சத்குரு : இந்த நாட்டில் – முக்கியமாக, தென்னிந்தியாவில் – காலையில் நீராடாமல் வீட்டைவிட்டு நீங்கள் வெளியேறமாட்டீர்கள். ஆனால் இன்றோ – உதாரணத்திற்கு, சென்னையில் – பலரும் தங்கள் அன்றாடக் குளியலைத் தவிர்க்கிறார்கள் என்பதில் நான் நிச்சயமாக இருக்கிறேன். ஏனெனில், அவர்களுக்கு வேறு வழி இல்லை. அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் குடிப்பதற்குத் தண்ணீர் கிடைத்தால் அவர்கள் பாக்கியம் செய்தவர்கள். இப்படிப்பட்ட ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், எண்பத்து மூவாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள காவேரி ஆற்று வடிநிலப் பகுதியில் எண்பத்துஏழு சதவிகித பசுமைப் போர்வையை, கடந்த ஐம்பது ஆண்டுகளில் நாம் அழித்திருக்கிறோம். எனவே இன்று, காவேரி ஆறு நாற்பது சதவிகிதத்துக்கும் அதிகமாக குறைந்துவிட்டது.

 

நாம் "காவேரி கூக்குரல்" - முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளோம். இது முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச்சூழல் தாக்கத்துடன் கூடிய ஒரு பொருளாதாரத் திட்டம். காவேரி ஆற்றுப் படுகையின் மூன்றில் ஒரு பங்கு நிலத்தில் 242 கோடி மரங்களை நடுவதற்கு நாம் விரும்புகிறோம். இதைச் செய்வதற்கான ஒரே வழி, வேளாண்காடு வளர்ப்புக்கு மாறுவது. தற்பொழுது தமிழ்நாட்டில் 69,760 விவசாயிகளை வேளாண்காடு வளர்ப்புக்கு நாம் மாற்றியுள்ளோம். இதன்மூலம் அவர்களது வருவாய், ஐந்து முதல் ஏழு வருடங்களில் முந்நூறில் இருந்து எண்ணூறு சதவிகிதம் உயர்ந்துள்ளது. வேளாண்காடு வளர்ப்பு குறித்த மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அது விவசாயிக்கு பொருளாதார அளவில் இலாபகரமானதாக உள்ளதுடன், அவரின் கைகளை வேலைச் சுமையிலிருந்து விடுவிக்கிறது. அவர் ஒவ்வொரு நாளும் தன் வயலுக்குச் சென்று பாடுபடவேண்டிய தேவை இல்லை. அவர் மற்ற பல்வேறு செயல்பாடுகளிலும் ஈடுபடமுடியும். நாம் யார் என்பதன் மனித ஆற்றலை பல வித்தியாசமான வழிகளில் நாம் வெளிப்படுத்திக்கொள்ள முடியும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
தமிழ்நாட்டில் 69,760 விவசாயிகளை வேளாண்காடு வளர்ப்புக்கு நாம் மாற்றியுள்ளோம். இதன்மூலம் அவர்களது வருவாய், ஐந்து முதல் ஏழு வருடங்களில் முந்நூறில் இருந்து எண்ணூறு சதவிகிதம் உயர்ந்துள்ளது.

இது முக்கியமானதாகிறது, ஏனெனில் பெரும்பாலான விவசாயிகளின் பிள்ளைகள் கட்டாயக்கல்வி பயின்றுள்ளனர் என்ற காரணத்தினால், இப்போது அவர்கள் விவசாயியாக ஆக முடிவதில்லை. இந்தக் கல்வி முறையில் அவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு வரை கட்டாயத்தேர்ச்சி அளிக்கவேண்டும். ஒன்பதாம் வகுப்பை அடைந்ததும், அவர்களில் பலருக்கு ஒன்றிலிருந்து ஐந்து வரை கூட எப்படி எண்ணுவது என்பது தெரியவில்லை. அதற்குப் பிறகு அவர்கள் தேர்ச்சி அடையத் தவறி, பள்ளியை விட்டு நின்றுவிடுகிறார்கள். இதைப்போன்ற எதற்கும் தகுதி பெறாத இலட்சக்கணக்கான இளைஞர்கள் நாட்டில் இருக்கின்றனர். பதினைந்து வயதான அவர்கள் கல்லூரிகளுக்குச் செல்லும் திறமையும் இல்லாமல், வயலுக்குச் சென்று வேலை செய்யவும் இயலாமல் இருக்கின்றனர். அவர்களுக்குள் கல்வியின் எந்த அறிதலும் இல்லாமல், ஆனால் படிப்பறிந்த மனப்பான்மையை மட்டும் அவர்கள் கொண்டிருக்கின்றனர். ஒரு பையன் பதினெட்டு வயது வரை கல்வி கற்றுக்கொண்டிருந்தால், அவன் வயலுக்குச் சென்று, நிலத்தை உழுவதற்கான திறன் கொண்டவனாக இருப்பான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அதைச் செய்வதற்கான மனநிலையோ அல்லது உடல் வலிமையோ அவனுக்கு இருப்பதில்லை.

