இதுவரை: பன்னிரண்டு வருடங்களின் முக்கியத்துவம் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கிறார் சத்குரு. தங்களது வனவாச வாழ்க்கையின் இறுதிகட்டத்தை நெருங்கும் பாண்டவர்கள், இப்போது அரசர் விராடரின் இராஜ்ஜியத்தில் தலைமறைவாக வாழ்கிறார்கள்.

சத்குரு: பன்னிரண்டு வருட வனவாசத்திற்குப் பிறகு, ஒரு வருடகாலம் அஞ்ஞானவாசம் மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின்படி, பாண்டவர்களின் தலைமறைவு வாழ்க்கை இப்போது அரசர் விராடரின் ராஜ்ஜியத்தில் நடக்கிறது. யுதிஷ்டிரன் அரசருக்கு மிகப் பிரியமானவன் ஆகிறான். இந்த பன்னிரண்டு மாதங்கள் எப்போது முடிவுக்கு வரும் என்று பாண்டவர்கள் காத்திருக்கிறார்கள். பதினோறு மாதங்கள் கடந்த நிலையில், பாண்டவர்களையும் திரௌபதியையும் கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்று துரியோதனன் பகீரத பிரயத்தனம் செய்கிறான். அவனது உளவாளிகளால் உறுதியான தகவல்கள் எதையும் கொடுக்க முடியவில்லை என்பதால், பாண்டவர்களைத் தேடி தனது சகோதரர்களை எல்லாப் பக்கமும் அனுப்பி வைக்கிறான். பாண்டவர்கள் எங்கே இருப்பார்கள் என்பதை அறிய எல்லா வழிகளிலும் தேடும் முயற்சியாக, ஜோதிடர்கள், அகோரிகள், ஞானிகள், சித்தர்கள் என அனைவரிடமும் ஆலோசனை கேட்கிறார்கள். ஆனால் பாண்டவர்களும் திரௌபதியும் கிருஷ்ணரின் ஆலோசனைப்படியே, தௌம்யர் மற்றும் லோமசா முனிவரின் வழிகாட்டலோடு மத்ஸ்ய தேசத்திற்கு சென்றிருக்கிறார்கள். எனவே அவர்கள் கிருஷ்ணரின் பாதுகாப்பில் இருக்கிறார்கள். "என்ன நடந்தாலும் சரி, உங்களை யாரும் இந்த ஒரு வருட காலத்தில் கண்டுபிடித்துவிட முடியாது. தைரியமாக அங்கே சென்று வாழ்க்கை நடத்துங்கள்" என்று கிருஷ்ணர் உறுதியளித்திருந்தார்.

கீசகனின் ஆசை

பதினொன்றாம் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட சம்பவம் நிகழ்ந்தது. ஒருநாள் அரசியின் சகோதரனான கீசகனின் பார்வை அரசிக்கு மலர் தொடுக்கும் பெண்ணாக இருந்த திரௌபதி மீது விழுந்தது. மோகத்தில் புத்தி பேதலித்து போனான் கீசகன். போர் முடிந்து திரும்பி வருகையில் போர் வீரர்களின் மனநிலை ஒரு குறிப்பிட்ட விதமாக, அவர்களுக்கு என்ன வேண்டுமென்றாலும் அதை கையகப்படுத்தி விடலாம் என்ற மனநிலையோடு இருப்பார்கள். அவர்கள் அந்த விதமாக பழகியிருந்தார்கள். அவர்கள் எங்கே சென்றாலும், அவர்கள் வெற்றி பெற்ற தேசங்களில் எல்லாம் அவர்களுக்கு வேண்டிய பெண்களை கைப்பற்றி இருந்தார்கள். எனவே தன் சகோதரியைப் பார்க்க வந்த கீசகன், திரௌபதியைப் பார்த்ததும் பித்து பிடித்தவனானான். தன் சகோதரியிடம் இந்த பெண் எனக்கு வேண்டும் என்றான். அரசி அவனிடம், அவளுக்கு ஏற்கனவே ஐந்து கந்தர்வ கணவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்ல முயற்சித்தாள். இது என்ன பைத்தியக்காரத்தனம், அவர்கள் வரட்டும். வந்தால் அவளுக்கு கணவர்கள் இல்லை என்ற சூழ்நிலையை நான் ஏற்படுத்துவேன் என்று மிக சாதாரணமாக பேசினான் கீசகன். தொடர்ந்து போர்க்களத்தை சந்தித்தவனின் வாழ்க்கை முறை அப்படித்தான் இருந்தது, அவனுக்கு அவள் வேண்டும், அவ்வளவே.

