இன்று இருந்த இடத்திலிருந்தே உலகின் எந்த மூலைக்கும் கணினி வழியாகச் சென்று அந்த இடத்தைக் கண்டு ரசித்து வரும் அளவிற்கு தொழிற்நுட்பத்தில் வளர்ந்துள்ளோம்! ஆனால், வாழ்க்கையின் உயிரோட்டம் என்பது இருந்த இடம்தெரியாமல் குறுகிப்போய்க்கொண்டிருக்கிறதே? இதற்கான காரணம் என்ன? வாழ்வை உயிர்ப்புடன் வாழ விழிப்புணர்வு ஏன் அவசியம்? கட்டுரை தருகிறது!

Question: விழிப்புணர்வுடன் இருப்பது என்றால் என்ன?

சத்குரு:

“விழிப்புணர்வு” என்பது ஒரு தெளிவில்லாத வார்த்தை. பல தரப்பினருக்கும் பலவிதமான அர்த்தம் கொடுக்கக்கூடியது. “விழிப்புணர்வு” என்று கூறும்போது, இதை மனதின் எச்சரிக்கை உணர்வு என்று தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். எச்சரிக்கை உணர்வு என்பது உங்கள் பிழைப்பு நன்றாக நடப்பதற்கு உங்களுக்கு உதவி செய்வது. விழிப்புணர்வு என்பது நீங்கள் செய்யக்கூடிய ஏதோ ஒரு செயல் அல்ல. விழிப்புணர்வு என்பது உயிர்ப்புடன் இருப்பது.

மனிதர்கள் தங்கள் எண்ணங்களை மிகவும் முக்கியமாகக் கருதுகின்றனர். இது எந்த அளவுக்கு என்றால், “நான் சிந்திப்பதால்தான் உயிர் வாழ்கிறேன்”, என்று கூறுமளவுக்குப் போய்விட்டனர்.

நீங்கள் உயிரோட்டமாக இருப்பதே உங்களது விழிப்புணர்வினால்தான். நீங்கள் எந்த அளவுக்கு விழிப்புணர்வுடன் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்குத்தான் உயிர்ப்புடன் இருக்கிறீர்கள். எந்த அளவுக்கு விழிப்புணர்வுடன் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்குத்தான் உங்களுக்குள் உணர்தலும் ஏற்படுகிறது.

“விழிப்புணர்வை நான் எப்படி பயிற்சி செய்வது?” அதை நீங்கள் பயிற்சி செய்ய முடியாது. நீங்கள் எப்படி வாழ்க்கையைப் பயிற்சி செய்வீர்கள்? நீங்கள் இறந்து விட்டிருந்தால், வாழ்க்கையை நீங்கள் பயிற்சி செய்யலாம். நீங்கள் உயிருடன் இருக்கும்போது, வாழ்க்கையை எப்படிப் பயிற்சி செய்ய முடியும்? அதாவது தற்போதைக்கு உங்களுடைய உயிர்த் தன்மையானது முழு உயிர்ப்புடன் நிகழ்வதற்கு நீங்கள் இடமளிப்பதில்லை. நீங்கள் உங்களது சிந்தனைக்கும், அது தொடர்பான உணர்ச்சிக்கும்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறீர்கள். உங்களுடைய உயிர்த்தன்மையான செயல்பாடுகளைவிட, மனோரீதியான செயல்பாடுகள் மிக அதிகமான முக்கியத்துவம் பெற்றுவிட்டது. விழிப்புணர்வுடன் இருப்பது ஏன் இவ்வளவு கடினமாகத் தோன்றுகிறது என்றால், நாம், நமது மனங்களை முடிவில்லாமல் பேசுவதற்குப் பழக்கிவிட்டோம். மனம் தொடர்ந்து அரட்டை அடிப்பதை நிறுத்தினால், விழிப்புணர்வுடன் இருப்பதுதான் நமது வாழ்வின் இயல்பாக இருக்கும்.

மனிதர்கள் தங்கள் எண்ணங்களை மிகவும் முக்கியமாகக் கருதுகின்றனர். இது எந்த அளவுக்கு என்றால், “நான் சிந்திப்பதால்தான் உயிர் வாழ்கிறேன்”, என்று கூறுமளவுக்குப் போய்விட்டனர். இதில் எது உண்மை என்று நினைக்கிறீர்கள்? நீங்கள் உயிர் வாழ்வதால் சிந்திக்கிறீர்களா, அல்லது சிந்திப்பதால் உயிர் வாழ்கிறீர்களா? நீங்கள் உயிர் வாழ்வதால்தான் சிந்தனையை உருவாக்க முடிகிறது, இல்லையா? நீங்கள் சிந்தனைக்குத் தரும் முக்கியத்துவத்தை, வாழ்வின் செயல்முறைக்கு மாற்றவேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.

