சிரித்துக்கொண்டே மா பகிர்ந்து கொண்டார். அவர் மேலும் பகிர்கையில், “கிராமப் புத்துணர்வு இயக்கம் மூலமாக நடத்தப்பட்ட சில எளிய விளையாட்டுகளே இவர்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய பெரிய மாற்றத்தை கண்டதால், அது தடையின்றி நடைபெற என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தேன். ஓரிரண்டு நாட்கள் அவர்கள் விளையாடவில்லை என்று கேள்விப்பட்டால் கூட, நானே நேராக சென்று அவர்களை அதட்டி மறுபடியும் விளையாட்டை ஆரம்பிக்கும்படி சொல்வேன். இதில் நகைச்சுவை என்னவென்றால், நான் அந்த கிராமத்திற்கு உள்ளே நுழைவதை ஒருவர் பார்த்தாலே, உடனே அவர் தன் மிதிவண்டியில் அவசர அவசரமாக போய் மற்ற விளையாட்டு வீரர்களை எச்சரித்துவிடுவார். அவர்கள் ஓடிவந்து என்னிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு மறுபடியும் விளையாட ஆரம்பிப்பார்கள். எனக்கு அவர்கள் என்னுடைய குழந்தைகளைப் போலத்தான். அவர்களும் அவ்வாறே என்னிடம் நடந்துகொண்டனர்.”

பல கிராம மக்களுக்கு அன்னையாக இருந்த அவர், அவருடைய குழந்தை போன்ற, எதேச்சையான, நினைப்பதைப் பட்டென பேசும் குணத்தாலும், அவர் செயல்படும் விளக்க முடியா விதங்களாலும், அவர் ஆரம்பகாலத்தில் பலமுறை மக்களுடன் பிரச்சனைகளைத் தேடிக்கொண்டதுண்டு. இப்படி சிறுதொந்தரவுகள் ஏற்பட்டபோதெல்லாம் அவர் உதவிக்காக சத்குருவிடம் சென்றுவிடுவார். இப்படி ஒருமுறை ஒரு மிக சாதாரணமான விஷயத்தைப் பற்றி அவசரமாக சத்குருவிடம் சொல்லச் சென்றபோது, “நீ இங்கிருக்க நான் என்னவெல்லாம் செய்யத் தேவையிருக்கிறது தெரியுமா?” என்று சத்குரு ஒருமுறை இவரிடம் கேட்க, அதற்கு மா, “தெரியாது” என்றிருக்கிறார். “இந்தளவுக்கூட உனக்கு புரியாததால்தான் நீ யாராக இருக்கிறாயோ அதுவாக இருக்கிறாய்,” என்று சொல்லி அவரை திருப்பி அனுப்பி இருக்கிறார் சத்குரு.

நாகர்கோவிலில் மா சந்திரஹாசா வகுப்பில் பங்கேற்ற ஈஷா யோகா ஆசிரியை சசிரேகா, “அவரால்தான் ஈஷாவிற்கு நான் முழுநேர தன்னார்வத் தொண்டராகவும், ஈஷா யோகா ஆசிரியராகவும் ஆக விருப்பம் கொண்டேன். இப்போதும்கூட அவர் வகுப்பில் பேசிய விதம், அவருடைய பண்பு, அன்பு, தீவிரம் என் நினைவில் பசுமையாக இருக்கிறது. இப்படியொரு அற்புதமான ஆசிரியரை வழங்கிய சத்குருவிற்கு என் நன்றிகள்,” என்று பகிர்கிறார்.

“எனக்கு, என்னுடைய ஆன்மீகம், என்னுடைய பாதை, என்னுடைய முக்தி -எல்லாமே சத்குருதான்,” என்கிறார் மா.

நானும் சந்நியாசமுமா?

on-the-path-of-the-divine-maa-chandrahasa-maa-offering-flowers-to-sadhguru

மா சந்திரஹாசா : “நான் ஒரு சந்நியாசி ஆகவேண்டும்” என்று ஹோல்னெஸ் வகுப்பிலிருந்த அனைவரின் முன்பும் நான் எழுந்து சொன்னேன். இது என்னைப் பற்றி அறிந்தவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் இவ்வாறு சொன்னது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், என்னைச் சுற்றியிருக்கும் அனைத்திடமும் அனைவரிடமும் ஆழ்ந்த பற்றுடன் இருப்பவள் நான். இந்த குணம் ஹோல்னெஸ் வகுப்பின் போதும் வெளிப்பட்டது.

ஒருமுறை சத்குரு ஒரு பாம்பை வகுப்பு நடக்கும் இடத்திற்கு எடுத்து வந்து, “யாராவது ஒருவர் இந்த பாம்பைப் பார்த்துகொள்ள விரும்புகிறீர்களா? இது இறந்து கொண்டிருக்கிறது. இதற்கு உணவு கொடுத்தால் இன்னும் கொஞ்ச நாட்கள் உயிர்வாழும்,” என்றார். கேக்டஸ் கார்டெனில் உள்ள ஒரு மரத்தின் அடியில் இருந்த பொந்திலிருந்து இந்தப் பாம்பை அவர் கண்டுபிடித்திருந்தார் (தற்போது ஏவி ஹால் இருக்கும் இடம்). அது ஆறடி நீளமுடையது. அதனருகே செல்வதற்குக்கூட எங்களில் பலர் அஞ்சிக் கொண்டிருந்தோம்.

சில நிமிடங்கள் அங்கு அமைதி நிலவியது. பின், “நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று எதையும் யோசிக்காமல் நான் சொன்னேன். ஏனென்றால், எனக்கு இப்படிதான் - சத்குரு ஏதாவது செய்யச்சொல்லி, யாரும் அதற்கு இசையவில்லை என்றால், அது என்னவாக இருந்தாலும் அதைச் செய்ய நான் ஒப்புக்கொள்வேன். அதற்குமுன் என் வாழ்க்கையில் பாம்பை நான் தொட்டதேயில்லை. ஆனால், சத்குரு அந்த பாம்பை என் கையில் கொடுத்தார். இதோ - என் கையை சுற்றியவாறு இருந்த ஆறடி பாம்புடன் நான். அது 2-3 நாட்களுக்குப் பிறகு உன் கைகளிலிருந்து உணவு உண்பதை நிறுத்திவிட்டால், அதனை காட்டில் விட்டுவிடு என்று சத்குரு கூறினார்.

