கங்கணா ரணாவத் : கிருஷ்ணன், முகமது, ராமன், கிறிஸ்து, புத்தர் போன்று, இந்த பூமியில் இருந்த எல்லா ஞானமடைந்தவர்களுக்கும், அவர்களது பிறப்பு அல்லது இறப்பு பற்றி ஏதோ சில குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் சிவா பற்றிப் பேசும்போது, அவர் சுயம்புவானவர் என்று நான் படித்திருக்கிறேன். சிவா, ஒரு வேற்றுக்கிரகவாசி என்ற ஒரு தத்துவம் உள்ளது. மேலும், ஒரு மனிதர் எதிர்கொள்ளும் அனைத்தும் – அது ஒரு கருத்து, எண்ணம் என்று எதுவாகவும் இருக்கலாம் – ஒரு வேற்று வெளி, ஒரு வேற்று உயிர் மூலமாக பரிமாற்றம் செய்யப்படுவதாக ஒரு தத்துவமும் இங்கு இருக்கிறது. நாம் வேற்று உயிர்களால் இயக்கப்படுகிறோமா?

சத்குரு: மனித புத்திசாலித்தனத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்ட மக்கள், புத்திசாலித்தனம் எங்கிருந்தோ வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டு, மேலே பார்த்துக்கொண்டிருக்கின்றனர். துரதிருஷ்டவசமாக, தற்போதைய இந்தத் தலைமுறையினர் பெருமளவு மறந்தே போய்விட்ட, மிக முக்கியத்துவம் வாய்ந்த பல விஷயங்கள் இருக்கின்றன. உதாரணமாக, யோகாவில், முதுகுத்தண்டினை நாம் மேருதண்டம் – பிரபஞ்சத்தின் அச்சாணி – என்றழைக்கிறோம். பிரபஞ்சம் முடிவில்லாதது என்பதை இன்றைக்கு விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்கின்றனர். இந்தக் கலாச்சாரத்தில், அது எப்பொழுதும் விரிவடைந்துகொண்டே இருக்கும் பிரபஞ்சம் என்று நாம் கூறிவந்துள்ளோம்.

உணர்தலின் மையம்

உங்களது முதுகுத்தண்டு, பிரபஞ்சத்தின் அச்சாணி என்று நாம் அழைப்பது ஏனென்றால், பிரபஞ்சத்தை உணரக்கூடிய உங்களது திறன், உங்கள் முதுகுத்தண்டில் வேர்கொண்டு மையம் கொண்டிருக்கிறது.

மேலோட்டமாகப் பார்த்தால், உங்களது முதுகுத்தண்டு பிரபஞ்சத்தின் அச்சாணியாக இருக்கிறது என்று கூறுவது நகைப்புக்குரியதாகத் தோன்றுகிறது. ஆனால், நாம் ஏன் இப்படி கூறிக்கொண்டிருக்கிறோம்? உங்களது உணர்தலினால்தான் ஒரு பிரபஞ்சம் இருக்கிறது என்று எண்ணுகிறீர்கள். உங்களால் எதையும் பார்க்கவோ அல்லது உணரவோ முடியவில்லையென்றால், ஒரு பிரபஞ்சம் இருப்பதை நீங்கள் அறிந்துகொள்ளமாட்டீர்கள். உங்களது உணர்தலின் காரணமாகத்தான், பிரபஞ்சம் ஒன்று இருக்கிறது. மேலும், உங்கள் முதுகுத்தண்டு, உங்களது உணர்தலை நகர்த்திச்செல்லும் மையமாக விளங்குகிறது.

உங்கள் முதுகுத்தண்டில் உள்ள நரம்புகளை நாம் வெட்டிவிட்டால், பிரபஞ்சத்தைப் பற்றி என்ன, இந்த உடல் பற்றிய உணர்தல்கூட உங்களுக்கு இருக்காது. உங்களது முதுகுத்தண்டு, பிரபஞ்சத்தின் அச்சாணி என்று நாம் அழைப்பது ஏனென்றால், பிரபஞ்சத்தை உணரக்கூடிய உங்களது திறன், உங்கள் முதுகுத்தண்டில் வேர்கொண்டு மையம் கொண்டிருக்கிறது.

