புதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள் -பகுதி 9

ஈஷா வித்யா மாணவர்கள் தங்கள் முதலாவது பொதுத்தேர்வை சந்தித்த விதமும், அவர்களுக்கு உறுதுணையாய் இருந்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் உதவியாளர்களின் அர்ப்பணிப்பும் இங்கே சில வரிகளில்...

பகுதி 1 2 3 4 5 6 7 8 10

கல்விக்கு தகவல்கள் மட்டும் போதாது, ஊக்கப்படுத்துதலும் தேவை. ஊக்கமடைந்த மனிதர்கள் மட்டுமே தங்கள் வாழ்விலும் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களது வாழ்விலும் மாற்றம் ஏற்படுத்த முடியும். -சத்குரு

ஈரோடு ஈஷா வித்யா மாணவர்கள் கடந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், அனைவரும் பெருமைகொள்ளும் விதமாக 92% சராசரி மதிப்பெண்களைப் பெற்று சாதித்துள்ளனர். இந்த வெற்றிக்குப் பின்னாலுள்ள அர்ப்பணிப்பு மிக்க செயல்களைப் பற்றி இங்கே சொல்கிறோம்!

நினைவை விட்டு நீங்காத 6 மாதங்கள்!

"அந்த நாட்கள் என்னுடைய வாழ்வின் பொன்னான நாட்கள்” -ஜோதிலிங்கம், ஈஷா வித்யா ஆசிரியர், மாணவர்களின் பொதுத் தேர்விற்காக அவர்களுடன் 6 மாதகாலம் பள்ளியிலேயே தங்கியிருந்த அனுபவத்தை பகிர்கிறார்.

இந்த ஆண்டு முதல்முறையாக 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஈஷா வித்யா மாணவர்கள் சந்தித்தனர். இந்த தேர்வு முடிவுகள்தான் ஈஷா வித்யா உண்மையிலேயே கல்வித்தரம் மிக்க தகுதிவாய்ந்த பள்ளியா என்பதை தீர்மானிக்கும் அளவுகோலாகும். இது பாடத்திட்டத்தில் மாணவர்கள் எந்த அளவில் பிரகாசிக்கிறார்கள் என்பதுபற்றி மட்டுமல்ல, ஈஷா வித்யாவின் புதுமையான கற்றல் வழிமுறையின் வெற்றியும் இதைப் பொறுத்தே பார்க்கப்படும். தேர்வு நெருங்கி வரும்வேளையில் நிர்வாகமும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் உதவியாளர்களும் மற்றும் நன்கொடையாளர்கள் என அனைவரிடத்திலும் சிறிது பதற்றத்தைக் காணமுடிந்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள தந்தை; குழந்தை பருவ சகோதரர்களோடு ஒன்றாக ஒரே அறைக்குள் வாழ்ந்து படிக்கும் நிலை; எந்நேரமும் டிவி ஓடிக்கொண்டிருக்கும் வீடுகள்; பாடப் படிப்பிற்கு உறுதுணையும் உற்சாகமும் வழங்காத குடும்ப பின்னணி மற்றும் சத்தான ஆகாரம் கிடைக்காத நிலை என பல்வேறு தடைகளுக்கு மத்தியில், 60% மாணவர்கள் இந்த தேர்வினை சந்திக்க வேண்டிய சூழல் இருந்தது. பல மாணவர்களுக்கு பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவுதான் ஒருநாளில் ஒரே சரியான உணவாக உள்ளது. இந்நிலையைக் கண்ட ஈஷா வித்யா நிர்வாகம் மாணவர்கள் தினமும் மாலையில் படிக்கும் நேரத்தை 6 மாத காலத்திற்கு நீட்டித்தது. இதன்மூலம் மாணவர்கள் பள்ளியில் தங்கிய படி பொதுத்தேர்விற்காக தயாரானார்கள். 30 மாணவர்களும் தங்கள் பொருளாதார பற்றாக்குறையான குடும்ப சூழலின் பொருட்டு இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டனர். பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்கள் என அனைவரும் இணைந்து, மாணவர்கள் எந்தவித மன அழுத்தமும் இன்றி படிப்பதற்காக இந்த சிறப்பு ஏற்பாட்டிற்கு உறுதுணையாய் இருந்தனர்.