எப்போதாவது, யாருடைய குறுக்கீடும் இல்லாமல், ஐந்து நாட்கள் கதவுகளை மூடிவிட்டு ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால், ஐந்து நாட்களும் எனக்கு ஒரு எண்ணம் கூட உண்டாகாது. அந்த நாட்களில் நான் ஜன்னலுக்கு வெளியே பார்ப்பதில்லை, எதையும் படிப்பதில்லை, எதுவும் செய்வதில்லை, நான் வெறுமனே உயிர்ப்புடன் மட்டும் இருக்கிறேன். உங்களுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் எத்தகைய மாபெரும் அதிசயம் இது. அங்கே சிந்திப்பதற்கு என்ன இருக்கிறது? உங்களது முட்டாள்தனமான எண்ணங்களின் செயல்பாட்டைவிட, உயிர்ப்போடு இருப்பது மாபெரும் செயல்பாடு.

எப்படியிருந்தாலும், உங்களது சிந்தனை என்னவாக இருக்க முடியும்? நீங்கள் உங்கள் தலைக்குள் சேகரித்து வைத்திருக்கும் அர்த்தமற்றவைகளைத்தான் மறுசுழற்சி செய்கிறீர்கள். இதைத்தவிர உங்கள் தலைக்குள்ளிருந்து வேறு ஏதாவது புதிய சிந்தனை எழுகிறதா? இந்த மறுசுழற்சியின் முட்டாள்தனம் எந்த அளவுக்கு முக்கியமாகிவிட்டது என்றால், “நான் உயிர்வாழ்வதே கூட சிந்திப்பதன் காரணமாகத்தான்” என்று கூறுமளவுக்கு போய்விட்டது. உயிர்வாழ்தல் என்பது, எண்ணங்கள் என்னும் செயல்முறையையும் விட பெரிய செயல்முறை.

நீங்கள் விரும்பினால், முழுமையாக வாழ்ந்து கொண்டு, அதே நேரம் எண்ணங்கள் எதுவுமில்லாமல் இருக்கமுடியும். நீங்கள் எது குறித்தும் சிந்திக்காதபோது இருந்த கணங்களே, உங்கள் வாழ்வின் மிக அழகிய கணங்களாக இருக்கின்றன என்பதைத் தயவுசெய்து பாருங்கள். பரவசமான கணங்கள், ஆனந்தமான கணங்கள், உச்சக்கட்ட கணங்கள், அமைதியின் ஆழ்ந்த கணங்கள் இவையெல்லாமே நீங்கள் எதைப் பற்றியும் சிந்திக்காமல் வெறுமனே வாழ்ந்தபோது நிகழ்ந்த கணங்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எது மிகவும் முக்கியம், வாழ்வதா அல்லது சிந்தனை செய்வதா? நீங்கள் இதை முடிவு செய்யவேண்டும். நீங்கள் வாழ்வதற்கு விரும்புகிறீர்களா அல்லது சிந்திப்பதற்கு விரும்புகிறீர்களா? தற்போது, தொண்ணூறு சதவிகித நேரம், நீங்கள் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்துக் கொண்டுதான் இருக்கிறீர்களே தவிர, வாழ்க்கையை வாழவில்லை. நீங்கள் இங்கே இருப்பது வாழ்க்கையை உணர்வதற்கா அல்லது வாழ்க்கையைப் பற்றி சிந்தனை செய்வதற்கா? நீங்கள் வாழ்வை உணரவே விரும்புகிறீர்கள். ஆனால் எண்ணங்களில் உங்களை இழந்துவிட்டால், பிறகு வாழ்க்கையை உங்களால் உணர முடியாது. உங்களது புரிதலின் மூலமாகத்தான் நீங்கள் உணர்கிறீர்கள். சிந்தனையின் மூலம் உணரமுடியாது.

கடந்துபோன வாழ்க்கையின் அனுபவங்களை வைத்து, உங்கள் தலையில் நீங்கள் ஏதோ ஒன்றை உருவாக்குகிறீர்கள். அது எண்ணத்தின் செயல்பாடு. உங்களது எந்த எண்ணத்திற்கும் முக்கியத்துவம் கிடையாது. ஏனெனில் உண்மை நிலைக்கும், உங்கள் எண்ணத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உங்கள் எண்ணங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் விரும்பியபடி, அவர்களுக்கே உரிய அர்த்தமற்றவைகளை எண்ணிக் கொள்ளலாம். உண்மை நிலைக்கும், அதற்கும் எந்தத் தொடர்பும் இருக்கவேண்டிய அவசியமில்லை.

