வாழ்க்கையுடனும் மரணத்துடனும் ஒரு விளையாட்டு

மா வனஸ்ரீ : பல வருடங்களுக்கு முன்பு, இரண்டாம் உலகப்போர் தொடங்கிய நேரத்தில் நான் ஜெர்மனியில் பிறந்தேன். அந்நேரத்தில் வெடிகுண்டு தாக்குதல்களால் பல நகரங்கள் தரைமட்டமாகிக் கொண்டிருந்தது. பல லட்சம் மனிதர்கள் உயிரிழந்து கொண்டிருந்தார்கள். உயிரிழந்தவர்களில் பெரும்பான்மை ஆண்கள்தான். விடைபெற்றுச் சென்ற கணவனும், தந்தையும் திரும்பி வராமல் தவித்தவர்கள் பலர். ஒருவேளை திரும்பி வந்தாலும், வந்தவர்கள் மனதளவிலோ, உடலளவிலோ ஊனமுற்றுத்தான் திரும்பி வந்தனர். இரவு நேரங்களில் அபாயச்சங்குகள் சப்தமாக ஒலிக்கும்... நாங்கள் வேகமாக இறங்கி அடித்தளத்திற்கு ஓடுவோம். அந்தத் தாக்குதல் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரியாததால், பெரிய பானை நிறைய கோதுமை கஞ்சியும், ஊறுகாயும் உடன் எடுத்துச் செல்வோம். வெடிகுண்டுகள் நிலத்தில் விழுந்து வெடிக்கும்போது ஏற்படும் விசித்திரமான சப்தங்களும் அதிர்வலைகளும் பல மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் கேட்கும். இன்று கண்களை மூடினாலும்கூட, எனக்கு அந்த சப்தங்கள் கேட்கின்றன. நமக்கு ஏற்படும் அனுபவங்களை வாழ்நாள் முழுவதற்கும் நம் உடல் எப்படி ஞாபகம் வைத்துக் கொள்கிறது என்பதை நினைத்தாலே அதிசயமாக இருக்கிறது.

அறிவார்ந்த சொற்பொழிவுகள், உபதேசங்கள் எனக்கு அலுப்பூட்டுவதாக இருந்தது. இயற்கையைவிட ஒரு உயர்ந்த ஆசிரியர் இருக்கமுடியாது என்றே எனக்குத் தோன்றியது.

எங்கள் வீடு வெடிகுண்டிற்கு இரையாகவில்லை. போர் முடிவிற்கு வந்த நேரத்தில் கிட்டத்தட்ட 30 பிரெஞ்சு படைத்தளபதிகள் 3 மாத காலத்திற்கு எங்கள் வீட்டில் குடியேறி, எங்களை வீட்டின் அடித்தளத்திலேயே இருக்கச் செய்தனர். அவர்களுக்கான உணவை வேறொருவர் தயார் செய்தாலும், அதை என் தாய் அவர்களுக்கு பரிமாற வேண்டியிருந்தது. அதுமட்டுமல்ல, வீட்டை பராமரிப்பதும் என் தாயின் வேலை ஆனது. அவர்களைப் பார்த்தாலே எனக்கு பயமாக இருந்தது என்றாலும் அவர்களை எட்டியிருந்து வேடிக்கை பார்ப்பது சுவாரஸ்யமாக இருந்தது.

என் தந்தை மார்சளிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 46 வயதில் போரில் ஈடுபட்டிருந்தபோது இறந்துபோனார். போர் முடிந்தபின் மீதமிருந்தவற்றில் எதையெல்லாம் பகிர்ந்துகொள்ள முடியுமோ, அவற்றை பகிர்ந்துகொண்டு அனைத்துப் பெண்களும் குழந்தைகளும் ஒன்றாக சேர்ந்துவாழத் துவங்கினர். எங்கள் குடும்பத்திலும்கூட எங்களிடம் இருந்தவற்றை எல்லாம் அகதிகளுடன் பகிர்ந்துகொண்டோம். எங்கள் வீட்டைப் புதுப்பித்து, 15 அகதிக் குடும்பங்கள் எங்களுடன் சேர்ந்துவாழ என் தாய் வழிசெய்தார். இருக்கும் பொருட்கள் அனைத்தும் தற்காலிக உடைமையாக, சிறிதுகாலம் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும் சூழ்நிலை நிலவியது. ‘என்னுடையது’ என்று எந்தப் பொருளையும் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. இதில் குழந்தைகளுக்குக்கூட விதிவிலக்கு இல்லை. பிடித்தமான விளையாட்டு சாமான்கள்கூட சிறிது காலத்தில் வேறொருவருக்குக் கொடுத்துவிடுவார்கள். இந்த அனுபவம் பல வழிகளில் என் வாழ்வை வடிவமைத்தது.

போர் தாக்குதலில் எங்கள் பள்ளிக்கூட கட்டிடம் இடிந்துவிட்டது. ஆசிரியர்களும் காணாமல் போயினர். அதனால், குழந்தைகள் போவதற்கு பள்ளிக்கூடம் என்று ஒன்று இருக்கவில்லை. இருந்தாலும் இது எங்களுக்கு ஒரு பெரிய இழப்பாக இல்லை. இன்னும் சொல்லப்போனால், என் வாழ்நாளிலேயே இதுதான் மிக ஆனந்தமான நேரம்! கட்டிடங்கள் இடிந்த விழுந்ததால் உருவான கற்குவியல்களை அகற்றவே கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆனது. இந்த இடைபட்ட காலத்தில் அப்பாழடைந்த கற்குவியல்களின் நடுவே கிடைத்தவற்றை வைத்து விளையாடிக் கொண்டிருப்போம் - சில சமயங்களில் அங்கு கிடைக்கும் மண்டையோடுகள், எலும்புகளை வைத்தும்கூட. வீதிகளிலேயே டென்னிஸ் விளையாடுவோம், நொண்டி விளையாடுவோம், கிடைக்கும் குச்சிகளை வைத்து பொய்க்கால் பொறுத்திக்கொண்டு நடப்போம், அருகிலிருந்த பாதி விழுந்து பாதி நின்ற மாளிகைகளில் தங்குவோம், மலையேறுவோம், நீச்சலடிப்போம், குளிர்காலத்தில் உராய்ந்த நீர்மட்டங்களில் சறுக்கி விளையாடுவோம். இதற்கெல்லாம் சரியான கருவிகள் இல்லாவிட்டாலும், இருப்பதை வைத்து ஆனந்தமாக விளையாடுவோம். அப்போது எனக்கு 8 வயது. எனக்கு இருந்த ஒரே பொறுப்பு, வெயில்காலத்தில் எங்கள் குடும்பத்தின் பழத்தோட்டத்தை பாதுகாப்பது மட்டும்தான். என் அண்ணன், தம்பிகளோ, கிடைத்த பெருச்சாளிகள், வெள்ளை எலிகள், பெட்டெலிகள், புறா, தங்கமீன்களை வைத்து மிருகக்காட்சிகள் நடத்தினர். எங்கள் இளவயது எப்போதும், எந்நேரமும் குதூகலமாக இருந்தது.

