உலகளவில் விவசாய நிலச் சீரழிவை தடுக்க மண் காப்போம் இயக்கத்தின் தீர்வு - COP15 ல் வழங்கப்பட்டது
சத்குரு, UNCCD COP15 நிகழ்ச்சியில் வழங்கிய தனது உரையில், மண்ணைக் காக்க ஒற்றை முனைக் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும் மண்ணின் கரிம வளத்தை உயிர்ப்பிக்க செயல்படுத்தக்கூடிய மும்முனை உத்தியைப் பரிந்துரைத்தார். அவர் உரையின் சுருக்கம் இங்கே.
பெரிய அளவில் மண்ணைக் காப்பாற்ற ஆழமாக வேரூன்றிய மக்கள் இயக்கத்தை நாம் உருவாக்க வேண்டும். நாம் எதிர்கொள்ளும் சூழலியல் பிரச்சனையின் சிக்கலான தன்மையைப் பொருட்படுத்தாமல், தீர்வு நடவடிக்கையை செம்மைப்படுத்தி சுருக்கமான எளிமையான ஒரே ஒரு நோக்கமாக தெளிவாக கூற முடிந்தால் மட்டுமே வெற்றிகரமான மக்கள் இயக்கத்தை உருவாக்க முடியும். பெரும்பாலும் சிக்கலான அறிவியல் வாதங்களை எளிமையான செயல்களாக மாற்றத் தவறியதால், நமது சூழலியல் முயற்சியின் வரலாறு மிகச் சில தெளிவான வெற்றிகளைக் காட்டுகிறது. 1987 ஆம் ஆண்டின் மாண்ட்ரீயல் நெறிமுறையானது இன்றுவரை மிகவும் வெற்றிகரமான ஒற்றை சர்வதேச உடன்படிக்கையாகப் போற்றப்படுகிறது - ஏனென்றால் ஒரே ஒரு காரியத்தைச் செய்வதில், ஓசோன் படலம் மேலும் சிதைவை நிறுத்துவதில், ஒற்றைக் கவனம் செலுத்தப்பட்டதால் அது நிகழ்ந்தது.
ஏறக்குறைய அதே வழியில், பல்வேறு வகையான மண் நிலைகளிலும், பல்வேறு வேளாண் காலநிலை மண்டலங்களிலும், கலாச்சார மற்றும் பொருளாதார மரபுகளின் மாறுபட்ட சூழல்களிலும் நிலச் சிதைவின் சிக்கலை எவ்வாறு கையாள்வது என்பதில் பல அறிவியல் நுணுக்கங்கள் உள்ளன. ஆயினும், ஒரு பரந்த அளவிலான குறுக்கோளினை வரைமுறைப்படுத்துவது சாத்தியமாகும் - இது விவசாய மண்ணில் குறைந்தபட்சம் 3-6% கரிம வளம் இருப்பதை உறுதி செய்வதாகும். இது நமது மண்ணை உயிர்ப்புடன் வாழச் செய்யும், மேலும் அனைத்து விவசாய நிலங்களிலும் நிலையான செழிப்பைக் கொடுக்கும்.
நடைமுறை ரீதியான ஒரு மும்முனை உத்தி மூலம் விவசாய மண்ணில் குறைந்தபட்சம் 3-6% கரிம வளம் இருப்பதை உறுதி செய்வதற்கான இந்த பரந்த குறிக்கோளினை அடையலாம்:
- இந்த வரம்பிற்கு வருவதற்கு கவர்ச்சிகரமான ஊக்குவிப்புகளை வழங்குவதன் மூலம், 3-6% கரிம வளத்தின் குறைந்தபட்ச வரம்பை விவசாயிகள் அடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இத்தகைய ஊக்குவிப்புகள் விவசாயிகள் மத்தியில் ஒரு ஆர்வமுள்ள போட்டியை உருவாக்கும். பல ஆண்டுகளில் கட்டம்கட்டமாக செயல்படுத்தும் ஒரு திட்டமாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் - முதல் கட்டம் உத்வேகம் அளிப்பது, அதைத் தொடர்ந்து இரண்டாவது கட்டம் ஊக்கத்தொகைகள் வழங்குவது, இறுதியில் மூன்றாம் கட்டம் சில பொருத்தமான தூண்டுதல்களுடன்.
- விவசாயிகளுக்கு கார்பன் வரவினங்களை எளிதாக்க வேண்டும். விவசாயிகள் கார்பன் வரவின பலன்களைப் பெறுவதற்கான தற்போதைய செயல்முறைகள் மிகவும் சிக்கலானவை - எனவே குறிப்பிடத்தக்க வகையில் எளிமையாக்க வேண்டும்.
- இலக்கான 3-6% கரிமவள அளவைக் கொண்ட மண்ணிலிருந்து விளையும் உணவிற்கு சிறந்த தரத்திற்கான அடையாளத்தை நாம் உருவாக்க வேண்டும். இதைச் செய்வதோடு, இதுபோன்ற உணவுகளை உட்கொள்வதால் கிடைக்கும் பல்வேறு உடல் நல, ஊட்டச்சத்து மற்றும் தடுப்பு சுகாதார நன்மைகளையும் நாம் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். இந்த முன்முயற்சியின் விளைவாக, மக்கள் மிகவும் ஆரோக்கியமாகவும், அதிக உற்பத்தித் திறனுடனும், மேலும் துடிப்புடனும் இருப்பார்கள் - இதன் மூலம் மனித உழைப்பு-நாட்களில் ஆதாயங்களுக்கும் நமது சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புகளில் குறைந்த அழுத்தத்திற்கும் வழிவகுக்கும். எனவே, உயர்ந்த தரமான உணவின் அத்தகைய அடையாளமானது, 'ஆர்கானிக்' பொருட்களை ஆர்கானிக் அல்லாத பொருட்களிலிருந்து வேறுபடுத்த முயற்சிக்கும் தற்போதைய முறையை விட அதிக அர்த்தத்தைக் கொண்டிருக்கும் என்பது தெளிவாகிறது.
நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக என்ன செய்வது என்று நமக்குத் தெரியும். பொருத்தமான அரசாங்கக் கொள்கைகளை உருவாக்குவதன் மூலம், நாம் காலசக்கரத்தைத் திருப்பி வரவிருக்கும் அழிவிலிருந்து மண்ணை காக்க முடியும். உலகெங்கிலும் விரைவான அரசாங்கக் கொள்கை பரிணாமத்தின் இந்தப் பணியை எளிதாக்க, மண் காப்போம் இயக்கம் 193 நாடுகள் ஒவ்வொன்றிற்கும் பரிந்துரைகளின் கையேட்டை உருவாக்குகிறது. மேலும் விவரங்களை Savesoil.org இல் உள்ள இயக்கத்தின் இணையதளத்தில் இருந்து பெறலாம்.
Subscribe