வெள்ள நீர் பாசனத்தை விட நுண்ணீர் பாசனம் ஏன் சிறந்தது?
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை எப்படி உயர்த்துவது? இந்தியாவின் விவசாய மேலாண்மையில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கு நுண்ணீர் பாசனம் முக்கிய அங்கம் வகிக்கிறது. அது எப்படி என்று பார்க்கலாம்.
இந்தியா கடுமையான நீர் பற்றாக்குறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. ஆறுகள் உலர்ந்துவிட்ட நிலையில், நிலத்தடி நீர் ஆபத்தான வேகத்தில் குறைந்துவரும் நிலையில், மக்கள்தொகை மட்டும் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. உலகின் மக்கள்தொகையில் 1/6 வது இடத்தில் இருப்பினும், நம் நாடு உலகின் நிலத்தில் 1/50 மற்றும் உலகின் நீர் வளங்களில் 1/25 வது பகுதியை மட்டுமே கொண்டுள்ளது.
குழாய்களை சரியாக அடைத்து வைப்பதும் மற்றும் கசிவுகளை சரிசெய்வதன் மூலம் தண்ணீரை சேமிப்பதும் பாராட்டுக்குரியது. ஆனால், அது ஒரு தற்காலிக செயல் மட்டுமே. உண்மையில் நம் நீர் பற்றாக்குறையை சமாளிக்க விரும்பினால், விவசாயத்தை நல்ல முறையில் கையாள வேண்டும். விவசாயத்திற்கு தேவைப்படும் நீரின் அளவு, இந்த நாட்டின் மொத்த நீர் தேவையில் எண்பது சதவிகிதமாக உள்ளது.
இப்போது வரை, இந்தியா பெரும்பாலும் வழக்கமான வெள்ள நீர்ப்பாசன முறையையே கடைப்பிடித்து வருகிறது. ஆனால், வெள்ள நீர் பாசனத்தில் இருந்து நுண்ணீர் பாசனத்திற்கு மாற வேண்டிய சரியான நேரம் இதுதான். நீரை சேமிக்கவும், நல்ல விளைச்சலை ஈட்டவும், நுண்ணீர் பாசன முறை மிக முக்கியமானது.
வெள்ள நீர்ப் பாசனத்திற்கும், நுண்ணீர் பாசனத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?
வெள்ள நீர்ப் பாசனம் நம் பாரம்பரிய நீர்ப் பாசன முறையாகும். இந்த பாசனம் கிணறு மற்றும் போர்வெல் குழாய் மூலம் நிலத்தடி நீரை எடுப்பதன் மூலமும் அல்லது ஆறு குளங்களிலிருந்து குழாய்கள் மூலம் வாய்க்கால் வழியாக நீரை நிலம் முழுவதும் நிரம்பும்படி பாய்ச்சுவதுமாகும். ஆனால், நுண்ணீர் பாசன முறை வெள்ள நீர்ப் பாசன முறையை விட மிக மேம்பட்டதாகும். எப்படியென்றால், நீரை நிலம் முழுவதற்கும் பாய்ச்சாமல் பயிரின் வேருக்குத் தேவையான அளவு மட்டும் நுண்ணிய குழாய்கள் மூலம் நேரடியாக செலுத்துவது.
நீர் மேலாண்மை
வெள்ள நீர்ப் பாசனம் அதிகம் பலன் தராது. இந்த பாசனம் மூலம் 40 முதல் 60 சதவிகித நீரை மட்டும்தான் பயிர்கள் உபயோகப்படுத்துகின்றன. மீதமுள்ள நீரானது திறந்த கால்வாய்களில் ஆவியாகுதல், மண்ணின் ஆழமான அடுக்குகளுக்குள் ஊடுருவுதல் மற்றும் வீணாகுதல் போன்றவற்றில் செலவாகிவிடும். ஆனால் நுண்ணீர் பாசனத்தில் 90 முதல் 95 சதவிகித நீரானது பயிர்களின் வேர்களே நேரடியாக உறிஞ்சிக்கொள்ளும் படி அமைந்துள்ளது. அதாவது, ஒரு குறிப்பிட்ட பரப்பளவிற்கு வெள்ள நீர் பாசனத்தில் எவ்வளவு நீர் தேவைப்படுமோ அதில் பாதியளவு மட்டுமே நுண்ணீர் பாசனத்திற்கு போதுமானது. மேலும் பயிர்களின் தரமும் நன்றாக இருக்கும், நல்ல மகசூலும் கிடைக்கும்.
