கேள்வியாளர்: நான் மிகவும் மோசமான கஷ்டங்களை சந்தித்த ஒரு குடும்பத்திலிருந்து வருகிறேன். எப்போதும் துன்பப்படும் மக்களுக்கு எப்படி உதவுவது?

சத்குரு: நான் கூறப்போவது உங்களுக்கு இரக்கமில்லாமல் பேசுவதாக தோன்றலாம், ஆனால் - உங்களுக்கு ஆறுதல் வேண்டுமா அல்லது ஒரு தீர்வு வேண்டுமா? நீங்கள் ஒரு தீர்வை விரும்பினால், அதைக் கையாள ஒரு குறிப்பிட்ட வழி உள்ளது. நீங்கள் ஆறுதல் விரும்பினால், நான் ஆறுதல் தரும் சில வார்த்தைகளை சொல்ல முடியும், ஆனால் அது ஒருபோதும் தீர்வு ஆகாது. இந்தக் கணம் உங்களுக்கு வசதியாக இருக்கும்; அடுத்த கணமே, மீண்டும் அதே துன்பத்தை தரும். நீங்கள் ஒரு தீர்வை விரும்பினால், நீங்கள் துன்பப்படுவது உங்களின் ஞாபகங்களை சார்ந்துதானே தவிர உங்கள் வாழ்க்கையால் அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

துன்பம் என்பது நீங்கள் உருவாக்குவது. மற்றவர்கள் சூழ்நிலைகளை உருவாக்க முடியும்; அவர்களால் உங்களை அல்லது என்னை துன்பப்படுத்த முடியாது.

உடல், மனம் என இரண்டு விதமான நினைவுகள் உங்களிடம் உள்ளன - இவை இரண்டுமே ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் நீங்கள் உருவாக்கிய குவியல்கள். இது நீங்கள் அணியும் ஆடை போன்றது… இப்போது நான் சற்று தளர்வான ஆடை அணிந்திருக்கிறேன், எனவே என்னால் அதை தொடர்ந்து உணர முடிகிறது. ஒருவேளை, நான் மிகவும் இறுக்கமான நைலான் ஆடைகளை அணிந்திருக்கிறேன் என்று வைத்துக்கொள்வோம்; சிறிது நேரம் கழித்து என் தோல் எது, என் ஆடை எது? என்று எனக்குத் தெரியாது. இதுதான் உங்களுக்கு நிகழ்ந்துள்ளது - நீங்கள் யார்? எது உங்கள் உடல்? எது உங்கள் மனம்? என்று உங்களுக்குத் தெரியவில்லை, இவை அனைத்தும் உங்களைப் போலவே ஆகிவிட்டன, ஏனென்றால் நீங்கள் அதை மிகவும் இறுக்கமாக அணிந்திருக்கிறீர்கள். நீங்கள் ஈஷா கிரியா செய்திருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும்: “நான் உடல் அல்ல; நான் மனமும் அல்ல". நீங்கள் இங்கே உட்கார்ந்தால், உங்களுக்கும் உங்கள் உடலுக்கும், உங்களுக்கும் உங்கள் மனதுக்கும் இடையில் ஒரு இடைவெளி இருப்பதை நீங்கள் அறிவீர்கள் - இதுதான் துன்பத்திற்கான முடிவு.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உங்களுக்கு இரண்டு வகையான துன்பங்கள் மட்டுமே உள்ளன: உடல் மூலம் ஏற்படும் துன்பம் மற்றும் மனதினால் ஏற்படும் துன்பம். உங்களுக்கும் உங்கள் மனதுக்கும் இடையே சிறிது இடைவெளியை நீங்கள் கடைபிடித்தால் அதுவே துன்பத்திற்கான முடிவு. இந்த மனம் ஒரு அபார ஆற்றல் கொண்டது, ஆனால் பெரும்பாலான மனிதர்கள் இதை ஒரு துன்ப உற்பத்தி இயந்திரமாக பயன்படுத்துகின்றனர். இன்று கூட, பல காரணங்களுக்காகவும் துன்பம் பிரபலமாக இருப்பதாக நான் பார்க்கிறேன். யாராவது துன்பத்தைப் பற்றி பேசினால் மக்கள் ஆரவாரம் செய்கிறார்கள். மகிழ்ச்சியைப் பற்றி பேசும்போது அவர்களை பார்த்து சிரிக்கிறார்கள்.