3 வருடம் கழித்து தற்காலிக கட்டிட அமைப்பிலே, கிடைத்த ஆசிரியர்களை வைத்து எங்களுக்கு பள்ளிக்கூடம் துவங்கப்பட்டது. சுதந்திரமாய் விளையாடித் திரிந்துவிட்டு, திடீரென இதற்கு என்னை மாற்றியமைத்துக் கொள்வது கடினமாக இருந்தது. வெகு விரைவிலேயே, இயற்கையுடன் ஒன்றியிருப்பது, கற்குவியல்களின் நடுவே மண்டையோடுகளுடனும், எலும்புகளுடனும் விளையாடுவது போன்றவற்றோடு ஒப்பிட்டால், சரித்திரப் பாடங்கள் உயிர்ப்பாக இல்லை என்பதை உணர்ந்தேன். என்றாலும், இது அத்தனை மோசமான சூழல் என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில், முழு-நேர ஆசிரியர்கள் பலரும் போரிலே இறந்துவிட்டனர் என்பதால், தினமும் ஒருசில மணிநேரங்களே பள்ளிக்கூடம் திறந்திருந்தது. மதியப் பொழுதுகளில் துணிக்கடைக்குச் சென்று எங்கள் தாய்க்கு உதவியாக வேலை செய்வோம். அங்கே விதவிதமான பட்டு, கம்பளி மற்றும் கதரினால் செய்யப்பட்டிருந்த நெசவு வேலைகள் என்னை மிகவும் கவர்ந்தன. யாரும் கற்றுக்கொடுக்காமலே அவற்றை வைத்து விதவிதமாக நானே நெய்ய ஆரம்பித்தேன். இயல்பாகவே எனக்கு வாய்த்த திறமை இது.

பயணங்கள் மீது கொண்ட பேரார்வம்...

ஸ்விசர்லாந்து எல்லைக்கு அருகில் எங்கள் வீடு இருந்தது. என் பதின்பருவத்தில், ஸ்விசர்லாந்து நாட்டிற்குக் குடிபெயர்ந்தோம். அங்கே Montessori ஆசிரியராக ஆனேன். பற்பல கலாச்சாரங்கள், மொழிகளின் மீது எனக்கு அப்போது ஆர்வம் பிறந்தது. இத்தாலிய கலாச்சாரத்தின் தாக்கம் அதிகம் இருந்த இடமான டிசினோ பகுதியில் இத்தாலிய மொழியை வெகு விரைவில் கற்றுக்கொண்டேன். பின் அங்கிருந்து பிரெஞ்சு மொழி கற்கும் பொருட்டு பாரிஸ் நகருக்குக் குடிபெயர்ந்தேன். ஐரோப்பாவில் காரில் பயணம் செய்தால், ஒவ்வொரு 2 மணிநேரத்திற்கும் வெவ்வேறு நாட்டிற்குள் பிரவேசிப்பீர்கள். நாடு வேறு, மொழி வேறு, உணவுமுறை வேறு, பணமும் வேறு (அக்காலத்தில்!) இப்படி வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று அவற்றை ஆராய்ந்து அங்கு சுற்றித் திரிந்தபோது, நான் ஒரு நாடோடி என்கிற உணர்வே எனக்குள் மேலிட்டது. உண்மையில், என் குழந்தைப் பருவத்தில் நாடோடிகளின் மீது எனக்கு தனி ஆர்வம் இருந்தது. போர் முடிந்தபின், ஒரு குதிரைப் பூட்டிய வண்டியில் நாடோடிகள் போலந்து நாட்டில் இருந்து பயணித்து ஜெர்மனி கடந்துசெல்வதை பார்த்திருக்கிறேன். அவர்களைப் பார்க்கும்போது அவர்கள் கட்டுப்பாடுகளின்றி மிகச் சுதந்திரமாக வாழ்வதாகத் தோன்றும். அவர்களைப் பின்தொடர்ந்து அவர்களுடனேயே சென்றுவிட மாட்டோமா என்றுகூடத் தோன்றும்.