இந்த அடிப்படையில்தான், இதுபோன்ற விஷயங்களை வெறுமனே நம்பிக்கொண்டு இல்லாமல், அவை மனிதர்களுக்கு ஒரு உயிர்ப்பான அனுபவமாக்கும் நோக்கத்துடன், முழுமையானதொரு சாத்தியத்தை நாம் உருவாக்கினோம். இங்கிருந்துதான் “யோகா” என்ற சொல் எழுந்தது. உங்களது தனிமனிதத் தன்மையின் எல்லைகளை நீங்கள் அழித்துவிட்டால், மிக எளிதாக இணைதல் நிகழ்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

‘நான் உன்னை நேசிக்கிறேன், நீ என்னை நேசி. நான் உன்னைத் தழுவுகிறேன், நீ என்னைத் தழுவு” – என்றெல்லாம் கூறும் காரணத்தினால் நாம் இணைத்துக்கொள்வதாக அர்த்தமில்லை. அவைகள் சிறிது காலம் மட்டுமே நீடிக்கும். நாளைக்கே, உங்களுக்கு விருப்பமில்லாத ஏதோ ஒன்றை அவர்கள் செய்தால், அது முடிந்துபோகும். யோகா என்றால், உங்கள் உடல் உள்ளிட்ட உங்களுடைய தனிமனித இயல்பின் எல்லைகளை இல்லாமல் செய்வது. அதனால், நீங்கள் யார் என்ற எல்லைகளுடன் அடையாளம் கொள்ளாமல் இங்கே எப்படி இருப்பது என்பதை நீங்கள் அறிகிறீர்கள்.

சி-வா— “எது இல்லாததோ அது”

 

உங்களது உடல் கட்டமைப்பு, மனக் கட்டமைப்பு மற்றும் உணர்ச்சிக் கட்டமைப்புக்கு ஒரு எல்லை உண்டு – அது பெரிதாக அல்லது சிறிதாக இருக்கலாம். ஆனால் எல்லை என்பதே இல்லாத பரிமாணங்கள் இருக்கின்றன. எல்லை என்பது இல்லாதது எதுவோ, அது பொருள்தன்மையற்ற இயல்பில் இருக்கிறது. பொருள்தன்மையற்ற அந்தப் பரிமாணத்தின் மீது நாம் எப்போதுமே கவனம் குவித்து வந்துள்ளோம். அதனால்தான் சிவா மிக முக்கியமானதாகிவிட்டது, ஏனென்றால் சி-வா என்றால் "எது இல்லாததோ அது,” பொருள்தன்மையற்றதாக இருப்பது எதுவோ அது.

நாம் பேசிக்கொண்டிருக்கும் அந்த யோகி – அவர் ஒரு மனிதரா அல்லது அவர் வேறு எங்கிருந்தோ வந்தாரா? இது ஒரு நீண்ட கதை.

நாம் பேசிக்கொண்டிருக்கும் அந்த யோகி – அவர் ஒரு மனிதரா அல்லது அவர் வேறு எங்கிருந்தோ வந்தாரா? இது ஒரு நீண்ட கதை. இந்த அம்சங்களை ஆராயும் ஆதியோகி என்ற புத்தகம் நம்மிடம் உள்ளது. சிவா பற்றி நாம் பேசும்போது, அவருக்குத் தாய் தந்தை இல்லை, பிறந்த இடம் இல்லை. அவரை இளமைப் பருவத்தில் வளர்ந்து வருவதைப் பார்த்தவர் எவருமில்லை. மக்கள் அவரைப் பார்த்தபோது, எப்போதும் ஒரே வயதுடையவராகவே அவர் இருந்தார். மேலும் அவர் எங்கே இறந்தார் என்றும் நமக்குத் தெரியவில்லை. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மனிதர் எங்காவது இறந்திருந்தால், அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் ஒரு கோயிலோ அல்லது ஏதோ ஒரு நினைவுச் சின்னமோ கட்டியிருக்க வேண்டும் – அந்த மாதிரி எதுவும் நிகழவில்லை.