நீங்கள் குழந்தைகளாக இருந்தபோதும் இது உங்களுக்கு நேர்ந்தது. உங்கள் பெற்றோர் அவர்களை அறியாமலே இதை உங்களுக்கு செய்கிறார்கள். இப்போது நீங்கள் இதை உங்கள் குழந்தைகளுக்குச் செய்கிறீர்கள். உங்கள் பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் குதித்து கத்தினால், நீங்கள் அவர்களை அதட்டி உட்கார சொல்வீர்கள். ஆனால் அவர்கள் ஒரு மூலையில் அமைதியாக உட்கார்ந்தால், என்ன நடந்தது? என்று அவர்களிடம் கேட்பீர்கள். துன்பம்தான் பலன்களைத் தருகிறது என்பதை சிறுவயதிலிருந்தே அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் உங்களுக்கு என்ன நன்மைகள் கிடைத்தாலும் நீங்கள் கஷ்டப்படுகிறீர்கள் என்றால், அதனால் என்ன பயன்? ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால், எதுவுமே கிடைக்கவில்லை என்றாலும் கூட - அதனால் என்ன?

எனவே, உங்கள் துன்பத்தின் மீது காதல் கொள்ளாதீர்கள் - இது ஒன்றும் நல்ல விஷயம் அல்ல, ஆனாலும் இதை உங்களுக்கு நீங்களே செய்துகொள்கிறீர்கள். நீங்கள் இப்போது துன்பமாக அல்லது மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்பது முற்றிலும் உங்கள் விருப்பம். மற்றவர்கள் வெளியில் மட்டுமே வசதியான அல்லது சங்கடமான சூழ்நிலைகளை உருவாக்க முடியும். துன்பம் என்பது நீங்கள் உருவாக்குவது. மற்றவர்கள் சூழ்நிலைகளை உருவாக்க முடியும்; அவர்களால் உங்களை அல்லது என்னை துன்பப்படுத்த முடியாது.

நீங்கள் யாருக்கும் பலியாகவில்லை, உங்களை உங்களுக்கே பலியாக்கிக்கொள்கிறீர்கள்.

துன்பம் உங்கள் விருப்பம். “புத்தர்” என்ற வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். உங்களில் பெரும்பாலானோர் கௌதமர், புத்தரைப் பற்றி நினைப்பார்கள், ஆனால் கௌதமர் மட்டும் புத்தர் அல்ல. அவருக்கு முன் ஆயிரக்கணக்கானவர்களும், அவருக்குப் பின் ஆயிரக்கணக்கானவர்களும் இருந்திருக்கிறார்கள், இன்னும் இருக்கிறார்கள். “புத்தர்” என்பதன் பொருள் இதுதான்: பு என்றால் “புத்தி” தா என்றால் “மேலே இருப்பவர்” என்று பொருள். அவரது புத்திக்கு மேலே இருப்பவர் புத்தர். தன்னை பெரிய புத்திசாலியாக நினைத்துக்கொண்டிருக்கும் பெரும்பாலானோர், இடைவிடாமல் துன்பப்படும் மனிதர்களாகவே உள்ளனர். ஏதாவது நடந்தாலும் கஷ்டப்படுவார்கள்; எதுவும் நடக்கவில்லை என்றாலும் கஷ்டப்படுவார்கள். எல்லாவற்றையும் துன்பமாக எப்படி மாற்றுவது என்று அவர்களுக்குத் தெரியும். நீங்கள் மனதை விட்டு சற்று தள்ளி இருந்தால், நீங்கள் அவ்வளவு கஷ்டப்பட மாட்டீர்கள்.

மற்ற உயிரினங்கள் உங்களைப் போலவே துன்பப்படுவதில்லை. அவைகளைப் பொறுத்தவரை, அவைகளின் உடல் தேவைகள் பூர்த்தியடைந்தால் அவை நிம்மதியாக இருக்கும். வயிறு நிரம்பியிருந்தால் அதுவே போதும். ஆனால் நீங்கள் அப்படி இல்லை - நீங்கள் ஒரு பக்கம் பசியால் துன்பப்படுவீர்கள், மற்றொரு பக்கம் அஜீரணத்தால் அவதிப்படுவீர்கள். தயவுசெய்து உங்கள் துன்பத்தை பெருக்கிக்கொள்ளாதீர்கள். நீங்கள் யாருக்கும் பலியாகவில்லை, உங்களை உங்களுக்கே பலியாக்கிக்கொள்கிறீர்கள். இது உங்களுக்கு இரக்கமற்றப் பேச்சாக தோன்றலாம். ஆனால் நீங்கள் ஒரு தீர்வை விரும்பினால், உங்கள் துன்பத்தின் மூலத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், அது நீங்கள் மட்டும்தான். மற்றவர்கள் சூழ்நிலைகளை மட்டுமே உருவாக்க முடியும். அவர்கள் ஏதாவது சொல்லலாம் அல்லது செய்யலாம், ஆனால் நீங்கள் அதனால் துன்பப்படுவீர்களா இல்லையா என்பது உங்கள் கையில்தான் உள்ளது.