இயற்கையை இரசிக்கும் மனம்

isha-blog-article-on-the-path-of-the-divine-maa-vanasri-meditating

என் வாழ்வில் எனக்கு மிகப் பிடித்தமான விஷயம் என்றால் பறவைகளைப் பார்த்தபடியே, மிதக்கும் மேகங்களைப் பார்த்தபடியே, என் எண்ணங்களில் ஆழ்ந்துபோய் சுற்றியிருக்கும் இயற்கையை ரசிப்பதுதான். இன்றும்கூட இது எனக்கு மிகப் பிடித்தமான விஷயம். நதிக்கரையில் சும்மா அமர்ந்து துள்ளிக் குதிக்கும் சிற்சிறு மீன்களைப் பார்த்தவாறு மணிக்கணக்காக இருந்துவிடுவேன். மாலை நேரங்களில் பள்ளத்தாக்குகளில் எதிரொலிக்கும் வானம்பாடி பறவையின் இன்னிசையைக் கேட்டுக்கொண்டே இருப்பேன். அந்த இன்னிசையை என் புல்லாங்குழலில் உருவாக்கவும் கற்றுக்கொண்டேன். குளிர்காலங்களில் பனிசூழ, வானில் மின்னும் நட்சத்திரங்களைப் பார்த்தவாறு தினமும் ஒரு மணிநேரமாவது அமர்ந்திருப்பேன். இரவின் நிசப்தம், வானின் பரந்தவெளி, அதில் ஒளிரும் கோடானு கோடி நட்சத்திரங்கள், என்னை முற்றிலும் மாறுபட்ட நிலைக்கு அழைத்துச் செல்லும். அதிலும் வால்நட்சத்திரத்தைப் பார்த்துவிட்டால் சிலிர்ப்பு கூடும். டி.வி பார்ப்பதிலோ, சினிமாவிற்குப் போவதிலோ, பார்ட்டிக்குச் செல்வதிலோ எனக்கு அத்தனை ஆர்வம் இருக்கவில்லை. எனக்கென்று ஒரு குடும்பம் உருவாக்கவேண்டும் என்பதில்கூட எனக்கு விருப்பமில்லை.

சாகசத்தை எதிர்நோக்கும் என் இயல்பால், எனது 33வது வயதில் அமெரிக்காவிற்குப் பயணமானேன். அங்கு பெரும் மாளிகைகளை வடிவமைக்கும் ஒரு கட்டிடக்கலை மற்றும் உட்புற வடிவமைப்பு ஸ்தாபனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு வேலை மிகச் சுலபமாக இருந்தது. அதோடு எனது நெய்யும் திறனும் நன்றாக பயன்பட்டது.

ஏதோ ஒரு புத்தகத்தில், “இப்பிரபஞ்சம் முழுவதும் சுருள்வட்டம் போன்ற அமைப்பில் உள்ளது. குறிப்பிட்ட ஞானம் கிட்டினால் இந்த கண்ணுக்குப் புலப்படாத படைப்பை அறியலாம், இதுபற்றி இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ளலாம்,” என்று படித்திருந்தேன். என் ஆர்வம் மிகுதியானது! இத்தனை ஆண்டுகளாக, “நான் ஏன் இங்கு இருக்கிறேன்?” என்ற கேள்வி என்னை அரித்தது. மற்றவர்கள் இவ்வுலகில் பொருந்திய விதத்தில் என்னால் இங்கு பொருந்த முடியவில்லை. இந்நேரத்தில்தான் அதிர்வுகள், முனைவாக்கம், ஆத்மா, மறுபிறவி, கர்மா, பேய், சாது போன்ற அர்த்தம் தெளிவாகப் புரியாத பல வார்த்தைகளைக் கேட்டேன். ஆனால், ஏனோ அவற்றிற்கு நான் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவை பற்றி விளக்கும் பல புத்தகங்கள் இருந்தபோதிலும், வாழ்க்கைக்கான விளக்கத்தை புத்தகத்தில் இருந்து பெறமுடியாது என்று என் உள்ளுணர்வு கூறியது. அறிவார்ந்த சொற்பொழிவுகள், உபதேசங்கள் எனக்கு அலுப்பூட்டுவதாக இருந்தது. இயற்கையைவிட ஒரு உயர்ந்த ஆசிரியர் இருக்கமுடியாது என்றே எனக்குத் தோன்றியது.

என் தோட்டத்தில் வளர்ந்த 6 அடி சூரியகாந்தி மலர்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. காலையில் கிழக்கு நோக்கியும், மாலையில் மேற்கு நோக்கியும் அவை திரும்பின. அவற்றில் இருந்த விதைகளின் அமைப்பே சுருள்வட்டத்தின் ஒப்பற்ற அழகை அடிகோடிட்டன. சூரியனுடன் ஒரு மலர் எப்படி இந்தளவிற்கு ஒன்றியிருக்க முடியும் என்பது எனக்கு அதிசயமாக இருக்கும். என்ன செய்யவேண்டும் என்பது அவற்றிற்கு எப்படிப் புரிந்தது? அவற்றோடு ஒப்பிடும்போது, நான் ஒரு முட்டாள் என்றே எனக்குத் தோன்றியது. நம் கண்ணுக்கு புலப்படும் விஷயங்கள், புலப்படாத பல விஷயங்கள் என இப்பிரபஞ்சத்தை வழிநடத்தும் அந்த அடிப்படை சக்தியை அறிய எனக்குள் தீராத் தாகம் ஏற்பட்டது. அதனால், அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இருந்த “இயற்கை - வழி -வாழ்க்கைமுறை சமூகம்“ (macrobiotic community) வழங்கிய வகுப்பை மேற்கொண்டேன். ஆசிய கலாச்சாரத்தின் ஆழ்ந்த மதிநுட்பத்தின் அடிப்படையில் இவர்கள் இயற்கைக்கு நெருங்கிய வாழ்க்கைமுறையை பின்பற்றினர். இந்த வகுப்பை முடித்தபோது, ‘என்னை அறியும்‘ முயற்சியில் ஒரு சிறு படியை எடுத்துவிட்ட திருப்தி எனக்குள் ஏற்பட்டது. அதன்பின், அவர்கள் வழங்கிய தீவிர ஆசிரியர் பயிற்சி வகுப்பை மேற்கொண்டு, 2 ஆண்டு காலத்தில் மாசூசெட்ஸில் இருந்த அவர்களது குஷி இன்ஸ்டிடியூட்டில் ஆசிரியராக பணி மேற்கொண்டேன். அங்கு 19 ஆண்டுகள் வேலை செய்தேன். 2001 ஆம் ஆண்டில் என் உறவு என்று நான் கூறிக் கொள்ளக்கூடிய கடைசி நபரும் காலமானார். ஆனால், அது எனக்கு ஒரு பாதிப்பாக இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஏதோ ஒருவித விடுதலை உணர்வு ஏற்பட்டது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்தியாவின் சாலைகளில் பயணித்த நாட்கள்