முதலில் அரசி திரௌபதியிடம் கீசகனிடம் செல்லுமாறு கூறியதும், திரௌபதி முடியாது என்றாள். ஆனால் பிறகு, மாலை நேரத்தில் மதுபானங்களை எடுத்துக்கொண்டு கீசகனின் அரண்மனைக்கு செல்லுமாறு அரசி கட்டாயப்படுத்தத் துவங்கினாள். பாண்டவர்களும் திரௌபதியும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தாலும், அதை மீறி திரௌபதி பீமனை களத்திற்குள் கொண்டு வந்தாள். யுதிஷ்டிரனிடம் சென்றால் அவன் தர்மத்தைப் பற்றி பேசத் துவங்கிவிடுவான் என்பதை அவள் நன்றாகவே அறிந்திருந்தாள். எல்லாவற்றையும் விட, கீசகனை நீங்கள் ஏதாவது செய்தால், உங்கள் வேடம் கலைந்து அடையாளம் கண்டுபிடிக்கப்படும் வாய்ப்பும் அதிகமாகவே இருந்தது. கிட்டத்தட்ட எழுபது வயதைத் தொட்டிருந்த விராடர், மத்ஸ்ய தேசத்தின் அரசராக பெயரளவில்தான் இருந்தார். கீசகனே உண்மையான அதிகாரத்தில் இருந்தான். அவனே படைகளை கட்டுப்படுத்துபவனாகவும் இருந்தான். கீசகனுக்கு ஏதாவது நிகழ்ந்தால் அது பெரும் பிரச்சனையாக மாறிவிடும். இருந்தாலும் திரௌபதி பீமனை தூண்டினாள். "நான் அவனிடம் செல்லப்போவதில்லை, இதற்கு நீ ஏதாவது செய். அல்லது இன்று என்னை நானே மாய்த்துக்கொள்வேன்" என்றாள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தன் முத்திரையைப் பதிக்கும் பீமன்

திரௌபதியும் கீசகனும் சந்தித்துக்கொள்ள ஒரு ரகசிய இடம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் திரௌபதிக்கு பதிலாக அங்கே சென்ற பீமன் கீசகனை கொன்றான். நீண்ட நாட்களாக, கிட்டத்தட்ட பதினொரு மாதங்கள் ஆகியிருந்தது, பீமன் யாரையாவது கொலை செய்து. இத்தனை நாளும் சமையல் தவிர வேறு எந்த வேலையும் இல்லாமல் இருந்ததால், எப்போது ஏதாவது செய்ய வாய்ப்பு வரும் என்று அவனுக்குள் ஒரு துடிப்பு ஏற்பட்டிருந்தது. எனவே பீமன் கீசகனை கொன்றதோடு நிற்காமல், அவனது கைகளையும் கால்களையும் தன் முழுபலத்தைப் பிரயோகித்து கீசகனின் உடலுக்குள்ளேயே திணித்தான். முதலில் செய்தி பரவியதும், கீசகனை யார் கொன்றார்கள் என்பதை யாராலும் அனுமானிக்க முடியவில்லை. அரசி, "அநேகமாக இது திரௌபதியின் கந்தர்வக் கணவர்களின் வேலையாகதான் இருக்க வேண்டும்" என்று சொன்னதும் அனைவரும் திரௌபதியை பார்த்து மிரண்டார்கள். கீசகன் போன்ற ஒரு வீரனை யாரும் அறியாமல் மர்மமாக வந்து கொல்லக்கூடிய மாய பலமிக்க கணவர்களை கொண்டவள் என்ற பயம் அவர்கள் அனைவரிடமும் பரவியது. கீசகன் ஒரு பெரும் பலசாலியாக இருந்ததால், இவ்வளவு சாதாரணமாக வெறும் கைகளை கொண்டு அவனை யாரும் கொல்ல முடியும் என்பதை மக்களால் நம்பவே முடியவில்லை.

