சாதகர்: சத்குரு, சில சமயங்களில், நான் ஒரு வகையான தீவிர மனப்பான்மையுடன், இடைவிடாமல் இலக்குகளைத் தொடர்கிறேன். மற்ற நேரங்களில், நான் வேண்டுமென்றே மிகவும் பொறுமையாக இருக்கிறேன். செய்யும் விஷயங்கள் அவற்றின் தனித்துவமான மற்றும் அழகான வழியில் வெளிப்படும் வரை காத்திருக்கிறேன். உங்கள் கூற்றுப்படி, எது சிறந்த அணுகுமுறை?

சத்குரு: உலகில் நாம் எதை செய்ய நினைத்தாலும் முதலில் அதைப் பற்றி நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். திறமை, புத்திசாலித்தனம் இவையெல்லாம் அவசியம்தான். குறிப்பாக, இளமையாக இருக்கும் பொழுது மக்கள் தவறவிடக்கூடிய ஒரு முக்கியமான அம்சம், "சரியான தருணத்தை." உங்கள் செயல்களை நீங்கள் சரியான தருணத்தில் செய்யாவிடின், சிறந்த செயல்பாடு கூட வீணாகிவிடும். தங்கள் வாழ்க்கையின் முக்கிய அம்சங்களை குறிப்பிட்ட நேரத்தில் செய்யத் தெரியாதவர்கள், ஜோதிட கட்டங்களை கூர்ந்து பார்த்து, “இது நல்ல நேரம், இது கெட்ட நேரம், இது மங்களகரமான நேரம் என்று பிரித்துக்கொள்கின்றனர், இதற்கு பொதுவான நேரம், காலம் என்று எதுவும் கிடையாது.

உங்கள் செயல்களை நீங்கள் சரியான தருணத்தில் செய்யாவிடின், சிறந்த செயல்பாடு கூட வீணாகிவிடும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சரியான தருணம் மிக முக்கியமானது. என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு சரியான தருணத்தின் முக்கியத்துவத்தை புரியவைக்க நான் தொடர்ந்து பாடுபடுகிறேன். அவர்கள் செயலின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்கிறார்கள். ஆனால் பெரும்பாலான நேரங்களில், தருணத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. தருணம் சரியாக இருந்தால், ஒரு சிறிய செயல் கூட மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சரியான தருணத்தில் செய்யாத விஷயங்கள், நீங்கள் எவ்வளவு உத்வேகத்துடன் முயன்றாலும், மிகக் குறைவான பலன்கள் மட்டுமே கொடுக்கும். இது "சரியான தருணம்" என்று நீங்கள் எவ்வாறு புரிந்துகொள்வீர்கள்? இது சற்று சிக்கலான விவகாரம்தான். இருந்தும் ஒரு அம்சம் என்னவென்றால், ஒரு மனிதனாக உங்கள் உடல் மற்றும் மன திறன்கள் 24 மணி நேரமும் ஒரே நிலையில் இருப்பதில்லை. இது எல்லா நேரத்திலும் ஏற்ற இறக்கமாக மாறுபடுகிறது. நீங்கள் விளையாட்டில் ஒரு அருமையான ஷாட் அடிக்க விரும்பினால், நீங்கள் முழு விழிப்புணர்வு நிலையில் இருக்க வேண்டும். அந்த தருணத்தை சரியாக உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த உலகத்துடன் சரியான தருணங்களை உருவாக்கிக்கொள்ள, அதிக பயிற்சிகளும் நிறைய ஞானமும் தேவைப்படும். ஆனால், உங்களுக்கு சரியான தருணங்களை நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். நீங்கள் தீவிர விழிப்புணர்வு நிலையில் இருக்கும்பொழுது மட்டும் முக்கியமான செயல்களை செய்யுங்கள். அப்படி இல்லாத தருணங்களில் அதுபோன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள்.

