வெண்பூசணியை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது உடல் வெப்பத்தை வெல்வதற்கும், சிறப்பான சக்தியை உடலில் அனுபவிப்பதற்கும் ஒரு எளிய வழி! சாலடுகள், பழச்சாறுகள், பதார்த்தங்கள் மற்றும் இனிப்புகளுக்கும் கூட சுவைகூட்டுவதற்கு வெண்பூசணியைச் சேர்க்கலாம். நம்ப முடியாத வகையில் பல்வேறு பலன்களை வழங்கக்கூடிய வெண்பூசணிக் காய், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான ஒரு பெரும் பட்டியலைக் கொண்டுள்ளது. இந்த நன்மைகளைப் பற்றி மேலும் அறிக மற்றும் கீழே உள்ள ஏராளமான வெண்பூசணி பதார்த்தங்களையும் செய்து சுவைத்து அனுபவியுங்கள்.

வெண்பூசணி (Ash gourd in Tamil) என்றால் என்ன?

பெனின்கசா ஹிஸ்பிடா என்ற தாவரவியல் பெயர் கொண்ட வெண்பூசணிக் காய் (Ash gourd vegetable in tamil), பெரும்பாலும் இந்தியா மற்றும் சீனாவில் உண்ணப்படும் ஒரு தனித்துவமான பூசணிக்காய் வகை. இது பெரும்பாலும் சிறிய துண்டுகளாக வெட்டப்பட்டு ஆசிய சமையலில் சூப்களில் சேர்க்கப்படுகிறது. இருப்பினும், இந்திய யோகிகள் நீண்ட காலமாக வெள்ளைப் பூசணியை மிகவும் இயற்கையான உத்வேகம் தரும் உணவுகளில் ஒன்றாகக் கருதுகின்றனர். ஏனெனில், யோக விஞ்ஞானத்தில் “ப்ராணா” அல்லது பிரதான உயிர்சக்தி என்று குறிப்பிடுவதை வெண்பூசணி அதிக அளவில் கொண்டுள்ளது.

வெண்பூசணி பல்வேறு பொதுவான மற்றும் பிராந்திய பெயர்களால் அறியப்படுகிறது :

வெள்ளைப் பூசணி
விண்ட்டர் மெலன்
வேக்ஸ் கார்ட் (denotes one sub-type of ash gourd)
குஷ்மண்டா, ப்ரிஹட்பலா, க்ரினவஸா, கிரம்யகர்கட்டி, கர்க்காரு (சமஸ்கிருதம்)
பேத்தா, பேத்தக்கடு (ஹிந்தி)
டோரோபோட் (மணிப்பூரி)
கோஹ்லா (மராத்தி)
நீர் பூசணிக்காய் (தமிழ்)
கும்பளங்கா (மலையாளம்)
பூடிடா கும்மடிக்காயா (தெலுங்கு)
பூடெகும்பலக்காயி, பூடு கும்பலா (கன்னடம்)
கும்ரா, சல்கும்ரா (பெங்காலி)
கோம்ரா (அசாமிசி)

புறத்தோற்றம் (Ash Gourd Meaning in Tamil)

முதிர்ச்சியடையாத வெண்பூசணி மெல்லிய ரோமம் போன்ற அமைப்புகளால் சூழப்பட்டிருக்கும். இது வெண்பூசணி பழுக்கும்போது மறைந்துவிடும். வெளிப்புற நிறம் அடர் பச்சை நிறத்திலிருந்து வெளிர் சாம்பல் நிறம் வரை மாறுபடும். முதிர்ந்த வெண்பூசணிக்காயின் மேல் ஒரு தனித்துவமான வெள்ளை சாம்பல் சூழப்பட்டிருக்கும். இந்த சாம்பல் பூச்சினால் இந்த பூசணிக்காயிற்கு ஆங்கிலத்தில் 'ஆஷ் கார்டு' என்று குறிப்பிடுகின்றனர். வெண்பூசணியின் வடிவம் வட்டம் மற்றும் நீள்வட்டத்திற்கு இடையில் மாறுபடும்.