அந்த ஆறு மாத காலத்திற்கு ஆசிரியர்கள் ஜோதிலிங்கம் மற்றும் சுந்தர் ஆகிய இரண்டு பேரும் வகுப்பு ஆசிரியர்களுடன் மாணவர்களுக்கு துணையாய் உடன் இருந்தனர். பெற்றோர்கள் சிலரும் மாணவர்களுக்கு துணையாகவும் மனதளவில் உற்சாகம் தரும் விதமாகவும் உடன் இருந்தனர். சில பெற்றோர்கள் பகல் நேரத்தில் தங்கள் குழந்தைகளைச் சந்தித்து, அனைவருக்கும் உணவு பரிமாறி நிர்வாகத்திற்கு துணையாய் இருந்தனர். உதவியாளர்கள் அனைவருக்கும் மூன்று வேளை உணவு சமைத்ததோடு, இடத்தை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்படி பார்த்துக்கொண்டனர்.

தினமும் யோகா, விளையாட்டுகள், ஆட்டம் பாட்டம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் என தங்களது கால அட்டவணை சரியாக வகுத்து குழந்தைகள் ஆனந்தமாக மன அழுத்தமின்றியும் இருக்குமாறு அமைக்கப்பட்டிருந்தது.

தேர்வும் முடிவுகளும்

பரபரப்பாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த பொதுத் தேர்வு நிகழ்ந்து முடிந்தும் விட்டது. அனைவரும் 100% தேர்ச்சிபெற்றனர். ஒட்டுமொத்தத்தில் மாணவர்களின் மதிப்பெண்கள் 92% எனும் பிரமாதமான இலக்கை எட்டியிருந்தது. ஈரோடு மாவட்டத்திலுள்ள 420 தனியார் பள்ளிகளின் தரவரிசையில் ஈஷா வித்யா பள்ளி 4வது இடத்தைப் பிடித்து சாதித்தது.

மாணவர்கள் சிலரின் பகிர்வுகள்

“நான் வீட்டில் இருக்கும்போது வார இறுதி நாட்களானாலும் என்னை எந்நேரமும் படிக்கச்சொல்லி என்னுடைய பெற்றோர்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இதனால் நான் அயற்சியாகும்போதெல்லாம் என்னுடைய பள்ளிக்கு சென்று என்னுடைய நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இருக்க விரும்புவேன்” -இராஜ ராஜேஸ்வரன்.

9-1-raja-raajeswaran_450x600

“அங்குள்ள சூழ்நிலை மிகவும் உற்சாகமளிப்பாதாகவும் மகிழ்ச்சி தருவதாகவும் இருக்கும். தங்கள் குழந்தைகளைப் பார்க்கவரும் பெற்றோர்கள் அவர்களுக்கு மட்டும் திண்பண்டங்கள் வாங்கிவராமல் 30 மாணவர்களுக்கும் சேர்த்தே வாங்கி வருவர்! பல பெற்றோர்கள் தங்கள் கைகளால் உணவு பரிமாறுவார்கள். எங்களில் யாருக்காவது உடல்நலக்குறைவு ஏற்பட்டால், உடனே ஆசிரியர்கள் வீட்டிற்கு அனுப்பிவைக்காமல், தாங்களே மருத்துவரிடம் கூட்டிச்சென்று, நாங்கள் குணமாகும்வரை ஒரு பெற்றோர் தரும் அக்கறைறையும் அன்பையும் வழங்குவார்கள்.

நாங்கள் பள்ளியில் ஒரு தாய் வயிற்று சகோதரர்களைப் போல ஒன்றாகப் படித்தோம். சிறப்பான மாணவர்கள் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு படிப்பில் உதவிசெய்து அவர்களை முன்னேற்றுவார்கள். தனிமையாக எண்ணும் மாணவர்களை குறும்புக்காரர்கள் சற்று தொந்தரவு செய்வார்கள், ஆரோக்கியமான மாணவர்கள் பலவீனமான மாணவர்களின் உடல்நலனில் அக்கறை கொள்வார்கள்... நாங்கள் அனைவரும் அனைத்தையும் பகிர்ந்தே கல்வி கற்றோம். உதவியாளர்களின் அன்பும் ஒத்துழைப்பும் அளவற்றதாக இருந்தது. அந்த முழு சூழலுமே அன்பு ஆனந்தம் ஆகியவற்றால் நிறைந்திருந்தது. அது ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்களின் உண்மையான அர்ப்பணிப்பாகும். இந்த ஆறுமாதங்கள் என் வாழ்வில் மறக்கமுடியாத தருணங்களாக வெகுகாலம் பதிந்திருக்கும்.” -பரத். S

