கேள்வி: உடலுறவும் பாலுணர்வும் பற்றி சிந்திப்பதில் நான் நிறைய நேரம் செலவழிக்கிறேன். நான் வினோதமாக இருக்கிறேனா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் மக்களில் பெரும்பாலானவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் என் பெற்றோர்களும் வீட்டில் பெரியவர்களும் அதை பேசக்கூடாத விஷயமாக நினைக்கிறார்கள். இது பற்றிய உங்கள் கருத்தை கேட்க விரும்புகிறேன்.

சத்குரு:

நான் உங்களுக்கு ஒரு ஜோக் சொல்கிறேன். ஒரு ஆறு வயது சிறுமி வீட்டிற்கு வந்து அம்மாவிடம், "அம்மா, நான் எப்படி பிறந்தேன்?" என்று கேட்டாள். அம்மாவிற்கு தர்மசங்கடமாகிவிட்டது. "ஒரு கொக்கு உன்னை தூக்கிவந்து போட்டது." என்றார். சிறுமி அதை குறித்து வைத்துக்கொண்டாள்.

பிறகு அவள் அம்மாவிடம், "அம்மா, நீங்கள் எப்படி பிறந்தீர்கள்?" என்று கேட்டாள்.

"என்னையும் ஒரு கொக்கு தூக்கிவந்து போட்டது." என்றார்.

"அம்மா, பாட்டி எப்படி பிறந்தார்?" என்று கேட்டாள்.

"அவளையும் கொக்கு தூக்கிவந்தது." என்றார்.

உடனே சிறுமி சிந்தனையில் ஆழ்ந்தாள். ஒரு ஓரமாக சென்று உட்கார்ந்து அவளின் வீட்டுப்பாட நோட்டில் மும்முரமாக ஏதோ எழுதினாள். அம்மாவிற்கு மனநெருடல் சற்றே கூடியது, அதனால் சிறுமி எழுதிமுடித்து சென்றபிறகு அவள் எழுதியதை எடுத்துப் பார்த்தாள். 'வம்ச விருட்சம்' பற்றிய கட்டுரையது. அதில் சிறுமி எழுதியிருந்தது, "எங்கள் குடும்பத்தில் மூன்று தலைமுறைகளாக எவருக்கும் இயற்கையான பிறப்பு இல்லை!"

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உடலுறவு இயற்கையானது, பாலுணர்வு புனையப்பட்டது

உடலுறவு என்பது இயற்கையானது - அது உடல் சார்ந்தது, அது உடலில் இருப்பது. ஆனால் பாலுணர்வு என்பது நீங்கள் புனைந்துள்ளது. அது மனோரீதியானது.

இதில் வினோதமானது எதுவுமில்லை. நடந்தது இவ்வளவுதான், உங்கள் புத்திசாலித்தனத்தை உங்கள் ஹார்மோன்கள் கடத்தி ஆட்கொண்டுவிட்டன. நீங்கள் குழந்தையாக இருந்தபோது, எவருக்கு எப்படிப்பட்ட பாலுறுப்பு இருந்தது என்பது உங்களுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை. ஆனால் உங்களுக்குள் ஹார்மோன்கள் விளையாடத் துவங்கிய பிறகு, அதைத் தாண்டி உங்களால் உலகில் எதையும் சிந்திக்க முடியவில்லை. உங்கள் ஹார்மோன் உங்கள் புத்திசாலித்தனத்தை முற்றிலுமாக கடத்திவிட்டது.

உடலுறவு என்பது இயற்கையானது - அது உடல் சார்ந்தது, அது உடலில் இருப்பது. ஆனால் பாலுணர்வு என்பது நீங்கள் புனைந்துள்ளது. அது மனோரீதியானது. இது இன்று உலகில் வேகமாக பரவிவருகிறது. பலவிதங்களில் இது ஒரு நோயாக மாறிவிட்டது. ஏனென்றால் உடலளவில் இருக்கும்வரை இதில் பிரச்சனையில்லை - இயற்கையாக அதற்குரிய இடம் உடல்தான். ஆனால் உங்கள் மனதிற்குள் நுழைந்துவிட்டால், அது வக்கிரமாகிறது. உங்கள் மனதில் இதற்கு எந்த வேலையும் இல்லை.

மனித மனதில் பாலுணர்வு என்பது பெரிய கேள்வியாக மாறியிருந்தாலும், அது உண்மையில் மிகச் சிறிய கேள்வியே. சற்றே உடலைக் கடந்து சென்றால், ஆணுமில்லை பெண்ணுமில்லை. உடலளவில் மட்டும்தான் யாரோ ஒருவர் ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கிறார். இனப்பெருக்கத்திற்கு இடம் செய்யவும், இனம் தொடர்ந்து விருத்தியாகவும், உடலளவில் சற்றே வேறுபாடு இருக்கிறது. அதற்கு உறுதுணையாக மனதளவில் சிறிது வேறுபாடு இருக்கிறது. ஆனால் அதே இரண்டு கண்கள், மூக்கு, வாய் - எல்லாம் அதேதான் - பாலுறுப்புகள் மட்டுமே வித்தியாசப்படுகின்றன.

