சத்குருவுடன் தனிப்பட்ட உரையாடல்

கேள்வியாளர்: நீங்கள் காலையில் எழுந்ததும், முதலில் செய்வது என்ன?

சத்குரு: நான் கண்களைத் திறப்பேன்.

கேள்வியாளர்: அதற்குப் பின்னர்? உங்கள் மனதில் வரும் முதல் விஷயம் என்ன?

சத்குரு: எதற்காக என் மனதில் எதுவும் வரவேண்டும்? நான் விரும்பினால் ஒழிய எதுவும் என் மனதில் வருவதில்லை.

கேள்வியாளர்: நீங்கள் தினமும் அதிகாலை 3:30 மணிக்கு எழுந்திருப்பதாக எங்கோ சொன்னதாக ஞாபகம். அது சரியானதா?

சத்குரு: உடல் விழிப்படைத்துவிடும், ஆனால் அது நான் படுக்கைக்குச் சென்ற நேரத்தைப் பொறுத்தது. இன்று நான் 3:15 அல்லது அதற்கு மேல் எழுந்தேன். ஆனால் நான் ஒரு மணிக்குதான் படுக்கைக்குச் சென்றேன். எழுந்த பின்னர் கோல்ஃப் விளையாட்டு, சில நேர்காணல்கள், நிகழ்ச்சிகள் மற்றும் வேறு சில விஷயங்களில் ஈடுபட்டிருந்தேன். இப்போது இங்கே நான் உங்களுடன் இருக்கிறேன், இது தொடரும். நாளை நான் லண்டனில் இருப்பேன் .

கேள்வியாளர்: எதுவும் செய்ய தேவையில்லாத நேரங்களில் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள்?

சத்குரு: நான் ஒன்றும் செய்வதில்லை. உண்மையில் எதுவும் செய்வதில்லை. இந்த நாட்களில், எனக்கு அந்தமாதிரி நேரம் கிடைக்கவில்லை, ஆனால் நான் கதவுகளை மூடினால், புத்தகங்கள் படிப்பதில்லை, ஜன்னலுக்கு வெளியே பார்ப்பதில்லை, டெலிவிஷன் பார்ப்பதில்லை, கைப்பேசியையும் பார்ப்பதில்லை. நான்கு, ஐந்து நாட்களுக்கு நான் என் கதவுகளை மூடினால் கூட, அந்த நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு என்னுள் ஒரு எண்ணமும் எழாது, அதுவே எனது வாழ்க்கையின் சிறந்த நேரம்.

ஒரு குரு என்ன செய்வார்?

முழு மாற்றம் என்பது பொருள் தன்மைக்கு அப்பாற்பட்ட ஒன்று. நீங்கள் இங்கே உட்கார்ந்திருக்கும்போது, உங்கள் உடல் முக்கியமான விஷயம் அல்ல. அதைவிட மிகப் பெரிய ஒன்று உங்களுக்கு நடக்கிறது.

கேள்வியாளர்: குருவாக உங்கள் பங்கை எவ்வாறு வரையறுப்பீர்கள்? நீங்கள் உண்மையில் என்ன செய்கிறீர்கள்?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு: நான் ஒன்றும் செய்யமாட்டேன், எதையும் செய்யக்கூடாது என்பதை மக்களுக்கு கற்றுக்கொடுக்கிறேன்.

கேள்வியாளர்: ஒன்றும் செய்யாமல் எப்படி இருப்பது? ஆனால் என்னவெல்லாம் செய்வது என்ற அறிவுரை நிரப்பப்பட்ட உங்களுடைய புத்தகத்தை நான் படித்திருக்கிறேன்.

சத்குரு: அப்படியா? நான் ஒருபோதும் யாருக்கும் அறிவுரை கூறுவதில்லை.

கேள்வியாளர்: அது இன்னர் இன்ஜினியரிங் என்று அழைக்கப்படுகிறது. உங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் செய்யக்கூடிய நல்ல, சிறிய சிறிய விஷயங்கள் நிறைய உள்ளன என்பதைப் பற்றியது.

சத்குரு: புத்தகம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டதால்தான் - அவர்கள் சிறு துணுக்குகளை விரும்புகிறார்கள். "அதிலிருந்து எதை பின்பற்றுகிறார்கள்?"