என் வேலை நிமித்தம் பல நாடுகளுக்கும் கண்டங்களுக்கும் பயணித்தேன் ஆனால் இந்தியாவிற்கு மட்டும் வரவில்லை. “என் குருவைத் தேடி நான் இந்தியாவிற்குச் செல்கிறேன்,” என்று பலரும் சொல்லிக் கேட்டபோது எனக்கு விசித்திரமாக இருக்கும். சிறிது காலம் கழித்து நானும் இந்தியாவிற்கு பயணமானேன், ஆனால் என் நோக்கம் வேறு - நான் ஒரு சுற்றுலாப் பயணியாக இந்தியாவிற்கு வந்தேன்.

சத்குரு சத்சங்கத்தின் கடைசி 15 நிமிடங்கள் என்னை மறந்த ஆழமான ஒரு நிலைக்குச் சென்றேன். அதிலிருந்து வெளிவந்தபோது புத்துணர்வாக உணர்ந்தேன்.

ஜனவரி 2003ல், 45 பேர் கொண்ட குழுவோடு சென்னைக்கு வந்தேன். அங்கிருந்து பாண்டிச்சேரி ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமம், சிதம்பரம் கோவில், பழனி கோவில், திருச்சியில் பல கோவில்கள் மற்றும் தமிழ்நாட்டில் மற்ற இடங்களுக்கும் சென்றோம். பயணத்தின் கடைசி நாளன்று திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தபோது, சாலையோரத்தில் பெரிது பெரிதாக சத்குருவின் உருவப்படம் கொண்ட சுவரொட்டிகள் இருப்பதைப் பார்த்தேன். அவரது முகம் என்னுள் ஒரு ஆவலைத் தூண்டியது. சென்னைக்கு வந்ததும் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் மேலாளரிடம், வழியில் நான் பார்த்த சுவரொட்டிகளில் இருந்த மனிதர் யார் என்று வினவினேன். அவருக்குத் தெரியவில்லை. ஆனால், எங்கள் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த பணிப்பெண், மேலாளரிடம் சத்குரு பற்றிக் கூறினார். அன்று மாலை தூய தோமா சர்ச் அருகே இருக்கும் கடற்கரையில் சத்குருவின் மஹாசத்சங்கம் நடைபெறவிருப்பதாகவும் தெரிவித்தார். அதுதான் எங்கள் பயணத்தின் கடைசி நாள். மறுநாள் காலை நாங்கள் மீண்டும் அமெரிக்காவிற்கு செல்லவிருந்தோம். என்ன ஒரு வாய்ப்பு! ஒரு ரிக்ஷாவை அமர்த்திக் கொண்டு நான் அந்த நிகழ்ச்சிக்கு சென்றேன்.

ஆச்சரியம்! ஆச்சரியம்! அங்கே மணலில் ஆயிரக்கணக்கான நாற்காலிகள் போடப்பட்டிருந்தது. வரிசை வரிசையாக பலர் நின்று எல்லோரையும் நமஸ்கரித்து வரவேற்றுக் கொண்டிருந்தனர். சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருந்தது. கடலலைகளின் நடுவே ஒரு பெரும் தீபந்தமாக சூரியன் மறைந்து கொண்டிருந்தான். அப்போது தாடி வைத்த ஒரு நபர் அமைதியாக மேடை மீது ஏறி வந்தார். “ஓ! இவர்தானா சத்குரு!” என்று என் மனதில் நினைத்துக் கொண்டேன். அவர் தமிழில் பேசினார். எனக்கு அந்த மொழி தெரியாது, ஆனால், எனக்கு அது பிரச்சினையாக இல்லை, ஏனெனில் எனக்கு வார்த்தைகளில் ஆர்வமிருக்கவில்லை. அங்கே நிகழ்ந்து கொண்டிருந்த பிரம்மாண்டமான சூரிய அஸ்தமனத்தில் அமர்ந்திருப்பதே பெரும் பாக்கியமாக இருந்தது. சத்குருவிற்கென அமைக்கப்பட்டிருந்த மேடையின் பின்னே, அலைகள் ஓயாமல் கரையில் மோதி காணாமற் போய்க் கொண்டிருந்தன. அவை தோன்றி மறைந்து கொண்டிருந்ததைப் பார்ப்பதே மெய்மறக்கச் செய்வதாக இருந்தது. சத்குரு சத்சங்கத்தின் கடைசி 15 நிமிடங்கள் என்னை மறந்த ஆழமான ஒரு நிலைக்குச் சென்றேன். அதிலிருந்து வெளிவந்தபோது புத்துணர்வாக உணர்ந்தேன். அங்கிருந்து கிளம்பும்போது, “ஞானியின் சந்நிதியில்” என்ற சத்குரு புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பை வாங்கிக் கொண்டு மறுநாள் காலை அமெரிக்காவிற்குப் பயணமானேன்.

மாற்றங்கள் உண்டாக்கிய உள்நிலை பயணம்

ஒரு மாதம் கழித்து நான் வாழ்ந்த லெனாக்ஸ் ஊரின் அருகே இருந்த பெர்க்ஷயர் மலைகளில் இருந்த ‘க்ரிபாலு’ யோகா மையத்திற்குச் சென்றேன். அங்கே அவர்களது கடையில், “ஞானமடைதல்” எனும் தலைப்பில் அவர்கள் வெளியிடும் இதழில் சத்குருவின் புகைப்படத்தைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். மார்ச் 2003ல் நியூ ஜெர்சியின் பிரின்ஸ்டன் நகரில் நடைபெறவிருந்த சத்குருவின் 7 நாள் வகுப்பிற்கான விளம்பரம் அது. அந்த வகுப்பில் கலந்துகொண்டேன். பொதுவாகவே ஆன்மீக குரு என்றால் அவநம்பிக்கையோடுதான் பார்ப்பேன் என்றாலும், எவ்வித முன்முடிவுகளும் இன்றி 7 நாளும் அந்த வகுப்பில் அமர்ந்தேன். அந்த வாரம் துரிதமாக கடந்துபோனது. மேலும் உயிரோட்டத்துடன், வாழ்வை நன்றாக வாழ இன்னும் சில கருவிகளுடன் நான் வீடு திரும்பினேன்.