அது பார்க்கவே பாவமாகவும் தூங்கியபடியும் இருந்தது. அதனை ஒரு துணிப்பையினுள் போட்டு, வகுப்பறையினுள் தொங்கவிட்டிருந்தேன். ஹோல்னெஸ் பங்கேற்பாளர்கள் சிலர், பயந்துபோய் அந்த பாம்பை அங்கிருந்து நான் எடுக்காவிட்டால், என்னையும் சேர்த்து அந்த பாம்புடன் வெளியேற்றிவிடுவோம் என்று பயமுறுத்தினர். பங்கேற்பாளர்களின் இப்படிப்பட்ட வேடிக்கையான வெளிப்பாடுகளைக் கண்டு குதூகலமான சத்குரு, அவர்களை மேலும் பயமுறுத்தும் விதமாக அவர்களிடம், “இரவில் அந்தப் பாம்பு உங்கள் அருகேதான் வந்து தூங்கும்” என்றார். அதன் வாயினுள் பறவைகள் முட்டையை ஊட்டினோம். சிறுத் தவளைகளையும் புழுக்களையும் கொடுத்தோம். முதல் இரண்டு நாள் அது அவற்றைக் கொஞ்சமாக சாப்பிட்டது. மூன்றாவது நாள் அனைத்தையும் துப்ப ஆரம்பித்தது. அதனால், வேறுவழியே இல்லாமல், கனத்த மனதுடன் அதனை காட்டில் விட்டோம்.

ஹோல்னெஸ் நிகழ்ச்சியிலிருந்து சந்நியாசம்வரை, வாழ்க்கையோடு ஆழமாகவும், பாகுபாடின்றியும் உறவாட எனக்கு இப்பாதை கற்றுக்கொடுத்திருக்கிறது.

ஒரு நாள் மாலையில், தானிக்கண்டி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிக்காக டேப் ரிக்கார்டரில் இசையைப் போட்டிருந்தேன். அப்போது சத்குரு இன்னும் சிலருடன் வருவதையும், அதில் ஒருவர் ஒரு பாம்பைத் தன் கையில் வைத்திருப்பதையும் பார்த்தேன். “ஏன் அந்த பாம்பை அவர் கையில் வைத்திருக்கிறார்? அதற்கு என்ன ஆகிவிட்டதோ!” என்று உள்ளுணர்வால் உந்தப்பட்டு ரிக்கார்டரை அப்படியே விட்டுவிட்டு என்ன நடந்ததென்று பார்ப்பதற்காக ஓடினேன். அது நான் பார்த்துக்கொண்ட அதே பாம்புதான். ஆனால் இப்போது அது இறந்திருந்தது. சத்குரு முதலில் அதை எங்கு பார்த்தாரோ அதே இடத்தில் அது இறந்திருந்தது.

“அந்த பாம்பை என் கையில் தாருங்கள்,” என்று நான் கெஞ்சிக் கேட்டேன். அவர் அதனை என்னிடம் தரவில்லை. நான் வற்புறுத்திக் கேட்டதால், பிறகு என்னிடம் கொடுத்தார்கள். அதை என் கையில் ஏந்தியதும் நான் அழ ஆரம்பித்துவிட்டேன். இறந்தபின் அது வேறுவிதமாக இருப்பதை என்னால் உணர முடிந்தது. அது எங்கிருந்து எடுக்கப்பட்டதோ அதே இடத்தில் அதனை புதைத்தோம். என்னுடைய சொந்தக் குழந்தையை புதைப்பதைப்போல் எனக்குத் தோன்றியது. அங்கிருந்து சிறிது நேரத்திற்கு என்னால் நகர முடியவில்லை.

இப்படித்தான் நானிருந்தேன்

ஒரு வருடத்திற்கு முன்பு, என்னுடைய பாவ-ஸ்பந்தனா நிகழ்ச்சியில்கூட, ஏதோவொன்றை அறிவிக்க சத்குரு முன் எழுந்து நின்றேன். அது என்னவென்றால், என்னுடைய திருமணத்தைப் பற்றியும், பெரிய வீடொன்று கட்டுவது பற்றியும், என்னுடைய ஆசையை வெளிப்படுத்தவிருந்தேன். எனக்கு எப்படிப்பட்ட கணவர் வேண்டுமென்றும், என்னுடைய வீட்டின் ஒவ்வொரு அங்குலமும் எப்படியிருக்க வேண்டும் என்றும் நான் விவரித்தேன். ஒரு வருடத்தில், 180 டிகிரி திரும்பி, ஆன்மீகப் பாதையில் நடக்கவேண்டும் என்பதில் மிக உறுதியானவளாய் தெரிந்தேன். ஆனால், உண்மையில் என்னுள் இருந்தது வெறும் உறுதியல்ல, சந்நியாசி ஆகவேண்டும் என்ற வேட்கை என்னுள் தீயாய் எரிந்துகொண்டிருந்தது.

நான் எப்படியாவது இறப்பதற்கு முன்பு, சத்குருவிடம் இருந்து காவி உடையை (சந்நியாசிகளின் உடை) வாங்கிவிட வேண்டும் என்றுதான் அப்போதெல்லாம் நான் நினைத்துக்கொள்வேன். ஆனால், நிறைய ஹோல்னெஸ் பங்கேற்பாளர்களும், ஏன் சத்குருவும்கூட பிரம்மச்சரியம் எடுக்க வேண்டாம் என்றே எனக்குப் பரிந்துரைத்தனர். ஆனால், நான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தேன், சத்குருவும் ஒரு கட்டத்தில் ஒப்புக்கொண்டார். 1995 ல் முதல் பேட்ச் பிரம்மச்சாரிகளுடன் எனக்கு தீட்சை வழங்கப்பட்டது. பின் 2003ல் முதல் பேட்ச் சந்நியாசிகளுடன் எனக்கு சந்நியாசம் வழங்கப்பட்டது. சந்நியாச தீட்சைக்குப் பிறகு, சத்குரு என்னிடம் காவி உடையை கொடுத்தபோது, நான் நடுக்கம் கொண்டேன். அவரிடமிருந்து அந்தப் புனிதமான உடையை பெறும்போது, “இந்த ஈடுஇணையில்லா கௌரவத்திற்கு எனக்குத் தகுதியிருக்கிறதா?” என்று நினைத்தேன்.

