நகர பள்ளிகளில் இருந்து ஈஷா வித்யா தனித்து நிற்பது எதனால்?

இந்த தொடரில் ஈஷா வித்யா பள்ளிகளின் மூலம் வாழ்க்கையில் மாற்றம்கண்ட மாணவர்கள் மட்டுமல்லாது, ஆசிரியர்கள், பெற்றோர்கள், தன்னார்வத்தொண்டர்களின் பகிர்வுகளை தொடர்ந்து வழங்கவுள்ளோம். இந்த பதிவில் ஈஷா வித்யாவில் நிறைந்திருக்கும் ஆனந்தமான முகங்களுக்குப் பின்னாலுள்ள இரகசியம் என்ன என்பதை பகிர்கிறோம்.
 

புதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள் -பகுதி 3

இந்த தொடரில் ஈஷா வித்யா பள்ளிகளின் மூலம் வாழ்க்கையில் மாற்றம்கண்ட மாணவர்கள் மட்டுமல்லாது, ஆசிரியர்கள், பெற்றோர்கள், தன்னார்வத்தொண்டர்களின் பகிர்வுகளை தொடர்ந்து வழங்கவுள்ளோம். இந்த பதிவில் ஈஷா வித்யாவில் நிறைந்திருக்கும் ஆனந்தமான முகங்களுக்குப் பின்னாலுள்ள இரகசியம் என்ன என்பதை பகிர்கிறோம்.

பகுதி 1 2 4 5 6 7 8 9 10

நமது கல்வியின் நோக்கமானது, பொருளாதார எந்திரத்திற்கு உதிரிபாகங்கள் உற்பத்தி செய்வது என்ற நிலையிலிருந்து கடந்துசெல்ல வேண்டுமென்பதாகும். -சத்குரு

ஈஷா தன்னார்வத் தொண்டர் ஒருவரின் பகிர்வு:

ஈஷா வித்யா மாணவர்கள் முகங்களில் மிளிரும் ஆனந்தத்தின் ரகசியம்!

ஈஷா வித்யா பள்ளியில் கிராமப்புற ஏழைக் குழந்தைகள் மட்டுமல்லாமல், அதிக பொருட்செலவாகும் பிரபலமான பள்ளிகளில் படிக்க வசதியுள்ள மாணவர்களும் உடன் பயில்கிறார்கள். பள்ளிக்கு அருகாமையிலுள்ள குடும்பங்களிலிருந்து மட்டுமல்லாமல், 15-20 கி.மீ தொலைவிலுள்ள மாணவர்களும் இங்கு பயில்கிறார்கள். ஈஷா வித்யாவின் ஒட்டுமொத்த கல்வி வழிமுறைகள் தனிச்சிறப்பு மிக்கதாக இருப்பதோடு, ஒரு முன்னுதாரணமாகவும் அமைகின்றன.

ஏழைக் குழந்தைகளுடன் என் மகன் சமமாகப் படிப்பதாலேயே இந்த அற்புத மாற்றம்!

6-1-1-krishna

ஈரோடு நகரில் சிறந்த ஒரு சேட்டர்டு அக்கவுண்டன்ட் (chartered accountant) ஆன திரு.தேவி பிரசாத், தனது மகன் கிருஷ்ணாவை அவர் விரும்பும் எந்தவொரு பள்ளியிலும் படிக்கவைக்க வசதிபடைத்தவர். அவர் ஈஷா யோகா வகுப்புகள் எதிலும் கலந்துகொண்டதில்லை. ஆனால், ஈஷாவின் சமூகநல திட்டங்களின் தரத்தையும் சிறப்பையும் பார்த்து, அவர் தனது மகனை ஈஷா வித்யா பள்ளியில் சேர்ப்பதென முடிவெடுத்தார்.

தங்களது வீட்டிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளதோடு, ஒரு சிறிய அளவிலான அந்த பள்ளியில் கிருஷ்ணாவை சேர்ப்பது குறித்து தேவி பிரசாத்தின் நண்பர்களும் உறவினர்களும் கேள்வி எழுப்பினர். தற்போது கிருஷ்ணாவின் நடவடிக்கைகள் மற்றும் பழக்க வழக்கங்களைப் பார்த்த அக்கம்பக்கத்தார் தங்களது 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஈஷா வித்யாவில் சேர்த்துள்ளனர்.

