சத்குரு:
நாம் "சிவன்" என்று அழைக்கும் போது, அதில் இரண்டு அடிப்படை தன்மைகளைப் பற்றி குறிக்கிறோம். சிவன் என்ற சொல்லிற்கு "எது இல்லாததோ அது" என்று அர்த்தம்.
இன்று நவீன விஞ்ஞானம், அனைத்துமே வெறுமையில் இருந்து தோன்றி மீண்டும் அதே வெறுமையிலேயே மறைவதாக நமக்கு நிரூபிக்கிறது. இப்போது படைக்கப்பட்டுள்ளவற்றிற்கு மூலமாக இருப்பதும், இந்த பிரபஞ்சத்தின் அடிப்படைத் தன்மையும் பரந்து விரிந்துள்ள எதுவுமற்ற வெறுமை தான். இந்த விண்மீன் மண்டலங்கள் அனைத்துமே ஒரு சிறிய நிகழ்வுதான் - வாசல் தெளித்தது போல. பரந்து விரிந்துள்ள வெறுமையே எங்கும் நிறைந்திருக்கிறது - அதுவே சிவன் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த கருவறையில் இருந்துதான் அனைத்தும் பிறக்கிறது, தோன்றிய அனைத்தையும் மீண்டும் தனக்குள் உள்ளிளுத்து கொள்வதும் அதே இருள் நிறைந்த வெறுமை தான். சிவனில் இருந்தே அனைத்தும் தோன்றுகிறது, மீண்டும் சிவனிடமே திரும்ப சேர்கிறது.
எனவே சிவன் உருவம் இல்லாத அருவமாகவே வர்ணிக்கப்படுகிறான், பொருள் உருவம் கொண்டவனாக அல்ல. சிவன் ஒளியாக வர்ணிக்கப்படவில்லை, இருளாகவே குறிப்பிடப்படுகிறான். மனித குலம் எப்போதும் ஒளியை மட்டுமே உயர்வாக பார்த்து வணங்கக் காரணம், அவர்களின் பார்வைத்திறனால் வெளிச்சத்தில் மட்டுமே இயங்க முடியும் என்பதுதான். மற்றபடி, எப்போதும் இருக்கும் தன்மை என்றால் அது இருள் ஒன்றேயாகும். ஒளி என்பது ஒரு வரையறுக்கப்பட்ட காலம் மட்டுமே இருக்கும் நிகழ்வு - அதாவது ஒளிக்கு எது மூலமாக இருந்தாலும் - ஒரு ஒளி விளக்காக இருந்தாலும், அல்லது சூரியனாக இருந்தாலும் சரி - மெல்ல மெல்ல தன் ஒளி வழங்கும் திறனை அது இழந்துவிடும். அந்த வகையில் ஒளி நித்தியமானது அல்ல. அது எப்போதும் வரையறுக்கப்பட்ட சாத்தியமே ஆகும். ஏனெனில் அது தோன்றி பின்பு ஒரு காலத்தில் மறைந்துவிடும். இருள் என்பது ஒளியைக்காட்டிலும் மிகப்பெரிய ஒரு சாத்தியம். எதுவும் எரியத் தேவையில்லை, அது என்றும் உள்ளது - நித்தியமாய். இருள் என்பது எல்லா இடங்களிலும் உள்ளது. எங்கும் வியாபித்துள்ள ஒரே நிலை இருள் தான்.
