வேளாண் காடுகள்... வீட்டிற்கும் நாட்டிற்கும் ஏன் அவசியம்!
விவசாயிகள் தங்கள் நிலத்தில் நீர் இல்லை; வேலைக்கு ஆட்கள் இல்லை; விற்ற பொருட்களுக்கு விலை இல்லை, இப்படி பல்வேறு காரணங்களால் விவசாயத்தை கைவிட நினைக்கிறார்கள். இந்நிலைக்கு ஒரு நல்ல தீர்வாக வேளாண் காடுகள் வளர்ப்பு உள்ளது.
புரட்டாசி மாத அமாவாசைக்குப் பிறகு நவராத்திரி திருவிழாவை சிறப்பாகக் கொண்டாடும் நாம் மழையையும் வேண்டியே தேவிக்கு பூஜை செய்வோம். புரட்டாசி மாதம் ஆன்மீக ரீதியான பலவித சிறப்புகளைக் கொண்டிருந்தாலும் தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழையின் துவக்கமாக அமைவது விவசாயிகளிடத்தில் கூடுதல் சிறப்பைப் பெறுகிறது.
“புரட்டாசி நாலாம் சனியையும் தாண்டிருச்சு... என்னப்பா இன்னும் மழைக்கான அறிகுறியே இல்லயே?!” எனப் புலம்பிக்கொண்டிருந்த விவசாயிகளுக்கு நம்பிக்கை தரும் விதத்தில், கடந்த வியாழக்கிழமையில் (அக்.13) தமிழகம் முழுக்க பரவலான மழையை உதிர்த்து சென்றது வான்மழை!
“என்ன இருந்தாலும் தொடர்ந்து மழை பெய்தா தானே விவசாயம் நல்லா நடக்கும். மழை நம்ம ஆசைகாட்டி மோசம் செஞ்சா என்ன செய்யுறது!” என்ற நம்பிக்கையின்மையும் சிலருக்கு உண்டு. இன்று பல்வேறு காரணங்களால் பருவநிலை வெகுவாக மாற்றமடைந்துள்ளதோடு, அதன் காரணமாக பருவ மழையும் பல நேரங்களில் பொய்த்துப்போவதும் நிதர்சனம்தான். அல்லது ஒரிரு நாட்களிலேயே அதிக அளவிலான மழையளவு பதிவாகி, மண் அரிப்பு போன்ற விவசாயத்திற்கு எதிர்மறையான விஷயங்களுக்கு வழிவகுக்கிறது.
விவசாயிகள் தங்கள் நிலத்தில் நீர் இல்லை; வேலைக்கு ஆட்கள் இல்லை; விற்ற பொருட்களுக்கு விலை இல்லை, இப்படி பல்வேறு காரணங்களால் விவசாயத்தை கைவிட நினைக்கிறார்கள். இந்நிலைக்கு ஒரு நல்ல தீர்வாக வேளாண் காடுகள் வளர்ப்பு உள்ளது. மரங்களை வீட்டின் முன் நடுவது, கொல்லைப் புறங்களில் நடுவது சாலையோரங்களில் நடுவது என்று நம்மில் பலர் மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டினாலும், விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் மரங்களை அதிக அளவில் நடும்போது அது அவர்களின் பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல், மாறிவரும் பருவநிலைக்கு நல்லதொரு தீர்வாகவும் அமையும்.
Subscribe
அதிலும், வடகிழக்குப் பருவமழை துவங்கவிருக்கும் இவ்வேளையில் வேளாண்காடுகள் குறித்து விவசாயிகள் சிந்திப்பது மிகவும் அவசியமானதாக இருக்கும்.
வேளாண்காடுகள் என்றால்...
வேளாண்காடு வளர்ப்பு என்பது விவசாய பயிர்களோடு இணைந்து வேளாண் நிலங்களின் ஓரங்களிலோ அல்லது விவசாய நிலம் முழுவதிலுமோ மரங்களை நடும் திட்டம் ஆகும். மிகக் குறைவான இடுபொருட்கள் செலவு மற்றும் வறட்சியைத் தாங்கக் கூடிய, நிழல் அதிகம் விழாத மரங்களைத் தேர்வு செய்து நடுதல் போன்ற செயல்பாடுகளால் நல்ல லாபம் தரும் தொழிலாக வேளாண் காடு வளர்ப்பு மாறி வருகிறது.