வாழ்க்கையோடு ஒப்பிட்டால், உங்களது மனரீதியான செயல்முறை என்பது மிகவும் சிறியதொரு நிகழ்வு. இந்தக் கணம் உயிர்ப்புடன் இருப்பது என்பது, நீங்கள் சிந்தனையில் இருப்பதை விட மிகவும் முக்கியம் அல்லவா? ஆனால் உங்களது கருத்தை, யாராவது சிறிதளவு நையாண்டி செய்தாலும், பிறகு உங்கள் கருத்தை நிலை நாட்டுவதற்காக, நீங்கள் இறப்பதற்குக்கூடச் சித்தமாக இருக்கிறீர்கள். மனிதர்கள் தங்களது கருத்துக்களுக்காகவும், தங்களது நம்பிக்கைகளுக்காகவும் உயிரையே விடுகின்றனர். வாழ்வின் செயல்முறையை விடக் கருத்து மிக அதிக முக்கியமாகிவிட்டது. ஏனெனில், உயிர்ப்போடு இருப்பதன் அளப்பரிய தன்மையை மக்கள் இன்னமும் உணரவில்லை. பிழைப்பு குறித்த செயல்பாடுகளுக்குள் வாழ்க்கையை அடக்கிவிட்ட காரணத்தால், வாழ்வை விடக் கருத்து மிகவும் பெரியதாகத் தோன்றுகிறது. ஆனால் அது அப்படி அல்ல. வாழ்வின் செயல்பாட்டினை ஒப்பிடும்போது, எண்ணம் ஒரு மிகச் சிறிய நிகழ்வுதான்.

எப்போதாவது, யாருடைய குறுக்கீடும் இல்லாமல், ஐந்து நாட்கள் கதவுகளை மூடிவிட்டு ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால், ஐந்து நாட்களும் எனக்கு ஒரு எண்ணம் கூட உண்டாகாது. அந்த நாட்களில் நான் ஜன்னலுக்கு வெளியே பார்ப்பதில்லை, எதையும் படிப்பதில்லை, எதுவும் செய்வதில்லை, நான் வெறுமனே உயிர்ப்புடன் மட்டும் இருக்கிறேன்.

அரிஸ்டாட்டில், நவீன தர்க்க அறிவின் தந்தையாகக் கருதப்படுகிறார். அவரது தர்க்கம் மிகவும் எளிமையானது மற்றும் நேரடியானது. A என்பது A-வாக மட்டுமே இருக்கமுடியும், B என்பது B-யாக மட்டுமே இருக்க முடியும். A என்பது B-ஆக முடியாது, B என்பது A-ஆக முடியாது. இந்தச் சமன்பாட்டை நீங்கள் விவாதம் செய்ய முடியுமா? காரணரீதியாக இது துல்லியமானதாகத் தோன்றுகிறது. ஆனால், நாம் இதைச் சற்று ஆழமாகப் பார்ப்போம்.

இங்கே நீங்கள் ஒரு ஆணாகவோ அல்லது ஒரு பெண்ணாகவோ இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள்? ஒரு ஆணும், பெண்ணும் இணைந்ததால் வந்துள்ளீர்கள். இப்போது நீங்கள் ஒரு பெண் என்பதால், உங்கள் தந்தையின் பங்களிப்பு உங்களுக்கு இல்லை என்று கூறுவது சரியானதா? அவர் உங்களுக்குள் இருக்கிறார், அல்லவா? ஒருவேளை நீங்கள் ஆணாக இருக்கிறீர்கள் என்றால், உங்கள் தாயின் பங்களிப்பு உங்களிடம் இல்லை என்பது சரியான வாதமாகுமா? உங்களுக்குள் அவர் இருக்கிறார், இல்லையா? கண்கூடாக நீங்கள் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கிறீர்கள். ஆனால் உண்மையில் நீங்கள் இரண்டுமாக இருக்கிறீர்கள். உண்மை என்பது காரணரீதியாக விளக்கமுடியாத பரிமாணமாக இருக்கிறது. தர்க்கத்திற்குள் அதை அடக்க முடியாது. ஏனென்றால், தர்க்கம் என்பது எப்போதும் பிரித்துப் பார்ப்பது, உண்மை எப்போதும் ஒன்றிணைப்பது. ஆகவே வாழ்க்கைக்குள் தர்க்கத்தை எங்கே, எப்படிப் பொருத்திப் பார்க்கமுடியும்?