கேதார்நாத் கோவிலுக்குள் என் கைகளைக் கூப்பி வணங்கிய அந்த நொடியில் என்னுள் அப்படியொரு மாற்றம் நிகழ்ந்தது. திடீரென என்னைச் சுற்றி உலகமற்றுப் போனது. என் கால்கள் நடுங்கத் துவங்கின, என் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடத் தொடங்கியது.

மே 2003ல் அமெரிக்காவின் மிச்சிகன் நகருக்கு சத்குரு வந்திருந்தபோது பாவ--ஸ்பந்தனா நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அந்நிகழ்ச்சியில் “சேர்த்துவைக்கும் அறிவு ஒரு பெரும் சுவராக மாறக்கூடும்,” என்று சத்குரு விளக்கம் அளித்தார். அதைக் கேட்டபோது, சிறு வயதில் இருந்தே நான் சுமந்துவந்த எதிர்மறை உணர்வுகள் சிலவற்றில் இருந்து விடுபட்டேன். என் சகோதரர்களில் ஒருவருக்கு அச்சிட்டாற் போன்ற ஞாபகத் திறனுண்டு. அவன் ஒரு அபாரமான மாணவனும்கூட. 2 வருடம் பள்ளிக்கூடமே போகவில்லை என்றாலும், வகுப்பிலேயே முதல் மாணவனாக நிற்கும் திறன் அவனுக்கு இருந்தது. தினமும் 3 புத்தகங்கள் படித்து, அதில் படித்தவற்றை மிகப் பெருமையாக எங்களுக்கு விளக்குவான். அவனோடு இருக்கும் சமயத்தில், “நான் பெரும் முட்டாள்,” என்றே எனக்குத் தோன்றும். சேர்த்துவைக்கும் அறிவால் கிடைக்கும் பயன் மிகக் குறுகியது என்றும், உள்நோக்கி செல்வதற்கு அது தேவையில்லை என்றும் சத்குரு கூறிக் கேட்டபோது, அது என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

செப்டம்பர் 2003ல் இமாலய தியான யாத்திரையில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தபோது, மிக ஆனந்தமாக உணர்ந்தேன். நடுநடுவே சத்குருவும் எங்களுடன் சேர்ந்து பயணித்தது அப்பயணத்தை மறக்கமுடியாத அனுபவமாக மாற்றியது. நான் பள்ளிக்கூடம் சென்றபோது வரைபடத்தில் இமாலய மலையின் சுவடுகளில் என் விரல் வைத்து தேய்க்கும்போது ஒரு இனம்புரியாத ஏக்கம் என்னுள் எழும். அது ஏன் என்று எனக்குப் புரிந்ததில்லை. இப்போது அந்த இமாலய மலையில் பயணித்துக் கொண்டிருந்தேன். நீண்ட நெடுநேரம் பேருந்தில் பயணித்தது மிகக் கடினமாக, களைப்பூட்டுவதாக இருந்தாலும், கோமுக் வரை மலை ஏறுவது, பனிக்கட்டி உருவாக்கும் வண்ணமயமான வானவில்லைக் காண்பது, குளிரான புத்துணர்வூட்டும் அப்பனிக்கட்டி நீரோடைகளில் குளிப்பது என இவையெல்லாம் மிகவும் வித்தியாசமான, எதிர்நோக்கக்கூடிய அனுபவங்களாக அமைந்தன. ஸ்விசர்லாந்தில் மலையேறியபோது அங்கிருந்த பனிக்கட்டி நீரோடைகளை நான் பார்த்திருக்கிறேன், உணர்ந்திருக்கிறேன். ஆனால் இங்கிருக்கும் இந்த நீரோடைகளில் நீர் இன்னும் குளிராக, மிகத் தெளிவாக இருந்தது. மேலே மிதக்கும் மேகங்களை ஒரு கண்ணாடிபோல் அத்தனைப் பிரமாதமாக பிரதிபலித்தது.

வளைந்து நெளிந்து போகும் அப்பாதைகளில் பயணித்தது, அத்தனை சாதுக்கள், சந்நியாசிகள், பக்தர்களை வழிநெடுகப் பார்த்தது, கேதார்நாத் கோவில்வரை சத்குருவுடன் மலையேறியது, அக்கோவிலின் வெள்ளை முகப்பை முதல்முறை பார்த்தது என அப்பயணத்தின் இன்னும் பற்பல நிகழ்வுகள் இன்னும் என் நினைவில் அச்சிட்டாற்போல் பதிந்துள்ளது. கேதார்நாத் கோவிலுக்குள் என் கைகளைக் கூப்பி வணங்கிய அந்த நொடியில் என்னுள் அப்படியொரு மாற்றம் நிகழ்ந்தது. திடீரென என்னைச் சுற்றி உலகமற்றுப் போனது. என் கால்கள் நடுங்கத் துவங்கின, என் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடத் தொடங்கியது. அந்த கோவிலுக்குச் சென்று வந்தபின் சக பயணிகளிடமும் ஒரு மாற்றம் தெரிந்தது. அவர்கள் மேலும் அமைதியாக, ஆழமான சிந்தனையில் ஆழ்ந்தவாறு இருந்தனர். அதுமட்டுமல்ல திடீரென உடலளவில் அவர்கள் இன்னும் ஸ்திரமாக ஆரோக்கியமாக இருந்தனர். இமாலய தியான யாத்திரையில் நாங்கள் நின்ற ஒவ்வொரு இடமும் ஒரு புதுவித அனுபவத்தை எங்களுக்கு வழங்கியது. வாழ்வில் மறக்கமுடியாத அனுபவங்கள் அவை. இத்தனை ஆண்டுகள் ஆகியும் அம்மலைக் காட்சிகள், வாழ்க்கைமுறை அனைத்தையும் என்னால் தெளிவாக நினைவுகூற முடிகிறது.

