மஹாபாரதம் தொடரின் மற்ற பகுதிகள்

கேள்வியாளர்: முன்னர் ஒருமுறை, தனியொருவராக இருந்த கிருஷ்ணரை சிறைபிடிக்க துரியோதனனும் கர்ணனும் இணைந்து முயற்சித்தும் தோல்வி அடைந்தார்கள். வர்கள் இருவரும் நினைத்துக் கொண்டிருப்பதைவிட தமது மேன்மை மகத்தானது என்பதை அவர் ஏற்கனவே வெளிக்காட்டி இருந்தார். அப்படி இருந்தும்,‌ "கிருஷ்ணன் வெறும் மாடு மேய்ப்பவன் தானே. அவனால் என்ன செய்துவிட முடியும்?" என்று துரியோதனனால் எப்படி பீஷ்மரிடம் அலட்சியமாக சொல்ல முடிந்தது?

சத்குரு: இது எப்படி இருக்கிறது என்றால், பாவஸ்பந்தனா அல்லது சம்யமா வகுப்புகளில் பங்கேற்ற பிறகு, "சத்குரு!!! நீங்கள் தான் எல்லாமும். நீங்கள் சிவனை விடவும் பெரியவர்" என்பது போன்ற தொனியில் மக்கள் பேசுவார்கள். ஆனால் 15 நாட்களோ, ஒரு மாதமோ, ஆறு மாதங்களோ அல்லது ஒரு வருடமோ கழிந்த பிறகு, இருப்பதிலேயே மிக மோசமான ஜந்து என்று அதில் சிலர் என்னை சொல்வார்கள். இதனால் எல்லாம் நாம் அதிர்ச்சி அடைவதில்லை, ஏனென்றால் இதுபோல நிறையவே பார்த்துவிட்டோம். நெருக்கமான உள் வட்டத்துக்குள் நீங்கள் அழைத்துச் சென்ற மக்களே இப்படி செய்யும்போது சற்று வலிக்கத்தான் செய்கிறது.

ஒருவேளை இதே வார்த்தைகளை அர்ஜுனன் சொல்லியிருந்தால், கிருஷ்ணர் அத்துடன் விடை பெற்றிருப்பார். துரியோதனன் அப்படி பேசியதில் கிருஷ்ணருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. துரியோதனிடம் இருந்து இதைத்தவிர வேறெதையும் அவர் எதிர்பார்க்கவில்லை. மக்கள் எல்லாவிதமாகவும் பேசுவார்கள். சில நேரங்களில், உங்கள் காலடியில் தவழ்ந்தபடி, உங்களை கடவுள் என்று சொன்ன அதே மனிதர்கள், ஏதோ ஒரு புள்ளியில் எதிர்மறையாகவும் திரும்பக்கூடும், அல்லது பரம எதிரியாகவும் மாறக்கூடும். அதனால், துரியோதனன், துச்சாதனன், கர்ணன் போன்றவர்கள் அந்த வார்த்தையை உச்சரிப்பது கிருஷ்ணருக்கு ஒரு பொருட்டில்லை - தன் வாழ்க்கையில், தன் செயலில் அவர் தொடர்ந்து ஈடுபடுகிறார். ஆனால் இதையே அர்ஜுனன் சொல்லியிருந்தால், அவர் கிளம்பியிருப்பார். அதற்கு மேல் அவர் தொடர்ந்து செயலில் இருக்கமாட்டார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இயற்கையின் இயல்பு அதுதான்: அது எப்போதும் உங்களை நகர்த்திக்கொண்டே இருக்கிறது. நீங்கள் வெறுமனே உங்களை சரியாக நிறுத்திக்கொண்டாலே போதும், நீங்கள் சரியான திசையில் நகர்வீர்கள். இதில், மிக மோசமான சூழ்நிலை என்றால், ஒருவேளை அது உங்களை வேறு எங்கும் அழைத்துச் செல்லாமல் அதே இடத்தில் தேங்கச் செய்துவிடலாம். ஒருவேளை அது ஒரு தண்ணீர் தேங்கி நிற்கும் இடமாக இருந்து, அதிலும் நீங்கள் தொடர்ந்து நீந்திக்கொண்டே இருக்கவேண்டும் என்றால் அது பெரும் அலுப்பாகத்தான் இருக்கும். ஆனால் இயற்கை உங்களை நகர்த்தி செல்கிறது; சரியான திசையில் நீங்கள் உங்களை நிலைகொள்வது மட்டுமே முக்கியம்.‌ பாண்டவர்கள் அவ்வளவுதான் செய்தார்கள். அவர்கள் தங்களை சரியாக நிலை நிறுத்தினார்கள், எனவே வாழ்க்கை ஒரு திசையில் அவர்களுக்கு நகர்ந்தது; கௌரவர்கள் வேறுவிதமாக தங்களை நிலை நிறுத்தினார்கள், அவர்கள் வாழ்க்கை வேறொரு திசையில் நகர்ந்தது. நீங்கள் எதனுடன் இணைந்திருக்கிறீர்கள் என்பதுதான் எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது.