ஆனால் "தெய்வீகமான இருள்" என்று அழைக்க துவங்கினால், நாம் ஏதோ பிசாசை வழிபடுவதாக அல்லது அது போன்ற ஏதோ ஒன்றை வழிபடுவதாக மக்கள் நினைக்கின்றனர். உண்மையில் மேற்கத்திய நாடுகளில் சில இடங்களில் சிவன் ஒரு தீயவன் என்று சித்தரிக்கிறார்கள்! ஆனால் இதை நீங்கள் ஒரு கருத்து வடிவமாக பார்த்தால், படைத்தலின் முழு செயல்முறையையும், அது எவ்வாறு நிகழ்ந்தது என்பதை விளக்கும் நுண்ணறிவுள்ள கருத்து இதைத்தவிர உலகில் வேறெதுவும் இல்லை. இது குறித்து அறிவியல் சொற்களை மட்டுமே உபயோகித்து - "சிவன்" என்ற சொல்லை உபயோகிக்காமல் - பல முறை உலகின் பல விஞ்ஞானிகளிடம் நாம் பேசியிருக்கிறோம். "அப்படியா? இது முன்பே அறியப்பட்டதா? எப்போது?" என்று அவர்கள் ஆச்சர்யமடைவார்கள். நாம் இதை பல ஆயிரம் வருடங்களாக அறிந்துள்ளோம். கிட்டத்தட்ட இந்தியாவின் கிராமங்களில் ஒவ்வொரு மனிதரும் கவனமில்லாமலேயே இதை அறிந்து வைத்துள்ளார். இதற்கு பின்னால் என்ன அறிவியல் இருக்கிறது என்பதை பற்றி தெரியாமலேயே பேச்சு வழக்கில் அவர் சாதாரணமாக இதைப் பற்றிப் பேசுகிறார்.
மற்றொரு நிலையில், நாம் சிவன் என்று கூறினால் நாம் ஒரு குறிப்பிட்ட யோகியைக் குறிக்கிறோம் - ஆதியோகியை, உலகின் முதல் யோகியை; மேலும் இன்று யோக விஞ்ஞானமாக நாம் அறிந்துள்ள அனைத்துக்கும் மூலமான ஆதிகுருவை - உலகின் முதல் குருவை - நாம் குறிக்கிறோம். யோகா என்பதன் அர்த்தம் தலைகீழாக நிற்பதோ மூச்சை பிடித்து வைத்துக் கொள்வதோ அல்ல. இந்த உயிரின் அடிப்படையான இயல்பு எப்படி உருவாக்கப்படுகிறது என்பதை அறிவதற்கும், இந்த உயிரை அதன் உச்சபட்ச சாத்தியத்துக்கு எப்படி எடுத்துச் செல்வது என்பதை மனித குலம் முழுமைக்கும் சாத்தியமாக்கியுள்ள அறிவியலும் தொழில்நுட்பமுமே யோகா.
இமாலயத்தின் மடியில், கேதார்நாத்தை கடந்து சில மைல் தொலைவில் பனிக்கட்டியாக உறைந்திருக்கும் காந்திசரோவர் ஏரியின் கரையில் தான் யோக விஞ்ஞானத்தின் முதல் பரிமாற்றம் நிகழ்ந்தது. ஆதியோகி தன்னுடைய முதல் ஏழு சீடர்களுக்கும் அங்கு தான் இந்த உள்நிலை தொழில்நுட்பத்தை முறைப்படுத்தி பரிமாற துவங்கினார். அந்த ஏழு சீடர்களே இன்று சப்தரிஷிகள் என்று கொண்டாடப்படுகின்றனர். உலகில் எந்த மதமும் தோன்றுவதற்கு முந்திய நிகழ்வு இது. இனி எப்போதும் இதை சரிசெய்யவே முடியாதோ என்ற நிலை ஏற்படுமளவுக்கு மனித சமூகத்தை பிரிவினைகளால் முறிக்கும் வழிகளை மக்கள் கண்டுபிடிக்கும் முன்னரே மனித விழிப்புணர்வு மேம்பட தேவையான சக்தி வாய்ந்த கருவிகள் அறியப்பட்டு பரப்பப்பட்டன.