சுவை மற்றும் பயன்பாடு

வெண்பூசணியின் சுவை வெள்ளரிக்காய் போல மிகவும் மென்மையானது. பொதுவாக இதற்கு சொந்தமாக சுவை இல்லை, எனவே வெயில் அதிகமான நாட்களில் அனைத்து வகையான சாலடுகள், பழக்கூழ் மற்றும் பழச்சாறுகளில் சேர்த்துக்கொள்வது எளிது. குளிரான நாட்களில், வெண்பூசணியுடன் தேன் அல்லது கருப்பு மிளகு சேர்த்து பழத்தின் குளிரூட்டும் தன்மையை குறைத்து, அதேநேரத்தில் அதன் அடிப்படை சக்தியை தக்கவைத்துக் கொள்ளலாம். அதிகபட்ச உயிர் சக்தியைத் தக்கவைத்துக்கொள்ள, வெண்பூசணியை பச்சையாக சாப்பிட வேண்டும்.

வாங்குவதும் தேர்ந்தெடுப்பதும்

இந்தியா, பங்களாதேஷ், தெற்கு சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளில் வெண்பூசணி பரவலாக பயிரிடப்படுகிறது. ஆசியாவிற்கு வெளியே, உங்கள் உள்ளூர் பல்பொருள் அங்காடிகளில் வெண்பூசணி இல்லையெனில், பெரும்பாலான நகரங்களில் சீன சந்தைகள், இந்திய சந்தைகள் அல்லது சர்வதேச விவசாயிகளின் சந்தைகளில் இதை வாங்க முடியும்.

வெண்பூசணியைத் தேர்ந்தெடுக்கும்போது, சேதமடைந்ததற்கான அடையாளங்கள் அல்லது ஓட்டைகள் இல்லாத ஒரு பூசணிக்காயைத் தேர்ந்தெடுக்கவும். பூசணிப்பழம் அதன் அளவிற்கு ஏற்ப கனமாக இருக்க வேண்டும். மேலும், ஏறத்தாழ ஒரு தர்பூசணியின் அதே அளவு, வடிவம் மற்றும் நிறம் என வைத்துக்கொள்ளலாம். ஆனால், தனித்தன்மையாக வெள்ளை, சாம்பல் பூசப்பட்ட மேற்பரப்புடன் இருக்க வேண்டும். இந்த சாம்பல் சாப்பிட பாதிப்பில்லாதது, ஆனால் ஈரமாக இருக்கும்போது கைகளில் ஒட்டும். பூசணியை வெட்டுவதற்கு முன் அதை மேற்பரப்பிலிருந்து கழுவ வேண்டும். உட்புறம் ஒரு மிருதுவான மற்றும் சற்று கடினமாக வெண்மையாக இருக்க வேண்டும். வெட்டப்படாத, ஒரு வெண்பூசணிக் காயை ஒரு மாதம் அல்லது அதற்கு மேலாக, ஒரு குளுமையான உலர்ந்த இடத்தில் சேமிக்க முடியும்.

வெள்ளை பூசணியின் வரலாறுப் பின்னணி

இந்த காயின் வரலாற்று வேர்களைக் கண்டுபிடிப்பது சற்று கடினமாகிறது. இருப்பினும் ஜப்பான், இந்தோனேசியா, சீனா அல்லது இந்தோ-மலேசியாவில் தோன்றியிருக்கலாம் என்று தாவரவியலாளர்கள் கருதுகின்றனர். இந்த பிராந்தியங்கள் அனைத்திலும், வெள்ளை பூசணி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. வெண்பூசணியின் மருத்துவ குணம் பற்றிய விளக்கங்கள் கி.பி 5 முதல் 6ம் நூற்றாண்டு வரை சீன நூல்களில் காணப்படுகின்றன .