ஹோல்னெஸ் நிகழ்ச்சியிலிருந்து சந்நியாசம்வரை, வாழ்க்கையோடு ஆழமாகவும், பாகுபாடின்றியும் உறவாட எனக்கு இப்பாதை கற்றுக்கொடுத்திருக்கிறது.

ஹோல்னெஸ் நிகழ்ச்சியில் தொட்ட உயரங்கள்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
..நாங்கள் இருந்த சக்திசூழ்நிலையின் தீவிரத்தால், நான் உருண்டு புரண்டிருக்கிறேன், உதைத்திருக்கிறேன். நாங்கள் இருந்த கூடாரத்தை உள்ளிருந்து தாங்கிய ஒரு கம்பத்தின்மேல் கூட ஏறியிருக்கிறேன்.

நான் ஹோல்னெஸ் நிகழ்ச்சியின்போது எப்போதும் உயர்ந்த சக்திநிலையிலேயே இருந்தேன். பல நாட்கள், சத்குருவின் பாதங்களுக்கு அருகேயே உட்கார்ந்திருப்பேன். சிலசமயம் அவருடைய பாதங்களைப் பற்றியும் இருந்திருக்கிறேன். அவர் காலடிகளில் இல்லாத சமயங்களில், நாங்கள் இருந்த சக்திசூழ்நிலையின் தீவிரத்தால், நான் உருண்டு புரண்டிருக்கிறேன், உதைத்திருக்கிறேன். நாங்கள் இருந்த கூடாரத்தை உள்ளிருந்து தாங்கிய ஒரு கம்பத்தின்மேல் கூட ஏறியிருக்கிறேன். சொல்லப்போனால், அந்த ப்ராசஸ் முடிந்து சத்குரு ஹாலை விட்டு சென்றபிறகு, அந்த கம்பத்தின் மேலிருந்து கீழே வருவதற்கு நான் மிகவும் சிரமப்பட்டேன். என்னுடைய இயல்பு நிலைக்கு திரும்பியிருந்ததால் அந்த சிரமம் ஏற்பட்டது.

சிலமுறை, சத்குரு அவருடைய இருப்பைப்பற்றிக் கூறும்போது என்னை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். “நான் எப்போதும் உங்களுடனே இருக்கிறேன்,” என்று ஹோல்னெஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது மாதத்தில் அவர் ஒருமுறை கூறியிருந்தார். “அவர் தன் வீட்டுக்கு சென்றுவிடுவார், பின் எப்படி எங்களுடன் எப்போதும் இருப்பார்?” என்று என் மனம் கேள்வி எழுப்பியது. அதே நாள் இரவு நான் தூங்கிக்கொண்டிருந்தபோது, விபூதியின் பலமான வாசனையால் நான் எழுந்தேன். எங்கிருந்து இது வருகிறது என்று யோசித்துவிட்டு பின் மீண்டும் உறங்கிவிட்டேன். இப்படி இரண்டு மூன்று முறை நடந்தது. யார் இப்படி வாசனைவரும் அளவிற்கு இவ்வளவு விபூதியைப் பூசியிருப்பது என்று யோசித்தபடி, டார்ச்சை எடுத்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவர் முகத்திலும் டார்ச் அடித்துப் பார்த்தேன். ஆனால் விளக்கம் கிடைக்கவில்லை. குழம்பிப்போய் மீண்டும் உறங்கச் சென்றுவிட்டேன்.

அடுத்தநாள் காலை வகுப்பு துவங்கியவுடன், சத்குருவிடம் இந்த விபூதியின் வாசனை எங்கிருந்து வந்தது என்று கேட்டேன். அதற்கு அவர், “ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்? உங்கள் டார்ச்சை வைத்து கண்டுபிடியுங்கள்!” என்று கூறி என்னை வாயடைக்கச் செய்தார். 

எதிர்பாராமல் ஆசிரியரானது

ஈஷா யோகா வகுப்பு நடத்துவது என்பது, என்னைப் பொறுத்தவரையில் ஒரு மறைஞான செயல்முறைப்போல்: என்னை மீறி அது தன்னால் நிகழும்.

ஹோல்னெஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது மாதத்தில், சத்குரு ஈஷா யோகா ஆசிரியர் பயிற்சியில் என் பெயரை சேர்த்தார். நான் சற்றே ஆட்சேபித்தாலும் பின் ஒப்புக்கொண்டேன். ஆசிரியர் பயிற்சியில் நான் ஒருநிலையில் ரசித்து ஈடுபட்டபோதும், இன்னொரு விதத்தில் அங்கு நடந்த பல விஷயங்கள் எனக்குப் புரியவில்லை. பிற பங்கேற்பாளர்கள் ஈஷா யோகா வகுப்பின் நுட்பங்களைப் பற்றி நாள்கணக்கில் பேசிக்கொண்டிருந்தார்கள் என்றால், எனக்கு ஆசிரியர் பயிற்சி ஒரு நடனத்தைப்போல இருந்தது. சில சமயங்களில் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்ததுண்டு. ஆனால் இறுதியாக, ஈஷா யோகா வகுப்பை எடுக்கத் தகுதியானவளானேன், ஆசிரியருக்கு வழங்கப்படும் அந்த புனிதமான சால்வையையும் பெற்றேன். 1996 ல் என்னுடய முதல் வகுப்பை டாடாபாட் ஹாலில் எடுத்தேன். ஈஷா யோகா வகுப்பு நடத்துவது என்பது, என்னைப் பொறுத்தவரையில் ஒரு மறைஞான செயல்முறைப்போல்: என்னை மீறி அது தன்னால் நிகழும்.