மேலும், நுண்ணீர் பாசன முறையில் நீர் வினியோகம் மற்றும் நீர் வினியோகத்தின் இடைவெளி ஆகியவற்றை கட்டுப்படுத்தும் வசதிகள் இருக்கிறது. கட்டுப்பாடற்ற வெள்ள நீர்ப்பாசனத்திற்கு மாற்றாக தானியங்கி நுண்ணீர் பாசன முறையானது, நீர் சீரான முறையில் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்கிறது.
மண் ஈரமும் அரிப்பும்
பயிர்களின் சீரான வளர்ச்சிக்கு குறிப்பிட்ட அளவு மண்ணின் ஈரம் தேவைப்படுகிறது. வழக்கமான வெள்ள நீர்ப்பாசனத்தில், வாரத்திற்கு ஒருமுறை நீர் பாய்ச்சப்படுகிறது. அதனால் வெள்ளநீர் பாசனத்தில், நீர் வந்த பின், மண்ணிற்கு கிடைக்கும் ஈரப்பதம் அடுத்த பாசனத்திற்கு முன்பே, படிப்படியாக வறண்டு விடுகிறது. எனவே, பெரும்பாலான நேரங்களில் மண்ணில் மிக அதிகமான ஈரப்பதம் இருக்கும் அல்லது மிகவும் குறைவான ஈரப்பதம் இருக்கும், இது தாவர வளர்ச்சி மற்றும் மகசூலை வலுவாக பாதிக்கும். ஆனால் நுண்ணீர் பாசனத்தில், வேர் மண்டலத்திற்கு தினசரி நீர் செலுத்தப்படுவதால் அனைத்து நேரங்களிலும் மண்ணிற்கு ஈரப்பதம் உறுதி செய்யப்படுகிறது. குறைந்த ஈரப்பதமான சூழ்நிலை பூச்சித் தாக்குதலை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது மட்டுமல்லாமல் நோயையும் தடுக்கிறது.
வெள்ள நீர்ப் பாசனம் என்பது வேலையாட்களை நம்பி இருக்கும் செயல்முறையாகும். அதில் நிலத்தை முதலில் சீர்செய்து பின்னர் வடிகால் அல்லது கால்வாய்களை உருவாக்க வேண்டும். இதில் அடுத்தடுத்து வரும் தண்ணீர் ஓட்டம் வளமான மண்ணின் அரிப்புக்கும் காரணமாகிறது. ஆனால் நுண்ணீர் பாசனத்தில், நீரை பயன்படுத்தும் முறை வேறு விதம் என்பதால், இங்கு மண் அரிப்பு தவிர்க்கப்படுகிறது. இங்கு நிலத்தை மட்டப்படுத்துதல் தேவை இருக்காது. ஒழுங்கற்ற முறையில் இருக்கும் நிலங்களில் கூட நீர்ப்பாசனம் செய்ய முடியும். இதில் உழைப்பும், செலவும் மிகக்குறைந்த அளவே இருக்கும்.
உரங்கள்
பயிரின் வேருக்கே பாய்ச்சப்படும் நுண்ணீர் பாசன முறையில் உரங்கள் அடித்து செல்லப்படுவதும், அதனால் பயிர்களின் ஊட்டச்சத்து குறையும் நிலையும் இருக்காது. உண்மையில், நுண்ணீர் பாசன முறையில் தேவையான இடத்திற்கு மட்டும் உரங்கள் செலுத்தப்படுவதால், களைகள் வளர்ச்சியும் கட்டுப்படுத்தப்படுகிறது.