“மன அழுத்தம் என்பது வாழ்வின் அங்கமாக அமையப்பெற்றுள்ள, பொருளாதாரத்தை மையமாக வைத்து இயங்கக்கூடிய இன்றைய சமூகத்தில், தரம்மிக்க ஒருங்கிணைந்த மற்றும் மகிழ்ச்சியான கற்றல் சூழலை கொண்ட ஈஷா வித்யா பள்ளிகள் நம்பிக்கை தருவதாய் உள்ளது. மிகவும் பின்தங்கிய குடும்பச் சூழலிலிருந்து வரும் குழந்தைகளுடன் சமமான நிலையில் பயிலும் கிருஷ்ணா தற்போது எளிமையாகவும், மரியாதை நிறைந்தவனாகவும், கனிவு நிறைந்தவனாகவும் மாறியுள்ளான். அனைத்திற்கும் மேலாக அவன் இயற்கை தனக்கு வழங்கியுள்ளவற்றை மதிப்பவனாக உள்ளான்.” தேவிபிரசாத் இப்படி பகிர்ந்துகொண்டார்.

அதிகாரம் செய்யும் குழந்தையாக இருந்தவள், அன்பும் பண்பும் மிக்கவளாக மாறினாள்!

7-1-3-dharsheeni

வேலைக்காரர்கள் முகத்தில் துணிகளை வீசியடித்த தர்ஷினி, தற்போது தன் வீட்டிற்குள் நுழையும் வேலைக்காரர்களை ‘நமஸ்காரம்’ என்றபடி புன்னகை பூத்த முகத்துடன் வரவேற்கிறாள். அதோடு மட்டுமல்லாமல், சிலநேரங்களில் வீட்டு வேலைகளிலும் அவ்வப்போது உதவியாக இருக்கிறாள். தர்ஷினி மற்றும் ஆகாஷ் ஆகியோரின் தாய் மாலா அவர்கள் கூறும்போது, “இந்த மாற்றமானது ஈஷா வித்யாவால் மட்டுமே சாத்தியமானது!” என்றார்.

ஒரு இராணுவ் அதிகாரியின் மனைவியான மாலா தனது மகள் தர்ஷினி 6ஆம் வகுப்பு மற்றும் மகன் ஆகாஷ் 3ஆம் வகுப்பு படிக்கும்போது புனே’யில் வசித்து வந்தார். இரண்டு குழந்தைகளுமே நவீனமயமான அந்த பள்ளியில் முன்னணி மாணவர்களாகத் திகழ்ந்தனர். ஆனால், ஒரு தாயாக தனது மகள் மரியாதை தெரியாதவளாக, மற்றவர்களுக்கு மதிப்பளிக்காதவளாக இருப்பது குறித்து கவலையுற்றார். அவருக்கு இதனை எப்படி சுட்டிக்காட்டுவது என்றும், எப்படி அவளை மாற்றுவது என்றும் தெரியவில்லை! வார்த்தைகளில் சொல்லிப் புரியவைத்தல் என்பது கடினமானது.

அவர்களது குடும்பம் ஈரோட்டிற்கு குடிபெயர்ந்த வேளையில், அவர் தனது குழந்தைகளை ஈஷா வித்யாவில் சேர்ப்பது என தீர்மானித்தார். சத்குருவின் மீது அவர் கொண்டிருக்கும் மிகுந்த நம்பிக்கையே இதற்கு காரணம். ஆனால், அவரோ அல்லது அவரது கணவரோ எந்தவித ஈஷா யோகா வகுப்பிலும் கலந்துகொண்டிருக்கவில்லை. இருப்பினும் அவரது கணவரை எப்படியோ சமாதானப்படுத்தினார். சுமார் 20கி.மீ. தூரத்தில் இருக்ககூடிய ஒரு சிறிய பள்ளியானாலும் தரமான கல்வியை வழங்கிவரும் பள்ளியான ஈஷா வித்யாவில் தனது குழந்தைகளைச் சேர்த்தார்.

“நானும் எனது கணவரும் நாங்கள் மேற்கொண்ட முடிவு குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எனது ஆகாஷ் ஆச்சரியப்படுத்தும் விதமாக பக்கத்துவீட்டு குழந்தைகளுடன் நட்பாகவும் அன்பாகவும் பழகுகிறான். தர்ஷினி (முன்பு ஒரு இளவரசியைப் போல அதிகாரம் செய்துவந்தவள்) அவளது சமநிலையான தன்மை, ஆனந்தமான மனநிலை மற்றும் அரவணைத்துச் செல்லும் மனப்பக்குவம் போன்ற பல நற்குணங்களால் அனைவரையும் கவர்கிறாள்.