ஒருமுறை புதிய ஆசிரியர் ஒருவரோடு நான் வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தேன். நாங்கள் ஒரு தன்னார்வத்தொண்டரின் வீட்டில் தங்கியிருந்தோம். அதே வீட்டின் மேல்தளத்தில்தான் வகுப்பும் நிகழ்ந்தது. ஒருநாள் அந்த புதிய ஆசிரியருக்கு சுயமாக வகுப்பை நடத்தும் பக்குவம் வரவேண்டும் என்று நான் வகுப்புக்குச் செல்லாமல் வெளியே பால்கனியில் நடந்துகொண்டிருந்தேன். அப்போது வெளியே தெருவில் ஏதோவொரு இசை ஒலித்துக்கொண்டிருந்தது. ஒரு நல்ல பாடல் போட்டதும், பாடலோடு நானும் தாளம்போட்டு ரசித்துக்கொண்டு இருந்தேன். 

எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. அன்றுதான் அந்த வகுப்பில் அந்த அற்ப இசைக்கு நான் தாளம் போட்டுக்கொண்டிருந்தேன்: அந்த வகுப்பில்தான் அந்த பெண்மணி என்னிடம் வந்து அவர் சத்குருவை எனக்கு பதில் பார்த்ததாகக் கூறினார். சற்று சுருதியிறங்கிய குரலில், “இந்த க்ஷணம் தவிர்க்க முடியாது,” என்று கூறினேன். “மா, நீயும் இந்த க்ஷணத்தில் இருக்க வேண்டும்” என்றார் அவர்.

சிறிதுநேரம் கழித்து, சில தன்னார்வத்தொண்டர்கள் என்னிடம் ஓடிவந்து, வகுப்பு சூழ்நிலையைக் கையாள என்னை உடனடியாக வகுப்பிற்கு அழைத்தார்கள். பெண் பங்கேற்பாளர் ஒருவர், வகுப்பின் சக்திசூழ்நிலையால், தன்னைமீறி கட்டுக்கடங்காது உருண்டு புரண்டுகொண்டிருந்தார். அதனால் நான் வகுப்பிற்குள் போயாக வேண்டிய நிலை. வகுப்பு சூழ்நிலை சரியானபின், அந்த புதிய ஆசிரியர் என்னையே வகுப்பைத் தொடருமாறு கெஞ்சிக்கேட்டார். அதனால் வேறு வழியின்றி வகுப்பிலுள்ள ஆசிரியர் நாற்காலியில் அமர்ந்தேன். அந்த இசை இன்னும் மனதில் ஓடிக்கொண்டிருக்க, என்னை அறியாமலேயே அந்தப் பாடல் இசையை மனதில் முனுமுனுத்துக் கொண்டிருந்தேன். பங்கேற்பாளர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தபோது, அந்த இசைக்கேற்றாற்போல் என் கால் தாளம் போட்டுக்கொண்டிருந்ததை நான் கவனித்தேன். வகுப்பு முடிந்தபின், ஒரு பெண்மணி என்னிடம் வந்து, ஆசிரியர் நாற்காலியில் எனக்கு பதில் சத்குரு உட்கார்ந்திருந்ததைப் பார்த்ததாகக் கூறினார். நிறைவு உள்ளெழுச்சிப் பாடலுக்காக நான் கீழே அமர்ந்தபோது, அவர் சென்றுவிட்டதாகவும் அவர் கூறினார். இதுபோன்ற அனுபவங்களை பங்கேற்பாளர்கள் அவ்வப்போது என்னிடம் பகிர்ந்துள்ளதால், அதனைப்பற்றி அப்போது நான் அவ்வளவாக யோசிக்கவில்லை.

ஒரு வாரத்திற்குப்பின், ஆசிரமத்திற்குத் திரும்பியபோது, அங்கிருக்கும் முக்கோண கட்டிடத்தினுள் நுழையும்போது, சத்குருவை சந்திக்க நேர்ந்தது. மற்ற விஷயங்களை பேசிக்கொண்டிருக்கையில், அவர் ஒரு தேதியைக் குறிப்பிட்டு, “வகுப்பின் எந்த அம்சத்தை அன்று காலை நடத்திக்கொண்டு இருந்தாய்?” என்று என்னைக் கேட்டார். எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. அன்றுதான் அந்த வகுப்பில் அந்த அற்ப இசைக்கு நான் தாளம் போட்டுக்கொண்டிருந்தேன்: அந்த வகுப்பில்தான் அந்த பெண்மணி என்னிடம் வந்து அவர் சத்குருவை எனக்கு பதில் பார்த்ததாகக் கூறினார். சற்று சுருதியிறங்கிய குரலில், “இந்த க்ஷணம் தவிர்க்க முடியாது,” என்று கூறினேன். “மா, நீயும் இந்த க்ஷணத்தில் இருக்க வேண்டும்” என்றார் அவர்.

குருவின் கனவை நினைவாக்க, கிராமங்களை நோக்கி

நான் பார்த்ததில், இந்திய கிராமங்கள் அழகாகக் காட்சியளிப்பவை அல்ல - கண்கள் உள்ளே போன சத்துக்குறைவான ஆண்களும் பெண்களும் தங்கள் சக்தியையும் மீறி வேலை செய்வார்கள். குப்பைகள் இரைந்து கிடக்கும் சாலை, திறந்த வெளியில் மலம் கழிப்பார்கள், கவனிப்பில்லாமல் சுத்தபத்தம் இல்லாத இடங்களில் விளையாடும் எலும்பும் தோலுமான குழந்தைகள். அவர்களின் துன்பங்கள் அவர்களுக்கு மிகவும் பழகிப்போன ஒன்றாகிவிட்டதால், அவர்களை வகுப்பிற்கு வரவைப்பது மிகவும் கடினமாக இருக்கும்.

1997 ல் சத்குரு என்னை மகளிர் சிறைச்சாலைக்கு யோகா வகுப்பு எடுக்க அனுப்பி வைத்தார். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஒருபுறம் அது மிக கடுமையான வேலையாக இருந்தாலும், மறுபுறம் அது மிகுந்த மனநிறைவு தந்த ஒரு பெரும்பொறுப்பாகவும் அமைந்தது. ஒருமுறை, உடலளவிலும் மனதளவிலும் ஊனமுற்றோருக்கான அநாதை விடுதியில் நான் 21 நாள் வகுப்பு எடுத்தேன். என் வாழ்க்கையிலேயே மிக ஆழமாக என்னைத் தொட்ட நிகழ்வுகளுள் இதுவும் ஒன்று.

