குழந்தைகள்... சில உண்மைகள்! பகுதி 1

அக்காலக் கல்வி என்பது அறிவை வளர்க்கும்விதமாக இருந்து வந்தது. ஆனால் அந்த நிலை மாறி தற்போதைய கல்வியோ ஏறுக்கு மாறாக உள்ளது. அதனால் குழந்தைகள் என்ன ஆகிறார்கள், பெற்றோர்களின் மனநிலை என்ன என்பதை சத்குரு இதில் சொல்கிறார்...

Question: எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் வீட்டில் இருக்கும்போது மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். ஆனால் பள்ளிக்குச் சென்றால், அது அவர்களுக்கு போர்க்களத்திற்கு செல்வது போலிருக்கிறது. தினமும் அவர்களைப் போருக்குத் தயார்செய்ய வேண்டியுள்ளது.

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

(சிரிக்கிறார்) குழந்தைகள் பள்ளியில் மிகவும் மகிழ்ச்சியின்றி இருக்கிறார்களென்றால், முதலில் அவர்களது ஆசிரியர்களைப் பரிசோதிக்க வேண்டுமென நினைக்கிறேன். ஏனெனில் தெரியாத புதிய விஷயத்தைத் தெரிந்துகொள்ளும்போது, அது மகிழ்ச்சியைக் கொண்டு வரும் என்பதுதான் மனித இயல்பு, இல்லையா? கற்றுக்கொள்ளுதல் என்பது மனித இயல்பு. தெரியாத ஒன்றை நீங்கள் கற்றுக்கொண்டால், அது உங்களை மகிழ்ச்சியானவராய் ஆக்கவேண்டும். ஆனால் துயரத்தை உருவாக்குகிறதெனில், கற்பது என்றால் என்னவென்று நாம் புரிந்து கொள்ளவில்லை என்றே பொருள்.

பள்ளி செல்லும் குழந்தைகள் பொருளாதாரத்திற்கு அடிமையாய் இருக்கவேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்கள்.

துரதிர்ஷ்டவசமாக, நீங்கள் உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு எதனையும் தெரிந்துகொள்வதற்காக அனுப்புவதில்லை, அவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக அனுப்புவதில்லை, அவர்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அனுப்புகிறீர்கள். அதனால்தான் அவர்களை பள்ளிக்கு அனுப்புகிறீர்கள். பள்ளி செல்லும் குழந்தைகள் பொருளாதாரத்திற்கு அடிமையாய் இருக்கவேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்கள். எனவே ஆசிரியர்கள் உங்களுக்காக இந்தப் பணியைச் செய்கிறார்கள். தெரிந்து கொள்ளவேண்டும் என்கிற தாகத்தினை அவர்களுக்குள் வளர்ப்பதற்காக அவர்களைப் பள்ளிக்கு அனுப்புவதில்லை, இல்லையா? இது கல்வியைக் கையாளும் ஒரு துரதிர்ஷ்டவசமான வழி. எனவே முதலில் கல்வியைப் பற்றிய உங்கள் மனப்பான்மையை மாற்றிக்கொள்ளுங்கள்.

ஈஷாவில் ஒரு பள்ளியைத் துவங்கியிருக்கிறோம். அதன் முழுநோக்கமும் வெறுமனே அறிவின் திணிப்பாக இல்லாமல், அறிவிற்கான தாகத்தைத் தூண்டுவதுதான். அறிவிற்கான தாகம் அவனில் தூண்டிவிடப்பட்டால், அவன் கற்பதை யாராலும் தடுக்கமுடியாது. எப்படியும் அவன் கற்றுக்கொள்ளத்தான் போகிறான். ஆனால் அந்த ஆர்வத்தைத் தூண்டுவதற்குப் பதிலாக, நீங்கள் அதனை அடக்குகிறீர்கள், கல்வியைப் பற்றிய உங்கள் அபிப்பிராயத்தினைக் கொண்டு அடித்துக் கீழே தள்ளுகிறீர்கள். ஏனெனில் கல்வியென்பது உங்களைப் பொறுத்தவரையில், பணமும் சமூக அந்தஸ்தும் தான். இது கல்வியை பற்றிய தவறான அணுகுமுறையாகும். நீங்கள் உங்களுக்குள் வளர்த்து வைத்துள்ள நிர்பந்தங்களால் அவர்களை முழுமையாக திசை மாற்றுவதன் காரணமாக, மகிழ்ச்சியில் வெடித்து மலரவேண்டிய சின்னஞ்சிறு மொட்டுக்கள், மெல்ல மெல்ல சோகமயமாகிறார்கள். தேவையற்ற உங்கள் நிர்பந்தங்களை நீங்கள் அவர்கள் மீதும் திணிக்க முயற்சிக்கிறீர்கள்.

அடுத்த வாரம்...

சத்குருவின் "உள்நிலைப் பொறியியல்", குழந்தைகளுக்கு எப்படி உதவும் என்ற கேள்வியை ஒருவர் முன்வைக்க, அதற்கு அவரின் பதில்...

குழந்தைகள்... சில உண்மைகள்! தொடரின் பிற பதிவுகள்