புதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள் -பகுதி 5

ஈஷா வித்யாவில் ஆசிரியர்கள் மட்டுமல்லாது அங்கிருக்கும் உதவியாளர்கள், துப்புறவு பணியாளர்கள் என பலரும் தங்கள் மகத்தான பங்களிப்பை வழங்கி மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி பயில துணைநிற்கிறார்கள். இங்கே அப்படிப்பட்ட சிலரின் நெகிழவைக்கும் செயல்பாடுகள் பற்றி அறிந்துகொள்ளலாம்!

பகுதி 1 2 3 4 6 7 8 9 10

உண்மையிலேயே சமத்துவம் நிறைந்த ஒரு பள்ளியில் செக்யூரிட்டி வேலை பார்க்கும் பணியாளரின் குழந்தைகள் முதல் துப்புறவு தொழிலாளர்கள், ஆசிரியர்கள், பள்ளி முதல்வர் மற்றும் பள்ளிக்கு நிலம் வழங்கிய நன்கொடையாளர்களின் குழந்தைகள் வரை அனைவரும் ஒன்றாக, எந்தவித பாகுபாடுமின்றி பயிலும் ஒரு நிலை இருக்கும். அங்கு ஆனந்தமும் பரந்த மனப்பான்மையும் நிறைந்து இருக்கும்.

“துப்புரவு தொழிலாளியின் கைகளால் பூஜை ஏற்பாடுகள்!”

collage-1

சத்குரு ஞானோதயமடைந்த நாளான செப்டம்பர் 23ஆம் தேதியன்று நான் ஈஷா வித்யா பள்ளிக்குச் சென்றிருந்தேன். நான் பள்ளியில் நுழைந்ததும் குருபூஜை நிகழும் அறைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டேன். அங்கு பல அகல் விளக்குகள் அறைமுழுவதும் ஏற்றப்பட்டிருந்தன. புதிதாக அங்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்த மலர்கள் ரம்யமான ஒரு சூழலுடன்கூடிய ஒரு தெய்வீகத்தை அங்கு பரப்பியிருந்தன. அங்கு அர்ப்பணைகள் நிகழ்ந்த பின்னர், நான் தன்னை மறந்த ஒரு பரவசத்தில் நன்றியுணர்வு மிகுந்தநிலையில் இருந்தேன். அதன்பின்னர், அங்கு உதவியாளர்களாகப் பணிபுரியும் ஆயம்மாக்களை பற்றி தெரிந்துகொண்டேன்; கழிவறைகளையும் மற்ற பகுதிகளையும் சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளும் அவர்கள்தான் பூஜைகள் மற்றும் விழாக்கள் நிகழும் இந்த அறையையும் கையாள்கிறார்கள் என்பதை அறிந்தேன். அன்று அவர்கள் தங்களது நன்றியையும் மரியாதையும் வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு தோரணங்கள் மற்றும் அலங்காரங்களால் அந்த இடத்தை அழகுபடுத்தி ஜொலிக்கச்செய்திருந்தனர்.

ஈஷா வித்யா பள்ளியின் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் பள்ளியின் உதவியாளர்கள் செய்யும் சீரிய பணிகளால் சிறப்புற வடிவமைக்கப்படுகின்றன. அருகிலுள்ள குடியிருப்பிலிருந்து வரும் இந்த அய்யம்மாக்கள் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது மட்டுமல்லாமல், மதிய உணவு தயார் செய்வது மற்றும் வகுப்பறைகளை பாதுகாத்து பராமரிப்பது ஆகிய பணிகளையும் மேற்கொள்கிறார்கள். இவர்களின் குழந்தைகளும் கூட இதே பள்ளியில் பிற வசதிபடைத்த குடும்பங்களிலிருந்து வரும் குழந்தைகளுடன் ஒன்றாக எந்தவித பாகுபாடுமின்றி படிக்கிறார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பரிட்சை வரும் சமயத்தில் குழந்தைகள் தங்கள் ஆசிரியர்களிடம் ஆசி வாங்கும் முன்னதாக ஆயம்மாக்களிடம் ஆசி வாங்க செல்கிறார்கள். அந்த அளவிற்கு அவர்கள் பள்ளியின்மீது ஈடுபாடுகொண்டவர்களாக உள்ளனர். இவர்களில் இரண்டு ஆயம்மாக்கள் ஆறுமாதங்களாக அரசு பொதுத் தேர்விற்காக பள்ளியிலேயே தங்கிப்படிக்கும் சுமார் 30க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான மூன்றுவேளை உணவை சமைக்கிறார்கள். இந்த ஆறு மாதத்தில் இவர்களின் விடுமுறை நாட்களும் அடங்கும்.

“எனக்கு வாழ்க்கை தந்த ஈஷா!”

