மஹாபாரதம் பகுதி 55: ஜாதி அமைப்பு - துவக்கத்தில் இருந்தே பாரபட்சமாகவா இருந்தது?
தொன்று தொட்டு பாரதத்தில் நிலவி வரும் ஜாதி அமைப்பு உண்மையில் எதற்காக ஏற்படுத்தப்பட்டது? ஜாதியை அடிப்படையாகக் கொண்ட தர்மம் சரியா? - இதுபோன்ற அடிப்படையான கேள்விகளுக்கு பதிலளிக்கும் சத்குரு, இன்றைய நவீன சமுதாயத்திலும் பல்வேறு பிரிவினைகள் இருப்பதை சுட்டிக்காட்டி, ஜாதி அமைப்பு குறித்த தெளிவான பார்வையை நமக்கு வழங்குகிறார்.
கேள்வி : சத்குரு, முற்காலத்தில், வெவ்வேறு விதமான மக்களுக்கென தனித்த பிரிவுகள் இருந்தன. அவர்கள் பிராமணர்கள், ஷத்திரியர்கள் என்று குறிப்பிடப்பட்டார்கள். ஆனால் இன்றைய நவீன யுகத்தில் அந்த முறைகள் ஒழிக்கப்பட்டுவிட்டது. மஹாபாரதம் நிகழ்ந்த காலகட்டத்தில் பின்பற்றப்பட்ட மனுதர்ம முறையை இப்போது கடைபிடிப்பது சாத்தியமா? இன்றைய சமுதாயத்திற்கு அது பொருந்துமா?
சத்குரு: பழைய ஜாதி அமைப்பின் அதிகாரம் இப்போது வலுவிழந்துவிட்டது, ஆனால் புதுவிதமான ஒரு ஜாதி அமைப்பு இன்று நிலவுகிறது. இன்றைய உலகத்தை பொருளாதாரம் எனும் விசை செலுத்திக் கொண்டிருக்கிறது - நீங்கள் எந்த பிரிவு அல்லது எந்த ஜாதியை சேர்ந்தவர் என்பது உங்களிடம் உள்ள பணத்தின் மதிப்பைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. பாட்டாளி வர்க்கம், முதலாளி வர்க்கம் என்று காரல் மார்க்ஸ் குறிப்பிடுவதும் ஒரு வகையான ஜாதி அமைப்பைதான். ஏனெனில் இன்றைய உலகம் பொருளாதாரம் எனும் விசையால் செலுத்தப்பட்டு, பொருளாதாரமே அனைத்தையும் நிர்ணயிப்பதாக இருக்கிறது.
இன்று உலகில் யாருமே வேறு எந்த ஒரு தத்துவத்தையோ, கொள்கையையோ பின்பற்ற முனைவதில்லை. பொருளாதாரத்தையே ஏதோ ஒருவிதமான தத்துவம் போல மக்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். உங்களிடம் இருக்கும் பணத்தை எப்படி எண்ணுவது என்பதே வாழ்க்கையின் தத்துவமாகிவிட்டது. செய்தித்தாள்கள், பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் முன்னிலைப்படுத்தப்படும் அம்சங்கள் கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் எப்படி மாறியிருக்கிறது என்பதை நீங்களே பார்க்கலாம்: பொருளாதாரத்தைத் தவிர வேறு எதைப் பற்றியும் இன்று பேச்சே இல்லை. இதுதான் முதலாளித்துவ வாழ்க்கை முறை. இது செல்வச்செழிப்பைக் கொண்டுவருவது போல் தோற்றமளிக்கும், ஆரம்பத்தில் அப்படியே நடக்கவும் செய்கிறது. ஆனால் நாம் அதை சற்று மட்டுப்படுத்தாவிட்டால், நாம் பேரழிவை நோக்கிச் செல்கிறோம்.
Subscribe
ஒரு கட்டத்தில், கிருஷ்ணர் ஷத்திரியர்களைப் பற்றி குறிப்பிடும்போது, ஒன்று நீங்கள் அவர்களிடம் தன்னிலை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும், அல்லது அவர்களின் வம்சத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று பேசுகிறார். கிருஷ்ணர் பூமித்தாயை ஒரு பசுவுக்கு இணையாக ஒப்பிட்டு பேசுகிறார். பூமித்தாயை கிருஷ்ணர் பசுவுடன் ஒப்பிடக் காரணம், அவர் ஆயர்குடி சமுதாயத்திலிருந்து வருபவர். அங்கே உயிர் பிழைத்திருப்பதைக் கட்டியம் கூறும் அடையாளமாக பசு கருதப்படுகிறது. உங்கள் வீட்டில் ஒரு பசு இருந்தால் உங்கள் குழந்தைகள் இறக்கமாட்டார்கள் - இதுவே அன்றைய காலகட்டத்தில் மிக எளிமையான ஞானமாக இருந்தது. பசுவிற்கு வலி ஏற்படும் அளவிற்கு அதன் மடியிலிருந்து ஷத்திரியர்கள் கறக்கிறார்கள் என்கிறார் கிருஷ்ணர்.