இந்திய பாரம்பரியத்தில் வெண்பூசணியின் மகத்துவம் மற்றும் பயன்பாடுகளைப் பற்றிய தகவல்களை சத்குரு இங்கே விவரிக்கிறார்.

சத்குரு: இது மிகவும் புனிதமான காய்கறி என்று கூறியுள்ளனர். நீங்கள் ஒரு புதிய வீட்டைக் கட்டினால், அதை உங்கள் வீட்டின் முன் தொங்க விடுகிறீர்கள். நீங்கள் எந்த விழாவையும் கொண்டாட விரும்பினால், அது உங்கள் வீட்டிற்குள் வரும். பாரம்பரியமாக இதுபோல கடைபிடிக்கப்பட்டது, உங்கள் வீட்டில் ஒரு வெள்ளை பூசணியை வளர்க்க நேர்ந்தாலும், அதை நீங்கள் சாப்பிடக்கூடாது. நீங்கள் அதை ஒரு பிராமணருக்கு தானமாக கொடுக்க வேண்டும். நீங்கள் அதை ஒரு பிராமணரிடம் கொடுத்தால், உங்களுக்கு ஏதோ புண்ணியம் கிடைக்கும், ஆனால் அவருக்கோ நல்ல உணவு கிடைக்கும்.

ஒரு சூத்திரர் வெண்பூசணியை சாப்பிடக்கூடாது. ஒரு வெண்பூசணியை ஒரு சூத்திரர் சாப்பிடுவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர் கொல்லப்படுவார். ஏனென்றால் ஒரு நபர் வெள்ளை பூசணி சாப்பிட்டால், அவர் புத்தி கூர்மையாகவும் தெளிவாகவும் மாறும் என்று அவர்கள் சொன்னார்கள். எனவே ஒரு சூத்திரனை வெள்ளை பூசணி சாப்பிட அனுமதிக்கக்கூடாது. இன்று உங்களுக்கு இதுபோன்ற பிரச்சனைகள் எதுவும் இல்லை. ஒவ்வொருவரும் தங்களுக்கு வேண்டியதை தேர்வு செய்து சாப்பிடலாம்.  
 
பாரம்பரியமாக, இந்த காய்கறி பல வழிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. புதிய வீடுகளுக்கு முன்னால் அது தொங்கவிடப்படுவதற்கான ஒரு காரணம் என்னவென்றால், நீங்கள் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்குள் நுழையும்போது, சில நேரங்களில் சில எதிர்மறை சக்திகள் இருக்கக்கூடும். எனவே அவர்கள் ஒரு வெண்பூசணிக்காயை தொங்கவிடுமாறு மக்களுக்கு அறிவுறுத்தினர். ஏனெனில், இது மிகவும் நேர்மறையான அதிர்வுகளை உருவாக்குகிறது, எதிர்மறையை அழிக்கிறது. இதை உங்கள் உடலுக்குள் போடுவது நல்லது என்று நினைக்கிறேன். இப்போது அதை உங்கள் வீட்டின் முன் வைப்பதற்கு பதிலாக, உங்கள் வயிற்றுக்குள் போட்டால், நீங்கள் நேர்மறை அதிர்வுகளின் மூலமாக மாறுவீர்கள். நீங்கள் எங்கு சென்றாலும் எல்லாமே உங்களுடன் நன்றாக இருக்கும்.

வெண்பூசணியிலுள்ள ஊட்டச்சத்துகள்

வெண்பூசணி பிரதானமாக நீரினால் (சுமார் 96%) ஆனது, இது வைட்டமின் சி மற்றும் பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான நியாசின், தியமின் மற்றும் ரிபோஃப்ளேவின் உள்ளிட்ட பலவகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களையும் கொண்டுள்ளது. இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களின் மதிப்புமிக்க ஆதாரமாக வெண்பூசணி உள்ளது. இது போதுமான அளவு புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் உணவாகக்கூடிய நார்ச்சத்து ஆகியவற்றை வழங்குகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வெள்ளை பூசணி மருத்துவ பயன்கள்

வெண்பூசணியின் பலன்கள்:

புத்திக் கூர்மை

சத்குரு: காலையில் ஒரு கிளாஸ் வெண்பூசணிச் சாறு குடித்தால் உடலில் பெரிய அளவில் குளிர்ச்சியை உணர்வீர்கள், அதேநேரத்தில் அது உங்களுக்கு விழிப்புநிலையையும் கொண்டுவருகிறது. வெண்பூசணியை தினமும் உட்கொள்வது உங்கள் அறிவுசார்ந்த திறன்களை பெரிதும் மேம்படுத்துகிறது. குறிப்பாக குழந்தைகள் வெண்பூசணிச் சாறு குடிக்க வேண்டும். நீங்கள் அதை ஒரு வாரம் குடித்தால், உங்கள் புத்தியின் கூர்மையில் ஒரு சிறப்பான மாற்றத்தைக் காண்பீர்கள். இது மிகுந்த பிராண சக்தி கொண்டது. ஒவ்வொரு நாளும், நீங்கள் காலையில் ஒரு கிளாஸ் வெண்பூசணிச் சாறு குடித்தால், அது உங்கள் புத்திசாலித்தனத்தில் அதிசயங்களை நிகழ்த்தும் என்பதை நீங்கள் காண்பீர்கள். உங்கள் புத்தி மிகவும் கூர்மையாக இருக்கும், மேலும் இது உடலமைப்பில் தூண்டுதல் இல்லாமல் சக்தியை வழங்குகிறது. வெண்பூசணியை தினசரி உட்கொள்வது உங்களுக்கு அற்புதங்களைச் செய்யும்.

மேம்பட்ட சக்திநிலை

சத்குரு: வெள்ளைப் பூசணியை உட்கொள்வது ஏராளமான சக்தியைக் கொடுக்கிறது, அதேநேரத்தில் அது உங்கள் நரம்புகளை மிகவும் அமைதியாகவும் வைத்திருக்கிறது. நீங்கள் காபி குடித்தால், அது தூண்டுதலுடன் கூடிய சக்தியைத் தருகிறது. நீங்கள் ஒரு கிளாஸ் வெண்பூசணியைக் குடித்தால், அது உங்களுக்கு ஏராளமான சக்தியைத் தருவதோடு, உங்களை சாந்தமாகவும் வைத்திருக்கிறது.

மலச்சிக்கல், மூலநோய், கொப்புளங்கள்

சத்குரு: நீங்கள் சிறிது வெள்ளைப் பூசணிச் சாற்றை உட்கொண்டால், அது உடலமைப்பை குளிர்விக்கும். மூலநோய் மற்றும் மலச்சிக்கல், சூட்டினால் உண்டாகும் கொப்புளங்கள் போன்ற பிரச்சனைகளை உருவாக்கும் அதிக உடல் வெப்பம் உள்ளவர்களுக்கு, இது பலனளிக்கும்.

குளிர்ச்சி எச்சரிக்கை (வெண்பூசணி தீமைகள்):

சத்குரு: சளி, ஆஸ்துமா, சைனசிடிஸ் போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகக்கூடியவர்கள் வெள்ளைப் பூசணியில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், இது உடலமைப்பில் அதிகப்படியான குளிர்ச்சியை உருவாக்குகிறது. அத்தகையவர்கள் எப்போதும் அதை தேன் அல்லது மிளகுடன் கலந்து குடிக்க வேண்டும். இதனால் குளிரூட்டும் விளைவு ஓரளவிற்கு சமநிலையாகிறது.

வெண்பூசணி பற்றிய அறிவியல் ஆய்வுகள் கூடுதல் ஆரோக்கிய பலன்களை எடுத்துரைக்கின்றன.

