சமூக ஊடகங்கள் மூலம் கவனம் தேடுவது தவறா?

உங்கள் வாழ்க்கையைப் பற்றி சமூகஊடகங்களில் பதிவேற்றுவது தற்போது சுவாரஸ்யமாக இருந்தாலும், இன்று நீங்கள் பதிவேற்றும் விஷயம் பற்றி, 20 ஆண்டுகளுக்குப் பிறகு என்ன நினைப்பீர்கள்? இளைஞரும் உண்மையும் உரையாடலின்போது, நமது உணர்வுகளை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவது தவறா என்று ஒரு மாணவர் சத்குருவிடம் கேட்கிறார்.
Two girls having a cold drink and taking selfie | Is it Wrong to Seek Attention Through Social Media?
 

கேள்வி : சத்குரு ஒரு தலைமுறையாக நாங்கள் அனைவரின் கவனத்தையும் எங்களை நோக்கி ஈர்க்க விரும்புகிறோம். எங்களில் பெரும்பாலானவர்கள் இப்படித்தான் இருக்கிறோம். எங்கள் சந்தோஷம், துக்கம், இன்று என்ன செய்தோம், என்ன உணவு உண்டோம், யாரை சந்தித்தோம் ஆகியவை பற்றிய தகவல்களை வாட்ஸாப், முகநூல், ஸ்நாப்ச்சாட், இன்ஸ்டாகிராம், ஆகியவற்றில் பதிவேற்றுகிறோம். எங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு தேடுவதற்கும், நண்பரிடம் பேசுவதற்கும் பதிலாக, உலகம் முழுவதற்கும் எங்கள் கவலையை வெளிப்படுத்தவே பதிவேற்றுகிறோம். இப்படி நம்மை வெளிப்படுத்துவதும் சமூக ஊடகங்களில் கவனம் தேடுவதும் தவறா?

சத்குரு : இது சரியா தவறா என்பது பற்றியல்ல. ஆனால் உங்கள் வாழ்க்கையின் இந்த கட்டத்தில் நீங்கள் சரியானதை சொல்கிறீர்களா இல்லை தவறானதை சொல்கிறீர்களா என்பது ஒரு பொருட்டல்ல. இது சரியா தவறா என்றுகூட நாம் பார்க்க விரும்பவில்லை. ஆனால் இது உங்கள் சொந்த விஷயம். இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், குறிப்பாக டிஜிட்டல் ஊடகத்தில், இது வாழ்நாள் முழுக்க பதியப்பட்டுவிடும். உங்கள் முகநூலில் நீங்கள் அழித்துவிட்டாலும், வேறொருவர் வேறெங்கோ பதிந்து வைத்திருப்பார். உங்கள் வாழ்க்கையில் அது அவசியமில்லாத ஒரு காலகட்டத்தில் உங்களுக்குத் தடையாக நிற்கக்கூடும். ஆம். இன்று நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பது 10 வருடகாலத்தில் உங்களுக்கே தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடும்.

சமூக ஊடகங்கள் நம் வாழ்க்கையில் அபாரமான ஒரு கருவி. முன்பு எப்போதும் மனிதர்களுக்கு இந்த அளவு தொலைத்தொடர்பு சாத்தியமாக இருந்ததில்லை. ஆனால் நாம் எந்தவிதமான தகவல்களை பரிமாறிக் கொள்கிறோம்? இதுபற்றி இன்னும் சற்று சிந்தனை தேவை. கையில் ஐஸ்கிரீம் வைத்துக்கொண்டு இப்படியும் அப்படியும் நின்று செல்ஃபி எடுத்துக் கொள்கிறீர்கள். அது சரி தவறு என்று நான் சொல்லவில்லை - ஆனால் நம்பகமில்லாத் தன்மையை வெளிப்படுத்துகிறது. நாளை உங்கள் புகைப்படத்தைப் பார்த்து நீங்களே தர்மசங்கடமாகும் நிலை ஏற்படக்கூடும். அப்படி ஏற்படாது என்றால் பரவாயில்லை. நீங்கள் அப்படி செய்யவேண்டும், அல்லது செய்யக்கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால் இன்னும் சற்று சிந்தித்து செயல்படுவது உங்கள் வாழ்க்கை முழுக்க உங்களுக்கு துணை நிற்கும். ஏனென்றால் நீங்கள் இன்று செய்வது பிற்காலத்தில் உங்களுக்குத் தடையாக நிற்கக்கூடாது.

சத்குருவின் கருத்தாழமிக்க செய்தியை குருவாசகமாக உங்கள் மொபைலில் பெற்று, தினசரி உங்கள் நாளினை புதுத் தெளிவுடன் துவங்க சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1