அதன்பின் ஜனவரி 2004ல் முதல்முறையாக ஆசிரமத்திற்கு வந்தேன். 6 வாரங்கள் சாதனாவில் ஈடுபட்டு சம்யமா நிகழ்ச்சியில் பங்குபெற வந்திருந்தேன். அப்போது தியானலிங்கத்தை சுற்றி கட்டிடப்பணி நடந்துகொண்டிருந்தது. அதனால் நாங்கள் தினசரி சாதனாவை கைவல்ய குடிலில் செய்வோம். சம்யமா நிகழ்ச்சி ஆரம்பிக்கும் நாள், நான் ஸ்பந்தா ஹாலிற்குள் நுழைகிறேன். என் கண்களை என்னால் நம்பமுடியவில்லை. ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் நேர்த்தியாக விரிக்கப்பட்டிருந்தன. சத்குருவின் அருகில் இருக்கவேண்டும் என்று பலரும் வேகமாக உள்ளே ஓடிக் கொண்டிருந்தனர்.

சம்யமா! “என்னால் இவ்வளவுதான் முடியும்“ என்பதைத் தாண்டி என்ன ஒரு நீட்சி! இதற்குமுன் நான் சிறு இடங்களில் வசித்திருக்கிறேன்தான், ஆனால் 7 நாட்கள் தொடர்ச்சியாக, அதுவும் ஒரேவொரு படுக்கையில்... இதுதான் முதல்முறை. பொறுமை என்றால் என்ன என்பதை இது எனக்குக் கற்பித்தது. சும்மா உட்கார்ந்திருக்க வேண்டும் - எதுவும் செய்யாமல் - சத்குருவின் குறிப்புகளை மட்டும் பின்பற்றி. இத்தனை மணிநேரங்கள் தூங்கிவிடாமல் என்னாலும் உச்சாடனம் செய்யமுடியும் என்பதை நான் அறிந்ததும் அப்போதுதான். எழுந்துநின்று கால்களை நீட்டவேண்டும், சும்மா அமர்ந்திருக்காமல் வேறேதேனும் செய்யவேண்டும் என்று அவ்வப்போது எண்ணம் தோன்றினாலும், சிறிது நேரத்தில் கால்வலி தானாக சரியானது. சம்யமா தியானத்திற்கு சத்குரு தீட்சை கொடுத்தபோது, திடீரென பொருட்கள் எல்லாம் இடம், வலம் என மாறி மாறி நகர்ந்தன. சில நொடிகளுக்கு தரைகூட காணாமற் போனது. “இதெல்லாம் யார் செய்கிறார்?” என்றுகூட பின்வந்த நாட்களில் நான் யோசித்திருக்கிறேன். ஏதோவொரு சக்தி என்னை வேறு பரிமாணத்திற்குள் உந்தித் தள்ளுவதுபோல் இருந்தது.

isha-blog-article-on-the-path-of-the-divine-maa-vanasri-offering-peacock-feather-to-sadhguru

2004ல் “வைபவ் ஷிவா” (அறிதலுக்கும் புரிதலுக்கும் அப்பாற்பட்ட சிவனைக் கொண்டாடும் வைபவம்) என்று சத்குரு வழங்கிய பிரத்யேக நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அது ஒரு விலைமதிப்பில்லா அனுபவம் எனக்கு. சொல்லத் தெரியாத விதங்களில் என் உயிர் வளமானதாக உணர்ந்தேன். இதன்பின் “லீலா” எனும் நிகழ்ச்சியிலும் பங்குபெறும் பாக்கியம் எனக்குக் கிட்டியது. கிருஷ்ணா என்பவர் எப்படிப்பட்டவராக இருந்திருப்பார் என்பதன் சிறு ஓரம் உணர்ந்ததுபோல் இருந்தது. அந்நிகழ்ச்சியில் பேசும்போது, விளையாட வேண்டுமெனில் அன்பு பெருக்கெடுக்கும் இதயம், ஆனந்தமான மனம், உயிரோட்டமான உடல் இருக்கவேண்டும் என்றார். இன்றும்கூட அதற்காக நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

சிவன் வசிக்கும் திருத்தலத்தில்...

