டெலிபதி சாத்தியமா (Telepathy in Tamil)

டாக்டர். தேவி ஷெட்டி:

சத்குரு, பல வருடங்களுக்கு முன் எனது மகன் சிறுவயதாக இருந்தபோது, ஸ்வாமி விவேகானந்தர் எழுதியிருந்த ஒரு புத்தகத்தை எனக்கு கொடுத்தான். அதில், பழங்காலத்தில் குருமார்கள் எப்படி ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலும் கூட, எண்ணங்கள் மூலமாகவே தங்களுக்குள் தொடர்பு வைத்திருந்தார்கள் என்பது பற்றி விவரிக்கப்பட்டிருந்தது. ஒருவிதத்தில், அது இன்றைய நவீன இணையதளம் போல, எப்படி ஒரு கணினி உலகின் எந்த பாகத்திலும் இருக்கும் இன்னொரு கணினியோடு தொடர்புகொள்ளுமோ அப்படி இருந்தது. ஒரு மனிதனின் மனம், இன்னொரு மனித மனதின் மீதோ, அல்லது தூரத்தில் இருக்கும் மக்களின் மனதின் மீதோ தாக்கம் ஏற்படுத்த பயிற்சியளிக்க முடியும் என்று நம்புகிறீர்களா? சரியான அலைவரிசையில் மனதை டியூன் செய்தால் இது சாத்தியமா? அதற்கு பயிற்சி கொடுக்க முடியுமா, அந்த கலையை நாங்களும் கற்க முடியுமா?

சத்குரு:

நீங்கள் செல்ஃபோன் கம்பெனிகளை முந்திச்செல்ல பார்க்கிறீர்கள். இது வெறுமே மனம் சம்பந்தப்பட்டது மட்டுல்ல. பொதுவாக, ஆங்கில வார்த்தையான Mind, எண்ண ஓட்டங்களைக் குறிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எண்ண ஓட்டம் என்பது மனதின் மிக மேலோட்டமான பகுதி. இப்போது ஏற்பட்டிருக்கும் ஐரோப்பிய சிந்தனைகளின் தாக்கத்தால், நாம் எண்ண ஓட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கத் துவங்கியிருக்கிறோம்.

இந்த விழிப்புணர்வு நிலை என்று நாம் குறிப்பிடுவது, பொருள்தன்மையானதோ, மின்னாற்றலோ, மின்காந்தமோ இல்லை. பொருள்தன்மையில் இருந்து பொருள்தன்மையற்ற பரிமாணத்துக்கான பெரிய படியே விழிப்புணர்வு நிலை.
யோக அறிவியலில் நாம் இப்போது எதைப் பற்றி சிந்திக்கிறோம், அல்லது என்ன உணர்கிறோம் என்பதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. ஏனெனில், நீங்கள் அப்படி என்ன யோசித்துவிடமுடியும்? நீங்கள் ஏற்கனவே என்ன தகவலை சேகரித்து வைத்திருக்கிறீர்களோ, அதைத்தான் மறுசுழற்சி செய்வீர்கள். அதனால் பெரிதாக எந்த விளைவும் நிகழப்போவதில்லை. மனதின் மேற்பரப்பில் எது இருந்தாலும் அது சுற்றிச் சுழன்றுகொண்டே தான் இருக்கும், அதனால் எந்த முக்கியத்துவமும் இல்லை. இப்போது நீங்கள் என்ன யோசிக்கிறீர்கள், உணர்கிறீர்கள் என்பது மனதின் மேற்பரப்பு மட்டுமே, மனம் இன்னும் ஆழமான பரிமாணங்கள் கொண்டது.

மனதின் ஆழமான நிலை – சித்தம்

சமஸ்கிருதத்தில், மனதின் பல்வேறு நிலைகளைக் குறிக்கும் பல்வேறு வார்த்தைகள் இருக்கிறது. இப்போது நாம், “சித்தம்” என்று அழைக்கப்படும் மனதின் ஆழமான மூலப்பகுதியைப் பற்றி மட்டும் பார்ப்போம். இதுதான் விழிப்புணர்வு நிலை என்று நாம் குறிப்பிடும் அம்சத்துடன் உங்களுக்கு இருக்கும் இணைப்பு.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உங்களின் சித்தம் விழிப்புணர்வு அடைந்தால், உங்களது சித்தம் ஒரு குறிப்பிட்ட விழிப்புணர்வு ஆளுமையை எட்டினால், அப்போது நீங்கள் விழிப்புணர்வு நிலையுடன் தொடர்பில் இருப்பீர்கள். இந்த விழிப்புணர்வு நிலை என்று நாம் குறிப்பிடுவது, பொருள்தன்மையானதோ, மின்னாற்றலோ, மின்காந்தமோ இல்லை. பொருள்தன்மையில் இருந்து பொருள்தன்மையற்ற பரிமாணத்துக்கான பெரிய படியே விழிப்புணர்வு நிலை.