2003 ல், சத்குரு, கிராமப்புத்துணர்வு இயக்கத்திற்காக தமிழக கிராமங்களில் என்னை வகுப்புகள் எடுக்கச் சொன்னார். சத்குருவின் அன்புக் கட்டளை இதுதான் - “கிராமங்களுக்குச் சென்று புத்துணர்வூட்ட வேண்டும்: கிராமங்கள் பசுமையாகவும், அங்கிருக்கும் மக்கள் அனைவரும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்,” என்றார். ஒவ்வொரு கிராமத்திற்குள் நுழையும்போதும், சத்குருவின் கனவு நிறைவேறினால் அந்த கிராமம் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்ப்பேன். ஆனால், அது அவ்வளவு எளிதாக நிறைவேற்றக்கூடிய ஒரு கனவு அல்ல. நான் பார்த்ததில், இந்திய கிராமங்கள் அழகாகக் காட்சியளிப்பவை அல்ல - கண்கள் உள்ளே போன சத்துக்குறைவான ஆண்களும் பெண்களும் தங்கள் சக்தியையும் மீறி வேலை செய்வார்கள். குப்பைகள் இரைந்து கிடக்கும் சாலை, திறந்த வெளியில் மலம் கழிப்பார்கள், கவனிப்பில்லாமல் சுத்தபத்தம் இல்லாத இடங்களில் விளையாடும் எலும்பும் தோலுமான குழந்தைகள். அவர்களின் துன்பங்கள் அவர்களுக்கு மிகவும் பழகிப்போன ஒன்றாகிவிட்டதால், அவர்களை வகுப்பிற்கு வரவைப்பது மிகவும் கடினமாக இருக்கும்.

on-the-path-of-the-divine-maa-chandrahasa-arr-activity

முதலாவது வாரம், கோபிச்செட்டிப்பாளையம் தன்னார்வத் தொண்டர்களின் உதவியோடு, முக்கியமான அதிகாரமிக்க நபர்களை வகுப்பிற்கு அழைப்பதற்காக, 45 கிராமங்களிலுள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நான் சென்றேன். பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 120 மக்கள், முதன்முதலில் அத்தானியில் நடந்த 6 நாள் வகுப்பிற்கு பதிவு செய்தார்கள். அவர்கள் இன்னும் பல கிராம மக்களை வகுப்பிற்கு வரவழைக்க உதவிசெய்தார்கள். ஒரு மாதத்தில், ஒரு நாளில் நான் மூன்று நான்கு வகுப்புகள் எடுக்க ஆரம்பித்தேன். ஆறு மாத காலத்தில், துணைஆசிரியர் இல்லாமல் வெகு குறைவான தன்னார்வத் தொண்டர்கள் உதவியுடன் சுமார் நூறு வகுப்புகள் எடுத்திருந்தேன்.

இந்த முதல் ஆறு மாதங்களில் என்னுடைய தினசரி பணியை சுருக்கமாகச் சொன்னால் - ஒரு நாளைக்கு மூன்று வகுப்புகள் (பல சமயம் வெவ்வேறு கிராமங்களில்) எடுப்பேன். வீடுவீடாகச் சென்று மக்களை வகுப்பிற்கு அழைப்பேன். மீதியிருக்கும் நேரத்தில், சிலசமயம் நள்ளிரவு வரைகூட அவர்கள் தங்கள் சொந்தப் பிரச்சனைகளைப் பகிர்வதைக் கேட்டுக்கொண்டிருப்பேன். ஒருமுறை சத்குருவிடம், “அவர்கள் என்னிடம் அதிகப்படியாகப் பகிர்ந்துகொள்கிறார்கள் சத்குரு. அவர்களுடைய சொந்தப் பிரச்சனைகளைக் கேட்பதற்கு எனக்குக் கடினமாக இருக்கிறது” என்று சொன்னேன். அதற்கு அவர், “தங்கள் உணர்வுகளை ஒருவரோடொருவர் வெளிப்படுத்த பாரம்பரியமாக கிராமங்களில் கலந்துரையாடுவதற்காக இருந்த பொதுவிடங்கள், கூட்டுக்குடும்பம், கிராமியத் திருவிழாக்கள், எல்லாம் நலிவடைந்துவிட்டன. உன்னிடம் அவர்கள் பகிர்ந்து கொள்வது அவர்களுடைய நல்வாழ்விற்கு நல்லது. பரவாயில்லை, உன்னிடம் பகிர்ந்து கொள்ளட்டும்,” என்றார். இப்படி பகிர்வதால் நிறைய மக்கள் தங்கள் கவலைகளிலிருந்து வெளிவருவதை என்னாலும் பார்க்க முடிந்தது. அதனால் என்னால் இயன்ற வரையில், எவ்விதம் தேவைப்படுகிறதோ அவ்விதம் அவர்களுடன் இருந்தேன்.

சத்குரு அறிவுறுத்தியிருந்தபடி, மதிய உணவிற்கு நான் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வீட்டிற்கு செல்வேன். யாராவது உன்னைத் தங்கள் வீட்டிற்கு சாப்பிட அழைத்தால், முடிந்தவரை மறுக்க வேண்டாம்,” என்று ஒருமுறை சத்குரு சொல்லியிருந்தார். அவர்கள் ஏழை மக்கள், ஆனால் ஒரு சந்நியாசிக்கு உணவளிக்க வேண்டும் என்று ஆர்வமாக இருப்பார்கள். அதனால் பல சமயம், அவர்கள் கொடுக்கும் சாப்பாடு சத்துக்குறைவான உணவு என்றாலும், அவர்கள் என்ன கொடுக்கிறார்களோ அதை மகிழ்ச்சியோடு உண்பேன். சில வீடுகளுக்கு அவர்களை வகுப்பிற்கு அழைப்பதற்காக நான் செல்லும்போது, அவ்வீட்டுப் பெண்கள் அன்பை வெளிப்படுத்த என்னை சாப்பிடச் சொல்வார்கள். நானும் சரி என்று சொல்வேன். ஆனால் அவர்களிடம் கொடுப்பதற்குப் பழைய சாதமும் ரசமும் மட்டுமே இருக்கும். அதனால் என்னை சாப்பிட அழைத்ததற்கு சங்கடப்படுவார்கள். ஆனால், நான் சந்தோஷமாக அந்த உணவை அவர்களுடன் சாப்பிடுவேன். இதனால் எங்களுக்குள் ஆழமானதொரு பிணைப்பு ஏற்பட்டது.

