இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்... பகுதி 4

'நிலத்தடி நீர் பற்றாக்குறை' என்ற புலம்பல்கள் தமிழ்நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளிலும் கேட்கிறது. வீட்டிற்கு ஒன்றென நிலத்தடியிலிருந்து நீரை உறிஞ்சுவதற்காக போர்வெல் கிணறு வீற்றிருக்கிறது. ஆனால் நிலத்தடி நீர் சேகாரமாவது குறித்து யாருக்கும் கவனமில்லை. இப்படியே சென்றால் நிலத்தடி நீர் கானல் நீராகிவிடாதா? இங்கே அதுகுறித்து எச்சரிக்கை செய்யும் சில வரிகள்!

ஆனந்த்,

ஈஷா பசுமைக் கரங்கள்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

"கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக..." என்பது பிரபலமான ஒரு பழமொழி. இப்போதெல்லாம் யாரும் கிணறு வெட்டுவதே இல்லை. ஒரு ஃபோன் செய்தால் போதும் ராட்சத லாரி ஒன்று விடிய விடிய 'கொர்...' என்ற சப்தம் எழுப்பியபடி பூமியை துளையிட்டு, விடிவதற்குள் ஆழ்துளைக் கிணற்றினை உருவாக்கிவிடும். அதில் தண்ணீர் கிடைக்கிறதா, இல்லையா என்பது வேறு பிரச்சனை. ஆனால், கிணறு ரெடி!

போதுமான தண்ணீர் வசதி இல்லையென்றால், தென்னைகள் நிலத்தடி நீரை முடிந்த அளவு உறிஞ்சிவிட்டு நிலத்தடி நீரை வற்றச் செய்துவிடும்.

2008ல் ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் மூலம் மரக்கன்றுகளை நடும் திட்டத்திற்காக கிணத்துக் கடவு எனும் ஊருக்கு சென்றிருந்தேன். கோவைக்கு அருகிலுள்ள அவ்வூர் பொதுவாகவே இயற்கை வளம் நிறைந்த ஒரு ஊராகும். அந்த ஊரில் கிணறுகள் எப்போதுமே நிரம்பியபடி இருக்கும். மழைக்காலங்களில் கிணறு நிரம்பி வழியும் என்பதால், அங்கே மக்கள் கிணற்றைச் சுற்றி சுவர் எழுப்பி இருப்பார்கள். அதிகமாக கிணறுகள் நிறைந்த ஊரென்பதால்தான் 'கிணத்துக் கடவு' எனப் பெயர் வந்துள்ளது.

ஆனால், அப்போது அங்கு எனக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. நான் சில ஆண்டுகள் முன்பு அங்கு சென்றபோது கண்ட காட்சிகள் வேறு, அன்று நான் கண்ட காட்சிகள் வேறு! கிணறுகள் அனைத்தும் வறண்டுபோயிருந்தன. சொட்டு நீரும் இல்லாத நிலையில் பல கிணறுகள் இருந்தன. விவசாயிகள் செயற்கையாக மோட்டார் மூலம் கிணற்றில் நீரை நிரப்பிக்கொண்டிருந்தனர்.

நிலத்தடி நீர் எங்கே...?, Nilathadi neer engae?

நிலத்தடி நீர் எங்கே...?, Nilathadi neer engae?

இப்படி ஒரு வறட்சி ஏற்பட்டதற்கு பல காரணிகள் இருந்தாலும், என்னைப் பொறுத்தவரையில் இலவச மின்சாரம் முக்கிய காரணம் என்று தோன்றுகிறது. இலவசமாக மின்சாரம் கிடைப்பதால் மக்கள் அதனை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி, நீரை செலவு செய்கிறார்கள். முன்பு, மண்ணிற்கு எது உகந்ததோ அதைப் பயிரிட்டு ஆண்டுக்கு முப்போகம் விளைவித்தனர். ஆனால் இன்றோ... பணப்பயிர்களை மட்டுமே விளைவிக்க நினைக்கும் மக்கள், நான்கு போகம் எடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதிலும், பெரும்பாலானோர் தென்னை மரங்களை நட்டுவிடுகிறார்கள். தென்னைகள் அதிக லாபம் தரும் என்று நினைத்து அவர்கள் நடுவது சரிதான், ஆனால், அதற்கான தட்பவெப்ப சூழ்நிலை உள்ளதா எனப் பார்ப்பது அவசியம்.

போதுமான தண்ணீர் வசதி இல்லையென்றால், தென்னைகள் நிலத்தடி நீரை முடிந்த அளவு உறிஞ்சிவிட்டு நிலத்தடி நீரை வற்றச் செய்துவிடும். உங்கள் வீட்டைச் சுற்றியுள்ள தென்னைகளால் நிலத்தடி நீர் வறண்டு போகலாம். அதுமட்டுமல்லாமல், ஒரு கட்டத்தில் மரங்களும் காய்ந்து போக வாய்ப்புள்ளது. எனவே தென்னை மரங்களை நடுவதற்கு முன்பு, கொஞ்சம் சுற்றும் முற்றும் உள்ள சீதோஷன நிலவரத்தைப் பார்த்து விட்டு நடவும். சமீபத்தில் பசுமைக் கரங்களின் கள ஆய்வுக்காக மதுரைக்கு சென்றிருந்த போது, பல இடங்களில், குறிப்பாக 15-20 வயதுடைய தென்னை மரங்கள் கருகிய நிலையில் காட்சியளித்தன. நான் இதுகுறித்து நிபுணர்களிடம் கேட்டபோது, "இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக மழையளவு குறைந்துள்ளது. எனவே, நிலத்தடி நீர் வெகு ஆழத்திற்கு சென்றுவிட்டது. அவ்வளவு ஆழம் சென்று உறிஞ்சக் கூடிய வேர்களை தென்னை மரங்கள் கொண்டிருக்கவில்லை." என்று தெரிவித்தனர்.

ஒருமுறை சத்குரு பேசுகையில், "கடந்த 10-15 வருடங்களில் சிறு ஆறுகள் பல முழுவதுமாக வறண்டுவிட்டன. முன்பு கோவையில், 120 - 125 அடிகளில் தண்ணீர் கிடைத்துவிடும், இப்போதோ 1400 அடி செல்ல வேண்டியுள்ளது. 1400 அடி செல்லும் வேருடைய மரங்கள் எங்கே உள்ளன? கோவையைச் சுற்றி உள்ள பனை மரங்கள் கூட காய்ந்து போவதைக் காண்கிறேன். பனை மரங்கள் பாலைவனத்திலேயே வளரக்கூடியது. அவை இங்கே காய்ந்து போகிறதென்றால், அந்த அளவிற்கு வறட்சி உள்ளது." என்று தெரிவித்தார்.

ஆம்! நமது தட்பவெப்ப சூழ்நிலையை கவனித்து நடக்க வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது. ஈஷா பசுமைக் கரங்கள் இதற்காக பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளது. உங்கள் கரங்களையும் ஈஷா பசுமைக் கரங்களுடன் இணைத்திடுங்கள்!

இயற்கை இன்னும் பேசும்!

இத்தொடரின் பிற பதிவுகள்: இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்