எனவே, தீவிர உடலுழைப்பு தேவைப்படும் 3-4 மாத விவசாயமுறையில் இருந்து, நீண்டகால விவசாயமுறைக்கு மக்களை மாற்றுவது மிக முக்கியமான விஷயம். இல்லாவிடில் அவர்கள் தங்கள் நிலங்களை விற்று, வீட்டுமனையாக்கிவிடுவார்கள். விவசாயி கைகளில் நிலம் இருக்கவேண்டுமெனில், நீண்டகால வளர்ச்சி உடைய பயிர்களுக்குச் செல்லவேண்டும்.

தொழிற்துறையின் கைகளில் நுண்பாசனம்

நுண்பாசனத்தின் மூலமாக விவசாயிகளின் கைகளை விடுவிப்பது மற்றொரு வழியாக இருக்கிறது. உதாரணமாக தமிழ்நாட்டில் நாம் இன்னமும் வெள்ளநீர்ப்பாசனம் செய்துவருவது, நீரை மிக கொடூரமாக உபயோகிக்கும் வழியாகவே இருக்கிறது. இது நிலத்திற்கும் அல்லது பயிருக்கும்கூட நன்மையானதல்ல. ஒரு இடத்தில் அவ்வளவு அதிகமாக நீர் பாய்ச்சினால், மண் ஊறவைக்கப்படுவதுடன், மண்ணில் இருக்கும் எல்லா உயிர்மச் செயல்பாடுகளும் குறைந்துவிடுகிறது. இன்றைக்கு, விவசாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அதிகத் திறன் வாய்ந்த வழிமுறைகள் உள்ளன. உலகின் பல நாடுகளில் நாம் உபயோகிப்பதில் பத்து முதல் இருபது சதவிகித நீரை மட்டுமே பயன்படுத்தி, நாம் பயிரிடும் அதே பயிர்களிலிருந்து நம்மைவிட அதிக மகசூலைப் பெறுகின்றனர். இதனை அவர்கள், நுண்பாசனம் மற்றும் பல்வேறு வழிமுறைகள் மூலம் செய்துவருகின்றனர்.

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும், 5,000 கோடி ரூபாய்களை நுண்பாசன முறைக்கு ஒதுக்குவோம் என்று உறுதியளித்துள்ளது. ஆனால், இந்த நாட்டில் தனிநபர் விவசாயத்தின் அளவு சிறியதாக உள்ளது. விவசாய நிலங்களை ஒருங்கிணைக்காமல், ஒவ்வொரு தனிப்பட்ட விவசாயிக்கும் நுண்பாசனம் செய்வது நமக்குப் பயனளிக்கப் போவதில்லை. ஏனெனில், ஒவ்வொருவரும் ஒரு ஆழ்துளைக் கிணறு மற்றும் ஒரு வடிகட்டியை அமைக்கவேண்டும். இதன் விளைவாக, பாசனத்திற்கான முதலீடு மிக அதிகமாகிவிடுகிறது. இதுதான் விவசாயிகளைக் கொன்றுகொண்டிருக்கிறது.