2006ல் ஆசிரமத்தில் குடியேறி 6 மாத காலத்திற்கு ரெஜுவினேஷன் சென்டரில் “யோக-மார்கா” மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கு தன்னார்வத் தொண்டு செய்தேன். அதே வருடத்தில் கைலாய மலைக்குச் சென்றுவரும் யாத்திரையை சத்குரு அறிவித்தார். உடனடியாக அதற்குப் பதிவுசெய்து, பயணத்திற்கு தயாராக ஆரம்பித்தேன். மற்றுமொரு தீவிரப் பயணம் துவங்கவிருந்தது! இந்த 3 வார யாத்திரையில், நேபாள எல்லைகளைக் கடந்து லாசாவிற்குள் பிரவேசித்தோம். இது இப்போது சீன நாட்டின் அங்கமாக உள்ளது. லாசாவில் இருக்கும் விசேஷமான பொட்டாலா மாளிகையை பார்வையிடச் சென்றோம். 1959ல் சீனர்களிடம் இருந்து தப்பித்து இந்தியாவில் குடியேறும் வரை தலாய்லாமா வசித்த இடம் பொட்டாலா மாளிகை. சீனர்களுக்கும் திபெத் மக்களுக்கும் இடையே நடந்த புரட்சியில் திபெத் நாட்டின் பல புண்ணிய ஸ்தலங்களும், சாஸ்திரங்களும் எரிக்கப்பட்டன. ஆனால், இந்த பொட்டாலா மாளிகை மட்டும் அந்தத் தாக்குதலில் இருந்து தப்பியது. பாறைகள் நிரம்பிய ஒரு மலைமீது பார்வையிடும் வகையில் அமைந்திருந்த இந்த மாளிகை, சூரிய உதயம் மற்றும் அஸ்தமன வெளிச்சங்களை ஒன்றிணைத்து உள்வாங்குவதுபோல் இருந்தது. நம்பற்கரிய இந்த மாளிகையைப் பார்வையிடும்போது, பண்டைய நாகரிகம் பற்றிய திரைப்படத்தைப் பார்க்கும் உணர்வு ஏற்பட்டது. பிரம்மாண்டமான அந்த இடம், வழக்கத்திற்கு மாறாக அமைக்கப்பட்டிருந்த மாபெரும் தங்க சூரியக் கடிகாரங்கள், சோதிடக் கணிப்பிற்காக வைக்கப்பட்டிருந்த பல தொன்மையான அரிய கருவிகள் என அங்கே இருந்த பொருட்களை உள்வாங்குவதற்கு, எங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த சில மணிநேரங்கள் போதவில்லை. அந்த இடம் என்னை உணர்ச்சிவசத்தில் திணறச் செய்தது. இன்னும் ஒருமுறையேனும் அவ்விடத்தை பார்க்கவேண்டும் என்று விரும்புகிறேன்.

அடுத்த நாள் காலையில் அனுபவமிக்க ஓட்டுனர்கள் வாகனங்களை செலுத்த, 48 ஜீப்களில் எங்கள் குழு தன் பயணத்தை தொடர்ந்தது. அந்த நிலப்பரப்பு முற்றிலும் மனிதர்களற்ற காட்டுப்பகுதியாக, வழிநடத்த எந்த குறியீடுகளும் இல்லாமல் இருந்தது. ஆறுகளை கடந்து, கடுமையான நிலப்பரப்பில் வேகமாக பயணித்தோம். நாங்கள ஒவ்வொரு இரவும் அடுத்தடுத்து திட்டமிடப்பட்டிருந்த தங்குமிடங்களுக்கு வந்து சேர்ந்தோம். செல்லும் வழிகளில் பல மணல்மேடுகளை கடந்தோம், இடைவேளையின்போது சில மேடுகளில் ஏறி இறங்கினோம். ஏராளமான பள்ளத்தாக்குகளை கடக்கையில், என்னவென்றே தெரியாத விலங்கு வகையறாக்களையும் பார்த்தோம். இதுபோன்ற ஒரு அசாதாரணமான வாய்ப்பு எனக்கு கிடைக்குமென்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை.

கைலாய பர்வதத்தின் பனிப்பாறைகளிலிருந்து உருகி வரும் நீரினால் நிரம்பும், பிரசித்திபெற்ற மானசரோவர் ஏரியை அடைந்தோம். இந்த ஏரி பற்றி என்ன கூறினாலும் அது மிகையாகாது, நான் பார்த்த ஏரிகளிலேயே மிகவும் வித்தியாசமான ஏரி அது. ஏரியின் பின்பக்கத்தில் ஒரு மாயமான திரை அதனுள் சாம்பல் நிறத்தில் பெருந்திரளான அடர்ந்த மூடுபனியும் தென்பட்டது. அதை பார்க்கும்போது, தோன்றுபவற்றிற்கும் தோன்றாதவற்றிற்கும் இடையே ஒரு புலப்படாத எல்லையாய் அது இருப்பதை உணரமுடிந்தது. இரவில் அந்த ஏரிக்கரையில் சத்குருவுடன் அமர்ந்தது என் கற்பனையிலும் அதுவரை நிகழ்ந்திராத ஒர் அனுபவம். மென்மையான, சக்தியூட்டும் மானசரோவர் ஏரியில் இருமுறை மூழ்கி எழுந்தோம்.

isha-blog-article-on-the-path-of-the-divine-maa-vanasri-sadhguru-diksha-kailash-sojourn

அடுத்த நாள் கைலாய மலையேற்றத்திற்காக ஷெர்பாக்களை சந்தித்தோம, அவர்கள் அவர்களின் குதிரைகளுடனும் காட்டெருதுகளுடனும் வந்திருந்தார்கள். கைலாய மலையை நெருங்க நெருங்க, அதுவரை நாங்கள் பார்த்திராத பல முகங்களை அது வெளிப்படுத்திக் கொண்டே இருந்தது. நம்ப முடியவில்லை! மிகக் குளிச்சியான வானிலை, 18,000 உயரம், இருந்தாலும் சௌகரியமாகவே இருந்தது. அடுத்த நாள் நாங்கள் கைலாய பனிமுகட்டிற்கு நெருக்கமாய் செல்ல பனிமலையை நோக்கி சத்குருவுடன் மலையேற்றத்தை தொடங்கினோம். மலையின் வடக்கு பகுதியில் பனிமலையிலிருந்து உருகி வரும் நீர் ஒரு சிறு நீரோடையாக ஓடியது. அதை தொட்டு பார்த்தபோது என் விரலிடைகளில் முத்துக்கள் உருண்டோடிச் செல்வதைபோல் உணர்ந்தேன். எனக்கு எப்போதும் நீருடன் ஒரு தொடர்பு உண்டு, குறிப்பாக, காடுகளிலிருந்து தோன்றி வரும் ஆறுகளின் மீது நாட்டம் அதிகம். நான் எந்த நாட்டில் வசித்திருந்தாலும், அங்கிருந்த நதிகளும் குளங்களும் என்னருகிலேயே இருந்தன. படுக்கைக்கு செல்லும்முன் நதிக்கரையில் நிலா வெளிச்சத்தில் மின்னிக்கொண்டு, கரைகளிலுள்ள பாறைகளின் மீதோடும் நீரினை கண்டு ரசிப்பேன். தண்ணீர் உருமாறும் திறனுடையது: திரவம் - திடம் - நீராவி என்று நெகிழ்தன்மையை நன்றாக புரிந்துகொள்ள எனக்கு நல்லதொரு உதாரணமாய் அது இருந்தது.