உடலின் இந்த சிறு பாகங்களை நம் மனதில் இவ்வளவு முக்கியமாக நாம் செய்திருப்பது எதனால்? உங்கள் உடலில் ஏதோவொரு பாகம் முக்கியமாக இருக்கவேண்டும் என்றால், அது உங்கள் மூளையாகத்தான் இருக்கவேண்டும், பாலுறுப்புக்கள் அல்ல!

உங்கள் வாழ்க்கையில் பாலுணர்வுக்கு ஒரு குறிப்பிட்ட பங்கு இருக்கிறது. அதை மிகைப்படுத்தினால் உங்கள் மனம் வக்கிரமாகிறது.

பாலுணர்வு இவ்வளவு பெரிதாக மாறக் காரணம், நமது உடலியலை நாம் சரியாக ஏற்கத் தவறிவிட்டோம். நாம் உடலின் பிற பாகங்களை ஏற்றோம், ஆனால் இந்த ஒரு பாகத்தை ஏற்காமல் போனோம். உங்கள் பாலுறுப்புகள் உங்கள் கைகளையும், கால்களையும், வேறெந்த உறுப்பையும் போன்ற ஒரு உறுப்புதான். ஆனால் அதில் நீங்கள் "ஏதோ" மர்மத்தை புனைந்தீர்கள். இது அதிகரிக்க அதிகரிக்க, மனித மனதில் அது பூதாகரமாகிவிட்டது.

இது தவறு என்று யாரோ ஒருவர் சொன்னதால்தான் அது உங்கள் மனதை ஆட்டிப்படைக்கிறது. அது "கெட்ட விஷயம்" என்பதால், இப்போது அதை ஒருக்கணம் கூட உங்களால் தனியாக விடமுடியாது. நீங்கள் கெட்டது என நினைக்கும் எதையும் உங்களால் விடமுடியாது. அது எல்லா இடங்களுக்கும் உங்களைப் பின்தொடரும், கவனித்துப் பாருங்கள்.

இவ்வளவு சாதாரணமான, அடிப்படையான ஒரு விஷயத்தை, நீங்கள் சரி - தவறு என சிதைத்துள்ளீர்கள். பிறகு அந்த தவறை சரிசெய்து கையகப்படுத்த ஒரு தத்துவம் தேடுகிறீர்கள். மனிதர்களின் பாலுணர்வுக்கென பல தத்துவங்கள் உபதேசிக்கப்படுகின்றன. நீங்கள் உடலுறவு கொள்வதற்கு எதற்காக ஏதோவொரு தத்துவம் உங்களுக்கு தேவைப்படுகிறது என்று எனக்குப் புரியவில்லை. இது வெறும் உடலியல். இதை இவ்வளவு சிக்கலாக்குவது அவசியமில்லாதது. இதை நீங்கள் சிக்கலாக்கினால், இது உங்கள் வாழ்க்கையில் தேவையில்லாமல் பெரும்பகுதியாகிறது.

அபத்தமான கருத்துக்களால் நாம் ஏதோவொன்றை மிகைப்படுத்தப் பார்க்கிறோம், அல்லது தேவையில்லாமல் சிறிதுபடுத்தப் பார்க்கிறோம். நவீன சமுதாயங்களைப் பார்த்தால், மனித சக்தியின் 90% உடலுறவைத் தேடுவதில் அல்லது தவிர்ப்பதிலேயே செலவாகிறது என்றே நான் சொல்வேன். உங்கள் வாழ்க்கையில் பாலுணர்வுக்கு ஒரு குறிப்பிட்ட பங்கு இருக்கிறது. அதை மிகைப்படுத்தினால் உங்கள் மனம் வக்கிரமாகிறது. அதை முற்றிலுமாக ஒழிக்கப்பார்த்தால் உங்கள் மனம் மேலும் வக்கிரமாகிறது.

உடலுடன் நீங்கள் அதிகமாக அடையாளப்படும்போது, பாலுணர்வு அதிக முக்கியமாகிறது. உடலுடனான உங்கள் அடையாளம் குறையும்போது பாலுணர்வு குறைகிறது. ஒருவர் மனோரீதியாக மிகவும் துடிப்பாக இயங்கத் துவங்கினால், உடலுறவுக்கான தேவை குறைவதை நீங்கள் கவனிக்கிறீர்களா? ஆனால் பெரும்பாலான மனிதர்கள் மனதளவில் உச்சங்களையும், மனதின் இனிமையையும் எள்ளளவும் அறிவதில்லை. உணர்வின் இனிமையையும் அதிகம் அறிவதில்லை. உயிர்சக்தியின் அளவில் இனிமையை உணர்வது பற்றிய பேச்சிற்கே இடமில்லை. அவர்களை சற்றேனும் உயர்வான உணர்வுக்கு இட்டுச்செல்லும் ஒரே விஷயம் உடலுறவாக இருக்கிறது. உடலளவில் சற்று இனிமையே உடலுறவு, அவர்கள் வாழும் சலிப்பான வாழ்க்கையிலிருந்து கிடைக்கும் ஒரே சிறிய இடைவெளி அதுவாகத்தான் இருக்கிறது.