உங்கள் வாழ்க்கையில், அளவுக்கதிகமான தர்க்கத்தைப் புகுத்தினால், உங்கள் வாழ்க்கை சுத்தமாக உயிர்ப்புத்தன்மை இல்லாமல் ஆகிவிடும். வாழ்க்கையின் பொருள்தன்மையான சூழல்களைக் கையாள்வதற்கு மட்டும்தான் மனதின் காரணரீதியான அம்சம் உதவியாக உள்ளது. நீங்கள் உங்களை முற்றிலும் காரணரீதியாகக் கையாள்வதற்கே முயன்றால் நீங்கள் முற்றிலும் குளறுபடியாகிவிடுவீர்கள். ஏனெனில், அடிப்படையில் உங்கள் வாழ்க்கையை முழுக்க முழுக்க காரணரீதியாக மட்டும் பார்த்தால், வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் இருப்பதில்லை.

நாளைக்குக் காலையில் நீங்கள் கண்விழித்ததும், முற்றிலும் காரணரீதியாக சிந்தனை செய்து பாருங்கள். சூரிய உதயத்தைப் பார்க்கவேண்டாம், வானத்தில் பறக்கும் பறவைகளைப் பார்க்கவேண்டாம். நீங்கள் நேசிப்பவர்களை, உங்கள் குழந்தையின் முகத்தை அல்லது தோட்டத்து மலர்களை நினைத்தும் பார்க்கவேண்டாம். தர்க்கரீதியாக மட்டும் சிந்தனை செய்யுங்கள், அதாவது, இப்போது நீங்கள் படுக்கையை விட்டு எழ வேண்டும். இது அவ்வளவு இலேசான விஷயமல்ல. பிறகு காலைக்கடன் முடித்து, பல் துலக்கி, சாப்பிட்டு, வேலை செய்து, சாப்பிட்டு, வேலை செய்து, சாப்பிட்டு, தூங்கி நாளை காலை, இதே விஷயங்கள் மேலும் மேலும் இந்த அட்டவணைப்படி மறுபடியும், மறுபடியும் அடுத்த 40, 50 வருடங்களுக்கு நீங்கள் இதையே செய்யவேண்டும். உங்கள் வாழ்வில் உணர்தலின் அனுபவங்களை கவனத்தில் கொள்ளாமல், நூறு சதவிகிதம் காரணரீதியாக யோசித்துப் பாருங்கள். அப்படியொரு வாழ்க்கை உண்மையிலேயே வாழ்வதற்கு உகந்ததுதானா?

அதீதமான தர்க்கரீதியான கணங்கள், தற்கொலைக்கான கணங்களாகவே இருக்கின்றன என்பதை தயவுசெய்து பாருங்கள். வாழ்க்கை குறித்து நூறு சதவிகிதம் காரண அறிவுடன் சிந்தித்தால், இங்கே வாழ்வதற்கான காரணம் உண்மையிலேயே எதுவும் இல்லை. நானும் நீங்களும் இங்கே வாழ்வதற்கு உண்மையிலேயே எந்தக் காரணமும் இல்லை. ஆனால், உங்களுடைய வாழ்க்கை அனுபவத்தில், ஒரே ஒரு அழகான கணத்தை நீங்கள் காண்பீர்களேயானால், சட்டென்று எல்லாமே பிரகாசமாகி உங்களுக்கு வாழ்க்கை மீதான விருப்பம் ஏற்படுகிறது. உங்கள் வாழ்வின் காரணரீதியான அம்சமும், வாழ்க்கையின் அனுபவப்பூர்வமான உணர்தலின் பரிமாணமும் ஒன்றுக்கொன்று நேரெதிராக இருக்கின்றன. அதனால்தான் நீங்கள் வாழ்க்கையுடன் போராடுகிறீர்கள். நீங்கள் வாழ்க்கையை உணர்தலின் அடிப்படையில் பார்த்தால், எல்லாமே வாழ்வதற்கான காரணமாக உள்ளது. ஆனால், வாழ்க்கையைக் காரண அறிவின்படி பார்த்தால், இங்கே வாழ்வதற்கான ஒரு காரணமும் இல்லை.

