கேள்வி: ஒரு தேசத்தை இயக்கும் சக்தி இளைஞர்களின் கைகளில் உள்ளது. அவர்களது தினசரி வாழ்க்கையில் அவர்களுக்கு ஒரு வாழும் உதாரணம் இருப்பதில்லை. இளைஞர்கள் கலக்கமடைந்து, ஏமாற்றமடைந்து, வேலையில்லாமல் இருக்கின்றனர். இளைஞர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?

சத்குரு:

உருவாக்கத்திலிருக்கும் மனிதகுலம்தான் இளைஞர்கள்.

உருவாக்கத்திலிருக்கும் மனிதகுலம்தான் இளைஞர்கள். வளர்ந்துவிட்ட மனிதகுலம் கொண்டிருக்கும் தற்பெருமை இவர்களிடம் இல்லை, ஆகவே உலகத்தில் ஒரு புதிய சாத்தியத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு இன்னமும் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால், மூத்த தலைமுறையினர் தங்களுக்குள்ளேயே எந்த மாற்றத்தையும் செய்ய விரும்பாதபோது, இளைஞர்கள் அதிசயமான ஏதோ ஒன்றைச் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது, ஒரு வெற்றுக்கனவு.

பொதுவாகவே, இளைஞர்களின் இயல்பு எப்படிப்பட்டது என்றால், அவர்கள் ஆற்றல் மிக்கவர்களாக இருந்தாலும், ஏதோவொன்றிற்கு உடனடியாக எதிர்வினை செய்யக்கூடிய நிலையில் இருப்பவர்கள். ஆகவே, இந்த பூமியின் மீது நல்லவிதமாகவும், புத்திசாலித்தனமாகவும் வாழ்வதற்கான உணர்தல் மற்றும் ஊக்கத்தை மூத்த தலைமுறையினர் காண்பிக்காவிட்டால், இளைய தலைமுறையினர் நம்மைக்காட்டிலும் மோசமாகச் செயல்படுவார்கள். உங்களுடைய வயது என்னவாக இருந்தாலும், இளமையின் உத்வேகத்துடன் வாழ்ந்து, நீங்கள் வித்தியாசமாக செயல்படமுடியும் என்பதை அவர்களுக்குக் காண்பியுங்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

புது சாத்தியத்தின் துவக்கம்

இந்தியாவில், ஐம்பது சதவிகித்தினருக்கும் அதிகமானோர் இளைஞர்கள். ஒரு ஆரோக்கியமில்லாத, நோக்கமற்ற, ஒழுங்கில்லாத 60 கோடி இளைஞர் கூட்டம் என்பது அழிவுக்கான வாக்குமூலம். ஆனால் இதே 60 கோடி இளைஞர்களும் ஆரோக்கியமாக இருந்து, ஒரு இலக்கு நோக்கிய முனைப்பில் பயிற்றுவிக்கப்பட்டால், அவர்களே ஒரு பிரம்மாண்டமானசாத்தியமாக இருக்கமுடியும்.

தற்போது, இந்த தேசம், ஒரு சாத்தியக்கூறின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறது. பல தலைமுறைகளாக, மக்கள் ஒரே நிலைமையில் வாழ்ந்து வந்துள்ளனர். இப்போது, முதல்முறையாக, ஒரு பெருந்திரளான மக்கள்தொகையினரை வாழ்வின் ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்கு நாம் எடுத்துச் செல்லமுடியும்.

நாம் எந்த அளவுக்கு நல்லவிதமாக இளைஞர்களுக்கு உதவுகிறோம் என்பதுதான் இந்த வாய்ப்பை முழுமையாக நாம் பயன்படுத்திக்கொள்கிறோமா என்பதை முடிவுசெய்யும். அவர்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கின்றனர், ஒரு நோக்குடன் இருக்கின்றனர், எப்படிப் பயிற்றுவிக்கப்பட்டு, திறமையுடன் விளங்குகின்றனர் - இவையெல்லாம் இந்த நாடு எங்கே போகிறது என்பதை முடிவுசெய்யும்.

“இளைஞரும் உண்மையும்“ - துவக்கம்

பூமியின் மீதுள்ள இளைஞர் அனைவருக்கும் நிகழத்தேவையான மிக முக்கியமான விஷயம் - அவர்கள் தியானத்தன்மையுடன் இருக்கவேண்டும். அவர்கள் கல்வி கற்றுக்கொண்டிருந்தாலும், தொழிற்பயிற்சியில் இருந்தாலும், அல்லது அவர்கள் தங்களுக்கு விருப்பமான எதைச் செய்துகொண்டிருந்தாலும், அவர்கள் சற்று அதிகமான சமநிலையுடன் இருந்தால், அவர்களது நல்வாழ்வுக்காகவும், அனைவரது நல்வாழ்வுக்காகவும், இளைய சமுதாயம் என்று நாம் அழைக்கும் இந்தப் பெரும்சக்தி மேலான பயனளிக்கும் விதத்தில் மாறும்.