பாலுணர்வின் உச்சத்தையும் கடந்த ஒரு பரவசம்

நீங்கள் சற்று விழிப்பாக, உங்களையோ உங்களைச் சுற்றி இருப்பவர்களையோ கவனித்துப் பார்த்தால், உடலளவில் ஒழுக்கம் இல்லாமல் இருக்கும்போது, அவர்கள் மெதுமெதுவாக, எப்படியாவது சந்தோஷமாக இருக்கமுடியாதா என்ற ஆற்றாமையில் என்னென்னவோ செய்யத் துவங்கிவிடுவார்கள். அவர்களிடம் சந்தோஷம் துளியும் இருக்காது. நீங்கள் எந்த அளவு ஆனந்தமாக மாறுகிறீர்களோ, அந்த அளவு உங்கள் வாழ்க்கையில் இன்பத்திற்கான தேவை குறையும். நீங்கள் ஆனந்தமாக இல்லாதிருக்கும்போது, அந்த ஆற்றாமையில் செய்யும் செயல்களில் ஒன்றுதான் உடலுறவு. நம் அனைவரையும் இங்கு கொண்டுவந்துள்ள அடிப்படையான செயல் பற்றி நான் பேசவில்லை. அதை நான் எதிர்க்கவில்லை, ஆனால் அதை உங்கள் சிந்தனையிலிருந்து கீழே இறக்கி வைக்கவேண்டும்.

நான் பேச்சுவழக்கில் இப்படி பேசுவதை கவனிக்கிறேன் - சிலர் என்ன செய்தாலும் இப்படி சொல்வார்கள், "உடலுறவுக்கு அடுத்தபடியான சிறந்த விஷயம் இதுதான்" என்பார்கள். உடலுறவு எல்லாவற்றையும் விட சிறந்த விஷயம் இல்லை. அது உலகில் மிக பிரபலமான விஷயமாக இருக்கலாம், ஆனால் அனைத்திலும் சிறந்தது அதுவல்ல. வாழ்க்கையின் பிற பரிமாணங்களை நீங்கள் ருசித்தால், இதில் ருசியில்லாமல் போகும். குழந்தையாக இருந்தபோது பல விஷயங்கள் உங்கள் கவனத்தை ஈர்த்தன, ஆனால் வளரவளர அவற்றை முயற்சியின்றி கீழே உதிர்த்தீர்கள். பாலுணர்வும் அதேபோல உதிரவேண்டும்.

உங்கள் உயிர்சக்தி உறுதியாகி, சூட்சுமமானால், இருக்கும்படியே வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கும் - வேறெந்த உடலுடனும் எதுவும் வைத்துக்கொள்ள விரும்பமாட்டீர்கள். ஏனென்றால் இங்கு சும்மா உட்கார்ந்திருப்பதே உடல்புணர்ச்சியின் உச்சத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பரவசமாக இருக்கிறது. இது உங்கள் வாழ்க்கையில் நிதர்சனமாகும்போது, நீங்கள் எப்போதும் இந்த நிலையில் இருக்கும்போது, உடலுறவு என்பது உங்கள் வாழ்க்கையில் இல்லாமல் போகும். உங்களால் அதில் ஈடுபட முடியாது என்பதாலோ, அது தவறு அல்லது ஒழுங்கீனம் என்று நீங்கள் நினைப்பதாலோ அல்ல, அப்போது யாரோ ஒருவருடன் ஒட்டிக்கொண்டு ஏதோவொன்று செய்துகொண்டு அதை அற்புதமானது என்று கருதுவது சிறுபிள்ளத்தனமாக தோன்றும்.

பாலுணர்வு பரவாயில்லை, அதில் சரியோ தவறோ எதுவுமில்லை, ஆனால் அது வாழ்க்கையின் அடிமட்ட அம்சம். அது உங்கள் உடலில் இருக்கும்வரை பிரச்சனையில்லை, ஆனால் அது உங்கள் தலைக்கு ஏறினால், அது தவறான இடம். அது தவறான இடத்தில் இருந்தால் உங்கள் வாழ்க்கை சிக்கலாகிவிடும்.

ஆசிரியர் குறிப்பு: சர்ச்சைக்குரிய சிந்தனையா, பேசினால் பிறர் தூற்றக்கூடிய விஷயம் பற்றி குழப்பமா, எவரும் பதில் சொல்ல விரும்பாததால் உங்களைத் துளைக்கும் கேள்வியா, கேட்பதற்கு இதுதான் நேரம்! சத்குருவிடம் நீங்கள் கேட்க விரும்புவதை UnplugWithSadhguru.org வலைதளத்தில் பதிந்திடுங்கள்!