4-kumar-anna-security

“எனது உயிரை ஈஷாதான் காப்பாற்றியது!” ஈஷா வித்யாவின் செக்யூரிட்டி பணியாளர்களில் ஒருவரான திரு.குமார் இப்படி கூறுகிறார். ஒரு விபத்தில் ஏறத்தாழ மரணத்தின் வாயிலுக்குச் சென்ற இவர், ஈஷா தன்னார்வத் தொண்டர்களின் பரந்த மனங்களின் கருணையினால் காப்பாற்றப்பட்டார். ஈஷா வித்யாவில் தற்போது பயின்றுவரும் குமாரின் மூன்று குழந்தைகள் வேத ஸ்ருதி (10), தாரனிகா ஸ்ரீ (9) மற்றும் நிதர்ஷன் (8) ஆகியோர் ஈஷா வித்யா இல்லையென்றால் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பார்கள்.

“எனது குழந்தைகள் உங்களிடம் ஆங்கிலத்தில் பேசுவதைப் பார்த்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.” திலகா, குமாரின் மனைவி.

மதுவை மறந்து மாற்றம் கண்ட மனிதர்

untitled

57 வயதான சுப்ரமணி பல ஆண்டுகளாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, சரியாக சாப்பிடாமல் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டதோடு மனச்சோர்விற்கும் ஆளானார். சில சிபாரிசுகளின் அடிப்படையில், ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் இவரை ஈஷா வித்யாவில் பணிக்கு சேருமாறு வழிகாட்டினர். 2007ல் ஈஷா வித்யா பள்ளியில் செக்யூரிட்டி பணியாளராக சேர்ந்த இவர், அடுத்த ஒரு வருடத்திற்குள் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலன் மேம்படத் தொடங்கினார். தற்போது இவர் ஈடுபாடு மிகுந்த ஈஷா வித்யாவின் மதிக்கத்தக்க செக்யூரிட்டியாக உள்ளார். பள்ளிக்கு அருகிலேயே இவர் தனது குடும்பத்துடன் வசித்துவருகிறார்.

பொருளாதார அடிப்படையில் பாகுபாடு இங்கில்லை!

“முழுமையான கல்வி உதவித் தொகை பெற்று படிக்கும் கார்த்திக் எனது நெருங்கிய நண்பன். தனது தந்தையின் மரணத்தினால் மனச்சோர்விலிருந்த கார்த்திக்கிற்கு நான் ஆறுதல் சொல்லும்போதுதான் அவன் எனக்கு அறிமுகமானான். பொதுவாக எங்களுக்கு அடுத்தவரின் பொருளாதார பின்னணி குறித்த பார்வை எப்போதும் இருக்காது. ஈஷா வித்யா போன்ற பள்ளிகள் எப்படிப்பட்ட பொருளாதார பின்னணியுடன் கூடிய மாணவர்களானாலும் அவர்களை பாகுபாடின்றி ஒன்றாக பாவித்து, உறுதுணையோடு உயரச் செய்வதாக உள்ளன.” அரசு பள்ளி தலைமையாசிரியரின் மகனான ஜனார்தன் சமூகத்தின் பொருளாதார ஏற்றத்தாழ்வினால் உண்டாகும் சீர்கேடுகளைப் பற்றி கூறும்போது இப்படி பகிர்ந்துகொண்டான்.

“கார்த்திக் ஆங்கில இலக்கணத்தில் சற்று பின்தங்கியிருப்பதால், நானும் எனது தந்தையும் அவனுக்கு ஆங்கில இலக்கணத்திற்கான சிறப்பு பயிற்சியை தினமும் வழங்குவோம். இப்போது அவன் என்னை விட அதிக மதிப்பெண் வாங்குவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது” -ஜனார்தன்

பாதியில் விலகி ஈஷா வித்யாவில் மீண்டும் சேர்த்த பெற்றோர்கள்!

11ஆம் வகுப்பிற்கு ஈஷா வித்யா அனுமதி கிடைக்கப்பெறாத நிலையில் முதல்முறையாக 10ஆம் வகுப்பை கடந்த ஈஷா வித்யாவின் மாணவர் குழுவினர் வேறு பள்ளிகளில் சேர்ந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றதால் மாவட்டத்தின் தலைசிறந்த பள்ளிகளில் இடம் கிடைக்கப்பெற்றனர். ஈஷா வித்யாவிற்கு அனுமதி கிடைத்த பின்பு, அதிக கட்டணம் கட்டி பள்ளிகளில் சேர்ந்திருந்தாலும் சிலர் அந்த பள்ளிகளிலிருந்து பாதியிலேயே விலகி, மீண்டும் ஈஷா வித்யாவில் சேர்ந்துள்ளனர்.

“எங்கள் பள்ளி ஈஷா வித்யா!”

9-devi-prasad-with-his-familyjpg

கிருஷ்ணனின் தந்தையும் சாட்டர்டு அக்கவுண்டன்ட்டுமான திரு.தேவி பிரசாத் இப்படி சொல்கிறார். கிருஷ்ணா தற்போது ஈரோட்டிலுள்ள ஒரு சிறந்த பள்ளியில் பொருளாதார பிரிவைத் தேர்ந்தெடுத்து படித்துவருகிறான். தேவி பிரசாத் தனது மகன் கிருஷ்ணாவை ஈஷா வித்யா பள்ளிக்குச் சென்று, பள்ளி ஆசிரியர்களுடன் தனது பாடப் புத்தகங்களையும் பாடத்திட்ட வடிவங்களையும் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார். இதன்மூலம் அங்குள்ள மாணவர்கள் மேலும் சிறப்புறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும் என்பதற்காக!