கிராம மக்களுடன் எனக்கு ஏற்பட்ட அனுபவம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு என்னை மெருகேற்றியுள்ளது. அவர்கள் மிக எளிமையான மனிதர்கள். ஆனால், சுலபமாக உள்வாங்கிக்கொள்ளும் திறந்த தன்மையுடையவர்கள். அவர்களை வகுப்பிற்கு வரவைப்பதற்கு பல யுத்திகளை நான் கையாள வேண்டியதிருந்தது என்னவோ உண்மைதான். ஆனால், வகுப்பிற்குள் வந்துவிட்டால் முதல்நாளே அதில் முழுமையாக ஈடுபடுவார்கள். இரண்டாவது நாளிலிருந்தே சத்குருவுடன் ஆழமாக தொடர்புபடுத்திக் கொள்வார்கள். வகுப்பின் இறுதிநாளில் பெரும்பாலான மக்களிடம் மிகப்பெரிய தன்னிலை மாற்றத்தைக் காணமுடியும். அவர்களுடைய கஷ்ட நஷ்டங்கள், அவர்களுடைய அன்பு, அவர்களின் உள்நிலை மாற்றம் எல்லாம் என்னை ஆழமாகத் தொட்டவை. அந்த மூன்று வருடங்கள் கிராம மக்களுடன் நான் இருந்தது, பலவகையில் அதன் விளைவு, அதன் தாக்கமே இன்று நான் இப்படி இருப்பது.  

சில குறிப்பிட்ட சம்பவங்களை இங்கு பகிர்கிறேன்;

பத்து வருடங்களுக்குப் பிறகு வேலைக்கு சென்றார்

பத்து வருடங்களுக்குமுன், ஒருவர் கழுத்தில் தேங்காய் மட்டையோ அல்லது தேங்காயோ (எனக்கு சரியாக நினைவில்லை) விழுந்ததால் செயலிழந்து போயிருந்தார். அந்த சம்பவத்தினால், அவருடைய மனைவி குடும்பத்திற்கு இருவேளை உணவு சம்பாதிக்க கடுமையாக உழைத்து வந்தார். அந்த மனிதர் ஈஷா யோகா வகுப்பிற்கு வந்தார். இரண்டாவது நாளிலிருந்தே அவருடைய உடல்நிலை சரியாக ஆரம்பித்தது. அவர் வேலைக்குத் திரும்ப ஆர்வமானார். நான் அவரை கால அவகாசம் கொடுத்து முழுவதும் குணமான பிறகு வேலைக்குப் போகசொன்னேன். ஆனால் அவர் ஐந்தாவது நாளே முழுவதும் குணமாகி வேலைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டார். 

பத்து நாட்கள் பயிற்சிகளை விட்டது

இந்த அற்புதமான மனிதரைக் கண்டு வியந்துபோனேன். இந்த 80 வயது மனிதர், சரியாக சம்மணமிடுவதற்குக்கூட அவருக்குக் கடினம், ஆனால் அந்த பத்து நாட்கள் தன் பயிற்சியை செய்யாதிருந்ததற்கு அவர் வருத்தப்பட்டார்.

ஒரு கிராமத்தில் ஒரு வயதான தம்பதியர் இருந்தார்கள், அவர்களது வீட்டிற்கு நான் அவ்வப்போது செல்வதுண்டு. அவர்கள் சத்குருமேல் மிகுந்த மதிப்புடையவர்கள். தன்னுடைய பயிற்சிகளை இடைவிடாமல் செய்துவந்தார்கள். சமீபகாலத்தில், பத்து வருடங்களுக்குப்பின், மறுபடியும் அந்த கிராமத்திற்கு வேலை நிமித்தமாக சென்றிருந்தேன். அப்போது அவர்களுடைய வீட்டிற்குச் சென்றிருந்தேன். அந்த வயதானவர் என்னை மிக ஆவலாக வரவேற்க வந்தார். அவருடைய மனைவி காலமாகியிருந்தார். நாங்கள் பேச ஆரம்பித்தோம். அவருடைய மனைவியின் நோயைப் பற்றி என்னிடம் கூறி அழுதார். பின்னர், அவருடைய மகன்கள், அவர்கள் தந்தை அதுவரை இருவரிடம் மட்டுமே தங்கள் தாயை நினைத்து அழுதிருக்கிறார் - ஒன்று அவர்கள் தாயாருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், இன்னொருவர், நான் என்றனர். என்னிடம் அவர் இந்த அளவு திறந்தநிலையில் இருந்தது என்னை மிகவும் ஆழமாக தொட்டது. பின் அவர் என்னிடம், “என்னை மன்னித்துவிடுங்கள், என்னை மன்னித்துவிடுங்கள்,” என்று திரும்பத் திரும்ப கூறினார். நான், ஏன் இப்படிக் கூறுகிறீர்கள் என்று கேட்டேன். “நான் இவ்வளவு நாட்கள் விடாமல் பயிற்சி செய்துவந்தேன். என் மனைவி இறந்து கொண்டிருந்த அந்த பத்து நாட்கள் நான் செய்யவில்லை,” என்றார். இந்த அற்புதமான மனிதரைக் கண்டு வியந்துபோனேன். இந்த 80 வயது மனிதர், சரியாக சம்மணமிடுவதற்குக்கூட அவருக்குக் கடினம், ஆனால் அந்த பத்து நாட்கள் தன் பயிற்சியை செய்யாதிருந்ததற்கு அவர் வருத்தப்பட்டார். நான் நெகிழ்ந்து போனேன். 