வேளாண்காடுகளை உருவாக்க உதவும் பசுமைக்கரங்கள்!
ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்திலுள்ள வேளாண் வல்லுனர்கள், மண்ணிற்குத் தகுந்த மரக்கன்றுகளை நடுவதற்கு ஆலோசனைகளையும் மரம் வளர்ப்பதற்குத் தேவையான வழிமுறைகளையும் களைகளை கட்டுப்படுத்துவதற்கான நுட்பங்களையும் நேரில் வந்து அளிக்கிறார்கள்.
முதலில் மண் பரிசோதனை செய்து அதற்கேற்ற மரங்களை வழங்கும் பசுமைக்கரங்களின் தன்னார்வத்தொண்டர்கள், ஊடுபயிர் நடுவதிலும் தங்கள் ஆலோசனையை வழங்கி ஒத்துழைப்பு தருகின்றனர். லாபம் தரும் ஊடுபயிர்கள் என்னென்ன என்பதை கூறி வழிநடத்துவதோடு, சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கும் தங்கள் வழிகாட்டுதலை வழங்குகிறார்கள்.
பெரிய பெரிய விவசாயக் குடும்பங்கள் பல, தங்கள் நிலங்களை ரியல் எஸ்டேட்காரர்களிடம் விற்று விட்டு நகரத்திற்கு போய்விட்டதால் இன்று பல ஹெக்டேர் விளைநிலங்கள் சும்மா கிடக்கின்றன. 10 வருடங்கள் கழித்து வீடுகட்டலாம்; பிள்ளைகள் காலத்தில் அவர்களுக்கு உதவும்; சும்மா கிடக்கட்டும் பிறகாலத்தில் நல்ல விலைபோகும், இப்படி காரணங்களைச் சொல்லிக் கொண்டு உங்கள் நிலங்களை சும்மா போட்டிருப்பதற்குப் பதிலாக, அந்த 10 வருடத்திற்குள் அல்லது அதற்கும் குறைவான வருடத்திற்குள்ளோ கூட, பல லட்சங்களில் நீங்கள் வருமானம் பெற்று விடமுடியும்.
வரப்பு ஓரத்தில் வருவாய்
விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களில் விலை மதிப்புள்ள, அதிக நிழல் விழாத மரங்களை நடுவதன் மூலம், மண் வளம், நீர் வளம் மேம்படுவதோடு கணிசமான வருவாயை ஈட்டித்தரும். 1 ஏக்கருக்கு 80 மரங்கள் வரை வரப்பு ஓரங்களில் நட முடியும். 10 அடிக்கு ஒன்று என்ற விதத்தில் நடலாம். 10 வருடங்களில் ஒரு மரம் ரூ.5,000/- என்று மதிப்பு வைத்தால் கூட, ரூ. 4 லட்சம் வருவாயாக கிடைக்கும். அனைவரும் வரப்பு ஓரங்களில் மரங்கள் நட்டால் நமக்கு வருவாயும் நாட்டிற்கு பசுமைப்பரப்பும் அதிகரிக்கும்.
ஈஷா பசுமைக் கங்கள் திட்டம்
தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிப்பதற்காக, சத்குரு அவர்களின் வழிகாட்டுதலில் ஈஷா அறக்கட்டளையானது, ஈஷா பசுமைக் கரங்கள் என்ற திட்டத்தின் மூலம் பல மகத்தான செயல்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஈஷா பசுமைக் கரங்கள், மண்ணிற்குத் தகுந்த மரக்கன்றுகளை மிகக் குறைந்த விலையில் (1 மரக்கன்று - ரூ.7.00) வழங்கி வருகிறது.
உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், மரம் நடுதல் தொடர்பான வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும். தொ.பே. 94425 90062