‘கர்மா, வாசனை...’ போன்ற தன்மைகளைப் பற்றி நம் கலாச்சாரம் ஆழமாக பேசுகிறது! ஆனால், இதுகுறித்த முழுமையான புரிதல் என்பது பலரிடமும் இருப்பதில்லை! கர்மவினையை கரைக்க முயன்று அதிகமாக்கிக் கொள்பவர்களே அதிகம்! இந்த பதிவு கர்மவினையின் சூட்சும தன்மைகளையும் அதிலிருந்து விடுபடும் நுட்பத்தையும் புரியவைக்கிறது!

சத்குரு:

நீங்கள் இப்போது என்னவாக இருக்கிறீர்களோ அதன் சின்னஞ்சிறிய பகுதியைத்தான் நீங்கள் விழிப்புணர்வுடன் உருவாக்கி இருக்கிறீர்கள். உங்களின் பெரும்பகுதி விழிப்புணர்வு இல்லாமல்தான் உருவாகியுள்ளது. ஏனென்றால் நீங்கள் உள்வாங்கிய விஷயங்கள் பலவும் விழிப்புணர்வில்லாத நிலையில் உங்களுக்குள் நுழைந்திருக்கிறது. ஒரு நாய் சந்தைக்குப் போனால் அறுபதிலிருந்து எழுபது விதமான வாசனைகளை முகர்கிறது. அதேபோல உங்கள் ஐந்து புலன்கள் வழியாக உங்களுக்குள் ஊடுருவுகிற அம்சங்கள் உங்களுக்குள் நிலையான பதிவுகளாகி விடுகின்றன. இதுதான் கர்மவினை என்பது.

இந்தியமரபில் ஆன்மீகத்தையும், யோகக் கலையையும் குறிக்கும் சின்னமாக தாமரை திகழ்கிறது. ஏனென்றால், சகதியிலும் சேற்றிலும்தான் தாமரை செழித்து வளர்கிறது. உங்கள் வாழ்வில் சேறும் சகதியும் இருந்தால், ஒன்று அதைப் பொறுத்துக் கொள்ளலாம். அல்லது, அதையே அழகிய மலர்ச்சியாய் மாற்றலாம்.

நீங்கள் நன்றாக உறங்கும்போது ஒருவிதமான சூழலை ஏற்படுத்தி, உங்களுக்குப் புரியாத மொழியில் சில வாக்கியங்களைச் சொல்லி, அவை உங்களுக்குள் ஆழமாகப் பதியும்படி செய்து விடலாம். புலன்களின் உள்வாங்கும் தன்மை அவ்வளவு துல்லியமானது. இப்படி உங்களுக்குள் வரும் பதிவுகளின் விளைவுகளை நீங்கள் உங்கள் இயல்புகள் என்று கருதுகிறீர்கள். எங்கிருந்தோ வரும் ஏதோ ஒரு விஷயம் உங்களை வடிவமைப்பதாக நினைக்கிறீர்கள். உண்மையில், நீங்கள் உள்வாங்கும் பதிவுகளே உங்களை வடிவமைக்கின்றன.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இதனால்தான் கீழை நாட்டு வாழ்க்கை முறையில், மனிதர்கள் தங்கள் வீடுகளில், குறிப்பிட்ட சூழ்நிலையை, குறிப்பிட்ட வாசனைகளை உருவாக்குவார்கள். அதுவும் கருவுற்ற பெண் வீட்டில் இருந்தால் அதீதகவனம் செலுத்துவார்கள். யார் வேண்டுமானாலும் உள்ளே வந்து அந்தப் பெண்ணைப் பார்த்துவிட முடியாது. இனிய இயல்புகளும் நல்ல அதிர்வுகளும் கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். கோபம், வெறுப்பு போன்ற எதிர்மறை உணர்வுகள் கொண்டவர்களை அனுமதிக்க மாட்டார்கள். ஏனெனில் அந்தப்பெண் பார்க்கிற, கேட்கிற, உணர்கிற விஷயங்கள் எல்லாமே உள்ளே பதிவாகிவிடுகின்றன.

