உடலுறவு குறித்து உங்கள் பார்வை என்ன?
யோகா பயில்கிறவர்களுக்கு பாலியல் உணர்வுகள் அறவே கூடாது என்று வலியுறுத்தப்படுகிறதே ஏன்? உடலுறவு குறித்து உங்கள் பார்வை என்ன?
சத்குரு:
உடலியல் சார்ந்த ஒன்றை நீங்கள் புனிதம் என்று போதிக்கவும் வேண்டாம். ஆபாசம் என்று ஆமோதிக்கவும் வேண்டாம். அது வாழ்வின் ஒரு அம்சமாக இருக்கிறது. அதன் வழியாகவே நீங்கள் வாழ்கிறீர்கள். அதற்கு தேவையில்லாத அலங்காரங்களையோ, அசிங்கங்களையோ நீங்கள் புகட்டாதிருந்தால் அது, அதற்கே உரிய அழகோடு திகழும்.
இரு பாலினங்களுக்கும் இடையிலான உடல் தேவை என்பது இனப்பெருக்கத்தைப் பொறுத்தவரை சரிதான். ஆனால் அதைக் கடந்து உங்கள் தேடல் இருக்குமேயானால் அது போதாது.
Subscribe
உங்கள் சமூகத்திலேயே சிலர் அறிவுரீதியாக தீவிரமாக இயங்கி, அந்த அறிவுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வார்கள். அத்தகைய மனிதர்களுக்கு பாலுறவின் தேவை குறைந்துவிடும். உடல்ரீதியாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்களுக்கு அந்தத் தேவைகள் அதிகரிக்கும். நீங்கள் உங்களை எதனுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறீர்களோ அதைச் சார்ந்துதான் அதிகம் செயல்படுவீர்கள்.
மிக அடிப்படையானதும், எளிமையானதுமான ஒன்றை சரியென்றும், தவறென்றும் இனம் பிரிக்கிறீர்கள். உங்களுக்கு பாலுறவை தவறென்று சொல்வதற்கு ஒரு தத்துவமும் வேண்டும். அதைத் தொடரவும் வேண்டும். இந்த சிக்கல்களெல்லாம் அவசியமில்லை. அதன் எளிமையான தன்மைகளை நீங்கள் பார்ப்பீர்களானால், அது உங்கள் வாழ்வில் ஒரு சிறிய அம்சம். அதை நீங்கள் பெரிதுபடுத்துனீர்களானால், அதுவே உங்கள் வாழ்வின் முக்கிய அம்சமாகிறது.
யோகா என்றால் 'ஒன்றாதல்' என்று பொருள். காதல் என்றாலும் அதுதான் பொருள். பாலுறவு என்றாலும் அதுதான் பொருள்.
உங்கள் உடல், மனம், எண்ணம் ஆகியவற்றின் எல்லைகள் கடந்து நீங்கள் தேடும்போது அதனை யோகா என்கிறோம். இந்த ஒருமையை நீங்கள் உடல் அளவில் தேடும்போது நீங்கள் என்ன செய்தாலும் அது இரண்டாகத்தான் தெரியும். பாலுறவு என்கிற பெயரில் மக்கள் செய்யும் அத்தனை விசித்திரங்களுமே ஏதாவதொரு விதத்தில் ஒன்றுபட்டு விட வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் செய்யப்படுகிறது. ஆனால் அது நிகழவே நிகழாது. சில விநாடிகளுக்கு போலியானதோர் ஒருமை நிகழும். பிறகு இருவரும் பிரிந்து விடுவார்கள்.
உலகப் புகழ் பெற்ற கால்பந்தாட்ட வீரர் ஜார்ஜ் பெஸ்ட் இறந்தார். அவரைப் பற்றி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் வாழ்க்கையை முழுமையாய் அனுபவிக்க விரும்பியவர்.
எப்போதும் அவருடன் பிரபல நடிகைகளோ, மாடல் அழகிகளையோ காணமுடியும். சில நேரம் 2, 3 பெண்களை அவருடன் பார்க்கலாம். அப்படி வாழ்ந்தவர், 35 வயதிலேயே மனமுடைந்து போனார். 56, 57 வயதாகிறபோது இறந்தும் போனார். அவர் இறந்து போனது ஒரு பெரிய விஷயமில்லை. ஆனால், இந்த வாழ்க்கையை அவர் உடலளவில் மட்டுமே உணர்ந்திருக்கிறார்.
எல்லைக்கு உட்பட்ட ஒன்றை, எல்லை கடந்த ஒன்றாக மாற்ற முயன்றால் நீங்கள் அவதிக்கு உள்ளாவீர்கள். உடலுக்கென்று ஓர் எல்லை உண்டு. அதற்குட்பட்டுதான் அதை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
வாழ்வின் மிகச்சிறிய ஓர் அம்சத்தை வாழ்வின் எல்லாமாகவும் பார்க்கத் தலைப்பட்டு விட்டீர்கள். வாழ்வில் எவற்றுக்கு என்ன இடமோ அவற்றுக்கு அந்த இடத்தை மட்டுமே கொடுங்கள்.