ஒத்திசைவில் இருப்பது

சமீபத்தில், பல வருடங்களுக்கு முன் என்னுடன் வாகனத்தில் பயணம் செய்தவர், அவரின் அனுபவத்தை பற்றி மற்றொருவரிடம் கூறிக்கொண்டிருந்தார். அன்று நான் வாகனத்தை ஓட்டிய விதத்தை இன்றும் நினைவில் கொண்டுள்ளார். அந்த நிகழ்வு அளவற்ற அச்சுறுத்தலை கொடுத்துள்ளது. “அன்று சத்குரு வண்டி ஓட்டிய விதத்தை பார்த்து, சத்குரு, இந்த மாதிரி வண்டி ஓட்டாதீர்கள்” என்று நானே கூறினேன் என்கிறார். குறிப்பிட்ட சில நாட்களில் நான் முழு தீவிரத்தில் இருக்கும்போது, அன்று எதையும் செய்யலாம் என்று எனக்கு தெரியும், அதேபோல செய்யவேண்டியதை சரியாக செய்து முடிப்பேன். தீவிரம் சற்று குறைவாக இருக்கும் நாட்களில், மற்றவர்களை போல என் வேகத்தை குறைத்துக்கொண்டு சற்று நிதானமாக செயல்களை செய்வேன். புற உலகிற்கும், புற சூழ்நிலைகளுக்கும் சரியான தருணங்கள் மிக முக்கியம். பொதுவாக புறசூழ்நிலைகளில் சரியான நேரத்தில் சரியான செயல்களை செய்வதற்கு அதிக அனுபவமும் கவனிப்புத் தன்மையும் தேவை. இந்த நேர் ஒத்திசைவு உங்களுக்குள் சரியாக நிகழவேண்டும். அதாவது மிக முக்கிய செயல்களை செய்யும்போது நான் மிக தீவிர விழிப்புணர்வு நிலையில் இருப்பேன் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

இது முக்கியம், இது முக்கியமல்ல என்று தீர்மானிக்காமல், நீங்கள் செய்யும் அனைத்தின் மீதும் ஒரே தீவிரத்தை வைக்க வேண்டும்

இதை நீங்கள் நன்றாக புரிந்துகொண்டால், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் உங்களை தீவிர விழிப்புணர்வு நிலையில் வைத்திருப்பது மிகவும் முக்கியம் என்பதை நீங்கள் உணர்வீர்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு சிறிய விஷயங்களையும் கூட, ஓ அதுவா? என்று சொல்லக்கூடிய பெரிய விஷயங்கள் அளவுக்கு கவனத்துடன் செய்து வந்தால், நாளடைவில் இந்த சிறிய விஷயங்களின் ஒட்டுமொத்த தாக்கம் மிக பெரியதாக விரிவடையும். இந்த சிறிய விஷயங்கள் உங்களை மிகப்பெரிய நிலைக்கு கொண்டு செல்ல உதவும், ஏனென்றால் நீங்கள் ஒவ்வொன்றின் மீதும் கொண்டிருந்த முழு நோக்கம், கவனம் மற்றும் தீவிரத்தின் வெளிப்பாடு ஆகியவற்றின் மீது கொண்டிருந்த அக்கறை இதற்கு உதவும்.

இந்த விஷயங்கள் அனைத்தையும் உங்களுக்குள்ளும் உங்களைச் சுற்றியும் சரியாக உணர்ந்து கொள்வதற்கு முன்பு, நீங்கள் செய்யக்கூடிய ஒரு எளிய, அடிப்படை விஷயம் இதுதான்: இது முக்கியம், இது முக்கியமல்ல என்று தீர்மானிக்காமல், நீங்கள் செய்யும் அனைத்தின் மீதும் ஒரே தீவிரத்தை வைக்க வேண்டும். கடவுள் உங்கள் முன் வந்தாலும் அதே தீவிரம், எறும்பு வந்தாலும் அதே ஈடுபாடு, கவனம் மற்றும் தீவிரத்தில் இருக்கவேண்டும். இதை நீங்கள் செய்தால், மற்ற அனைத்தும் தானாகவே வெளிப்படும்.