 • 2001ம் ஆண்டு ஜர்னல் ஆஃப் எத்னோஃபார்மகாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, வெள்ளைப் பூசணி சாறு எலிகளில் பரிசோதிக்கப்படும்போது, அல்சர் எனப்படும் வயிற்றுப்புண்ணின் வீரியத்தைத் தடுக்கின்றன. மேலும், இந்த சாறுகள் நஞ்சு இல்லாதவை என்றும் கண்டறியப்பட்டது.
 • 2005ம் ஆண்டு ஜர்னல் ஆஃப் எத்னோஃபார்மகாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், வெள்ளைப் பூசணிக்காய் விதையின் சாறுகள் ஆண்ட்டி ஆஞ்சியோஜெனிக் எனப்படும் இரத்தக்குழாய் கட்டிகளை எதிர்க்கும் தன்மைகளைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. எளிமையாகச் சொன்னால், புற்றுநோய் கட்டிகளுக்கு இரத்தத்தை வழங்குவதை இது தடுக்கிறது.
 • 2000ல் ஃபிட்டோடெராபியாவில் வெளியிடப்பட்ட பூர்வாங்க ஆய்வின்படி, வெள்ளைப் பூசணி சாறு எலிகளில் மார்பைன் மருந்து உட்கொள்வதை நிறுத்துவதால் ஏற்படும் அறிகுறிகளை கணிசமாக குறைக்கிறது. இதனால், ஓபியாய்டு போதை நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் திறனை இந்த சாறு கொண்டுள்ளது.
 • ஜியாங்சு ஜர்னல் ஆஃப் அக்ரிகல்சர் சயின்ஸ் இதழில் 1995ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், சிறுநீரக பாதிப்பு உள்ள எலிகளில் சோதிக்கப்படும் போது, வெள்ளைப் பூசணியிலுள்ள மூலப்பொருட்கள் சிறுநீரக பாதுகாப்புக்கான பலன்களை விளக்குகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது.
 • ஈரானிய ஜர்னல் ஆஃப் பார்மகாலஜி அண்ட் தெரபியூட்டிக்ஸில் 2005ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, வயிற்றுப்போக்கு எதிர்ப்பு ஏஜெண்ட்டாக வெள்ளைப் பூசணி பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதை உறுதிப்படுத்துகிறது.
 • இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் ஃபார்மகாலஜியில் 2010ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, வெள்ளைப் பூசணிக்காய் விதைகளின் மெத்தனாலிக் சாறுகள் அலர்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணத்தில் வலிமையாக செயல்படுவதைக் காட்டின.
 • தி கொரியன் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் 2003ம் வருட ஆய்வில், நீரிழிவு எதிர்ப்பு ஏஜெண்ட்டாக வெள்ளைப் பூசணி பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதை உறுதிப்படுத்தியது: எலிகளில் பரிசோதிக்கப்படும்போது, இந்த காயின் பொடி குளுக்கோஸ், இன்சுலின், கொலஸ்ட்ரால், கொழுப்பு அமிலம் மற்றும் எச்.டி.எல்-கொழுப்பின் அளவுகளில் சரியான விளைவுகளை உண்டாக்கியது.
 • 2003ம் ஆண்டு இந்தியன் ஜர்னல் ஆஃப் ஃபார்மகாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, வெள்ளைப் பூசணி சாறுகள் எலிகளில் மன அழுத்த எதிர்ப்பு செயல்பாடுகளைக் கொண்டிருக்கின்றன.

வெள்ளைப் பூசணி ரெசிபிகள்

வெள்ளைப் பூசணி ஜூஸ்

தேவையானப் பொருட்கள்

 • வெள்ளைப் பூசணி, 4-5 அங்குல அளவு – 1
 • எலுமிச்சை சாறு – 6 தேக்கரண்டி
 • கருப்பு மிளகு தூள் – 3 தேக்கரண்டி
 • உப்பு – 3 தேவையான அளவு

செய்முறை

 • வெள்ளைப் பூசணியை வெட்டி, தோல் மற்றும் விதைகளை அகற்றவும்
 • மென்மையான கூழாக அரைத்து, பின் வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு, கருப்பு மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்

வெண்பூசணி மற்றும் தர்பூசணி ஸ்மூத்தி

வெண்பூசணி மற்றும் தர்பூசணியை ஜுசர் அல்லது மிக்ஸியில் தண்ணீர் அல்லது தயிர் கலந்து அரைக்கவும், அதனுடன் தேன் அல்லது கற்றாழை சிரப் சேர்த்து கலந்து சுவைக்கலாம்.

