உடலில் சக்தி நகரும் 3 நாடிகள்
நம் உடலில் இருக்கும் சக்தியானது, நாடிகளின் மூலம் நகர்கிறது. அவற்றுள் மிக முக்கியமான 3 நாடிகளான ஈடா, பிங்களா, சுஷும்னா ஆகியவைகளைப் பற்றி சத்குரு இக்கட்டுரையில் விவரிக்கிறார்...
 
 

நம் உடலில் இருக்கும் சக்தியானது, நாடிகளின் மூலம் நகர்கிறது. அவற்றுள் மிக முக்கியமான 3 நாடிகளான ஈடா, பிங்களா, சுஷும்னா ஆகியவைகளைப் பற்றி சத்குரு இக்கட்டுரையில் விவரிக்கிறார்...

சத்குரு:

72000 நாடிகள்...

முதுகுத்தண்டின் அமைப்பு பற்றி உங்களுக்கு தெரிந்திருந்தால் அதன் இரு புறமும், குழாய்கள் அமைப்பில் ஓட்டைகள் இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். நரம்புகள் செல்வதற்கு இது ஒரு குழாய் போல அமைந்துள்ளது. இதுவே ஈடா மற்றும் பிங்களா - இடது, வலது வழிப்பாதைகள்.

படைப்பின் இருமை நிலையின் குறியீடாக ஈடா மற்றும் பிங்களா உள்ளது. இந்த இருமை நிலையை நாம் சிவா மற்றும் சக்தி என்று உருவகப்படுத்துகிறோம்.

சக்தி உடல் அல்லது பிராணமய கோஷத்தில் 72000 நாடிகள் உள்ளன. இவை இடது, வலது, நடு அல்லது ஈடா, பிங்களா, சுஷும்னா என்ற அடிப்படையான 3 நாடிகளில் இருந்து பிரிகின்றன/கிளை விடுகின்றன. நாடி என்றால் நரம்பு என்று அர்த்தம் அல்ல. நாடிகள், உடலில் பிராணா நகரும் பாதைகள். இந்த 72000 நாடிகளுக்கு உடல் ரீதியான வெளிப்பாடு இல்லை. உங்கள் உடலை அறுத்துப் பார்த்தால் இவற்றைக் காண முடியாது. ஆனால் உங்கள் விழிப்புணர்வு அதிகமாகும் பொழுது, சக்தி தற்செயலாக நகராமல், நிர்ணயிக்கப்பட்ட பாதையில் நகருவதை கவனிக்க முடியும். 72000 வழிகளில் சக்தி அல்லது பிராணா நகர்கிறது.

படைப்பின் இருமை நிலையின் குறியீடாக ஈடா மற்றும் பிங்களா உள்ளது. இந்த இருமை நிலையை நாம் சிவா மற்றும் சக்தி என்று உருவகப்படுத்துகிறோம். அல்லது ஆண் தன்மை, பெண் தன்மை என்றோ உங்களின் தர்க்கரீதியான அல்லது உள்ளுணர்வு சார்ந்த அம்சம் என்றும் குறிப்பிடலாம். இதன் அடிப்படையில்தான் உயிர் உருவாக்கம் நிகழ்கிறது. இந்த இருமை இல்லாமல், இப்பொழுது எப்படி இருக்கிறதோ அப்படி உயிர் இருக்காது. ஆதியில் இருமை என்பது இல்லாமல் இருந்தது. ஆனால் படைப்பு தொடங்கிய பின் இருமை வந்துவிட்டது.

ஆண் தன்மை, பெண் தன்மை என்று சொல்லும்பொழுது, நான் ஆண், பெண் என்று பாலினம் குறித்து பேசவில்லை. இயற்கையில் உள்ள சில குணாதிசயங்கள் பற்றிப் பேசுகிறேன். சில அம்சங்கள் ஆண் தன்மை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. வேறு சில அம்சங்கள் பெண் தன்மை என்று காணப்பட்டுள்ளன. நீங்கள் ஆணாக இருக்கலாம். ஆனால் உங்கள் ஈடா குறிப்பிடும்படி அதிகமாக இருந்தால் பெண் தன்மை உங்களுள் ஓங்கியிருக்கும். நீங்கள் பெண்ணாக இருக்கலாம். ஆனால் உங்கள் பிங்களா குறிப்பிடும்படி அதிகமாக இருந்தால் ஆண் தன்மை உங்களுள் ஓங்கியிருக்கும்.