தேவி பிரசாத் அடிக்கடி ஈஷா வித்யா பள்ளிக்குச் சென்று, வியாபாரம் மற்றும் கல்வியை இணைத்து செயல்படுவது எப்படி என்ற விதத்தில் அவரது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். இதற்காக அங்குள்ள ஆசிரியர்களையும் நிர்வாகத்தையும் அணுகி, அவரது ஆலோசனைகளை செயல்படுத்துவதற்கான ஊக்கத்தையும் வழங்குகிறார்.

ஈஷா வித்யா மாணவர்களுக்காக அரசுபள்ளி ஆசிரியர் வழங்கும் ஆங்கில வகுப்பு!

“நான் என் மகனை 11ஆம் வகுப்பிற்காக இன்னொரு பள்ளியில் அதிக கல்விக் கட்டணத்தை செலுத்தி சேர்த்திருந்தேன். ஆனால், ஈஷா வித்யாவில் மேல்நிலை வகுப்பிற்கான அரசு அனுமதி கிடைக்கப்பெற்றதை அறிந்தவுடன் எனது மகன் தான் மீண்டும் ஈஷா வித்யாவில் சேரவேண்டுமென அடம்பிடித்தான். நானும் அந்த கட்டணம் போனாலும் பரவாயில்லை என ஒத்துக்கொண்டேன்.” G.சந்திரசேகரன், அரசு மேல்நிலைப் பள்ளியின் முதல்வர், ஈரோடு. இவர் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்காக ஈஷா வித்யாவில் ஆங்கில பயிற்சிப் பட்டறைகளை அவ்வப்போது வழங்கிவருகிறார்.

வெற்றியின் கொண்டாட்டம்!!!

ஈஷா வித்யா மாணவர்கள் 10ஆம் வகுப்பில் சிறப்பான மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றதை அறிந்த கீழ்நிலை வகுப்புகளிலுள்ள மாணவர்களின் பெற்றோர்கள் பலர் இனிப்புகளை வாங்கிவந்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களோடு பகிர்ந்துகொண்டு வாழ்த்தி கொண்டாடினர். ஈஷா வித்யா பள்ளி முதல்வர் பூரிப்புடன் இதனை பகிர்ந்துகொண்டார்.

தன்னார்வத் தொண்டர்களின் உதவிகள்!

10-mala

ஆகாஷ் மற்றும் தர்ஷினி ஆகியோரின் பெற்றோரான மாலா மற்றும் ராமமூர்த்தி ஆகிய இருவரும் ஈஷா வித்யா பள்ளிக்கு வந்து அவ்வப்போது தன்னார்வத் தொண்டு புரிகிறார்கள். கடந்த ஆண்டு, தேர்வு நடைபெறும் காலங்களில் ஆறுமாதத்திற்கு உள்நிலை தேர்வுகளின்போது பெற்றோர்கள் பள்ளிகளில் இரவுமுழுவதும் தங்கும் நிலையில் மாலா அதற்குப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஈஷா வித்யாவின் தூண்களாக விளங்கும் ஆசிரியர்களின் பங்களிப்புகள் குறித்து அடுத்து வரும் பதிவில் காணலாம்!


ஆசிரியர் குறிப்பு:

“Innovating India’s Schooling” இந்த கல்வி மாநாடு ஈஷா வித்யா, ஈஷா ஹோம் ஸ்கூல் மற்றும் ஈஷா லீடர்ஷிப் அகாடமி ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டு நடத்தப்படுகிறது. குறிப்பிட்ட தனிநபர்கள், கல்வித்துறை சார்ந்த அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களைச் சார்ந்த சிந்தனையாளர்கள் போன்றோரை ஒன்றிணைத்து இந்த கலந்துரையாடல் நிகழவுள்ளது. தொடர்ச்சியாக நடைபெறும் உரைகள், விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் கல்வி குறித்த பொதுப்படையான பார்வைக் கோணத்தை மாற்றியமைப்பதாய் அமையும். கல்வி என்றால் அதிக வேலைசெய்யக் கூடிய திறம்படைத்த ஒரு மக்கள் கூட்டத்தை உருவாக்குவதற்கானது மட்டுமல்ல, கல்வி என்பது முழுமையான பொறுப்புமிக்க மற்றும் மகிழ்ச்சியான ஒரு சமுதாயத்தை வடிவமைப்பதற்கானது என்ற சிந்தனையை இது உருவாக்கும். இந்த நிகழ்ச்சி கிராமப்புற ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் ஈஷா வித்யாவின் பத்தாம் ஆண்டு கொண்டாட்டத்திற்கான அடையாளமாகவும் நிகழ்கிறது. மேலும் அறிய: ishavidhyaconference.com

#10YrsOfIshaVidhya