இப்போது மனிதர்களிடையே உள்ள மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், அவர்கள் “இது முக்கியம் - அது முக்கியமல்ல,” “இவர் நல்லவர் - இவர் கெட்டவர்,” “இது சரி - அது தவறு,” “இது கடவுள் - அது பிசாசு,” என்று நினைப்பதால், அவர்கள் பாதி உயிர் உள்ளவர்களாக மட்டுமே இருக்கிறார்கள். இது முக்கியம் இல்லை என்று அவர்கள் நினைப்பதால் பாதி நேரம் அதில் ஈடுபடுவதில்லை. நீங்கள் இப்போது சுவாசிக்கிறீர்கள், இது முக்கியமல்லவா? நீங்கள் அதை முழு ஈடுபாடு மற்றும் விழிப்புணர்வுடன் செய்ய வேண்டும். அப்படி நீங்கள் செய்யும்போது உங்களை ஒரு யோகி என்று அழைப்போம்.

ஒரு எளிய முறை:

தருணங்களை சரியாக கணிப்பது மிக முக்கியம். ஏனென்றால், உங்கள் வாழ்க்கைக்கான உங்கள் நேரமும், சக்தியும் வரம்பிற்குட்பட்ட வளங்கள்.

இது முக்கியமானது, இது முக்கியம் இல்லாதது என்று எதுவும் இல்லை. நீங்கள் உங்கள் நண்பரைப் பார்த்தாலும் அல்லது உங்களுக்குப் பிடிக்காத ஒருவரைப் பார்த்தாலும், நீங்கள் சமூக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றைச் செய்கிறீர்களோ இல்லையோ, இதை ஒரு வாழ்க்கை என்ற ரீதியில் பார்க்கும்போது, இது முக்கியமானது, இது முக்கியமற்றது என்ற பேச்சுக்கே இடம் இல்லை. நீங்கள் செய்யும் அனைத்து செயல்களும் முக்கியமானதுதான். உங்களுக்கு முக்கியம் இல்லாத செயல்களை நீங்கள் செய்யத்தேவையில்லை. உங்களுக்கு முக்கியம் இல்லாத ஒரு செயலை செய்ய உங்கள் வாழ்க்கையை எதற்கு முதலீடு செய்ய வேண்டும்? நீங்கள் ஒரு சிறுபிள்ளைத்தனமான செயலை செய்கிறீர்கள் என்று நான் நினைத்தால், அதைப் பற்றி நீங்கள் கவலைபடத் தேவையில்லை. ஏனென்றால், உங்களுக்கு அது முக்கியமானது. உங்களுக்கு இது முக்கியம் என்று தோன்றினால் மட்டும் இதில் உங்கள் வாழ்க்கையை முதலீடு செய்யுங்கள். இல்லையென்றால் எதற்கு? இதை நீங்கள் செய்யும்பொழுது சரியான தருணங்கள் உங்களுக்கு எளிதாக கிட்டும். இதற்கு கொஞ்சம் காலம் எடுக்கும், ஆனால் நீங்கள் அந்த சரியான தருணங்களை எட்டுவீர்கள், ஏனென்றால் அது மிகவும் முக்கியமானது.

நீங்கள் கிரிக்கெட் அல்லது கோல்ஃப் போன்ற விளையாட்டுகளை கவனிக்கும்போது அவர்கள் எப்போதும் பந்தை அடிக்கும் அந்தத் தருணத்தைப் பற்றி பேசுவதை பார்த்திருப்பீர்கள். அது அவர்கள் பலத்தைப் பற்றியது அல்ல. ஒரு நபர் பந்தை அடிக்க அதிக சக்தியை கொடுக்க வேண்டி வரும், சிலரோ ஒரு சிறிய சுழற்றில் பந்தை அந்த இடத்திற்கு செலுத்திவிடுவார்கள். இதுதான் சரியான தருணம். இது உங்கள் வாழ்க்கைக்கும் பொருந்தும். தருணங்களை சரியாக கணிப்பது மிக முக்கியம். ஏனென்றால், உங்கள் வாழ்க்கைக்கான உங்கள் நேரமும், சக்தியும் வரம்பிற்குட்பட்ட வளங்கள். எனவே, அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். முதலில் நீங்கள் செய்ய வேண்டியது உங்களை கவனிப்பதுதான். நீங்கள் தீவிரமான விழிப்புணர்வு நிலையில் இருக்கும்போதே, எந்த செயலையும் நீங்கள் செய்ய வேண்டும். நீங்கள் உங்களை ஆழமாக கவனிக்கத் துவங்கிய பின், எல்லா சமயங்களிலும் தீவிர விழிப்புணர்வு நிலையில் இருக்கவே தோன்றும்.