எல்லையில்லாமல் போக, விழிப்புணர்வாக இருங்கள்!

 

சத்குரு:

சமீபத்தில் ஆசிரமத்திற்கு வந்திருந்த சில மயக்கமருந்தியல் நிபுணர்களை நான் சந்தித்தேன். நவீன மருத்துவத்தில் வலி நிவாரணத்திற்காக யோகாவை எடுத்துவர முடியுமா என்று அவர்கள் என்னிடம் கேட்டார்கள். அது கட்டாயம் உதவும், ஆனால் அதற்குமுன் வலி என்பது நம் வாழ்க்கையில் எத்தகைய பங்கு வகிக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றேன்.

நான் சமீபத்தில் ரஷ்யாவில் இருந்தபோது, எனக்கு மிக மோசமான பல்வலி வந்தது, உடனடியாக பல்லை எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இன்னும் இரண்டு மணி நேரத்தில் எனக்கு யோகா வகுப்பு இருந்ததால், நான் மாஸ்கோவில் இருந்த பல் மருத்துவமனைக்கு செல்லமுடியாத நிலை. அதனால் பல் மருத்துவரின் விருப்பத்திற்கு மாறாக, எந்த மயக்கமருந்தும் மரத்துப்போகச்செய்யும் மருந்தும் இல்லாமல் பல்லை பிடுங்கினார்கள். மிகவும் வலியாக இருந்தது, ஆனால் சீக்கிரமே வலி குறைந்தது. அதற்குப் பிறகு நான் வாய்விட்டுச் சிரித்தேன், ஏனென்றால் என் வாழ்க்கையையே ஒரு வலியான பல் ஆட்டிப்படைக்க அனுமதிக்கும் ஆள் நானில்லை!

ஒருவரின் தனிப்பட்ட தன்மையின் எல்லைகளை அழிப்பதே யோகா - உங்களையும் பிரபஞ்சத்தையும் பிரிக்கும் எல்லைக்கோட்டை அழிப்பதே யோகா.

இதை நான் உங்களுக்குச் சொல்வது என் வீரத்தை மார்தட்டிக் கொள்வதற்காக அல்ல, வலியுடன் பல்லை பிடுங்கவேண்டும் என்று பரிந்துரைக்கவும் அல்ல, ஆனால் வலியும் வேதனையும் ஒன்றல்ல என்பதை எடுத்துக்காட்டவே இதை நான் சொல்கிறேன். 'அறுவை சிகிச்சை' என்ற வார்த்தையை சொன்ன மாத்திரத்தில் பெரும்பாலானவர்களின் வலி நூறு மடங்காகப் பெருகி வேதனையாகிறது, ஏனென்றால் மனம் என்பது அதன் ஆட்டத்தை ஆரம்பிக்கிறது. வலி என்பது பிழைப்பிற்கு அத்தியாவசியமான ஒரு கருவி. ஆனால் பெரும்பாலானவர்கள் அதைக்கொண்டு மிக மோசமானவற்றை கற்பனை செய்கிறார்கள். கற்பனை என்பது வலியைப் பெருக்க ஒரு உறுதியான வழி.

யோகா என்பது உங்கள் பயத்தையும் பதற்றத்தையும் மிகைப்படுத்திக் காட்டும் விதத்தில் அல்லாமல், எல்லாவற்றையும் உள்ளது உள்ளபடி பார்க்கும் நிலைக்கு உங்களை கொண்டுவருகிறது. ஆம், வலி இருக்கத்தான் செய்கிறது. உடலின் இயல்பே அதுதான். அதை நீங்கள் பெருக்க விரும்புகிறீர்களா, இல்லை உள்ளபடி அப்படியே பார்க்க விரும்புகிறீர்களா என்பதுதான் கேள்வி. மனத்தில் பெருக்குவதை நீங்கள் நிறுத்திவிட்டால், நீங்கள் எடுத்துக்கொள்ளும் 'ஆன்ட்டிபயாட்டிக்' மற்றும் 'பெயின்கில்லர்' அளவை வெகுவாக குறைத்துவிட முடியும்.