துரோணாச்சாரியார் கொல்லப்பட்ட பிறகு அர்ஜுனனிடம் ஆவேசம் தாண்டவமாடியது, ஏனென்றால் அடுத்து கௌரவர் சேணையின் தளபதியாக நியமிக்கப்பட இருக்கும் கர்ணனை போர்க்களத்தில் கொல்லும் நாளுக்காக அர்ஜுனன் காத்துக்கொண்டிருந்தான். இவ்வளவு நாட்களாக கிருஷ்ணர் அர்ஜுனனிடம் ஒரு குழந்தைக்கு உற்சாகமூட்டுவது போல தன்னுடன் அமர வைத்து பேசி, சில நேரங்களில் உசுப்பேற்றியும் வைத்துக் கொண்டிருந்தார். ஆனால் இப்போது கிருஷ்ணர், "அர்ஜுனா, நீ மிகச்சிறந்த வில்லாளி அல்ல என்பது உனக்கே தெரியும். எந்த நாளாக இருந்தாலும், கண்ணைக் கட்டினால் கூட, கர்ணன் உன்னைவிட மிகச்சிறந்த வில்லாளியாக திகழ்வான்" என்றார். அதிர்ச்சி அடைந்தான் அர்ஜுனன், "கிருஷ்ணா, நீயா என்னிடம் இதை சொல்கிறாய்" என்றான். கிருஷ்ணர் அமைதியாக, "நான் உன்னிடம் உண்மையை சொல்கிறேன். நாளை அந்த மனிதனுடன் நீ போரிட இருக்கிறாய், எனவே நீ உண்மையை அறிந்துகொள்வது நல்லது" என்றார்.

"எந்த ஒரு நாளிலும், கர்ணன் உன்னைவிட சிறந்த வில்லாளி என்பதை நீ அறிந்திருக்க வேண்டும் என நான் விரும்பினேன். கர்ணனிடம், இந்திரனின் சக்தி ஆயுதம் மற்றும் சில அஸ்திரங்கள் இருக்கிறது. இந்திரன் கர்ணனின் கவசத்தையும் குண்டலங்களையும் தானமாக பெறாவிட்டால், அவனால் உன்னை தோற்கடித்து கொல்ல முடியும். கர்ணன் இந்திரனையே தோற்கடித்து கொல்லும் ஆற்றல் உள்ளவன். கவச குண்டலங்கள் இருக்கையில், இந்திரனை மட்டுமல்ல, என்னையும் தோற்கடித்துக் கொல்லக்கூடியவனாக கர்ணன் இருப்பான். உனக்காகவே கர்ணனிடம் இருந்து அவனது கவச குண்டலங்கள் அகற்றப்பட்டிருக்கிறது. இந்த நிலையிலும், நீ கர்ணனைவிட வலிமையானவன் என்று உன்னைப்பற்றி நினைத்துக்கொள்ளாதே - நீ அப்படிப்பட்ட வீரன் இல்லை. சக்தி ஆயுதம் தன் வசம் இருக்கும்வரை, சர்வ சாதாரணமாக கர்ணனால் உன்னை கொல்லமுடியும். 