வாசலில் யோகா வகுப்பு

ஒருமுறை, மது அருந்திய ஒருவர் முதல் நாள் வகுப்பிற்கு வந்தார். அவரை நான் உள்ளே விடவில்லை. அவர் ஹாலுக்கு வெளியே உட்கார்ந்தபடியே பயிற்சிகளை ஜன்னல் வழியாக கவனித்து, தானாகவே பயிற்சிகளை செய்யத் துவங்கினார். அடுத்தநாள் வகுப்பிற்குள் வந்தார், ஆனால் குடிக்காமல் வந்திருந்தார். “நீங்கள் என்னை இப்போது வெளியே அனுப்ப முடியாது, நேற்று நான் முழுவகுப்பிலும் கலந்து கொண்டேன்” என்றார். அவருடைய ஆர்வத்தைப் பார்த்து மனமுருகி அவரை உள்ளே அனுமதித்தேன். பல வருடங்களுக்குப் பிறகு, அவர் அந்த ஆறு நாட்களில்தான் முதல் முறையாக குடிக்காமல் இருந்தார் என்று கேள்விப்பட்டேன். தீட்சைக்குப் பிறகு மிகவும் நெகிழ்ந்து போனார், பல மணிநேரம் அழுதுகொண்டிருந்தார். தன்னுடைய பயிற்சிகளை இடைவிடாது செய்து வந்தார், குடிப்பழக்கத்திலிருந்தும் வெளியே வந்தார். அவருடைய வேலைக்குத் திரும்பச் சென்றார். குடிப் பழக்கத்தால் அவரை விட்டுப் பிரிந்திருந்த அவர் மனைவியும் அவரிடம் மறுபடியும் வந்து சேர்ந்தார். 

குருவின் வார்த்தைகளை மீறியபோது

ஆறு மாதங்களுக்குப் பிறகு, மற்ற ஆசிரியர்கள் என்னுடன் சேர்ந்ததால், இன்னும் பல கிராமங்களுக்கு இந்த இயக்கத்தைக் கொண்டு சேர்க்க முடிந்தது. கிராம மக்களும், தன்னார்வத் தொண்டர்களும், அன்பாகவும் நம்பிக்கையுடனும் இருந்ததால், 2006 ஆம் ஆண்டு, எட்டு லட்சம் மரக்கன்றுகளை ஒரே நாளில் நட்டதற்காக கின்னஸ் சாதனை படைத்தோம். ஈரோட்டில் மட்டும் தொண்ணூராயிரம் மரக்கன்றுகளை நட்டோம். அது மொத்தத் தொகையில் தோராயமாக பத்து சதவிதமாகும். இதனுடைய தொடர்ச்சியாக, சத்குருவிடம் சொல்லாமலேயே 50 லட்சம் மரக்கன்றுகள் நட்டு, சத்குருவிற்குப் பிறந்த நாள் பரிசாகத் தர வேண்டும் என்று நானாகச் செய்யத் துவங்கினேன். இதற்காக ஒரு ஊரிலிருந்து இன்னொன்று என்று பல இடங்களுக்கு சென்றேன். மிகப்பெரிய முயற்சியில் நான் தனியே ஈடுபட்டதால் அது நிறைவேறவில்லை. மாறாக என்னுடைய உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டது. குணமாவதற்கு ஆசிரமத்திற்குத் திரும்பிவரும்படி சத்குரு என்னை அழைத்தார். ஆசிரமத்தில் இருந்தபடியே நான் கிராமப் புத்துணர்வு இயக்கத்திற்காக தொடர்ந்து செயலாற்றினேன்.

விரைவில், சென்னையில் கிராமோத்சவம் அறிவிக்கப்பட்டது. விளையாடுவதற்காக கிராமங்களிலிருந்து நாங்கள் பலபேரை அழைத்திருந்தோம். மேலும், தங்களது சொந்த செலவிலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வருவதற்கு விரும்பினார்கள். ஆனால் நிகழ்ச்சிக்குத் தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் கவனித்துக்கொள்ளவும், கிராமிய விளையாட்டுகளை நடத்தவும், யாராவது ஒருவர் சென்னையில் இருக்க வேண்டியிருந்தது. கிராம மக்கள் என்னிடம் மிக சகஜமாகப் பழகியதால், நான் போகவா என்று சத்குருவிடம் அனுமதி கேட்டேன். அதற்கு அவர், “கிராமோத்சவம் நன்றாகவே நடக்கும் மா, நீங்கள் இங்கேயே இரு,” என்று சொன்னார். நான் வற்புறுத்திக் கேட்டதால் அவரும், “சரி போய் வாருங்கள், ஆனால் அதற்குப்பிறகு உன் உடல்நலத்தைப் பற்றி என்னிடம் கேட்காதே” என்றார்.

ஐந்து லட்சம் மக்கள் கலந்துகொள்ள கிராமோத்சவம் கோலாகலமாக நடந்து முடிந்தது. இத்தகையதொரு மகத்தான நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்வதிலுள்ள தீவிரத்தையும், கிராம மக்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பையும் நான் மிகவும் ரசித்து செய்தேன். ஆனால் நிகழ்ச்சி முடிந்து ஆசிரமம் திரும்பியபோது, என் உடல்நிலை மிகவும் மோசமாகியிருந்தது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன், மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை பரிந்துரைக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருந்தது. ஆனால் சத்குரு அறுவை சிகிச்சை வேண்டாம் என்று சொல்லி, எனக்கு குறிப்பிட்ட விதமான உணவு மற்றும் சாதனாவை வழங்கினார். நாற்பது நாட்களுக்குப் பிறகு பரிசோதனை செய்தபோது, நான் குணமடைந்திருந்தேன். ஆனால் இதிலிருந்து ஒரு நல்ல பாடம் கற்றுக்கொண்டேன்.