நுண்ணீர் பாசனம் மற்றும் வெள்ள நீர் பாசனம் - ஒரு ஒப்பீடு
பிரிவுகள் / விவசாயத்தில் முக்கிய கூறுகள் | நுண்ணீர் பாசனம் | வெள்ள நீர் பாசனம் |
---|---|---|
தண்ணீர் பயன்பாட்டில் செயல்திறன் |
90-95% |
40-60% |
பூச்சிக்கொல்லி பயன்பாட்டில் செயல்திறன் |
சிறப்பு |
மிகக் குறைவு |
பணியாட்கள் தேவை |
குறைவு |
அதிகம் |
களை முளைப்பு |
Subscribe
அரிதானது
மிக அதிகம்
தேவையற்ற இடங்களுக்கு பாய்தல் &நிலத்தடிக்கு ஆழமாக செல்லுதல்
இல்லை
மிக அதிகம்
மேற்பரப்பு அடித்துச்செல்லல் & மண் அரிப்பு
இல்லை
நிச்சயம் இருக்கும்
சீரான பயிர் வளர்ச்சி
நிலையானது
அரிதானது
சீரான மகசூல் & பயிரின் தரம்
நிலையானது
அரிதானது
பராமரிப்பு
மிகக் குறைவு
அதிகம்
ஊடு பயிர்
எப்போதும் சாத்தியம்
சாத்தியமில்லை
நிலம் சமன்படுத்துதல் & வடிவமைத்தல்
அவசியமில்லை
அவசியம்
மண் வகைக்கு ஏற்ப பொருந்துதல்
எவ்விதமான மண் வகைக்கும் பொருந்தக் கூடியது
கனமான மண் வகைக்கு பொருந்தாதது
தன்னிச்சையாக செயல்படுதல்
சாத்தியம்
சாத்தியமில்லை
பூச்சிகள் மற்றும் நோய் தாக்கம்
குறைவு
அதிகம்
வேர்ப்பகுதிகளில் மண்ணின் ஈரப்பதம்
எப்போதும் மேல்மண்ணில் ஈரப்பதம்
ஈரப்பதம் விரைவில் வறண்டுவிடுதல்
நீர்ப்பாசனம் மேற்கொள்ளும் அளவு
தினசரி
வாரம் ஒருமுறை (தோராயமாக)
விவசாயியின் வாயிலிருந்தே இதைக் கேளுங்கள்:
வள்ளுவன், பொள்ளாச்சியில் வசிக்கும் ஒரு விவசாயி ஆவார். இவர் ஈஷா பசுமைக்கரங்கள் மற்றும் ஈஷா விவசாய இயக்கம் ஆகியவற்றுடன் கிட்டத்தட்ட பத்து ஆண்டு காலமாக தொடர்புடையவர். அவர் தன் அனுபவங்களை இங்கு நம்மோடு பகிர்கிறார்:
“பல ஆண்டுகளாக என் நிலத்தில் நுண்ணீர் பாசனத்தை பயன்படுத்தி வருகிறேன். நான் பார்க்கும் ஒரு விஷயம், என் நிலத்தில் கோடைகாலத்தில் கூட மண் தொடர்ந்து ஈரப்பதமாக உள்ளது. ஒரு பயிர் வளர, சூரிய ஒளி மற்றும் தண்ணீர் தேவை. இந்த பாசன முறையால், நான் போதுமான தண்ணீர் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. எனவே, நான் எப்போது வேண்டுமானாலும் பயிர் வளர்க்கலாம். எனக்கு தேவையானது கொஞ்சம் சூரிய ஒளி மட்டும்தான். எனவே, என்னால் புதிய பயிர்களை பயிர் செய்ய முடியும். என் பக்கத்து நிலத்தை சேர்ந்த விவசாயி கோடை உச்சத்தில் இதுபோன்று ஏதாவது செய்வதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது!”
