மஹாபாரதம் பகுதி 38: பீமனுக்கு பணிவை பாடமெடுக்கும் ஹனுமன்
பாண்டவர்களின் 12 வருட வனவாசம் முடிவை நெருங்குகிறது. போர் வரும் என்பதை உணர்ந்த அர்ஜுனன் தவத்தில் ஈடுபட்டு தேவையான அஸ்திரங்களைப் பெறுவதற்காக இமாலயம் செல்கிறான். தங்களைப் பிரிந்து நீண்ட காலமாகியும் தகவல் ஏதும் இல்லாததால் அர்ஜுனனை தேடிக்கொண்டு இமாலயத்தின் அடிவாரமான பத்ரிநாத் வரை வருகிறார்கள் பாண்டவர்கள். அங்கு, பீமனின் பெரும் குறையாக இருந்த கர்வத்தை களைவதற்காக ஒரு சோதனை நடத்தி பாடம் புகட்டுகிறார் ஹனுமன்.
இதுவரை: பாண்டவர்களுக்கு வழங்கப்பட்ட வனவாசத்தை ஏற்க மறுத்து, ஹஸ்தினாபுரம் மீது யுதிஷ்டிரனை போர் தொடுக்கத் தூண்டும் திரௌபதியின் முயற்சி தோல்வியடைகிறது. சிவனை நோக்கி தவம் செய்து பசுபதாஸ்திரம் பெறும் முயற்சியில் வெற்றியடைகிறான் அர்ஜூனன். விசித்திரமான ஒரு சம்பவம் நிகழ, நபும்சகனாக மாறும் சாபம் அர்ஜூனனை வந்தடைகிறது.
Subscribe
ஒருநாள் திரௌபதியும் பீமனும் அங்கிருந்த அழகான காட்டுப் பகுதியில் நடைப்பயணம் சென்றார்கள். அங்கே சௌகந்திக மலரைப் பார்த்தாள் திரௌபதி. இதை பிரம்ம கமலம் என்றும் அழைப்பார்கள். இமயமலைப் பகுதியில் மலையேற்றம் சென்றிருந்தால், நீங்களும் இதைப் பார்த்திருக்கலாம். இந்த மலரை காயவைத்து நீண்ட நாட்களுக்கு பாதுகாத்து வைக்க முடியும். இதற்கு முன் இப்படி ஒரு மலரை திரௌபதி பார்த்ததே இல்லை. முதன்முறையாக இந்த பூக்களைப் பார்த்த உற்சாகத்தில் சில மலர்களை பறித்துக்கொண்டாள். இன்னும் சற்று தொலைவில் இன்னும் நிறைய பூக்கள் இருந்தது, ஆனால் ஏற்கனவே மாலை மங்கிக் கொண்டிருந்ததால் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு திரும்பினார்கள். அடுத்த நாள், திரௌபதிக்காக மலர்களைப் பறித்துக் கொண்டு வர கிளம்பினான் பீமன். உற்சாக மிகுதியில் கானகத்தின் உள்ளே நீண்ட தூரம் சென்று விட்டான். அங்கே அவன் வாழ்வில் முக்கியமான ஒரு சம்பவம் நிகழ காத்திருந்தது.
இந்தியக் கதைகளில், "காட்டிற்குள் செல்வது" என்பது கற்றுக் கொள்வதற்காக நீங்கள் ஒரு இடத்துக்குச் செல்கிறீர்கள் என்பதை குறிக்கும் உவமையாகவே இருக்கிறது. ஒரு நகரத்திலோ அல்லது பல்கலைக்கழகத்திலோ நீங்கள் எதைக் கற்றுக்கொள்ள முடியாதோ, அதை நீங்கள் கானகத்தில் கற்கிறீர்கள். ராமாயணம், மஹாபாரதம் அல்லது வேறு எங்கேயுமே, "காட்டிற்குள் செல்வது" என்பது தொடரும் ஒரு மையக்கருவாக - நீங்கள் வாழ்வின் வழிகளை கற்றுக் கொள்வதற்கான இடமாக இருக்கிறது. காட்டுக்குள் நடந்து சென்று கொண்டிருந்த பீமன், வழியில் ஒரு வயதான குரங்கைப் பார்த்தான். அதனுடைய வால் மிக அசாதாரண நீளத்துடன் இருந்ததுடன், பீமன் செல்ல வேண்டிய பாதையை மறித்தார்போல் குறுக்கே கிடந்தது. பீமன் இப்போது மிக பெருமைசாலியாக மாறியிருந்தான். தன் வழியில் எதிர்ப்படுபவர்கள் அனைவரும் தனக்கு வழிவிட்டு ஒதுங்கிச் செல்ல வேண்டும் என எதிர்பார்த்தான். அதோடு, இந்த பன்னிரண்டு வருட வனவாச வாழ்க்கையும், இதுவரை அவர்கள் கடந்து வந்திருந்த அவமானங்களும் சேரவே, கோபக்காரனாகவும் மாறியிருந்தான். முன்பு, எப்போதும் உற்சாகமாக, எல்லோரிடமும் தன் குறும்புத்தனத்தை வெளிப்படுத்தியபடி ஆனந்தமாக வலம் வந்து கொண்டிருந்த பீமன், இப்போது கோபம் கொப்பளிக்கும் மனிதனாக மாறியிருந்தான். பெருமையும் - கோபமும் ஒன்றாக சேரும்போது அது உங்களை முட்டாள் ஆக்குகிறது - இது மற்றவர்களுக்கும் அபாயகரமானது, தனக்குத்தானேவும் அபாயம் விளைவித்துக்கொள்ளக் கூடியது.