2006 ம் ஆண்டிலிருந்து, ஆசிரமத்திலேயே முழுநேரம் இருந்தபடி செயலாற்றத் துவங்கினேன். பிற்காலத்தில் அக்ஷயாவையும், அருகிலுள்ள கிராம மக்களின் நல்வாழ்வையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். முதல்முறை பெண்களுக்கான சிவாங்கா சாதனா துவங்கியபோது, கிராமப்புறப் பெண்கள் இதன்மூலம் பலன்பெற வேண்டும் என்று சத்குரு விரும்பினார். அதனால் நான் மீண்டும் கிராமங்களுக்குச் சென்று, இந்த சாதனாவை மேற்கொள்ளச் சொல்லி பெண்களை ஊக்கப்படுத்தி, சாதனாவின் நிறைவிற்கு ஆசிரமம் வரும்படி அழைத்தேன். 2011ல் நடந்த அந்த தைப்பூசத் திருநாளில், 1400 பெண்கள் ஆசிரமத்திற்கு வந்தனர். என் மனம் சந்தோஷத்தில் திளைத்தது.

இப்போது ஈஷாவின் ஒரு விவசாய நிலத்தை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன். அங்கு ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் மூலம் பயிற்சி பெற்ற ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாய முறையில் விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன். சின்னஞ்சிறிய செடிகள் முளைவிட்டு வளருவதைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் ஆசையாக இருக்கிறது. விளைபொருட்களை அக்ஷயாவிற்கு கொடுக்கிறேன். இந்த இயற்கை விவசாய முறைகள் மிக அற்புதமானவை. வெறும் மாட்டுக் கோமியமும் மாட்டுச் சாணத்தையும் உயிர்ம வளத்திற்கான இடுபொருட்களாக இங்கு பயன்படுத்துகிறோம். ஒரு ஏக்கர் நிலத்திலிருந்தே சென்றமாதம் 2.1 டன் முள்ளங்கியும், 650 கிலோ கொத்தமல்லியும் கிடைத்தது. சீக்கிரமே தக்காளியும் வெண்டைக்காயும் அறுவடை செய்யவிருக்கிறோம். ஒரு விவசாயி அடையும் பெருமித உணர்வினை என்னால் இதில் உணர முடிகிறது.

உள்நிலையில் பலத்தினை ஏற்படுத்திய பயணம்

எதையும் பற்றிக்கொள்ளும் பக்குவப்படாத இளம்பெண்ணாக வந்தேன் - இப்போது என் சமூக சூழ்நிலைகளிலிருந்து ஒரு இடைவெளியை உணர்கிறேன். அதே சமயம் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு இருந்த அதே ஈடுபாடு இன்றும் என்னிடம் இருக்கிறது.

on-the-path-of-the-divine-maa-chandrahasa-meditating-under-tree

ஒருமுறை எனது வலது கையில் அடிபட்டிருந்ததால் மிகவும் வலியாக இருந்தது. நான் அப்போது இப்படித்தான் இருந்தேன். காயம்பட்டு அதில் மருத்துவர் எரிகிற ஆயிண்ட்மெண்டைத் தடவவேண்டும் என்றால், என்னை நான்கு பேர் பிடித்துக்கொள்ள வேண்டும். அப்போது என்னால் அந்த அளவுதான் வலியைப் பொறுத்துக்கொள்ள முடியும். இந்த தாங்கமுடியாத வலிக்கு நான் சத்குருவிடம் சென்று உதவி கேட்டேன். அதைக் கேட்டு அவர் நகைத்துவிட்டு, என்னை வலி நிவாரண மருந்துகள் உட்பட அனைத்தையும் நிறுத்தச் சொன்னார். இந்த பிரச்சனை அதிகமாகி கழுத்தில் ஸ்பான்டிலைட்டிஸ் வந்து, வலி மேலும் அதிகரித்திருந்தது. மருத்துவர்கள் எல்லாம் ஏன் இவர் மருந்துகள் எடுக்காமல் இருக்கிறார் என்று குழம்பினர். இனியும் வலியை தாங்க முடியாத சூழ்நிலையில், சத்குருவிடம் மூன்றாவது முறை சென்று முறையிட்டேன். சத்குரு மறுபடியும் சிரித்தார். இந்த முறை விஜி அக்கா என் உதவிக்கு வந்தார். சத்குருவும் எங்களின் கோரிக்கைக்கு ஒப்புக்கொண்டார். அவர் ஒரு குறிப்பிட்ட சாதனாவை எனக்கு வழங்கினார். சில நாட்களுக்குப் பிறகு வலி இடம் தெரியாமல் காணாமல் போனது. இந்த சாதனாவை முன்பே அவர் எனக்கு கொடுத்திருக்கலாமே என்று நான் யோசித்தேன். பின்புதான் வலிபொறுக்கும் எனது ஆற்றல் முன்பைவிட அதிகரித்திருந்ததை உணர்ந்தேன். இதுபோல என்னைக் கீழே அமிழ்த்திய பல எல்லைகளை அவர் உதிர்க்கச்செய்தார்.

என்னுடைய உள்நிலை மாற்றத்தின் உண்மைநிலையை நான் உணர்ந்தது, என் தாயார் இறந்த செய்தியை நான் கேட்டபோதுதான். உள்ளுக்குள் வலித்தபோதும், அதனுடன் ஒரு இடைவெளியை உணர்ந்தேன். மிக மென்மையாக அந்த சூழலை எனக்குள் கையாண்டேன், அப்போதும் தொடர்ந்து யோகா வகுப்புகள் நடத்தச் சென்றேன். அப்போதுதான் எனக்குள் எவ்வளவு மாற்றமடைந்திருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். இப்போது பல விதங்களில் வித்தியாசமான ஒருவராக இருக்கிறேன். எதையும் பற்றிக்கொள்ளும் பக்குவப்படாத இளம்பெண்ணாக வந்தேன் - இப்போது என் சமூக சூழ்நிலைகளிலிருந்து ஒரு இடைவெளியை உணர்கிறேன். அதே சமயம் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு இருந்த அதே ஈடுபாடு இன்றும் என்னிடம் இருக்கிறது. என்னுடைய நன்றிகளை சத்குருவிற்கு எப்படிச் சொல்வேன் என்று தெரியவில்லை. என்னுடைய பாதையிலிருந்து சற்றே வழிதவறியபோது, அதிலிருந்து நானே மீண்டுவரப் போதிய நேரமும் உதவியும் கொடுத்திருக்கிறார். எனக்கு எல்லாமே சத்குருதான். 

அவருக்கு நான் பட்ட கடனை எப்படித் தீர்ப்பேன்?