கேள்வியாளர்: இதன் பின்னணியில் உள்ள ஒரே காரணமா?

சத்குரு: அப்படியல்ல, சிறிய விஷயங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இந்த விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு கொஞ்சம் ஆரோக்கியத்தைத் தரும், அது வளர்ச்சியல்ல. நீங்கள் ஒரு மாற்றத்தை விரும்பினால், உங்கள் உடலின் வடிவத்தை மாற்ற வேண்டுமா? நீங்கள் ஒரு வால் அல்லது கொம்பை வளர்த்தால், நீங்கள் மாற்றப்படுவீர்களா? உங்கள் தோற்றத்தில் மாற்றம் இருக்கும், ஆனால் நீங்கள் மாற்றப்படுவீர்களா?

கேள்வியாளர்: நான் எப்படி உணர்கிறேன், நான் யார் என்பதை பற்றி சொல்கிறீர்களா?

சத்குரு: உங்கள் அனுபவத்தின் மூலம், நீங்கள் மாற்றப்படுவீர்களா? உண்மையான மாற்றம் என்பது உங்கள் உடல் தன்மையை தாண்டி மட்டுமே நிகழும். யாராவது உடற்பயிற்சி செய்து நல்ல உடற்கட்டை பெற்றுவிட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். அது மாற்றம் அல்ல. அவர்கள் வாழ்க்கையில் கொஞ்சம் திறமைசாலி ஆகிவிட்டனர். இதேபோல், அவர்கள் நினைக்கும் மற்றும் உணரும் விதத்தை அவர்கள் மாற்றினால், அவை இன்னும் கொஞ்சம் உகந்ததாக மாறக்கூடும், ஆனால் அதுவும் முழு மாற்றம் அல்ல. சிறிய மாற்றங்கள் நடக்கும். முழு மாற்றம் என்பது பொருள் தன்மைக்கு அப்பாற்பட்ட ஒன்று. நீங்கள் இங்கே உட்கார்ந்திருக்கும்போது, உங்கள் உடல் முக்கியமான விஷயம் அல்ல. அதைவிட மிகப் பெரிய ஒன்று உங்களுக்கு நடக்கிறது.

நீங்கள் அதை உயிர் என்று அழைக்கலாம். அல்லது விழிப்புணர்வு என்று அழைக்கலாம். நீங்கள் அதை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். ஆனால், உள்நிலை பரிமாற்றம் நிகழ்வதற்கு, நீங்கள் என்று தற்போது எதை நினைக்கிறீர்களோ அந்த உருவத்திற்கு அப்பாற்பட்ட ஏதோ ஒன்று நிகழத் தேவையிருக்கிறது.. அதைக் கொண்டுவரதான் நாம் எப்போதுமே பார்த்துக் கொண்டிருக்கிறோம். பல முறைகள் உள்ளன. உங்களுக்கு தற்போது தலைவலி இருந்தால், நான் உங்களிடம் ஞானமடைதல் பற்றி பேசினால், நீங்கள் ஆர்வம் காட்ட மாட்டீர்கள். உங்களுக்கு தலைவலி மறைய வேண்டும். எனவே இப்போது தலைவலி பற்றி பேசுவோம், ஆனால் என் ஆர்வம் தலைவலி பற்றி அல்ல. எனது பணி தலைவலியில் இருந்து மக்களை குணப்படுத்துவது அல்ல. ஆனால் இப்போது தலைவலி இருக்கும்போது, வேறு எதைப் பற்றியும் உங்களுடன் பேச முடியாது என்பதால், நாங்கள் உங்கள் தலைவலியிலிருந்து பேசுகிறோம். ஆகவே, அந்தச் சிறு குறிப்புகள் அனைத்தும் அப்படித்தான், வாழ்க்கையின் சிறிய பிரச்சனைகளைத் தீர்க்கின்றன.

வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சனை

கேள்வியாளர்: எனவே வாழ்க்கையில் பெரிய பிரச்சனை ஞானமடைதலாக இருக்குமா?

