புதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள் -பகுதி 7

ஏழ்மையில் படித்து பட்டம்பெற்று, ஈஷா வித்யா பள்ளி குழந்தைகளுக்காக ஆசிரியராய் தன் வாழ்வை அர்ப்பணித்து வரும் ஒரு மனிதரைப் பற்றி இங்கே பதிகிறோம். இவரைப் போன்றோரின் உறுதுணையால் ஈஷா வித்யா இன்னும் உயரும்!

பகுதி 1 2 3 4 5 8 9 10


வெறும் தகவல்களை மட்டும் ஒப்பிப்பதில் அல்ல, ஒவ்வொரு மாணவரும் ஊக்கமடைந்து, மலர்வதில்தான் ஒரு ஆசிரியரது தனிச்சிறப்பு உள்ளது. -சத்குரு

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கூரை வீட்டில் வாழ்ந்தாலும் கோபுரமாய் உயர்ந்தார்!

படிப்பறிவு இல்லாத குடும்ப பின்னணியில், மிகவும் ஏழ்மையான குடும்பத்தின் விவசாயக் கூலிகளின் மகனான ஜோதிலிங்கம் அவர்கள் சமூக அறிவியல் பாடத்தில் பி.ஏ பட்டம் பெற்று, M.Phil, B.Ed. ஆகிய படிப்புகளில் தேர்ச்சிபெற்றுள்ளது அவருக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொண்டதைக் காட்டுகிறது. அவரது தாய்-தந்தை மற்றும் இரண்டு சகோதரிகளும் விவசாயக் கூலிகளாக வேலைசெய்து அவரது படிப்பிற்கான பொருளாதார உதவியைச் செய்தனர்.

சிம்னி விளக்கு வெளிச்சத்தில் (மூன்று ஆண்டுகள் முன்புவரை அவரது வீட்டில் மின் இணைப்பு இல்லை!) படித்த ஜோதிலிங்கம் தன் பெற்றோர்கள் பெருமைப்படும் வகையில் பி.ஏ பட்டத்தில் முதல் தர மாணவராக தேர்ச்சி பெற்றார். அதன்பின்னர் அவர் மாநில அளவில் புகழ்பெற்ற பல்கலைக் கழகத்தில் இடம் கிடைக்கப்பெற்று, மேற்படிப்புகளை ஈரோட்டின் சிறந்த கல்லூரி ஒன்றில் கல்வி உதவித்தொகையின் மூலம் படித்துமுடித்தார்.

ஆசிரியர் பணியில் பேரார்வம் கொண்டார்!

தனது M.Phil, படிப்பை முடிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர், ஜோதிலிங்கம் தனக்கான வேலை ஒன்றைத் தீவிரமாக தேடிக்கொண்டிருந்தார். தங்கள் வீட்டிற்கு அருகேயுள்ள ஈஷா வித்யாவில் அவர் ஆசிரியராக சேர்ந்தார். பக்கத்திலேயே பள்ளி இருப்பதால் போக்குவரத்து செலவு இல்லாமல் போகும் எனவும் அவர் நினைத்திருக்கக்கூடும். குழந்தைகளுடன் இருப்பதை அவர் பெரிதும் விரும்புவார் என அவரது பெற்றோர் நம்மிடம் தெரிவித்தனர். அவரிடம் பெரிதாக கற்பிக்கும் திறன் இல்லை என்று அவர் எண்ணியபோதிலும், ஈஷா வித்யா ஆரம்ப பள்ளியிலுள்ள சின்னஞ்சிறு குட்டிதேவதைகள் அவருக்கு ஆனந்தத்தை வழங்கினர்.

விரைவிலேயே அவர் 9ஆம் வகுப்பிற்கு பாடம் எடுப்பதற்கான பணிவாய்ப்பை பெற்றார். கடந்த ஆண்டு, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சந்திப்பதற்கு தங்களை தயார்ப்படுத்தும் விதமாக, மாணவர்கள் 6 மாத காலம் பள்ளியில் படிப்பு நேரத்தை கூடுதலாக செலவழித்தனர். இதன்பொருட்டு எந்தவித கூடுதல் சம்பளமும் பெறாமல் ஜோதிலிங்கம் மாணவர்களின் பாதுகாப்பிற்காக அவர்களின் உடனிருந்து பார்த்துக்கொண்டார்.