கைலாய மலையின் அதிர்வுகள் படர்ந்த இடத்தில் இரண்டு மணிநேரம் சத்குருவுடன் அமர்ந்திருந்தோம். பின் மெதுவாக மலையிலிருந்து கீழிறங்குகையில், கால் வைத்த ஒவ்வொரு கல்லுக்கும் நன்றி வெளிப்படுத்திய படியே இறங்கினோம்.

ஆதி அந்தமில்லாததை நோக்கி ஒரு துவக்கம்

2008 ஆண்டுவாக்கில் பிரம்மச்சரிய பாதையில் செல்வதற்கு என்னுள் ஏக்கம் எழுந்தது. சத்குருவை கடலாகவும் என்னை ஒரு துளியாகவும் பார்த்த நான், பிரம்மச்சரிய பாதை எனக்கு கடலில் கலப்பதற்கான சாத்தியமளிக்கும் என எண்ணினேன். நான் இளமையில் இல்லை என்பதை ஒப்புக்கொண்டாலும், சாத்தியக்கூறுகளுக்கு திறந்த நிலையில் என்னை வைத்துக் கொண்டதால் பிரம்மச்சரியத்திற்கு விண்ணப்பித்தேன்.

கற்றல் என்பது திறந்தவெளி போன்றது அது ஒருபோதும் நிறைவுபெறாது. ஆனால், “தன்னை உணர்ந்த” சத்குருவின் வழிகாட்டுதலில் இங்கு இருப்பதை ஆசிர்வாதமாக கருதுகிறேன்.

2010ம் ஆண்டு, நான் அமெரிக்காவிற்கு சென்று மூன்று மாதங்கள் அங்குள்ள ஈஷா யோக மையத்தில் (Isha Institute of Inner Sciences) தங்கி, அனாதி என்கிற வகுப்பில் முழு ஈடுபாட்டுடன் கலந்துகொண்டேன். சத்குருவின் வழிகாட்டுதலில் 90 நாட்கள் அமர்ந்து சாதனா செய்த அனுபவம் மறக்கமுடியாதது. சில நேரங்களில் மிதந்தேன், சில நேரங்களில் சறுக்கி கீழே விழுந்தேன், சில நேரங்களில் மிக திடமாய் நின்றேன். சத்குரு எங்களுடன் தினமும் 5 அல்லது 6 மணி நேரங்கள் செலவிட்டார் - கனவு நினைவானது போல் இருந்தது. நிகழ்ச்சி நடந்த மூன்றாவது மாதத்தில், டென்னிஸி சற்றே சூடானது. ஜூலையில் அங்கு நிலவும் வெப்பநிலையை சகித்துக் கொள்வது சற்றே கடினம்தான். ஆனால், தொடக்கமும் முடிவும் இல்லாத ஒரு காலத்தில் இருப்பதைப்போல் உணர்ந்தேன். அது விலைமதிக்க முடியாத செயல்முறை. இந்த படைப்பின் சுருள்வட்டத்தில் ஒரு சிறிய கோவிலாக என்னை எப்போதும் நான் உணர்ந்ததுண்டு - அதில் படைப்பின் ஒவ்வொரு சுருள்வட்டமும் படைப்பையே பிரதிபலிக்கிறது.

2011 ஆண்டு, மார்ச் மாதத்தில், சத்குருவை பார்க்கச் சொல்லி என்னிடம் சொன்னார்கள். நாங்கள் பேச ஆரம்பித்தவுடனே “உங்களுக்கு எத்தனை வயது?” என்று கேட்டார் சத்குரு. நான் எனது வயதை கூறினேன், புன்னகைத்தபடி என்னை தழுவிக்கொண்டார். இந்த சுருக்கமான சந்திப்பு நடந்து ஐந்து நாட்கள் கழித்து நான் பிரம்மச்சரிய சாதனாவிற்கு செல்லலாம் என்று செய்தி வந்தது - அது என் வாழ்நாளில் நான் பெற்ற மிகப்பெரிய பரிசு. சில நாள் சாதனாவிற்கு பின், எனது எதிர்பார்ப்புக்கு முற்றிலும் அப்பாற்பட்ட விதத்தில், சத்குரு எனக்கு பிரம்மச்சரிய சாதனாவிற்கு பதில் சன்னியாச தீட்சையளித்தார். எனது குறைகளையும் ஏற்று, என்னை இந்தப் பாதைக்கு ஏற்றுக்கொண்டமைக்கு சத்குருவிற்கு மனமார்ந்த நன்றிகளை வெளிப்படுத்திக் கொள்கிறேன். முன்னர், பலமுறை இதனை நான் தவறவிட்டிருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். இந்தப் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆசிரம சூழலில் வாழ்வது என்னைப் பொருத்த வரையில் விலைமதிப்பில்லா ஒன்று. சத்குரு இங்கே இருக்கையில், கோடிக்கணக்கான மக்களை அவர் அடைந்து, மனிதகுலத்தை மாற்றியமைக்கும் கருவிகளை அவர் வழங்கும், வரலாற்றில் இடம்பெறக்கூடிய இந்தப் பொன்னான தருணத்தில் நான்- வாழ்வதில் பெருமை.

கற்றல் என்பது திறந்தவெளி போன்றது அது ஒருபோதும் நிறைவுபெறாது. ஆனால், “தன்னை உணர்ந்த” சத்குருவின் வழிகாட்டுதலில் இங்கு இருப்பதை ஆசிர்வாதமாக கருதுகிறேன். ஆறு வருடங்களுக்கு முன்னர் சத்குருவின் அருளினால் ஏழாவது மலை ஏறினேன். அடுத்த வருடம் எனக்கு 84 வயதாகிறது, இன்றும் வாழ்க்கை தொடர்கிறது, அன்புடன்!