இந்த செய்தி துரியோதனனை சென்று சேர்ந்ததும், அவனுக்குள் எச்சரிக்கை மணியடித்தது. "கீசகன் எப்படி கொல்லப்பட்டான்?" என்று கேட்டான். அவனது கைகளும் கால்களும் அவனது உடலுக்குள்ளேயே திணிக்கப்பட்டிருக்கிறது என்று கூறினார்கள். "பீமன் மட்டுமே இப்படி செய்வான்" என்றான் துரியோதனன், அதுதான் பீமன் செயல்படும் விதம். யாரையாவது கொன்ற பிறகு அவர்களது கைகளையும் கால்களையும் அவர்களது உடலுக்குள்ளேயே திணிப்பது பீமனின் வழக்கம். ஏனென்றால், ஒருவரைக் கொல்வதுடன் அவனால் திருப்தி அடைய முடியவில்லை. இன்னும் ஏதாவது செய்ய வேண்டும் என்று பீமன் நினைத்தான். எனவே துரியோதனன், "இது பீமன்தான், புறப்படுங்கள் நாம் அங்கே செல்வோம்" என்றான்.

கௌரவர்களின் தாக்குதல்

துரியோதனன், துச்சாதனன், கர்ணன், பீஷ்மர், துரோணர், கிருபாச்சாரியார் என தன்னிகரற்ற வீரர்கள் ஒரு சிறு கௌரவப் படையுடன் கிளம்பினார்கள். தங்களுக்கு நெருக்கமான ஒரு அரசனை அழைத்து, விராடரின் பசுக்களைக் கவர்ந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டார்கள். அப்போதுதான் பசுக்களைத் திருடியவர்களை துரத்திக்கொண்டு விராடர் தலைநகரை விட்டு வெளியே செல்வார். அவர்கள் பசுக் கூட்டத்தை ஒரு திசையில் அழைத்துச் சென்றார்கள். விராடரும் மொத்த படையினரும் அவர்களை துரத்திக்கொண்டு அதே திசையில் சென்றார்கள். குரு படை நகருக்குள் நுழைந்தபோது அங்கே ஒருவரும் இல்லை. விராடரின் ஒரே மகனான உத்தரன், சுமார் 17 வயதானவன், தனது வீட்டில் தன் சகோதரியுடன், நண்பர்களுடன், மொத்த பெண்கள் கூட்டத்தின் மத்தியில் இருந்தான். குரு படையினர் நெருங்கி விட்டார்கள் என்பது தெரிய வந்ததும், நான் தனி ஒருவனாக சென்று அவர்களை சந்திப்பேன் என்று சூளுரைத்தான்.

அந்தப்புரத்தின் பெண்கள் மத்தியில்தான் உத்தரன் வீரனாக இருந்தான். அவனுக்கு போர் பற்றியோ, சண்டையிடுவது பற்றியோ எதுவும் தெரியாது. இதுவரை அவன் போர்க்களத்திற்கே சென்றதில்லை. இருந்தபோதிலும், தன்னால் குரு படையினரை ஜெயித்து பெருமை பேசிக்கொள்ள முடியும் என நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால், அவனது ரதத்தை செலுத்துவதற்கு யாராவது ஒரு தேரோட்டி தேவைப்பட்டார். அந்த நேரம் பார்த்து அங்கே ஒரு தேரோட்டி கூட இல்லை. அப்போது, அங்கே பிருஹன்னளை என்ற பெயரில் நபும்சகனாக மாறுவேடத்தில் இருந்த அர்ஜூனன் தேரை செலுத்த உதவுவதாக முன்வந்தான். ஆணுமற்ற பெண்ணுமற்ற ஒரு அலி என் ரதத்தை செலுத்துவது எனக்கு அவமானம் என ஏற்க மறுத்த உத்தரன், எனக்கு தேரோட்டியாக ஒரு ஆணை அழைத்து வாருங்கள் என்றான். ஆனால் அப்போது அங்கே வேறு யாரும் இல்லை. கனகன் என்ற பெயரோடு அங்கிருந்த யுதிஷ்டிரன், "பிருஹன்னளையை உனது சாரதியாக அழைத்துச் செல். உனக்கு எந்த பிரச்சனையும் இருக்காது" என்று ஆலோசனை வழங்கி, "அவன் மிகச் சிறப்பாக ரதம் செலுத்துவான் என்பது எனக்குத் தெரியும்" என்று உறுதியளித்தார். எனவே அர்ஜுனன் தேரோட்டியாகவும், உத்தரன் வீரனாகவும் குரு படையினரை எதிர்த்து போரிடச் சென்றார்கள். தினமும் போர்க்களத்தில் வாழ்க்கை நடத்தும் மாவீரர்கள் தன் முன் நிற்பதைப் பார்த்ததும் உத்தரன் உடலில் ஒரு நடுக்கம் ஏற்பட்டது. அவனது இதயம் அவனது பாதணிகளுக்கு கீழே நழுவியது.