அர்ஜுனன் முற்றிலுமாக மாயையில் இருந்து வெளியே வந்தான். இந்த பூமியிலேயே தானே மிகச் சிறந்த வீரன் எனும் ஒளி வட்டத்துடனேயே அர்ஜுனன் வலம் வந்து கொண்டிருந்தான். இப்போது "நிச்சயமாக நீ ஒரு மிகச்சிறந்த வில்லாளி இல்லை" என்று கிருஷ்ணரே நேரடியாக கூறிவிட்டார். குருஷேத்திர யுத்தம் முடிந்த பிறகு, எஞ்சியிருந்த சில பாண்டவர் வீரர்களுக்கு இந்த யுத்தத்தில் மிகச்சிறந்த வீரனாக திகழ்ந்தது யார் என்பதை அறியும் ஆர்வம் எழுந்தது. எனவே அவர்கள் கிருஷ்ணரிடம் சென்று, "இந்த யுத்தம் நடைபெற்ற 18 நாட்களில் பல்வேறு வீரதீர செயல்களும் நடந்திருக்கிறது. இதில் மிகச்சிறந்த வீரன் யார்?" என்று கேட்டார்கள். குறுஞ்சிரிப்புடன் கிருஷ்ணர், "நீங்கள் இதை ஏன் பார்பாரிக்கிடம் சென்று கேட்கக்கூடாது? நடந்த முழு யுத்தத்தையும் மலைச் சிகரத்தில் இருந்து முழுவதுமாக வேடிக்கை பார்த்தவன் அவன் தான். நான் பல சூழ்நிலைகளை சந்திக்க வேண்டி இருந்தது, எனவே போர்க்களத்தில் நடந்தவற்றில் எதையாவது நிச்சயமாக நான் தவறவிட்டிருப்பேன். பார்பாரிக்கிடம் சென்று கேளுங்கள்; அவனுக்கு தெரியும்" என்றார்.‌

பதினெட்டு நாட்கள் நடைபெற்ற முழு யுத்தத்தையும் பார்பாரிக்கின் தலை ஒரு மலை சிகரத்தில் இருந்தபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது உங்களுக்கு முன்னதாகவே தெரியும் தானே. எனவே அவர்கள் மலைச் சிகரத்தை அடைந்து பார்பாரிக்கிடம், "இந்த போரின் மிகச்சிறந்த வீரன் யார்? போரின் திசையை நிர்ணயம் செய்யக்கூடியவராக யார் திகழ்ந்தார்கள்?" என்று கேட்டார்கள். பார்பாரிக், "போரின் போக்கை அர்ஜுனனோ, கர்ணனோ, பீஷ்மரோ, துரோணாச்சாரியாரோ, அஸ்வத்தாமனோ,‌ திருஷ்டதியுமனோ, பாண்டவர்களோ அல்லது கௌரவர்களோ நிர்ணயம் செய்யவில்லை. மாய உருவெடுத்து வந்து போரின் போக்கை நிர்ணயம் செய்தது அந்த விஷ்ணுவே தான். சுதர்சன சக்கரமே அனைவரையும் வீழ்த்தியது, போரில் வெற்றியையும் நிர்ணயித்தது. இந்த சிகரத்தில் இருந்து நான் பார்த்த வரையில், யாரும் யாரையும் கொல்வதை நான் காணவில்லை. சுதர்சன சக்கரமே சுழன்று சுழன்று அனைவரையும் வீழ்த்தியது. அதை மட்டுமே நான் எங்கும் கண்டேன்." சற்று உயரமான இடத்திலிருந்து பார்வைக்கு கிடைத்த காட்சி இது.

இதன் குறியீடு என்னவென்றால், எந்த ஒரு சூழ்நிலையாக இருந்தாலும், சற்று உயரத்தில் இருந்து பார்த்தால், நீங்கள் அனைத்தையும் தெளிவாக பார்க்க முடியும். வாழ்க்கை சூழல்களின் மத்தியில் இருப்பவரை விட, எவர் ஒருவரால் சூழ்நிலையை சற்று வெளியே இருந்து பார்க்க முடிகிறதோ, அவரால் எப்போதுமே அனைத்தையும் தெளிவாக பார்க்க முடியும். எனவேதான் "உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே சாட்சியாக இருங்கள்" என்று சொல்கிறார்கள். நீங்கள் சற்று மேலே இருந்தால், அனைத்தையும் உங்களால் தெளிவாகப் பார்க்க முடியும். நீங்கள் அந்த சூழலுக்குள் இருந்தால், அந்த சூழ்நிலையால் நிகழும் சுழற்சிக்குள் நீங்கள் மிகச்சுலபமாக தொலைந்து போய்விட முடியும்.

தொடரும்...

மஹாபாரதம் தொடரின் மற்ற பகுதிகள்