ஈடா, பிங்களா இடையே ஒரு சமநிலை வந்தால், உலகில் நீங்கள் மிகவும் திறமைசாலியாக இருக்க முடியும். வாழ்க்கையின் அம்சங்களை சிறந்த முறையில் கையாள முடியும். பெரும்பாலான மனிதர்கள் ஈடா, பிங்களாவிலேயே வாழ்ந்து மடிந்து போகிறார்கள். மத்தியில் இருக்கும் சுஷும்னாவோ செயலற்ற நிலையிலேயே இருந்துவவிடுகிறது. மனித உடற் கூற்றில் சுஷும்னா மிக முக்கிய அம்சம். சக்தி சுஷும்னாவை அடைந்த பின்தான் வாழ்க்கை உண்மையில் துவங்குகிறது.

வைராக்யா...

அடிப்படையில் சுஷும்னா அதற்கென்று எந்த தனித்த இயல்பும் இல்லாதது. ஒரு வெட்ட வெளி போன்றது. வெறுமையான ஒரு வெளி இருந்தால் நீங்கள் விரும்பிய எதையும் அங்கு உருவாக்க முடியும். எப்பொழுது சக்தி சுஷும்னா அடைகிறதோ அப்பொழுது வைராக்யா அடைகிறீர்கள். "ராக" என்றால் வர்ணம். "வைராக்" என்றால் நிறமற்றது. அதாவது எந்த நிறமும் இல்லாமல் அல்லது எந்த குணமும் இல்லாமல் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அப்போது, உங்களுக்கு பின்னால் இருப்பது சிவப்பாக இருந்தால், நீங்களும் சிவப்பாக மாறுவீர்கள். உங்களுக்கு பின்னால் இருப்பது நீலமாக இருந்தால், நீங்களும் நீலமாக மாறுவீர்கள். உங்களுக்கு பின்னால் இருப்பது மஞ்சளாக இருந்தால் நீங்களும் மஞ்சளாகத்தான் மாறப் போகிறீர்கள், அதாவது சார்பற்ற நிலையில் இருப்பீர்கள். எங்கு இருந்தாலும் அதன் ஒரு பகுதியாக இருப்பீர்கள். ஆனால் எதுவும் உங்களிடம் ஒட்டிக் கொள்ளாது. இப்படி இருந்தால் மட்டுமே, அதாவது நீங்கள் வைராக்ய நிலையில் இருந்தால் மட்டுமே, பிறகு வாழ்வின் அனைத்து பரிமாணங்களையும் அடையத் துணிவீர்கள்.

தற்சமயம் தேவையான சமநிலையில் நீங்கள் இருந்தாலும் வெளியே சூழ்நிலை சிறிது முரண்பட்டால் அதன் பதில்வினையாக நீங்களும் முரண்படுவீர்கள். ஏனென்றால் ஈடா பிங்களாவின் இயல்பு அது. ஆனால் எப்பொழுது சக்தி சுஷும்னாவை அடைகிறதோ, அப்போது உள்நிலையில் நீங்கள் ஒரு புது சமநிலை அடைவீர்கள். அப்போது உங்களுக்குள் இருக்கும் ஒரு வெளி, வெளியில் என்ன நடந்தாலும் சமநிலையில் இருக்கும், எந்த குழப்பத்திற்கும் ஆட்படாமல் இருக்கும்., வெளி சூழ்நிலைகளால் அது தொடப்படாது. இப்படி ஒரு நிலையான சூழ்நிலையை உங்களுக்குள் உருவாக்கி விட்டீர்கள் என்றால், விழிப்புணர்வின் உச்சம் தொடத் தயாராகி விடுவீர்கள்.

 
 
 
 
Login / to join the conversation1
 
 
3 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

சக்தி சுஷும்னாவை அடைந்த பின்தான் வாழ்க்கை உண்மையில் துவங்குகிறது. Great description ........... the inner sciences........ from the professionals of Isha Inner Engineerig Institute..