தன் வேடத்தை உதிர்க்கும் அர்ஜுனன்

உத்தரன் அர்ஜுனனிடம், "நாம் இப்படியே திரும்பிப் போய் விடுவோம்' என்றான்.

அர்ஜுனன், "ஏன் திரும்ப வேண்டும்? நாம் அவர்களுடன் போர் செய்யத்தானே வந்திருக்கிறோம், நாம் மோதுவோம்!" என்றான்.

"அதெல்லாம் முடியாது! உடனே ரதத்தை திருப்பு! இது என் உத்தரவு! நாம் திரும்பிச் செல்கிறோம்" என்றான் உத்தரன்.

அர்ஜுனன் "முடியாது" என்றான். எனவே தேரில் இருந்து இறங்கி ஓட்டம் எடுத்தான் உத்தரன். விடாமல் துரத்தி சென்ற அர்ஜுனன், அவனை பிடித்து மீண்டும் ரதத்தில் ஏற்றி, "சற்று பொறு" என்றவாறு தன் காண்டீபத்தை எடுத்து, "நானே அர்ஜுனன்' என்றான். சரியாக அதே நேரத்தில் பாண்டவர்களுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு கணக்கு நிறைவடைந்தது - சூரிய நாட்காட்டியின் படி. ஆனால் துரியோதனனின் கணக்குப்படி, இன்னும் சில நாட்கள் மீதம் இருந்தது. முதலில் அவர்களால் அர்ஜுனனை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அதன்பிறகு ஒரு போர் வீரனாக முன்னே வந்து நின்றான் அர்ஜூனன். தனது காண்டீபத்தில் அர்ஜூனன் நாண் ஏற்றும் போதெல்லாம் அதிலிருந்து கிளம்பும் ஒரு குறிப்பிட்ட ஒலி, கேட்போர் நெஞ்சத்தில் கிலியை ஏற்படுத்துவதாக இருந்தது. இப்போது அர்ஜுனன் காண்டீபத்தில் நாணேற்றியதும், மக்கள் இது அர்ஜுனன் தான் என்பதை உணர்ந்தார்கள்.

அர்ஜுனனை கையும் களவுமாக கண்டுபிடித்து விட்டதாக எண்ணி மகிழ்ச்சி அடைந்த துரியோதனன், அடுத்த பன்னிரெண்டு வருடங்களுக்கு பாண்டவர்கள் மீண்டும் வனவாசம் செல்லவேண்டும் என்றான். பீஷ்மர் சீற்றத்துடன், "இதையெல்லாம் நீ அறியமாட்டாய், சூரிய நாட்காட்டியின் படி அவர்கள் சுதந்திரம் அடைந்துவிட்டார்கள். அவர்கள் 13 வருடங்களைப் பூர்த்தி செய்துவிட்டார்கள். எனவேதான் அர்ஜுனன் நம் முன் தோன்றி இருக்கிறான்" என்றார். "அதெல்லாம் முடியாது. நாம் சந்திர வம்சத்தவர்கள், எனவே சந்திர நாட்காட்டியை தான் நாம் பின்பற்ற வேண்டும்" என்றான் துரியோதனன். பீஷ்மர், "நாம் சந்திர வம்சப் பரம்பரையாக இருக்கலாம். ஆனால் போர்க்களத்தில், நாம் சூரியனின் பக்கம், இந்த சுழற்சியை தான் நாம் பின்பற்றுகிறோம். இதுதான் இந்த மண்ணின் தர்மம். உனக்கு சாதகமாக வேலை செய்யவில்லை என்பதற்காக அதை இப்போது திடீரென்று நீ மாற்ற முடியாது" என்றார்.