நீங்கள் சேகரித்தவற்றின் அடிப்படையில் உங்களுக்குள் உருவாகும் இயல்புகளுக்கு, வாசனைகள் என்று பெயர். அவையும் ஒரு வாசம் போலத்தான். பச்சைக் காய்கறிகளை உணவாக உட்கொள்பவர்கள் அதன் மிச்ச சொச்சங்களை வீசினால் ஒருவிதமான வாடை வருகிறது. மாமிசம் சாப்பிடுபவர்கள், மீந்த உணவை வீசினால் வேறுவிதமான வாடை வருகிறது. மீன் சந்தை வழியாக நீங்கள் போனால் அங்கே நூறு விதமான வாடை வீசினாலும், மலர்களே இருந்தாலும் எல்லாவற்றையும் மீன்வாடை தூக்கிச் சாப்பிட்டு விடுகிறது.

அதேபோல உங்களுக்குள் எத்தனையோ தன்மைகள் இருந்தாலும் உங்களுக்குள் ஆழமாக இருக்கும் தன்மைதான் வெளிப்படுகிறது. உங்களுக்குள் அழகான மலர்களும் இருக்கின்றன. அழுகிப்போன மீனும் இருக்கிறது. மற்றவர்கள், உங்கள் மலர்களின் வாசனைக்காக உங்களைப் பாராட்டவில்லை என்று நீங்கள் வருந்துகிறீர்கள். உண்மையில் அழுகிய மீன் வாடை தூக்கலாக இருப்பதால் உங்கள் மலர்களின் வாசனையை யாராலும் நுகர முடியவில்லை. அதுபோல் உங்கள் நல்ல தன்மைகளை விட தீய தன்மைகள் தூக்கலாக இருந்தால் பிறர் உங்களிடமிருந்து விலகியே இருப்பார்கள்.

எனவே, ஒன்று முழுக்க முழுக்க அழுகிய மீன்களையே சுமந்து கொண்டிருங்கள். இல்லையெனில் அழகான மலர்களை மட்டுமே சுமந்து கொண்டிருங்கள். கொஞ்சம் மலர்களையும் கொஞ்சம் மீன்களையும் வைத்துக்கொண்டு எல்லோரையும் ஏமாற்றிக் கொண்டிருக்காதீர்கள். சிலரைப் பார்க்கும்போது அவர்களிடம் மிகுந்த அன்புடன் நடந்து கொள்கிறீர்கள். அவர்கள் அந்தப் பக்கம் திரும்பியதுமே வெறுப்பை உமிழ்கிறீர்கள். வாசனைகளை சேகரித்தவிதம் புரியாமல் பலர் அதிருப்தியையும் வருத்தத்தையும் தங்கள் அடையாளச் சின்னமாகவே சுமந்து செல்கிறார்கள். "எனக்கு இந்தத் தீமை நிகழ்ந்தது. என்னை அவர் அவமானப்படுத்தினார்" என்று ஏராளமான சோகக் கதைகளை சுமந்து செல்கிறார்கள்.

கர்மவினைகளிலிருந்து மட்டுமின்றி, கர்மவினைகளின் மூலத்திலிருந்தே உங்களை விலகியிருக்கச் செய்வதற்கான மிக முக்கிய கருவிதான் ஈஷா யோக மையத்தின் ஷாம்பவி மஹாமுத்ரா தீட்சையின் வழி உங்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்தியமரபில் ஆன்மீகத்தையும், யோகக் கலையையும் குறிக்கும் சின்னமாக தாமரை திகழ்கிறது. ஏனென்றால், சகதியிலும் சேற்றிலும்தான் தாமரை செழித்து வளர்கிறது. உங்கள் வாழ்வில் சேறும் சகதியும் இருந்தால், ஒன்று அதைப் பொறுத்துக் கொள்ளலாம். அல்லது, அதையே அழகிய மலர்ச்சியாய் மாற்றலாம். இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யும் சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் உண்டு.