இன்று இந்த விஷயங்கள் எல்லாமே மொத்தமாக காணாமல் போய்விட்டது. ஒருவேளை நீங்கள் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் ஒரு கிராமத்தில் வாழ்ந்திருந்தால் இதை பார்த்திருப்பீர்கள்: ஒருவர் பசுவிடமிருந்து பாலை கறப்பதற்கு முன்பாக, முதலில் அந்த பசுவின் கன்றை சிறிதளவு அருந்தவிட்ட பிறகே பசுவிடமிருந்து பால் கறப்பார், இறுதியிலும் அந்த கன்றுக்கென சிறிதளவு பாலை மீதம் விடுவார். இவர் பால் கறந்து முடித்த பிறகு, கன்றுக்குட்டி மீண்டும் தன் தாயிடம் சென்று பால் அருந்தும். இன்று, உங்களிடம் இருக்கும் ஒரு இயந்திரம் பசுவிடமிருந்து மொத்தத்தையும் உறிஞ்சிவிடுகிறது. ஒருவேளை அந்த பசுவிற்கு காளைக் கன்று பிறந்தால், அது உடனே கொல்லப்படுகிறது; அதுவே கிடாரிக் கன்றாக இருந்தால், அது தனியாக வேறொரு இடத்தில் வளர்க்கப்படுகிறது. நாம் பசுவிற்கு மட்டும் வலி ஏற்படும்படி கறக்கவில்லை, பூமிதாய்க்கும் வலிக்கும் அளவுக்கு கறக்கிறோம்.
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் போல் கிருஷ்ணர் பேசியிருக்கிறார், "அவர்கள் அளவுக்கு அதிகமாக கறக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், இன்னும் எவ்வளவு கறக்கலாம் என்று தான் பார்ப்பார்கள். நாம் அவர்களிடம் தன்னிலை மாற்றம் ஏற்படுத்தி அவர்களை ஆன்மீகப் பாதையில் திருப்ப வேண்டும், அல்லது அவர்கள் கொல்லப்பட வேண்டும்" என்கிறார். இப்போது நம்மால் கிருஷ்ணர் பேசியதைப் போல் ஒரு தத்துவத்தை முன்வைக்க முடியாது, ஆனால், எப்படியும் அதுதான் நிகழப்போகிறது.
ஒன்று, உங்களை நீங்களே மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது நீங்கள் கொல்லப்படுவீர்கள் - கிருஷ்ணரால் அல்ல, இயற்கையால். இது ஏதோ உங்களுக்கு வழங்கப்படும் தண்டனை என்று அர்த்தமில்லை; இது பயணிக்கும் திசையை சீர்செய்வது மட்டுமே. இதை நீங்களே விழிப்புணர்வாக நடத்திக்கொள்ள முடியும், அல்லது கொடூரமான முறையில் இது உங்களுக்கு நிகழ்த்தப்படும். மனிதகுலத்திற்கு நிச்சயமாக இப்படி நேரத்தான் போகிறது. விழிப்புணர்வோடு நாமாகவே நம்மை சரிசெய்துகொள்ள முடியும் அல்லது கொடூரமான முறையில் அது நமக்கு நிகழும். அன்று கிருஷ்ணர் முதலில் அவர்களிடம் தன்னிலை மாற்றம் கொண்டுவர முயற்சி செய்ய முடிவெடுத்தார். அது வேலை செய்யவில்லை என்றால், அடுத்து கொடூரமான செயலை நிகழ்த்துவது - குருஷேத்திரத்தில் நிகழ்ந்தது அதுதான்.