 

யக்ஷஸ்வரூபன்: வேறு எங்கிருந்தோ வந்த உயிர்

 

பிறப்பில்லை, இறப்பில்லை, தாய் தந்தை இல்லை, குழந்தைகள் இல்லை – இங்கே அவர் இருந்ததை நிரூபிப்பதற்கு எதுவுமில்லை. அவர் வேறு எங்கோ இருந்து வந்தவர் என்று நாம் யூகம் செய்துகொள்ளலாம் என்பதுதான் இதற்கு அர்த்தமா? அப்படி அவசியமில்லை. ஆனால் நீங்கள் புராணத்தைப் பார்த்தால், பொதுவாக சிவன் “யக்ஷஸ்வரூபன்” என்று குறிப்பிடப்படுகிறார். “யக்ஷன்” என்றால் மனிதரல்லாத உயிர்கள் அல்லது படைப்புகள் என்று பொருள். ஆனால் இந்த பூமியின் இயற்கையான சூழல்களாகிய காடு மற்றும் அதைப்போன்ற பகுதிகளில் இருந்து வந்தவர்களாக நம்பப்படுகிறது. இதைச் சுட்டிக்காட்டும் விதம், பொதுவான பல விஷயங்கள் இருக்கின்றன, ஆனால் அவர் வேறு எங்கிருந்தோ வந்தவர் என்பதற்கான குறிப்பிட்ட சான்று எதுவுமில்லை.

நவீன விஞ்ஞானம் பின்தங்கியுள்ளது

சுமார் 60,000-த்திலிருந்து 70,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், சிவன் அல்லது ஆதியோகி என்பவர் இந்த மண்ணில் ஒரு மனிதராக வாழ்ந்து, நடமாடினார் என்று யோகப் பாரம்பரியத்தில் கூறப்படுகிறது. நான் இதை முதலில் கூறியபோது, என்னைச் சுற்றியிருந்த அறிவு சார்ந்த மக்கள், கல்வியில் சிறந்த இளையோர் – கூறினர், “சத்குரு, நீங்கள் 75,000 என்று கூறினால், மக்கள் உங்களைத் துளைத்துவிடுவார்கள். ஆதியோகி அல்லது சிவன் இருந்தார் என்பதற்கான ஒரே தொல்லியல் சான்று சுமார் 12,600 ஆண்டுகள் பழமையானது. ஆகவே, 12,600, 13,000 அல்லது 14,000 என்று கூறுங்கள்” என்றனர். நான், “சரி – 15,000,” என்றேன். 30,000 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நாட்டின் ஒரு பகுதியில் நாகரீகமடைந்த சமூகம் ஒன்று இருந்ததற்கான தொல்லியல் சான்று இன்றைக்கு உள்ளது.

15,000 ஆண்டுகளுக்கு முன்பு என்று நான் கூறுவதன் காரணம், மேற்கு உலகில் அந்த எண் ஏற்றுக்கொள்ளப்படலாம். நான் 75,000 ஆண்டுகள் என்று கூறினால், அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். ஏனெனில், உலகம் ஆறாயிரம் ஆண்டுகள் மட்டுமே பழமையானது என்பது அவர்களின் கருத்து. ஆறு நாட்களில் படைப்பு நிகழ்ந்தது என்பதுடன் அது ஆறாயிரம் ஆண்டுகள்தான் பழமையானது என்று அவர்கள் கூறினர். இத்தனை நூற்றாண்டுகளாக, அவர்கள் அதை வலியுறுத்தினர். இப்போது, அவர்கள் தங்களையே மெல்லத் திருத்திக்கொண்டிருக்கின்றனர். ஏனென்றால், அறிவியல் வேறு விஷயங்களை நிரூபிக்கிறது. நாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பேசிக்கொண்டிருக்கும் விஷயங்களை நவீன விஞ்ஞானம், அடுத்த ஐம்பது வருடங்களில் பேசும். இதை நீங்கள் பார்ப்பீர்கள்.

ஆசிரியர் குறிப்பு : "ஆதியோகி - சிவன் யோகத்தின் மூலம்" - முன்பின் அறிந்திராத வகையில் ஆதியோகி பற்றி பேசப்படாத உண்மைகள் இந்நூலில் கேள்வி பதில்களாய், சிந்தனை அலைகளாய் எழும் மகத்துவம், வாசகரை பரவசத்தில் ஆழ்த்தி முற்றிலும் வேறொரு பரிமாணத்திற்கு இட்டுச் செல்லும். இந்நூலை ஆன்லைனில் ஆர்டர் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

ஆதியோகியின் முன்னிலையில் நிகழவிருக்கும் மஹாசிவராத்திரி விழாவிற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

msr-nl-banner