அடிப்படையாக நிகழவேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், விவசாயியிடமிருந்து, இதில் நல்ல அனுபவம் வாய்ந்த தொழிற்சாலை அல்லது ஒரு பெருநிறுவனத்திடம் பாசனப் பொறுப்பு ஒப்படைக்கப்பட வேண்டும். விவசாயி பாசனத்திற்கான வாடகையை மட்டும் செலுத்தவேண்டியிருந்தால், ஒவ்வொரு நிலமும் பாசனவசதி பெறக்கூடும். தவிர, பாசனம் என்பது உரமிடுதலையும் உள்ளடக்கியுள்ளது. இப்பொழுது ஒவ்வொரு விவசாயியும் அதிக மகசூலைப் பெறுவார் என்பதுடன், மூன்றிலிருந்து நான்கு வருடங்களில், அவரது வருமானத்தை குறைந்தபட்சம் மூன்று மடங்கு அதிகமாக மிக எளிதில் உயர்த்தமுடியும்.

rfr2019_micro_irrigation_tamil_blog_infographic

விவசாயிகளை அவர்கள் நிலங்களிலிருந்து விடுவித்தல்

freeing-farmers-hands-agroforestry-micro-irrigation-ploughing-the-field-pic.jpg

தற்பொழுது, விவசாயிகள் தினமும் தங்கள் நிலங்களுக்குச் செல்கின்றனர். இதற்கான ஒரு காரணம், இது அவருடைய நிலம் என்பதை உறுதி செய்துகொள்வது. இது அவருக்குச் சொந்தமானது, அவரது தந்தைக்குச் சொந்தமாக இருந்தது, அவரது பாட்டனாருக்குச் சொந்தமாக இருந்தது. ஆனால், இன்னமும் அவர் ஒவ்வொருநாளும் அங்கு சென்று, இது அவருடைய நிலம் என்பதை நிரூபிக்கவேண்டும், இல்லாவிடில் வேறு யாராவது அவருடைய நிலத்தை உழுவதற்கு ஆரம்பித்துவிடுவார்கள். நாம் செய்யக்கூடிய ஒன்று இலக்க முறையில் (டிஜிட்டல்) அனைத்தையும் ஆய்வுசெய்து அதைப் புத்தக வடிவாக்கிக்கொள்ள முடியும். 10,000 முதல் 50,000 விவசாயிகளை இணைத்து, ஒருங்கிணைந்த பாசனமுறையை நாம் உருவாக்க விரும்புகிறோம். இதைச் செய்தால், விவசாயி, தன்னுடைய நிலத்துக்கு ஒவ்வொருநாளும் செல்லத்தேவையில்லை.

நீர் இறைக்கும் கருவியை இயக்குவதற்காக மட்டுமே, அவர் வயலுக்குச் செல்வதற்கான மற்றொரு காரணமாக இருக்கிறது. நுண்பாசனமுறை, விவசாயிகளின் கைகளை விடுவிப்பதில் ஒரு பெரும்புரட்சியை ஏற்படுத்த முடியும். இதனால், விவசாயி தன்னுடைய நிலத்திற்கு வருடத்தில் அறுபது முதல் அறுபத்திஐந்து நாட்கள் மட்டுமே சென்று இரண்டு பயிர்களை திறம்பட வளர்க்க முடியும். இதற்கு அர்த்தம் என்னவென்றால், வருடத்தில் முந்நூறு நாட்களுக்கு ஐம்பது கோடி விவசாயிகளின் கரங்கள் விடுபடும். அப்போது, துணைத்தொழில்களின் வளர்ச்சி - கலை, இசை மற்றும் இந்த நாட்டில் நீங்கள் செய்யக்கூடிய பல்வேறு மற்ற விஷயங்கள் – அபாரமாக ஏற்றம் பெறும்.

CC-ISO-WebBanner-650x120-Tam

ஆசிரியர் குறிப்பு : காவேரி கூக்குரல் எனும் இந்த ஒரு முன்னெடுப்பு, காவேரி நதிக்கரையோரங்களில் 242 கோடி மரக்கன்றுகளை அங்குள்ள விவசாயிகளை நடச்செய்வதன்மூலம் காவேரி நதியை மீட்பதற்கான ஒரு தீர்வாகிறது. விவசாயிகளின் வருமானத்தை 5 மடங்கு அதிகரிக்கச் செய்வதாகவும், காவேரி வடிநிலப் பகுதிகளில் நீர்பிடிப்பை அதிகரிப்பதாகவும் அமையும் இந்த முன்னெடுப்பிற்கு ஆதரவு தாருங்கள்! #CauveryCalling மரம்நடுவதில் பங்களிக்க, வாருங்கள்: Tamil.CauveryCalling.Org அல்லது அலைபேசி : 80009 80009