வெள்ளைப் பூசணி ரைத்தா

வெள்ளைப் பூசணியை அரைத்து வெறும் தயிருடன் கலந்து, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து, கருப்பு மிளகு மற்றும் வறுத்த சீரகத்தூள் தூவவும். (எந்த காரமான இந்திய அல்லது மெக்ஸிகன் உணவுக்கும் ரைத்தா ஒரு சிறந்த பதார்த்தமாகும்.)

எலுமிச்சை மற்றும் வெண்பூசணி கூலர்

ஒரு ஜுசரில் 2-3 கப் வெண்பூசணிச் சாறு, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்க்கவும். ஒரு புதிய சுவைக்காக புதினா அல்லது கொத்தமல்லி தழைகள் சேர்த்து கலக்கவும்.

 

செவிலியர் பணியில் இருக்கும் பெண் வெண்பூசணி ஜூஸிலிருந்து ஆரோக்கியம் மற்றும் சக்தியைப் பெறுகிறார்

லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் ஜெனிபர் கார்ல்சன் ஈஷா யோகா வகுப்பில் பங்கேற்றதால், புறத்தூண்டுதல்கள் இல்லாமல் தனது சக்தியை ஆரோக்கியமான முறையில் அதிகரிப்பதற்கான சில நடைமுறையில் இல்லாத யோக சமையல் குறிப்புகளைக் கற்றார். ஜெனிஃபரைப் பொறுத்தவரை, யோகா வகுப்பின் போது அவர் கற்றுக்கொண்ட ஷாம்பவி மஹாமுத்ரா கிரியா செயல்முறையுடன் இந்த எளிய சமையல் குறிப்புகளும் சேர்ந்து, அவரது உடல்நிலையை சீர்கெடுக்கும் காஃபின் பழக்கத்திலிருந்து வெளிவர உதவியது. இந்த தியானத்துடன் எளிய குறிப்பிட்ட உணவு வகைகளையும் சேர்த்து எடுத்துக்கொள்வது, நாள் முழுவதும் அதிக அளவு சக்தியை தக்கவைத்துக்கொள்வதற்கு ஒரு மாற்று முறையை வழங்கும்.

"எனது தினசரி தியானப் பயிற்சியுடன் இணைந்து, எனது உணவில் இந்த ஒன்றைச் சேர்த்தது, ஆரோக்கியமற்ற ஏற்றத்தாழ்வுகள் கொண்ட சுழற்சியை தகர்க்க எனக்கு உதவியது."

“நான் ஒரு நைட் ஷிஃப்ட் செவிலியர், அதாவது இரவு முழுவதும் 12 மணி நேரம் வேலை செய்கிறேன். அவசர சிகிச்சை சூழ்நிலையில், ஒவ்வொரு நொடியும் ஒருவரின் உயிர் எனது விழிப்பைப் பொறுத்துதான் உள்ளது” என்று ஜெனிபர் குறிப்பிட்டார். “எனது செயல்திறனைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, எனது ஷிஃப்ட் முழுவதும் காபி மற்றும் சோடா குடிப்பேன். நான் வீட்டிற்கு வரும்போது, முற்றிலும் சக்தியிழந்து, குமட்டல், நடுக்கம் போன்ற பிரச்சனைகளை சந்தித்தேன். நான் அதிகமான உணவை சாப்பிட வேண்டும், அப்போதுதான் என் வயிற்றைத் நிரப்பிக் கொண்டு சில மணிநேரம் என்னால் தூங்க முடியும் - பின்னர் நான் இந்த சுழற்சியை மீண்டும் தொடங்குவேன். நைட் ஷிஃப்ட் என் உடலில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. மனரீதியாகவும் பாதிக்கப்பட்டேன், மனச்சோர்வடைந்தேன். இப்படி என்னால் அதிக காலம் வாழ முடியாது என்று எனக்குத் தெரியும். ஆனால், எனது தொழிலை நான் மதிக்கிறேன்.”

