காது, மூக்கு குத்திக் கொள்வது எதற்காக?
நம் கலாச்சாரத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை வேறூன்றியுள்ள சடங்குகளில் காது, மூக்கு குத்திக் கொள்வதும் ஒன்று. இதன் பின்னணியில் உள்ள விஞ்ஞானத்தைப் பற்றி சத்குரு இங்கே விளக்குகிறார்...
சக்தி மண்டலங்களில் முக்கிய உறுப்புகள்
சத்குரு:இந்த உடல் வெறும் எலும்பு, மாமிசம் மட்டும் இல்லை. இந்த உடலுக்கு அடிப்படையாக ஒரு சக்தி மண்டலமும் இயங்குகிறது. இந்த சக்தி மண்டலத்தில் நம் காது, மூக்கு, தொண்டைக்குழி, மோதிர விரல் மற்றும் சில கால் விரல்கள் போன்ற சில உறுப்புகள் மிகவும் முக்கியமானவையாக இருக்கின்றன. நம் உடல் ஆரோக்கியம் மற்றும் மன உறுதி போன்றவை சமநிலையுடன் இருப்பதற்கு இந்த சில உறுப்புகளில் உள்ள சக்தி மையங்களைக் கவனிப்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அந்த இடங்களில் சிறிது உலோகத்தை உபயோகப் படுத்துகிறோம். இப்படிச் செய்யும்போது அங்குள்ள சக்திமண்டலம் தூண்டப்படுகிறது. இதனால் உடல்நிலை உறுதியாகிறது. மேலும் ஆரோக்கியமும் மேம்படுகிறது.
Subscribe
காது குத்துதல், மூக்கு குத்துதல் எதற்காக? (Kathu Kuthu, Mooku Kuthal)
இதனால் குழந்தைகளுக்கு ஒரு வயது பூர்த்தியாவதற்கு முன்பு காது குத்தப்பட்டது. பெண் குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வயது தாண்டுவதற்கு முன்பு மூக்கு குத்தப்பட்டது. பிறகு அதுவே நாளடைவில் அலங்காரத்திற்காக தங்க நகை, வைரக்கற்கள் என்று கூடிவிட்டது. நம் கலாச்சாரத்தில் மட்டும் காது, மூக்கு குத்தப்படவில்லை. முழுமையாக தனித்தனியாக வளர்ந்த கலாச்சாரங்களில் கூட காது, மூக்கு போன்ற இடங்களைக் குத்தினர். அனைத்துக் கலாச்சாரங்களிலும் ஓர் உணர்தலின் பேரில்தான் இப்படிச் செய்தனர்.
உண்மையில் இது ஒரு ஆழமான விஞ்ஞானம். இதைப் பலவிதமாக நாம் பயன்படுத்த முடியும். நாம் அந்த அளவிற்குப் போகத் தேவையில்லை. குறைந்தபட்சம் காது, மோதிர விரல் இந்த இரண்டு இடங்களிலாவது உலோகம் பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியம், மன உறுதி, உயிர்த்தன்மையில் சமநிலை ஆகியவை ஏற்படும். ஆனால் இப்போது இதையே பகட்டுக்கான காரியமாகச் செய்கிறார்கள். 10 விரல்களில் 20 மோதிரம் போட்டுக் கொள்கிறார்கள். அப்படியெல்லாம் அசிங்கம் செய்து கொள்ளத் தேவையில்லை.
சரியான இடம் முக்கியமானது
காதில் சரியான இடத்தில் பார்த்துக் குத்த வேண்டும். நம் கலாச்சாரத்தில் அதற்காகவே ஆட்கள் இருந்தார்கள். இப்போது டாக்டரிடம் போய் குத்திக் கொள்கிறார்கள். ஆனால் அதற்கென்றே அனுபவம் உள்ள நபரிடம் செல்லும்போது அவர்கள் சரியான புள்ளியில் குத்துவார்கள். அப்போது உடல், மன ஆரோக்கியம் உறுதிப்பட வாய்ப்புள்ளது.