மாணவர்களுக்கு முன்பாக பள்ளிக்கு வந்துவிடும் அவர் (சில நேரங்கள் காலை 3 மணிக்கு) மாணவர்கள் வீட்டிற்கு போனபிற்கு (சில நாட்களில் இரவு 11 மணிக்கு) செல்வார். மாணவர்கள் யாரேனும் உடல்நலம் பாதிக்கப்பட்டால் அவர்களை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதோடு, அவர்கள் சோர்வுறும்போது தனது பிரகாசமான புன்னகையாலும் அன்பான வார்த்தைகளாலும் அவர்களை உற்சாகம்கொள்ளச் செய்வார்; அவர்களுக்காக உணவு பரிமாறுவார்; அவர்களுடன் விளையாடுவார்; அவர்களுடன் யோகப் பயிற்சிகளையும் செய்வார்! மாணவர்கள் மகிழ்ச்சியாகவும் படிப்பில் ஆர்வத்துடன் இருப்பதற்கு என்னென்ன தேவையோ அத்தனையையும் ஜோதிலிங்கம் அவர்களுக்காக அன்புடனும் அக்கறையுடனும் பொறுமையுடனும் புரிதலுடனும் செய்தார். குழந்தைகளுடன் தனக்குள்ள தீவிரமான ஈடுபாட்டினாலும் பேரார்வத்தினாலும் பள்ளியில் மாணவர்களால் பெரிதும் விரும்பப்படும் ஆசிரியராக ஜோதிலிங்கம் திகழ்கிறார்.

இதயப்பூர்வமான பணியே இவருக்கு ஆனந்தம்!

அவரது பிரமாதமான கல்வியியல் பின்னணியும் அவரது அர்ப்பணிப்பு உணர்வும் மாணவர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் அபிமானமும் அவரைப் பற்றி கல்வித்துறை சார்ந்த வட்டாரத்தில் கவனிக்க வைக்கின்றன. இதனால் அவருக்கு மற்ற பள்ளிகளிலிருந்து கூடுதலான சம்பளத்தில் பணிவாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. ஆனாலும் அவற்றையெல்லாம் ஜோதிலிங்கம் ஏற்பதாய் இல்லை.

“பல்வேறு வித்தியாசமான பின்னணிகளிலிருந்து வரும் ஈஷா வித்யாவிலுள்ள உயிர்ப்பும் உற்சாகமும் மிக்க மாணவர்களுடன், அவர்களுக்காக ஒரு நல்ல கல்விக்கான வாய்ப்பை உருவாக்குவதில் எனது இதயம் பெரும் மகிழ்ச்சிகொள்கிறது.” - திரு. ஜோதிலிங்கம்

ஜோதிலிங்கம் தற்போதும் கூலிவேலை செய்யும் தனது வயதான பெற்றோர்களுடன் கூரை வீட்டில்தான் வசித்து வருகிறார். சமூகத்திற்காக பணியாற்றும் தனது மகனின் இந்த சேவைக்காக அவரது தந்தை மிகவும் பெருமைப்படுகிறார். அதே நேரத்தில் அவரது சகோதரியின் குழந்தைகள் ஈஷா வித்யாவில் படிப்பதோடு, சகோதரியின் கணவர் ஈஷா வித்யா பள்ளியில் செக்யூரிட்டி பணியாளராக உள்ளார். ஜோதிலிங்கத்தின் தாய் ஒருநாள் தன்மகன் ஒரு நல்ல வீடு கட்டி, அதன்மூலம் சிறப்பாக திருமணம் நடைபெற்று வளமுடன் வாழ்வார் என தனது ஆசையை தெரிவிக்கிறார். ஜோதிலிங்கத்திற்கு அதே ஆசை இருக்கிறதா என நமக்கு தெரியாது, ஆனால், அவர் தனக்கு இதயம் நிறைந்த ஒரு பணியைக் கண்டறிந்துவிட்டார் என்பது நமக்கு தெரியும்.

கூரை வீட்டில் வாழ்ந்தாலும் கோபுரமாய் உயர்ந்தார்!, Koorai veettil vazhnthalum koburamai uyarnthar

கூரை வீட்டில் வாழ்ந்தாலும் கோபுரமாய் உயர்ந்தார்!, Koorai veettil vazhnthalum koburamai uyarnthar

ஆசிரியர் குறிப்பு:

ஈஷா வித்யா பள்ளிகள் துவக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, "Innovating India's Schooling" என்ற தலைப்பில் நவம்பர் 5, 2016 அன்று கோவை ஈஷா யோக மையத்தில் தேசிய கல்வி மாநாடு நடைபெற்றது. சத்குரு, மாண்புமிகு மனித வளத்துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் மற்றும் கல்வித்துறையில் உள்ள பல முக்கிய ஆளுமைகள் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வு Live Blog செய்யப்பட்டது. அதன் தொகுப்பு இங்கே.

#10YrsOfIshaVidhya