ஒரு சமுதாயத்தில், ஒருவரின் தனித்திறனையோ அல்லது ஆற்றலையோ அடிப்படையாகக் கொண்டு மக்களைப் பிரிக்கும் வர்ணாசிரம தர்மம் இன்றும் நடைமுறையில் இருக்கிறதா? இந்த உலகமே அவரவரது திறனின் அடிப்படையில் பிரிந்திருக்கிறதுதானே? நீங்கள் அதை விரும்பினாலும் விரும்பவில்லை என்றாலும் உலகம் ஏற்கனவே பிரிவுகளாகத்தான் இருக்கிறது. என்ன, அத்தகைய பிரிவினைகளை சற்று லேசானதாகவும், ஊடுருவக்கூடியதாகவும் வைத்திருக்கிறோம். அன்றும் கூட, அனைவரும் கூடியிருந்த சபையில் துரியோதனன் எழுந்து நின்று, "ஒரு மனிதன் மூன்று வழிகளில் அரசனாக முடியும். பிறப்பால் மட்டுமே ஒருவன் அரசனாக நிர்ணயிக்கப்படுவதில்லை" என்று பேசியிருக்கிறான். வியாசர், கிருஷ்ணர் என இருவருமே, பிறப்பால் மட்டுமே ஒருவன் பிராமணன் ஆகிவிடுவதில்லை, தமது ஞானத்தாலேயே ஒருவன் பிராமணன் ஆகிறான் என்று பேசியிருக்கிறார்கள்.
இன்றும் கூட, நீங்கள் இதே முறையை அளவீடாக பின்பற்றினால், இந்த உலகில் இன்றும் பிராமணர்கள், ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் இருக்கிறார்கள் தானே? ஜாதி அமைப்பை நாம் வேறுவிதமாகவும் பார்க்க முடியும். உங்கள் பொறுப்புணர்வு என்பது உங்களது தனிப்பட்ட நலனை மட்டும் முன்னிருத்துவதாக, வேறு யாரையும் இணைத்துக் கொள்வதாக இல்லையென்றால், உங்கள் நல்வாழ்வில் மட்டுமே நீங்கள் அக்கறை செலுத்துகிறீர்கள் என்றால், அப்போது உங்களை சூத்திரன் என்று நாம் அழைக்கிறோம். உங்களது நல்வாழ்வு, உங்கள் குடும்பம் மற்றும் உங்களைச் சார்ந்த சமுதாய மக்களின் நல்வாழ்வில் மட்டுமே உங்களது ஆர்வம் இருந்தால் அப்போது உங்களை வைசியர் என்கிறோம். உங்கள் தேசத்தின் நல்வாழ்வில் நீங்கள் ஆர்வம் கொண்டிருந்தால், உங்களை ஷத்திரியன் என்கிறோம். இந்த பூமியில் உள்ள எல்லா உயிர்களின் நல்வாழ்விலும் நீங்கள் அக்கறை செலுத்துகிறீர்கள் என்றால் அப்போது உங்களை பிராமணர் என அழைப்போம். இப்படித்தான் அன்று சமுதாயம் பிரிக்கப்பட்டிருந்தது.
இந்த பிரிவினைகள் ஒரு சௌகரியத்திற்காகவும், மனித ஆற்றலை முறையாக பயன்படுத்திக் கொள்ளவும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் காலப்போக்கில் எல்லா வித்தியாசங்களும் பாரபட்சமாக பார்க்கப்படுவதால் அசிங்கமாக மாறிவிடுகிறது. உங்களால் ஜாதி அமைப்பை முற்றிலுமாக ஒழித்துவிட முடியாது. நீங்கள் ஒருவகையான ஜாதி அமைப்பை ஒழித்தால், அது மீண்டும் வேறு ஒரு ரூபத்தில் வரும். நாம் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்க வேண்டும், சமத்துவத்தை அல்ல. அனைவரும் சமம், சமத்துவம் என்று நீங்கள் பேசும்போது ஒட்டுமொத்த உலகத்தையும் ஒரே பிரிவில் அடைக்கிறீர்கள் - இதுதான் மனித குலத்திற்கு நீங்கள் இழைக்கக்கூடிய மிகப்பெரும் அநீதி. இரண்டு மனிதர்கள் ஒருபோதும் சமமாக இருக்கமாட்டார்கள், இயற்கையாகவே அவர்களால் சமமாக முடியாது. ஆனால் ஒவ்வொரு மனிதருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்கப்பெற வேண்டும்.
தொடரும்...
ஆசிரியர் குறிப்பு: கோவை ஈஷா யோக மையத்தில் கடந்த 2012ம் ஆண்டு மஹாசிவராத்திரியின் போது, சத்குரு விவரிக்க, நடன நாட்டிய நிகழ்ச்சி வடிவில் நடைபெற்ற மஹாபாரதப் பெருங்கதையின் கட்டுரை வடிவமாக இந்த தொடர் மலர்கிறது. காலத்தை வென்ற இந்த பெருங்காவியத்தின் பல்வேறு கதாப்பாத்திரங்கள் மற்றும் கதைகளின் ஊடே நம்மை மறைஞான தேடலுக்கு அழைத்துச் செல்கிறார் சத்குரு.