இதனை நோக்கிய ஒரு முதல்படியாக, நமது இளைஞர்களுக்கு ஊக்கமும், சக்தியும் அளிக்கும் வகையில்,“இளைஞரும் உண்மையும்“ – என்ற ஒரு தேசம் தழுவிய இயக்கத்தை நாம் துவக்குகிறோம். இது செப்டம்பர் 3ஆம் தேதியன்று துவங்கும். இதில் பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிலையங்களிலுள்ள மாணவர்களை நாம் சந்திப்போம். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து கேள்விகள் கேட்க வரவேற்கப்படுவதுடன், அவர்களது நல்வாழ்விற்கான எளிமையான கருவிகளும் அவர்களுக்கு வழங்கப்படும்.

பிரபஞ்சம் தொடும் வதந்"தீ"

இது வதந்தியாகப் போகிறது! பண்டைய காலம் முதலாகவே, ஏதோவொன்றைக் குறித்து அறிந்துகொள்ள விரும்பினால், அதிகாரபூர்வமான வெளியீட்டைத் தவிர்த்து, வதந்தியையே நாடினார்கள், நம்பினார்கள். தினசரியில் ஒன்று வெளிவந்தாலும், நீங்கள் அதை நம்புவதில்லை, ஆனால் அக்கம்பக்கம் விசாரிக்கிறீர்கள். யாரோ எதையோ கூறுகிறார்கள், அது உண்மையாகிவிடுகிறது. ஆகவே போதனை அல்ல, புரளிதான் எப்போதும் உண்மையைத் தெரிவிப்பதாக இருந்துள்ளது. புரளியோ வதந்தியோ மிகைப்படுத்தப்பட்டு, இட்டுக்கட்டப்படுகிறது, அதைக் கேட்டு, வதந்தியை வடிகட்டி, அதிலிருந்து உண்மையைப் பெறுவது என்பதை மக்கள் கற்றுக்கொள்கின்றனர்.

சமூக ஊடகங்களின் வரவால், வதந்தி உலகளாவியதாகிவிட்டது. அது உள்ளூர் வதந்தியாக மட்டும் இருப்பதில்லை. ஆகவே, அதை அடுத்த கட்டத்திற்கு நாம் உயர்த்துவோம் என்று நினைத்தேன். நீங்கள் ஞானியுடன் சேர்ந்து ஒரு வதந்தி பரப்பும்போது, உங்களது வதந்தி பிரபஞ்சத்தைத் எட்டும்.

“சத்குரு, என்னுடைய 25 வயதிலேயே உங்களைச் சந்தித்திருந்தால், நான் எத்தனையோ விஷயங்களைச் செய்திருப்பேன்," என்று மக்கள் என்னிடம் கூறியபடி இருக்கின்றனர். ஆகவே நாம் இளைஞர்களுடன் ஈடுபட்டு, அவர்களை உண்மைக்கு எவ்வளவு நெருக்கமாக கொண்டு வரமுடியும் பார்க்கலாம் என்று நினைத்தேன்.

வாழ்க்கை, சற்றே வளைந்தும் நெளிந்தும் இருக்கிறது, ஆனால், உண்மை என்பது ஒரே நேர்கோடு. உண்மைக்கு நீங்கள் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறீர்கள் என்பதுதான் கேள்வி.

ஒரு நாளில் அல்லது உங்கள் வாழ்வில் எத்தனை முறை நீங்கள் அதைத் தொடுகிறீர்கள்? அதுதான் உங்கள் வாழ்வின் தரத்தையும், நிறைவையும், ஆழமான தன்மையையும் முடிவுசெய்யும். நீங்கள் அதைத் தொடும் ஒவ்வொரு முறையும், உங்களுக்குள் நிகழும் அற்புதமான ஏதோ ஒன்று உங்களை தொடர்ந்து இயக்குகிறது.

ஆசிரியர் குறிப்பு: சர்ச்சைக்குரிய சிந்தனையா, பேசினால் பிறர் தூற்றக்கூடிய விஷயம் பற்றி குழப்பமா, எவரும் பதில் சொல்ல விரும்பாததால் உங்களைத் துளைக்கும் கேள்வியா, கேட்பதற்கு இதுதான் நேரம்! சத்குருவிடம் நீங்கள் கேட்க விரும்புவதை UnplugWithSadhguru.org வலைதளத்தில் பதிந்திடுங்கள்!