காட்டுக்குள் நடந்து சென்று கொண்டிருந்த பீமன், வழிமறித்தார் போல் குறுக்காக கிடந்த குரங்கின் வாலை பார்த்ததும் தன்னை அது அவமதிப்பது போல உணர்ந்தான். இந்த குரங்கு தன் வழியில் எதற்கு வாலை நீட்டி வைத்திருக்கிறது என்று நினைத்தவன், "ஏய் குரங்கே!! வாலை எடு" என்றான். இந்தியாவில், மக்கள் பொதுவாக எப்போதுமே இன்னொரு மனிதர் கால் நீட்டி அமர்ந்திருக்கும்போது, அவரது கால்களைக்கூட தாண்டிச்செல்ல மாட்டார்கள். அது அமங்கலமாக கருதப்படுவது மட்டுமல்லாமல், அதற்கு உண்மையான வேறு காரணங்களும் இருக்கிறது. எனவே பீமன், "உன் வாலை எடு; வழி விடு - நான் செல்லவேண்டும்" என்றான். அதற்கு அந்த குரங்கு, "எனக்கு மிகவும் வயதாகிவிட்டது, என் வாலை நகர்த்த என்னிடம் போதுமான பலம் இல்லை. எனக்காக நீ ஏன் அதை செய்யக்கூடாது" என்று கேட்டது. சரி என்று பீமனும் அதன் வாலை நகர்த்த முயற்சித்தான், ஆனால் அவனால் முடியவில்லை. தன் வலிமை மீது அபார பெருமையோடு இருந்தான் பீமன். எப்போதுமே உடற்பயிற்சி செய்து தன்னை வலிமையோடு கட்டுக்கோப்பாக வைத்திருக்க பெரும் கவனம் செலுத்தியிருந்தான். இந்த பூமியிலேயே மிகவும் பலசாலி என்றும் தன்னைப்பற்றி நினைத்துக் கொண்டிருந்தான். சிறு வயதில் நாகலோகத்தில் நாகபாஷாணம் அருந்தியது என பலவும் சேர்ந்து அப்படி ஒரு எண்ணம் அவனுக்கு வந்திருந்தது. ஆனால் இப்போது பார்த்தால் ஒரு வயதான குரங்கின் வாலை கூட நகர்த்த முடியவில்லை. இந்த அவமானத்தை அவனால் தாங்க முடியவில்லை. தன் இரு கைகளையும் பயன்படுத்தி, தன் பலம் அனைத்தையும் கொடுத்து நகர்த்த முயற்சித்தான், ஆனாலும் முடியவில்லை. பிறகு அந்த வயதான குரங்கின் முன் மண்டியிட்டு வணங்கி, "என்னால் இந்த வாலை நகர்த்தக்கூட முடியவில்லை; நீங்கள் சாதாரண குரங்கு அல்ல; யார் நீங்கள்?" என்று கேட்டான். ஹனுமன் தன்னைவெளிப்படுத்தினார்.
ஹனுமன் பீமனிடம், "உன்னிடம் எவ்வளவு பலம் இருந்தாலும், உன்னிடம் பணிவும், பக்தியும் இல்லை என்றால் நீ தோல்வியடைவாய்" என்றார். அர்ஜுனன் - பீமன் இருவருக்குமே இது ஒன்றுதான் குறையாக இருந்தது - அவர்களைப் பற்றிய மற்ற அனைத்தும் மிக நன்றாகவே இருந்தது, ஆனால் தாங்கள் யார் என்பதில் அவர்களுக்கு கொஞ்சம் கர்வம் இருந்தது. தங்களை யாராலும் வெல்ல முடியாது என்று அவர்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள். கிருஷ்ணர் எப்போதும் இதைதான் அவர்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார். போர்க்களம் என்று வந்துவிட்டால் நீங்கள் யார் என்பது ஒரு பொருட்டே இல்லை - உங்களுக்கு எதிர் பக்கம் நிற்கும் மனிதர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. அவர்களாலும் எல்லாமும் முடியும். எனவே மீண்டும் மீண்டும் அர்ஜுனனிடம், "எதிரியின் அம்புகள் மட்டும் உன்னைக் கொல்பவை அல்ல. உன்னுடைய கர்வத்தை நீ உதறாவிட்டால், ஒருநாள் அதுவே உன்னைக் கொன்றுவிடும் - நீ துரதிருஷ்டமான மரணத்தை சந்திக்க நேரிடும்" என்றார். இந்த இரண்டு பாடங்களும் - அர்ஜுனனுக்கு சிவனும், பீமனுக்கு ஹனுமனும் நடத்திய இந்த இரு சோதனைகளுமே அவர்களிடமிருந்த அவர்களது ஒரே குறையானது அகலும்படியாக அமைக்கப்பட்டிருந்தது. அவர்களைக் கொண்டு எதை நிகழ்த்த வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருந்ததோ, அதற்கு அவர்கள் இப்போது மிகத் தயாராக இருந்தார்கள்.
தொடரும்...