"நான் பல ஊடுபயிர்களோடு விவசாயம் செய்கிறேன், அதனால் எனக்கு வருமானம் அதிகரித்திருக்கிறது. புதிய பயிர்கள் அறிமுகம் செய்யும்போது களை கட்டுப்பாடு என்பது முக்கியமானது. அதற்கு இப்பாசன முறை உதவுகிறது. இன்னொரு விஷயம் என்னவென்றால், தொடர்ச்சியாக ஊதியம் கொடுத்து தொழிலாளர்களை வைத்து நீர்ப்பாசனம் செய்வது கடினமாகும். ஆனால் நுண்ணீர் பாசனத்தில், நான் வேலையாட்களை சார்ந்து இருப்பது குறைந்துவிட்டது, என் சேமிப்பும் அதிகரித்துவிட்டது."
நுண்ணீர் பாசனம் - விவசாயத்தின் எதிர்காலம்
உலகெங்கிலும் உள்ள நாடுகளிலிருந்து நுண்ணீர் பாசனத்தின் விளைவுகள் பலவற்றை சிறந்த எடுத்துக்காட்டாகக் குறிப்பிட முடியும். உதாரணத்திற்கு இஸ்ரேல், உலகில் இயற்கையாகவே மிகவும் நீர் பற்றாக்குறையுள்ள நாடுகளில் ஒன்றான இந்த நாடு தங்களது சொட்டுநீர் பாசன கண்டுபிடிப்பு மூலம், நீர் மேலாண்மையில் முன்னணியில் உள்ளனர். இதை இந்தியா பின்பற்ற வேண்டிய தருணம் இது.
சராசரியாக, இந்திய விவசாயிகள் சீன, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய விவசாயிகளுடன் ஒப்பிடுகையில், அதே அளவு பயிர்களை உற்பத்தி செய்ய மூன்று முதல் ஐந்து மடங்கு நீரை பயன்படுத்துகின்றனர். மேலும், இந்தியாவின் விவசாய நிலப்பரப்பில் 52% பரப்பானது, நீர்ப்பாசனத்திற்கு மழையை மட்டுமே முற்றிலும் சார்ந்திருக்கிறது. ஆனால் மழை வரவு என்பது காலநிலை மாற்றம் காரணமாக கணிக்க முடியாத நிலையில் உள்ளதால், நாம் ஒரு நம்பகமான மற்றும் பெரும்பாலான மக்களுக்கு பயனுள்ள நீர்ப்பாசன முறைமைக்கு இடமளிக்க வேண்டும்.
ஒரு விவசாய நாடாக இருக்கும் இந்தியா நுண்ணீர் பாசனத்தை பெரிய அளவில் செயல்படுத்த வேண்டும். தேசத்தின் எதிர்காலம் இந்த பாசன முறையையே சார்ந்திருக்கிறது.
ஆசிரியர் குறிப்பு : காவேரி கூக்குரல் எனும் இந்த ஒரு முன்னெடுப்பு, காவேரி நதிக்கரையோரங்களில் 242 கோடி மரக்கன்றுகளை அங்குள்ள விவசாயிகளை நடச்செய்வதன்மூலம் காவேரி நதியை மீட்பதற்கான ஒரு தீர்வாகிறது. விவசாயிகளின் வருமானத்தை 5 மடங்கு அதிகரிக்கச் செய்வதாகவும், காவேரி வடிநிலப் பகுதிகளில் நீர்பிடிப்பை அதிகரிப்பதாகவும் அமையும் இந்த முன்னெடுப்பிற்கு ஆதரவு தாருங்கள்! #CauveryCalling மரம்நடுவதில் பங்களிக்க, வாருங்கள்: Tamil.CauveryCalling.Org அல்லது அலைபேசி: 80009 80009