பின்னர், ஜெனிபர் ஈஷா யோகா வகுப்பில் கற்றுக்கொண்ட ஒரு உணவுக் குறிப்பைப் பற்றி நினைவு கூர்ந்தார். "வெள்ளைப் பூசணி இயற்கையாகவே உடலியல் மண்டலத்தை குளிர்விக்கும் மற்றும் காஃபின் அல்லது பிற தூண்டுதல்கள் இல்லாமல் இயற்கையான சக்தியை அளிக்கிறது என சத்குரு குறிப்பிட்டுள்ளார்” என்று அவர் கூறினார். காஃபின் எடுத்துக்கொள்வதற்கு மாற்றாக அவர் அதை முயற்சித்தார். “இது வியத்தகு வகையில் உதவியது. இது என்னை மிகவும் உற்சாகமாகவும் விழிப்புடனும் உணர வைக்கிறது. ஆனால் காபியைப் போல கிளர்ச்சியூட்டுதல், நரம்புத்தூண்டுதல் செய்வதில்லை. இது எனக்கு மிகவும் ஆரோக்கியமான உணர்வைத் தருகிறது. இது அட்ரினலின் தூண்டுதலாக இருப்பதில்லை.”

“எனது அன்றாட தியானப் பயிற்சியுடன் இணைந்து உணவில் இந்த ஒரு பதார்த்தத்தை சேர்த்தது, ஆரோக்கியமற்ற ஏற்ற இறக்கங்களின் சுழற்சியை உடைக்க எனக்கு உதவியது. நான் பணி செய்யும்போது இரவு முழுவதும் உற்சாகமாக இருக்க 2-3 கிளாஸ் வெள்ளைப் பூசணிச் சாறு குடிக்கிறேன், பின்னர் எனது ஷிப்ட் முடித்து ஓய்வுக்கு போகும்போது சுமார் 20 நிமிடங்கள் தியானத்தில் அமர்கிறேன். என் உடலை மீண்டும் சார்ஜ் செய்கிறேன்” என்று ஜெனிபர் விளக்கினார். "ஷாம்பவி பயிற்சி என் தூக்கத்தின் தேவையை வெகுவாகக் குறைக்கிறது. எனவே நான் இப்போது வீட்டிற்கு வரும்போது, ஆரோக்கியமான உணவை சாப்பிட்டுவிட்டு சுமார் 5-6 மணி நேரம் தூங்குவேன்.” இந்த எளிய வாழ்க்கைமுறை மாற்றங்கள், பள்ளிக்குப் போய் வரும் தனது குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்கவும், மீண்டும் வேலைக்குச் செல்வதற்கு முன்பு அவர்களுக்கான இரவு உணவு வழங்கும் விதத்திலும் ஜெனிஃபரை வெகுவாக மாற்றியுள்ளன.

ஆசிரியர் குறிப்பு: மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியம் தரும் ஈஷா ரெசிபிக்களைத் தேடுகிறீர்களா? ஈஷா யோக மையத்தின் சமையலறையிலிருந்து வரும் சமையல் குறிப்புகள் அடங்கிய ஒரு புத்தகம் Isha Ruchi, உங்களுக்குள் இருக்கும் சக்தியையும், உண்ணும் செயலால் நீங்கள் பெறக்கூடிய மகிழ்ச்சியையும் கண்டறிய உதவும் ஒரு புத்தகம். செரிமானம், ஊட்டச்சத்து, உணவுகளை வகைப்படுத்துதல், மேலும் பலவற்றைப் பற்றிய சத்குருவின் நுட்பமான பார்வைகள் இந்த புத்தகம் முழுவதும் பின்னிப்பிணைந்துள்ளன.

The Indian Vegan