அவளது 10ஆம் வகுப்பை முடித்த பிறகு தர்ஷினி தற்போது ஈரோட்டிலுள்ள ஒரு சிறந்த பள்ளியில் படித்து வருகிறாள். அந்த பள்ளியில் பாடத்திட்டம் சார்ந்த வகையில் திருப்தியாக இருக்கும்போதும், சுற்றுச்சூழல் மிகவும் மோசமாக உள்ளது. அங்கு படிக்கும் குழந்தைகளிடத்தில் நிறைய நடத்தை சார்ந்த பிரச்சனைகள் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. அதற்காக பெற்றோர்கள் அவ்வப்போது அழைக்கப்பட்டு அறிவுறுத்தப்படுகிறார்கள். அந்த மோசமான சூழலிலும் எனது மகள் குறித்த எந்த கவலையும் எனக்கில்லை. அவள் ஈஷா வித்யாவில் பெற்ற நற்பண்புகளும் அனுபவங்களும் பழக்கவழக்கங்களும் அவள் சமநிலையுடன் இருப்பதற்கு துணைநிற்கும்.” இப்படி மாலா பகிர்ந்துகொண்டார்.

தனது உடைகளை தானே துவைக்கும் பக்குவம்...

8-3-1-ayaama-and-children

அய்யம்மாள், பள்ளியில் சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளும் ஒரு தொழிலாளி. பள்ளிக்கு அருகாமையிலுள்ள அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவரது மகன் தனது பள்ளி சீருடையை தானே துவைக்கும் காட்சியைப் பார்த்தோம். அந்த பையனின் அக்கா பக்கத்திலுள்ள மைதானத்தில் விளையாடிக்கொண்டிருக்க, ஒரு ஆண்பிள்ளை துணிதுவைப்பதென்பது பொதுவாக கிராமப்புற இந்தியாவில் காணமுடியாத காட்சி. அதிலும் ஏழைக் கிராமப்புற குடும்பங்களில் ஆணாதிக்கம் என்பது மிக ஆழமாகவே வேரூன்றி இருக்கும். நமது ஆச்சரியம் நிறைந்த முகபாவங்களைப் பார்த்த அந்த அம்மா, “இன்று அவன் தனது சீருடையை மண்ணாக்கியதற்காக கொஞ்சம் திட்டினேன். அதற்கு அவன் இனி தினமும் தானே தனது சீருடையை துவைத்துக்கொள்வதாக சொல்லி எனது பணிச்சுமையைக் குறைத்துவிட்டான். இதன்மூலம் அவனது சட்டைகள் அழுக்கானாலும் அவன் விளையாடுவதை நிறுத்த தேவையில்லை” ஒரு சின்னங்சிறு குழந்தை தனது பிரச்சனைக்கு தானே தீர்வு தேடிக்கொண்டான்.

ஈஷா வித்யாவின் இதுபோன்ற ஆச்சரியப்படுத்தும் உண்மைகளையும் பின்னணிகளையும் அடுத்த பதிவில் காணலாம்!


ஆசிரியர் குறிப்பு:

“Innovating India’s Schooling” இந்த கல்வி மாநாடு ஈஷா வித்யா, ஈஷா ஹோம் ஸ்கூல் மற்றும் ஈஷா லீடர்ஷிப் அகாடமி ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டு நடத்தப்படுகிறது. குறிப்பிட்ட தனிநபர்கள், கல்வித்துறை சார்ந்த அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களைச் சார்ந்த சிந்தனையாளர்கள் போன்றோரை ஒன்றிணைத்து இந்த கலந்துரையாடல் நிகழவுள்ளது. தொடர்ச்சியாக நடைபெறும் உரைகள், விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் கல்வி குறித்த பொதுப்படையான பார்வைக் கோணத்தை மாற்றியமைப்பதாய் அமையும். கல்வி என்றால் அதிக வேலைசெய்யக் கூடிய திறம்படைத்த ஒரு மக்கள் கூட்டத்தை உருவாக்குவதற்கானது மட்டுமல்ல, கல்வி என்பது முழுமையான பொறுப்புமிக்க மற்றும் மகிழ்ச்சியான ஒரு சமுதாயத்தை வடிவமைப்பதற்கானது என்ற சிந்தனையை இது உருவாக்கும். இந்த நிகழ்ச்சி கிராமப்புற ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் ஈஷா வித்யாவின் பத்தாம் ஆண்டு கொண்டாட்டத்திற்கான அடையாளமாகவும் நிகழ்கிறது. மேலும் அறிய: ishavidhyaconference.com

#10YrsOfIshaVidhya