9-2-barath_450x600

“கடந்த ஆண்டு, ஆறுமாத கால படிப்பு நேரத்தில் எங்களுக்கு தாய்மை உணர்வுடன் சமைத்து மகிழ்ச்சியான முகங்களுடன் எங்களுக்கு உணவு பரிமாறிய சமையல் உதவியாளர்களின் அன்பில் மூழ்கடிக்கப்பட்டோம். அவர்கள் காலை 5 மணிக்கு வந்து, இரவு 9 மணிக்கு தான் செல்வார்கள். அவர்கள் அதற்காக பெரிய அளவில் சம்பளம் ஏதும் வாங்குவதில்லை என்பதை பின்னாட்களில் அறிந்துகொண்டேன். இத்தகைய அற்புதமான மக்களுடன் இருப்பதற்கு நான் மிகவும் பாக்கியம் செய்துள்ளதாக கருதுகிறேன்.” -ஆனந்த். R

9-3-anand_450x600

உண்மையான விருது...

ஈஷா வித்யா பள்ளி முதல்வரிடம் வேறொரு பள்ளி ஆசிரியர் ஆர்வத்துடன் இப்படி கேட்டார், “அப்படியென்ன மாயம் ஈஷா வித்யாவில் நிகழ்கிறது?”

“ஒருமுறை சுஜாதா டீச்சருடன் ஈரோட்டிலுள்ள நந்தா கல்லூரியில் நிகழ்ந்த ஒரு சந்திப்பு கூட்டத்திற்கு சென்றிருந்தேன். அந்த கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்திலுள்ள பள்ளிகளின் முதல்வர்கள் பெரும்பாலானோர் கலந்துகொண்டனர். நான் அந்த அறைக்குள் நுழைந்ததும். 10ஆம் வகுப்பு முடித்த ஈஷா வித்யா மாணவர்கள் புதிதாய் சேர்ந்த பள்ளிகளின் முதல்வர்கள் இரண்டு பேர் என்னைச் சுழ்ந்துகொண்டு ஆர்வத்துடன் கேட்டனர், “ஈஷா வித்யாவில் அப்படியென்ன மாயம் நிகழ்கிறது?” ஈஷா வித்யா ஆசிரியர்களுடன் மாணவர்கள் கொண்டுள்ள பிணைப்பு எப்படி சிறப்பாக உள்ளது?”

மேலும் அவர்கள் ஈஷா வித்யாவிற்கு வருகை தந்து அங்குள்ள தன்மைகளைப் பார்த்து தங்களது பள்ளிகளிலும் அதனை செயல்படுத்த விரும்புவதாக தெரிவித்தனர். உண்மையில், ஈஷா வித்யா பள்ளி 100% தேர்ச்சியடைந்ததற்காக வழங்கப்படவிருந்த விருதை வாங்குவதற்காக நாங்கள் அங்கே சென்றிருந்தோம், ஆனால் நிஜமான விருது அவர்கள் எங்களிடம் வந்து கேட்டதுதான். -பள்ளி முதல்வர், ஈரோடு ஈஷா வித்யா

அடுத்துவரும் இறுதிப் பதிவில் கிரமாப்புற மனிதர்களின் நிலை குறித்த பொதுவான பார்வையை மாற்றியமைத்த காட்சிகள் குறித்து பார்க்கலாம்!

ஆசிரியர் குறிப்பு:

ஈஷா வித்யா பள்ளிகள் துவக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, "Innovating India's Schooling" என்ற தலைப்பில் நவம்பர் 5, 2016 அன்று கோவை ஈஷா யோக மையத்தில் தேசிய கல்வி மாநாடு நடைபெற்றது. சத்குரு, மாண்புமிகு மனித வளத்துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் மற்றும் கல்வித்துறையில் உள்ள பல முக்கிய ஆளுமைகள் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வு Live Blog செய்யப்பட்டது. அதன் தொகுப்பு இங்கே.

#10YrsOfIshaVidhya