எனவே "சிவன்" என்பது "எதுவுமற்ற தன்மை" மற்றும் ஆதியோகி இரண்டையுமே குறிக்கும். ஏனெனில் பல வகையில் இருவரும் பொருந்தி போகிறார்கள்.. யோகியாகிய இந்த உயிருரு மற்றும் படைத்தலுக்கு மூலமாக, அருவமாக இருக்கும் வெறுமை தன்மை இரண்டும் ஒன்றே. ஏனெனில் ஒருவரை யோகி என அழைக்கவேண்டும் என்றால், அவர் இந்த பிரபஞ்சத்தை, படைக்கப்பட்டுள்ள அனைத்தையும் அனுபவப்பூர்வமாக தன்னில் ஒரு பாகமாக உணர்ந்திருக்கிறார். படைத்தல் முழுவதும் ஒரு ஷண நேரமாவது உங்களுக்குள் அடங்கிட வேண்டுமென்றால், நீங்கள் அந்த "ஏதுமற்ற வெறுமை" நிலையாக இருந்தால் மட்டுமே முடியும். ஏதுமற்ற வெறுமையால் மட்டும்தான் அனைத்தையும் தன்னுள் ஏற்றுக்கொள்ள முடியும். ஏதோ ஒன்றாக இருந்தால் அதற்குள் எல்லாமும் அடங்க முடியாது. ஒரு பாத்திரத்தில் பெருங்கடலை பிடித்துவைக்க முடியாது. இந்த பூமியால், ஒரு பெருங்கடலை தன்னில் ஏற்றுக்கொள்ள முடியும், ஆனால் சூரிய மண்டலத்தை தன்னில் கொள்ள முடியாது. சில கிரகங்கள் மற்றும் சூரியனை சூரிய மண்டலத்தால் தனக்குள் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் மற்ற வீண்மீன் மண்டலங்களை தன்னில் கொள்ளாது. இப்படியே ஒவ்வொரு படிப்படியாக நீங்கள் பார்த்தால் முடிவில் "ஏதுமற்ற வெறுமை" தன்மையால் மட்டுமே அனைத்தையும் தனக்குள் கொள்ள முடியும் என்பதை அறிவீர்கள். "யோகா" என்ற சொல்லுக்கு "ஒருமை", "ஐக்கியம்" என்று பொருள். யோகி என்பவர் அந்த ஐக்கியத்தை ஒரு ஷண நேரமாவது உணர்ந்துள்ளார். அப்படியென்றால், அவர் ஒரு ஷண நேரமாவது முற்றிலும் வெறுமையாக ஏதுமற்ற நிலையில் இருந்துள்ளார்.
நாம் சிவனை "ஏதுமற்ற தன்மை" என்றும், ஒரு யோகி என்றும் குறிப்பிட்டு பேசும் போது, ஒரு வகையில் அவை ஒரே பொருள் தந்தாலும், இவை இரண்டும் வெவ்வேறு அம்சங்கள். இந்திய கலாச்சாரமே விவாதம், வாதம் சார்ந்து இருப்பதால் நாம் அதிலிருந்து இதற்கும், இதிலிருந்து அதற்கும் எளிதாக மாறும் தன்மையில் உள்ளோம். ஒரு கணம் சிவனை உச்சபட்சமான தன்மை என்போம். மறு கணமே, சிவன் என்னும் மனிதன் தான் இந்த முழு யோக முறையையும் நமக்கு வழங்கியத்தைக் குறித்து பேசுவோம்.
துரதிர்ஷ்டவசமாக, இன்று மக்கள் பலருக்கும் சிவனை இந்திய நாட்காட்டிகளில் உள்ள ஓவியங்களே அறிமுகம் செய்கிறது. அந்த ஓவிய கலைஞர்கள் சிவனை கொழு கொழு கன்னங்கள் கொண்டவனாக, நீல நிறமான மேனி யுடையவனாகவே சித்தரிக்கின்றனர். ஏனெனில் அந்த கலைஞர்களால் எப்போதும் ஒரு குறிப்பிட்ட முகத்தை மிக சுலபமாக வரைந்து விட முடிகிறது.. அவர்களிடம் கிருஷ்ணரை வரையச் சொன்னால் அவர்களுக்கு எளிதாக வரும் ஒரு முகத்தை வரைந்து, கையில் ஒரு புல்லாங்குழலை வரைந்துவிடுவார்கள். ராமரை வரையச் சொன்னால் அதே முகத்தை வரைந்து கையில் வில்லை கொடுத்துவிடுவார்கள். சிவனை வரையச் சொன்னால் அதே முகம் இருக்கும், தலையில் ஒரு பிறையை சேரத்து வரைந்துவிடுவார்கள். அவ்வளவே!