அந்த பொருள்தன்மையில் இல்லாத பரிமாணம்தான் படைத்தல் செயலின் மடியாக இருக்கிறது. பொருள் அல்லாத தன்மையின் மடியில்தான் பொருள்தன்மை நிகழ்கிறது. பொருள்தன்மை என்பது ஒரு சிறிய நிகழ்வுதான். இந்தப் பிரபஞ்சத்தில் பொருள்தன்மை என்பது முழுதாக இரண்டு சதவிதம்... ஒரு சதவிதம்கூட இல்லை, பொருள் அல்லாத தன்மையே எங்கும் விரவியிருக்கிறது.

ஒரு பொருளை மற்றொரு இடத்திற்குக் கொண்டு சேர்ப்பது சாத்தியமா?

Teleporting

இந்த பொருள் அல்லாத தன்மையை குறிப்பதற்கு யோக முறையில், அந்த தன்மையோடு ஒத்திருக்கும் ஒரு குறிப்பிட்ட ஒலியைப் பயன்படுத்துகிறோம். இன்று அந்தச் சொல் மிகவும் திரிபடைந்திருக்கிறது. நாம் அதை “ஷி-வா” என்று அழைக்கிறோம். ஷிவா என்றால், “எது இல்லையோ அது.” நாம் ஷிவா என்று சொல்லும்போது, எங்கேயோ மேலே அமர்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனை அது குறிப்பதில்லை.

“இல்லாத” ஒரு பரிமாணத்தைப் பற்றி நாம் பேசுகிறோம். ஆனால், இந்த பொருள்தன்மையற்ற பரிமாணத்தின் மடியில்தான், பொருள்தன்மையான அனைத்தும் நிகழ்கிறது. அதனால் உங்கள் சித்தம் கொஞ்சம் விழிப்பாக ஆனாலும், ஒரு கருத்தையோ, எண்ணத்தையோ மட்டுமல்ல, ஏதோவொரு பொருளைக் கொண்டுபோய் சேர்ப்பதும் கூட சாத்தியம்தான். உடலளவில் செல்வதும்கூட சாத்தியம்தான்.

டெலிபதி கற்றுக்கொடுக்க முடியுமா?

இது சாத்தியமா? நிச்சயமாக சாத்தியம்தான். அப்படியானால் இப்போது இங்கே இருக்கும் எல்லோருக்கும் இதை நம்மால் கற்றுக்கொடுக்க முடியுமா? நிச்சயமாக சாத்தியம்தான். ஆனால், அந்த மனிதர் அதற்கென உழைக்க விருப்பத்துடன் இருக்கிறாரா என்பதுதான் கேள்விக்குறி. இதில் ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால், நமது கல்விமுறையால் நமது சிந்தனைகளை பெரிதாக மிகைப்படுத்தி வைத்திருக்கிறோம், முதலில் அதை கீழே இறக்குவதற்கே நேரம் எடுக்கும்.

அவர்களின் சிந்தனைகளின் முட்டாள்தனத்தை உணர வைக்கவே நீண்ட நேரம் எடுக்கும். ஏனென்றால், எல்லோருமே தன்னை ஒரு புத்திசாலி என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், பெரும்பாலான மக்களிடம் இருப்பதிலேயே புத்திசாலித்தனமான விஷயமே அவர்களது Smart phone தான்.

ஏனெனில், உங்களின் எண்ண ஓட்டம் என்பது வெறுமே நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் குறுகிய தகவல்களின் வெளிப்பாடுதான். இந்த உலகத்தில் இருக்கும் எல்லா நூலகங்களையும் கரைத்து குடித்திருந்தாலும் – அப்போதும் அது குறைவான தகவல்கள் தான், இந்த படைப்போடு ஒப்பிட்டால், அது மிகக்குறைவுதான். இவ்வளவு விஞ்ஞான வளர்ச்சி அடைந்திருந்தாலும், ஒரு இலை எப்படி வேலை செய்கிறது ‌என்பது நமக்கு இன்னும் தெரியவில்லை.

