கங்கனா ரனாவத்: சத்குரு, கர்மவினையை கரைக்கவேண்டும் என நீங்கள் சொல்கிறீர்கள், அதேசமயம் அனைவரையும் இணைத்துக்கொண்டு, செய்யும் செயல்கள் அனைத்திலும் ஈடுபடவும் சொல்கிறீர்கள். இவ்விரண்டும் ஒருங்கே நிகழ்வது சாத்தியமா?

சத்குரு: நமஸ்காரம் கங்கனா. இவ்விரண்டிற்கும் இடையே நீங்கள் என்ன முரண்பாடு பார்க்கிறீர்கள்? கர்மவினை என்றால் நாம் செய்யும் செயல்களுடைய பதிவுகள் - இது உடலளவில், மனதளவில், உணர்வளவில், சக்தியளவில் என நாம் செய்யும் செயல்கள் அனைத்தையும் உள்ளடக்கியது. வேறு விதமாக சொல்வதென்றால், நீங்கள் விழிப்புணர்வின்றி உருவாக்கும் மென்பொருள் ஒன்று இருக்கிறது. இவையே உங்கள் வாழ்க்கையை பல விதங்களில் நடத்தும் கர்மப்பதிவுகள்.

உடலளவில், மனதளவில், உணர்வளவில், மற்றும் சக்தியளவிலான இப்பதிவுகள் அல்லது ஞாபகங்கள் ஒன்றாக சேர்ந்து உங்கள் வாழ்க்கையையே ஆளவல்லது, அவை ஆள நீங்கள் அனுமதிப்பீர்களேயானால். ஞாபகம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அது எல்லைக்குட்பட்டது. அதற்கு எல்லை இருக்கிறது.

அதனால் கர்மா என்பது வரையறுக்கப்பட்ட எல்லையுடையது, ஆனால் அந்த எல்லைக்கோட்டிற்குள் கர்மவினை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அது பல விஷயங்களுக்கு வழிவகை செய்கிறது. அது உங்களை ஓரளவு தானியங்கியாக்குகிறது, அதனால் நீங்கள் பல விஷயங்களுக்கு முயற்சியின்றி பதில்கொடுக்க முடிகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இணைத்துக்கொள்வது என்பது நீங்கள் செய்யும் ஒன்றல்ல. பிரபஞ்சத்தின் தன்மையே இணைத்துக்கொள்வதுதான் - அதுபற்றி விழிப்புணர்வாக நீங்கள் மாறினால் போதும்.

எனினும் நீங்கள் விரிவடைய விரும்பினால், எல்லை என்பது பிரச்சனையாக இருக்கிறது. உதாரணத்திற்கு, உங்கள் வீட்டைச் சுற்றி நீங்கள் எல்லைக்கோடு வரைந்தால், நீங்கள் விரிவடைய விரும்பும்போது கோட்டிற்கு வெளியே வந்தால் போதும் - அது மிகவும் சுலபம். ஆனால் நீங்கள் வாழவும் உயிர்பிழைத்திருக்கவும் சில அச்சுறுத்தல்கள் இருந்து, நீங்கள் உங்களைச் சுற்றி ஒரு கடினமான கோட்டை கட்டினீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

அப்போது அச்சுறுத்தல்கள் இருந்தால் பாதுகாப்பாக உணர்வீர்கள். ஆனால் உங்கள் வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் போனால், இயற்கையாகவே விரிவடைய விரும்புவீர்கள். அப்போது நீங்கள் விரிவடைய விரும்பினால், இந்த பெரிய சுவரை நகர்த்தி உங்கள் எல்லையை விரிவாக்குவது மிகவும் சிரமமாகிவிடும். பெரும்பாலும் நீங்கள் அந்த சுவரினால் விரிவடையாமலேயே இருந்துவிடுவீர்கள்.

அதேபோல, கர்மப்பதிவுகள் நீங்கள் உருவாக்கியுள்ள ஒருவித சுவர். அதை நீங்கள் தளர்த்தி உங்களுக்குள் இணைத்துக்கொள்ளும் தன்மையை எடுத்துவர வேண்டும். இணைத்துக்கொள்வது என்றால் அனைவருடனும் நட்பாக இருக்கும் தத்துவமல்ல. பிரபஞ்சத்தின் இயற்கையே இணைத்துக்கொள்வது.

நீங்கள் இங்கு இருக்கும்போதே, மரங்கள் வெளிமூச்சாக விடுவதை உங்கள் உள்மூச்சாக எடுக்கிறீர்கள். நீங்கள் வெளிமூச்சாக விடுவதை மரம் உள்மூச்சாக எடுக்கிறது. ஆனால் பெரும்பாலான மனிதர்கள் இந்த பரிமாற்றம் நடப்பது குறித்த விழிப்புணர்வே இல்லாமல் இருக்கிறார்கள். இந்த பரிமாற்றம் பற்றிய விழிப்புணர்வுடன் நீங்கள் இருந்தால், இங்கு அமர்ந்து வெறுமனே சுவாசிப்பதே முற்றிலும் அற்புதமான, பரவசமான அனுபவமாக இருக்கும். நீங்கள் விழிப்புணர்வில்லாமல் இருந்தால், அப்போதும் உங்களுக்கு ஊட்டம் தருவது மரங்கள் வெளிவிடும் பிராணவாயுதான் என்றாலும், அதை உணரத் தவறுவீர்கள்.

இணைத்துக்கொள்வது என்றால் நீங்கள் வித்தியாசமாக ஏதோ செய்யவேண்டும் என்று அர்த்தமில்லை. பிரபஞ்சத்தின் தன்மை பற்றி விழிப்புணர்வாக மட்டுமே மாறுகிறீர்கள். மரத்திற்கும் மண்ணிற்கும் நிகழ்வது உங்களுக்கும் நிகழ்கிறது. எதை "நான்" என்று நீங்கள் கருதுகிறீர்களோ, அது உண்மையில் நீங்கள் நடமாடும் மண்தான். அதனால் இணைத்துக்கொள்வது என்பது நீங்கள் செய்யும் ஒன்றல்ல. பிரபஞ்சத்தின் தன்மையே இணைத்துக்கொள்வதுதான் - அதுபற்றி விழிப்புணர்வாக நீங்கள் மாறினால் போதும். கர்மவினை என்பது உங்கள் தனிப்பட்ட இருப்பின் இயல்பு. உங்கள் கர்மவினையின் எல்லைகள் பற்றிய விழிப்புணர்வை நீங்கள் எடுத்துவர வேண்டும். இந்த விழிப்புணர்வு வந்தால், மற்றவற்றை வாழ்க்கையே கவனித்துக்கொள்ளும்.

ஆசிரியர் குறிப்பு: சர்ச்சைக்குரிய சிந்தனையா, பேசினால் பிறர் தூற்றக்கூடிய விஷயம் பற்றி குழப்பமா, எவரும் பதில் சொல்ல விரும்பாததால் உங்களைத் துளைக்கும் கேள்வியா, கேட்பதற்கு இதுதான் நேரம்! சத்குருவிடம் நீங்கள் கேட்க விரும்புவதை UnplugWithSadhguru.org வலைதளத்தில் பதிந்திடுங்கள்!

YAT18_Newsletter-650x120