அர்ஜுனனும் கௌரவர்களும் நேருக்கு நேர் மோதுகிறார்கள்

பிறகு அவர்கள் போர்க்களம் புகுந்தார்கள். உத்தரனுக்கு ஒரு சகோதரி இருந்தாள், அவளுக்கு 15, 16 வயது தான் இருக்கும். போர்களத்தில் உத்தரனிடம் தெரிவிக்குமாறு இந்த செய்தியை அர்ஜூனனிடம் சொல்லி அனுப்பியிருந்தாள்: "அண்ணா, இந்தப் போரை நீ வென்றதும், கௌரவர்கள் அத்தனை பேரின் மேலாடையையும் எனக்காக கொண்டுவா. எனது பொம்மைகளை அலங்காரம் செய்வதற்கு அவற்றை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்." அபாயகரமான ஆசை அது. போரில் அர்ஜுனனின் வில் வித்தையின் மாயாஜாலத்தை கண்ணுற்றான் உத்தரன். கர்ணன், "சற்று பொறுங்கள், அவனை இன்றே தீர்த்து விடுகிறேன். 12 வருடங்களாக இருந்தால் என்ன, 13 வருடங்களாகவோ, 14 வருடங்களாகவோ இருந்தால்தான் என்ன, அது ஒரு பொருட்டே இல்லை," என்றபடி மோத வந்தான். அர்ஜூனனின் போர்த்திறம் எப்படி இருந்தது என்றால், தாக்குதல் தொடுத்த வேகத்தில் கர்ணனின் வில்லையே உடைத்து எறிந்திருந்தான் அர்ஜூனன். அங்கிருந்து பின்வாங்கி தப்பி ஓட வேண்டியதானது கர்ணனுக்கு.

ஒரு ஆயுதத்தை பயன்படுத்தி அவர்கள் அனைவரையும் மயக்கமடையச் செய்தான் அர்ஜுனன். அனைவரும் மயக்கம் அடைந்ததும், உத்தரன் சென்று துரியோதனன், கர்ணன், துச்சாதனன், அஸ்வத்தாமன் ஆகியோரின் மேலாடையை எடுத்துக்கொண்டு, பெரியவர்களைத் தொடாமல் அங்கிருந்து அகன்றான். அவர்களுக்கு சுய நினைவு திரும்பியதும், தங்களது மேலாடை காணாமல் போனதை கண்டார்கள். போர்க்களத்தில் புகுந்து ஒருவர் உங்களது மேலாடையை உருவிக்கொண்டு செல்கிறார் என்றால் அது பெருத்த அவமானம். அதைப்பற்றி உங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்பது இன்னும் பெரிய அவமானமாக இருந்தது.

முழுமையான அவமானத்துடன் அவர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். ஆனால் துரியோதனன் இப்போதும் எந்த நாட்காட்டியின் படி அல்லது ஜோதிடரின் படி வருடங்கள் கணக்கிடப்பட வேண்டும் என்பது பற்றி வாதம் செய்து கொண்டிருந்தான். அவர்கள் சட்டப்படியே நடந்து கொண்டார்கள் என்று தெளிவுபடுத்திய பீஷ்மர், "நீ உன் வாக்கை காப்பாற்ற வேண்டும்" என்றார். துரியோதனன், "13 வருடங்களாக இருந்தாலும் சரி, 14 வருடங்களாக இருந்தாலும் சரி, நான் அவர்களுக்கு எதையும் திருப்பிக் கொடுக்கப் போவதில்லை" என்றான். இது எப்போதுமே அவனுக்குள் இருந்தது தான், இப்போது அதை வெளிப்படையாகவே பேசிவிட்டான்.

தொடரும்...