சகிக்க முடியாத ஏதோ ஒன்று உங்களுக்கு நிகழ்ந்தால் புத்திசாலித்தனமாக செயல்பட்டு அதனை அழகானதாக மாற்றுங்கள். அதை விட்டு விட்டு, எனக்கு சகிக்க முடியாத ஒன்று நேர்ந்தது. எனவே அதை உலகம் முழுவதும் பரப்புவேன் என்று யாராவது கிளம்பினால் அது முட்டாள்தனம். இப்போது நீங்கள் எந்த தன்மையில் இருந்தாலும் அது நீங்களாகவே விழிப்புணர்வில்லாமல் உருவாக்கிக் கொண்டது. அவற்றை விழிப்புணர்வுடன் நீங்கள் கையாளத் தொடங்கினால் அது மிக அழகான ஒன்றாக மாறும்.

அதற்காக, கர்மவினைகள் வேண்டாம் என்றே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருந்தால் அதுவே பெரிய கர்மவினையாக மாறிவிடும். கர்மவினைக்கு எவையெல்லாம் மூலமாக உள்ளனவோ அவற்றிலிருந்து உங்களை விலக்கிக் கொள்வதுதான் வினைகளைக் கரைக்கும் வழி. கர்மவினைகள் இரண்டு வழிகளில் பதிவாகின்றன. ஒன்று உடல் வழியாக. இன்னொன்று மனம் வழியாக. உங்கள் உடலிலிருந்தும், மனத்திலிருந்தும் உங்களால் சற்றே தள்ளியிருக்க முடிந்தால் கர்மவினைகளும், வாசனைகளும் உங்களிடம் எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. பாதிப்பை ஏற்படுத்த முடியாத சூழலில் அவை தாமாகவே இறந்துவிடும்.

கர்மவினைகளிலிருந்து மட்டுமின்றி, கர்மவினைகளின் மூலத்திலிருந்தே உங்களை விலகியிருக்கச் செய்வதற்கான மிக முக்கிய கருவிதான் ஈஷா யோக மையத்தின் ஷாம்பவி மஹாமுத்ரா தீட்சையின் வழி உங்களுக்கு வழங்கப்படுகிறது. ஈஷா யோகாவில் நீங்கள் பெறும் எந்தப் பயிற்சியும் இதை நோக்கித்தான். எது நீங்கள், எது நீங்களில்லை என்கிற வேறுபாடு, சிறிதுகாலப் பயிற்சியிலேயே மிகத் துல்லியமாக விளங்கிவிடுகிறது. அந்தத் தொலைவை ஏற்படுத்திக் கொள்ள இதுதான் சுலபமான, எளிமையான வழி.

மாறாக, கர்மவினைகளைக் கரைக்க நீங்கள் கடுமையாக முயன்றால், அந்த முயற்சியே கர்மவினைகளைப் பெருக்கி, அழுகி நாற்றமெடுக்கச் செய்யும். இப்போது உங்கள் கைகளில் தரப்பட்டிருப்பது, கர்ம வினைகளிலிருந்து மட்டுமல்ல, கர்மவினைகளின் தொழிற்சாலையிலிருந்தும் உங்களை விலகிநிற்கச் செய்யக்கூடிய வல்லமைமிக்க விஞ்ஞானபூர்வமான கருவி.

உங்கள் வாழ்வுக்கு நீங்கள் இரையாகிறீர்களா, பார்வையாளராகிறீர்களா, அல்லது உங்கள் வாழ்வை நீங்களே வழிநடத்துகிறீர்களா என்பது, உங்கள் கைகளில்தான் இருக்கிறது.