எது பொய்மையிலிருந்து உண்மைக்கு, பற்றுதலிலிருந்து விடுதலைக்கு இட்டுச்செல்கிறதோ, அதுவே யோகா

பெரும்பாலானவர்கள் இன்னும் யோகா என்றால் உடலை வளைப்பது, முறுக்குவது, தலைகீழாக நிற்பது என்றே நினைக்கிறார்கள். எது பொய்மையிலிருந்து உண்மைக்கு, பற்றுதலிலிருந்து விடுதலைக்கு இட்டுச்செல்கிறதோ, அதுவே யோகா என்பதை அவர்கள் உணர்வதில்லை. சுவாசிப்பதன் மூலம் நீங்கள் யோகியாக முடியும். நடப்பதன் மூலம் நீங்கள் யோகியாக முடியும். அறுவை சிகிச்சைக்கான மேஜையில் படுத்தபடி நீங்கள் யோகியாக முடியும். எதுவும் செய்யாமல் சும்மா உட்கார்ந்தும் நீங்கள் யோகியாக முடியும். யோகா என்பது குறிப்பிட்ட ஒரு செயல் பற்றியது அல்ல. ஒருவரின் தனிப்பட்ட தன்மையின் எல்லைகளை அழிப்பதே யோகா - உங்களையும் பிரபஞ்சத்தையும் பிரிக்கும் எல்லைக்கோட்டை அழிப்பதே யோகா.

இந்த பிரிவினையே மனிதனின் வேதனைகள் அனைத்திற்கும் ஆணிவேர். பெரும்பாலானவர்கள் தாங்கள் ஏன் வேதனைப்படுகிறார்கள் என்றே தெரியாமல் இருக்கிறார்கள் - அவர்கள் 'நானா' அல்லது 'பிரபஞ்சமா' என்ற போட்டியாக வாழ்க்கையை உணர்வதாலேயே வேதனைப்படுகிறார்கள். அதாவது தாங்களும் படைப்பின் ஒரு சிறு பகுதியே என்பதை மறந்து, தொடர்ந்து படைப்புடன் போராடுகிறார்கள். பிரபஞ்சத்துடனான இப்படிப்பட்ட போட்டி ஆழமான வேதனையை உருவாக்குகிறது.

தற்போது பெரும்பாலான மனிதர்கள், விழிப்புணர்வின்றி எல்லைகள் வகுக்கும் அடிப்படையான பரிணாமப் பிரச்சனைகளையே எதிர்கொள்கிறார்கள். உங்கள் அடிப்படையான எல்லை, தற்போது மனித உடலாக இருக்கிறது. நீங்கள் இன்னொருவரை சேர்த்துக்கொண்டு 'இது என் குடும்பம்' என்கிறீர்கள். இன்னும் பத்து பேரை சேர்த்துக்கொண்டு 'இது என் சமுதாயம்' என்கிறீர்கள். இன்னும் கோடிக்கணக்கானோரை சேர்த்துக்கொண்டு 'இது என் தேசம்' என்கிறீர்கள். இருந்தாலும் மனித மனதுடைய பரிணாம வளர்ச்சியின் எச்சத்தால் ஏற்பட்ட எல்லைகள் இருக்கத்தான் செய்கின்றன. நீங்கள் விழிப்புணர்வாக மாறினால், எல்லைகள் வகுப்பதற்கான இந்த கட்டாயத்திலிருந்து முற்றிலுமான விடுபடுகிறீர்கள்.

நீங்களே பிரஞ்சம், பிரபஞ்சமே நீங்கள் - இதுதான் யோகா.

இப்படி நடந்துவிட்டால், உங்களுக்குள் அப்படியொரு இலகுவான நிலையை அடைவீர்கள், அதை காண்போர் ஏதோ அமானுஷ்ய நிலையை அடைந்துவிட்டீர்கள் என நினைப்பார்கள். ஆனால் ஒரு மனிதன் இருக்கவேண்டிய நிலையே அதுதான். அப்போது உங்கள் உடலில் இருக்கும் வலி மறையாது. ஆனால் உங்களுக்குள் அதனினும் மிகுந்த விலைமதிப்பில்லா நிலைக்கு நீங்கள் வந்திருப்பீர்கள், அதனால் அப்போது உங்கள் அனுபவத்தின் தன்மையை நீங்களே நிர்ணயிக்க முடியும். அப்போது உங்கள் வேதனையின் முடிவை சிறப்பாக அடைந்தவராவீர்கள்.

ஆசிரியர் குறிப்பு:

  • நமது வாழ்வில் நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை புதிய கோணத்தில் அணுக வழிசெய்யும், வாழ்வின் மறைஞான விஷயங்களை எல்லோரும் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் விளக்கும் சத்குருவின் கட்டுரைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1