நீங்கள் தெருவில் நடந்து செல்லும்போது, யாரோ ஒருவர் உங்களை முட்டாள் என்று அழைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். நீங்களே உங்களை கொதிக்க வைப்பீர்கள், “என்னை முட்டாள் என்று அழைக்கும் இந்த முட்டாள் யார்? அவர் ஒரு பெரிய முட்டாள்; அவர்… ஒரு”. அதிகாலை 2:00 மணி ஆனாலும் தூக்கம் வராமல் இன்னமும் உங்களை முட்டாள் என்று அழைத்த அந்த நபரை பற்றித்தான் சிந்தித்துக்கொண்டு புரண்டு புரண்டு படுப்பீர்கள். அவர் என்னவோ ஒரு வார்த்தை மட்டுமே சொல்லிவிட்டு சென்றுவிட்டார், அது உங்கள் மீது அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பின்னர் அவர் சொன்னது உண்மையாகதானே இருக்க வேண்டும்? யார் வேண்டுமானாலும் உங்களுக்கு துன்பத்தை ஏற்படுத்த முடியும். அப்படி யாரும் இல்லை என்றால், அதை நீங்களே செய்துகொள்வீர்கள். தயவுசெய்து இதை நிறுத்துங்கள். துன்பத்தின் மீது காதல் கொள்ளாதீர்கள். இல்லை உங்களுக்கு ஒரு சோகமான வாழ்க்கையை வாழத்தான் பிடித்திருக்கிறது என்றால், அதையே அனுபவியுங்கள்; பின் அதைப்பற்றி புகார் கூற வேண்டாம்.

உங்கள் துன்பத்தின் மீது காதல் கொள்ளாதீர்கள் - இது ஒன்றும் நல்ல விஷயம் அல்ல, ஆனாலும் இதை உங்களுக்கு நீங்களே செய்துகொள்கிறீர்கள்.

சிலர் காதல் திரைப்படங்களை விரும்புகிறார்கள்; சிலர் நகைச்சுவையை விரும்புகிறார்கள்; சிலர் திகில் திரைப்படங்களை விரும்புகிறார்கள். நீங்கள் துன்பத்தை விரும்பினால், அதைச் செய்யுங்கள், ஆனால் நீங்கள் அதை அனுபவிக்க வேண்டும். சேக்ஸ்பியரின் சோகத்தைப் பார்க்க மக்கள் செல்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் வேறொருவரின் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். உங்கள் சொந்த துன்பத்தை நீங்கள் விரும்பினால், அதை அனுபவியுங்கள் - அது உங்களைப் பொறுத்தது. ஆனால் துன்பத்தை உருவாக்கிக்கொண்டு, வேறு யாரோ உங்களுக்கு துன்பம் கொடுக்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். இன்றைய உலகில், யாராவது உங்களுக்கு உடல்ரீதியாக தீங்கு விளைவித்தால் என்ன செய்வது என்று உங்களுக்குத் தெரியும். யாரும் உங்களுக்கு மனரீதியாக தீங்கு விளைவிப்பதாக நினைக்க வேண்டாம். யாரும் உங்களை மனரீதியாக பாதிப்படைய செய்யவில்லை. அவர்கள் தங்களுக்குத் தெரிந்ததை சிறப்பாகச் செய்கிறார்கள். ஆனால் நீங்களாகதான் துன்பப்படுகிறீர்கள். ஒருவேளை எனக்கு நன்றாக வசைபாட மட்டும் தெரியும் என்று வைத்துக்கொள்வோம். நான் இங்கே நின்று உங்களை முடிவில்லாமல் திட்டிக்கொண்டே இருந்தால், அந்த அசுத்தம் என் வாயில் இருக்கும், உங்கள் மனதில் இருக்காது.

எனவே, இந்த பாதிப்பிற்கான அறிகுறியை நீங்கள் பெற வேண்டாம். உங்களைத் தவிர வேறு யாருக்கும் நீங்கள் பலியாக முடியாது. இது முற்றிலும் உங்கள் சொந்த தயாரிப்பாகும். நீங்கள் அதை உணரும் வரை, அதிலிருந்து வெளியேற வழி இல்லை. நீங்கள் இப்போது எதுவாக இருந்தாலும், என்னவாக இருந்தாலும், அடிப்படையில் அதற்கு நீங்களே பொறுப்பு என்பதுதான் நீங்கள் உணர வேண்டிய மிக அடிப்படையான விஷயம், தயவுசெய்து அதைச் செய்யுங்கள்.