சத்குரு: வாழ்க்கையில் பெரிய பிரச்சனை இதுதான்: இந்த வாழ்க்கை என்பதின் அடிப்படை தன்மை உங்களுக்குத் தெரியாது. இந்த கைப்பேசி எவ்வாறு இயங்குகிறது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், அதை நீங்கள் நன்றாக பயன்படுத்த முடியுமா? இதைப் பற்றி நீங்கள் எவ்வளவு அதிகமாக அறிந்திருக்கிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக அதைப் பயன்படுத்தலாம். மனித வழிமுறையில் அது ஏன் உண்மையாக இருக்கக்கூடாது? இதைப் பற்றி நீங்கள் எவ்வளவு அதிகமாக அறிந்திருக்கிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக அதைப் பயன்படுத்தலாம். இதைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் நீங்கள் அறிந்திருந்தால், இது தன்னை உணர்தல் என்று அழைக்கப்படுகிறது. இதைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் நீங்கள் அறிந்தவுடன், நீங்கள் விரும்பும் வழியில் அதைப் பயன்படுத்தலாம்.

ஞானோதயம்: ஆடம்பரமா அல்லது அவசியமா?

புத்திசாலித்தனம் என்பது பற்றிய உங்கள் யோசனை என்ன? சிக்கல்களை உருவாக்குவது புத்திசாலித்தனமா அல்லது தீர்வுகளை உருவாக்குவதா?

கேள்வியாளர்: ஞானோதயம் ஒரு ஆடம்பரமானது என்று நினைக்கிறீர்களா?

சத்குரு: இது ஒரு முழுமையான அவசியம். அடிப்படையில், இந்த உலகில் ஒரே ஒரு பிரச்சனைதான், அது மனிதர்கள்.

கேள்வியாளர்: நாம் நிறைய சிக்கல்களை உருவாக்கியுள்ளோம்.

சத்குரு: இந்த கிரகத்தில் மிகவும் பரிணாம வளர்ச்சியடைந்த மற்றும் மிகவும் புத்திசாலித்தனமான உயிரினமாக கருதப்படும் ஒரு மனிதர் ஏன் ஒரு பிரச்சனையாக இருக்கிறார்? ஏனென்றால், அவர்களின் இருப்பின் தன்மை என்ன என்பதை அவர்கள் உணரவில்லை. நீங்கள் குறைந்த புத்திசாலித்தனம் கொண்டவராக இருந்தால், நீங்கள் நன்றாக இருப்பீர்கள். நீங்கள் ஏரியில் ஒரு மீனாக இருந்தால் அங்கே நீந்துவீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் சாப்பிட்டு நன்றாக இருப்பீர்கள். நீங்கள் காட்டில் ஒரு மிருகமாக இருந்தால், எதையாவது வேட்டையாடி சாப்பிட்டு நன்றாக இருப்பீர்கள். ஆனால் நீங்கள் இந்த அளவிலான நுண்ணறிவு மற்றும் பரிணாம வளர்ச்சியுடன் வந்ததால், நீங்களே ஒரு பிரச்சனையாகி விடுகிறீர்கள். முன்னோக்கி நடப்பதே ஒரு பிரச்சனையாகிவிட்டது. உங்களிடம் உள்ள மிகப் பெரிய விஷயம் உங்கள் புத்திசாலித்தனம், அதுதான் உங்களை குழப்புகிறது. மனிதர்கள் மிகவும் பரிணாம வளர்ச்சியடைந்தவர்களாகவும், புத்திசாலித்தனமாகவும் இருக்க வேண்டும், ஆனால் அவர்கள்தான் எல்லா பிரச்சனைகளுக்கும் ஆதாரமாக இருக்கின்றனர். புத்திசாலித்தனம் என்பது பற்றிய உங்கள் யோசனை என்ன? சிக்கல்களை உருவாக்குவது புத்திசாலித்தனமா அல்லது தீர்வுகளை உருவாக்குவதா?

கேள்வியாளர்: கடைசியாக சொன்னது.

சத்குரு: பிறகு என்ன? எனவே ஞானோதயம் அவசியமா அல்லது அது ஒரு ஆடம்பரமா?

கேள்வியாளர்: இது அவசியம் என்றே நான் நினைக்கிறேன்.

சத்குரு: அவ்வளவுதான். முயற்சி எடுக்க வேண்டிய நேரம் இது.