ஒவ்வொரு முறை அந்த நாட்காட்டிகளைப் பார்க்கும் போதும் அந்த ஓவியர் முன் நாம் எப்போதும் அமர்ந்து விடக்கூடாது என்று தீர்மானம் எடுப்பேன். புகைப்படங்கள் சரியாக காட்டிவிடும் - நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அப்படித்தான் உங்களை படம் பிடிக்கும்.. நீங்கள் ஒரு பிசாசைப் போல் இருந்தால் புகைப்படத்திலும் பிசாசாகத் தான் வரும். சிவனைப் போன்ற ஒரு யோகி எவ்வாறு கொழு கொழு கன்னங்களோடு இருக்க முடியும்? அவரை இறுகிய உடல் கொண்டவனாக வரைந்து இருந்தால் கூட சரி ஆனால் கொழு கொழு கன்னங்களோடு சிவன் எவ்வாறு சாத்தியம்?
யோக கலாச்சாரத்தில் சிவன் கடவுளாக பார்க்கப்படுவதில்லை. இந்த நிலத்தில் நடந்து திரிந்து இமாலய மலைப் பிரதேசத்தில் வாழ்ந்தவன் அவன். யோக மரபிற்கே மூலமானவனாக இருந்து, மனித விழிப்புணர்வை உருவாக்கியதில் சிவனின் பங்களிப்பு புறக்கணிக்க முடியாத அளவிற்கு மிக மகத்தானது. மனிதன் எனும் தன்மையை அதன் உச்சபட்ச சாத்தியத்திற்கு நீங்கள் எடுத்துச் செல்வதற்கு என்னென்ன வழிமுறைகள் இருக்கிறதோ, அது எல்லாமே பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே ஆராயப்பட்டுள்ளது. அந்த வழிமுறைகளின் நுட்பம் நம்பமுடியாத அளவுக்கு மிக ஆச்சர்யத் தக்கது. மனிதர்கள் அந்த காலத்தில் அவ்வளவு நுட்பத்துடன் இருந்தார்களா என்ற கேள்வி வரவே தேவையில்லை. ஏனெனில் இந்த வழிமுறைகள் ஒரு குறிப்பிட்ட நாகரிகத்தில் இருந்தோ எண்ணங்கள் தோன்றும் முறையில் இருந்தோ வரவில்லை. உள்நிலையில் தன்னை அறிதலின் மூலம் இது நிகழ்ந்திருக்கிறது. சிவனுக்குள் நடந்தவைக்கும், அப்போது வெளி உலகில் என்ன சூழ்நிலை இருந்தது என்பதற்கும், எந்த சம்பந்தமும் இல்லை. சிவன் வெறுமனே தன்னில் நிகழ்வதை வெளிப்படுத்திக் கொண்டார்.
மனித உடலமைப்பில், ஒவ்வொரு புள்ளியிலும் அதன் அர்த்தத்தையும், அதில் நீங்கள் என்ன செய்யமுடியும் என்ற சாத்தியத்தையும் அவர் தெள்ளத்தெளிவாக விவரிக்கிறார். இன்றும்கூட அவர் சொன்னதில் இருந்து அதில் ஒரு சின்ன விஷயத்தைக் கூட உங்களால் மாற்றிக் கூற இயலாது. ஏனெனில் அவர் சொல்லக்கூடிய அனைத்தையும் அழகாகவும் மிக நுட்பமான வழியிலும் முழுமையாக கூறிவிட்டார். அவற்றை புரிந்து கொள்ள மட்டுமே நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவிட வேண்டும்.