டாக்டர். தேவி ஷெட்டி: ஆமாம்

சத்குரு: இத்தனை விஞ்ஞான ஆய்வுகளுக்குப் பிறகும், ஒரு சிறு அணு பற்றிகூட நமக்கு முழுமையாக புரியவில்லை. இதுவே அனைவருக்குள்ளும் ஒரு பணிவுணர்வை ஏற்படுத்த போதுமானது - ஏனெனில், எல்லாவற்றையும் எப்படி பயன்படுத்துவது என்பது நமக்கு தெரிந்திருக்கிறதே தவிர, அது என்னவென்று நமக்கு தெரியவில்லை. அது என்ன, எப்படிப்பட்டது என்பதன் அடிப்படைகளை புரிந்துகொள்வதற்கே ஒரு ஆயுள் முழுவதும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

அதனால், மக்கள் முதலில் தங்களது மனதின் தான்தோன்றித் தனத்தை புரிந்துகொள்ள தயாராக இருந்தாலே - இது முட்டாள்தனமானது என்று அதை வெறுமே ஒதுக்கவேண்டும், பரவாயில்லையா? - தங்களின் எண்ண ஓட்டங்களும் உணர்வுகளின் மேதமையும் அற்பமானது என்பதை அவர்கள் புரிந்துகொண்டாலே போதும், இப்போது இது மிக சுலபமாகிவிடும். இப்போது நம்மால் மக்களுக்கு பயிற்சி அளிக்க முடியும்.

அதாவது, நான் ஏதோ ஒரு எண்ணத்தை உருவாக்கி, பிறகு உங்களிடம் கொடுக்கவேண்டும் என்று இல்லை, அப்படியில்லை. நீங்கள் நினைப்பதற்கு முன்னதாகவே விஷயங்கள் நடக்கத் துவங்கும். உங்களுக்கு எது சிறப்பானதோ, அது உங்கள் மனதில் எண்ணமாக உருவெடுப்பதற்கு முன்பே அது உங்களுக்கு நடக்கும். நீங்கள் என்னவாக ஆகவேண்டும், எப்படி இருக்கவேண்டும் என்பதை நீங்கள் யோசிக்கவே தேவையில்லை. வாழ்க்கை தானாகவே தன்னை அமைத்துக்கொள்ளும்.

பிரபஞ்சத்தைக் காட்டும் ஜன்னல்

இந்த எலும்புக்கூட்டுக்குள் அடக்க முடியாத ஒரு புத்திசாலித்தனம் உங்களுக்காக வேலை செய்யத் துவங்கி, செயல் நடக்கும். நீங்கள் கணித மேதை இராமானுஜரையும் இன்னும் சிலரையும் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்கள் தானே? இராமானுஜர் தனது தேவியின் உதவியால் தனக்கான ஜன்னலை திறந்து கொண்டார், அசாத்தியமான கணிதமேதை ஆனார். இன்றும், நூறாண்டுகள் கடந்த பிறகும், அவர் சொன்னது என்ன என்பதை புரிந்துகொள்ள முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அவர் கொடுத்த கணித கணக்கீடுகள் பிரபஞ்சத்தில் உள்ள கருந்துளைகளை விவரிக்க அடிப்படையாக இருக்கிறது. அவர் வாழ்ந்த காலத்தில், கருந்துளை என்ற வார்த்தையே வழக்கத்தில் இல்லை. கருந்துளை என்று ஒன்று இருப்பதையே யாரும் அறியவில்லை. நாம் கருந்துளை என்று கூறும்போது, நாம் நேரம் மற்றும் ஈர்ப்புவிசையின் வளைகோட்டைப் பற்றி குறிப்பிடுகிறோம். இதைப் புரிந்துகொள்ள இன்று நவீன விஞ்ஞானம் போராடிக்கொண்டிருக்கிறது, ஆனால் அதற்கான கணிதப் பின்புலத்தை இராமானுஜர் வழங்கினார். இந்த வளைவு அதிகரிக்க அதிகரிக்க, பிரபஞ்சத்தில் எது இருக்கிறதோ, பொருள்தன்மையில் இருப்பது, இல்லாமல் ஆகிறது.

நாம் யோகா என்று கூறுவது இதைதான், இந்த வளைவை எப்படி குறைப்பது என்று பார்க்கிறோம். எது பெருமளவு பொருள்தன்மையானதாக இருக்கிறதோ, அது பொருள்தன்மை அல்லாததாக ஆகிறது. பொருள் அல்லாத தன்மையாக ஆகும்போது, நேரமும், பெருவெளியும் பிரச்சனையே இல்லை. நேரமும் பெருவெளியும் பிரச்சனையாக இல்லாமல் ஆகும்போது, தொடர்புகொள்வது மிக சாதாரணமாக நடக்கிறது.