ஒருவர் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்? ஏனெனில் அவர்கள் தங்களுக்கு நேர்ந்த அழகான உணர்தல்களைப் பார்க்க மறுக்கின்றனர். தேர்வில் தோல்வியடைந்தால் தற்கொலை செய்கின்றனர். தங்கள் கணவன்மார்கள் பிரிந்துவிட்டால் தற்கொலை செய்கின்றனர். சொத்து பறிபோனால் தற்கொலை செய்கின்றனர். பல காரணங்களினால் மனிதர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இன்று உங்கள் கணவரோ அல்லது மனைவியோ உங்களை விட்டுப் பிரிந்து போனதாக வைத்துக்கொள்வோம். காரண அறிவின்படி நீங்கள் பார்த்தால், “என்னுடைய வாழ்க்கையே இந்த நபரைக் காதலிப்பதும் கூட இருப்பதும்தான். என் வாழ்க்கையாகவே இருந்த நபர் இப்போது போய்விட்ட பிறகு, நான் ஏன் வாழ வேண்டும்? வாழ்வதற்கான காரணம் என்ன உள்ளது?” இப்படிக் காரணரீதியாக யோசித்தால், நீங்கள் தற்கொலை செய்துகொள்வீர்கள். ஆனால், உங்கள் கணவரோ அல்லது மனைவியோ போனபிறகு, அதுவே உங்கள் வாழ்க்கைக்கு ஒரு முற்றிலுமான புதிய வாய்ப்பாக இருக்கலாம். வாழ்வின் ஒரு பகுதியிலிருந்து நீங்கள் விடுபட்டதாலேயே, உங்களால் கற்பனைசெய்து கூடப் பார்க்கமுடியாத எத்தனையோ வேறு விஷயங்கள் நிகழலாம். நிச்சயமாக நமக்குத் தெரியாது என்றாலும் அதற்கான வாய்ப்பு இருக்கிறது.

நீங்கள் நூறு சதவிகிதம் காரண அறிவோடு சிந்தித்தால், உண்மையிலேயே வாழ்க்கைக்கான வாய்ப்பே இல்லாமல் போகிறது. உங்களது தர்க்கத்தை எந்த அளவுக்கு, எந்தெந்த சூழல்களில் பயன்படுத்தவேண்டும், எங்கே பயன்படுத்தக்கூடாது என்பதை நீங்கள் அறிந்தால் மட்டுமே, உங்கள் வாழ்க்கை அழகானதாக இருக்கும். நீங்கள் முழுக்க முழுக்க காரண அறிவைக் கொண்டிருந்தால் உங்கள் வாழ்க்கையில் அழகு என்பதே இருப்பதில்லை. அனைத்துமே வெறுமையாகிவிடுகிறது. இது விரும்பத்தக்கதல்ல.

உங்கள் கணவரோ அல்லது மனைவியோ போனபிறகு, அதுவே உங்கள் வாழ்க்கைக்கு ஒரு முற்றிலுமான புதிய வாய்ப்பாக இருக்கலாம். வாழ்வின் ஒரு பகுதியிலிருந்து நீங்கள் விடுபட்டதாலேயே, உங்களால் கற்பனைசெய்து கூடப் பார்க்கமுடியாத எத்தனையோ வேறு விஷயங்கள் நிகழலாம். நிச்சயமாக நமக்குத் தெரியாது என்றாலும் அதற்கான வாய்ப்பு இருக்கிறது.

வாழ்க்கையின் பொருள்தன்மையான அம்சங்களைக் கையாள்வதற்கு மட்டும்தான் காரண அறிவு அவசியமாக உள்ளது. வாழ்க்கையின் உணர்தல் பரிமாணத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமானால் அதற்கு உங்களுடைய அற்பமான எண்ணத்தைக்கொண்டு ஒருகாலும் அறியமுடியாது. உங்களுக்கு ஐன்ஸ்டீனின் மூளையும், சிந்தனையும் இருந்தாலும், அப்போதும்கூட அது ஒரு அற்பமான எண்ணம்தான். ஏனெனில் எண்ணம் வாழ்வைவிடப் பெரிதாக இருக்கமுடியாது. எண்ணம் என்பதே காரணரீதியாக இரண்டு மாறுபட்ட கருத்துகளுக்கு இடையில் செயல்படுவதாகத்தான் இருக்கமுடியும். அந்த வகையில் அது மிகவும் சிறியது.

வாழ்வின் பிரம்மாண்டத்தை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்றால், உங்களது எண்ணங்கள், தர்க்க அறிவு அல்லது காரண அறிவைக்காட்டிலும் அதிகமான வேறு ஒரு தன்மையை நீங்கள் பெற்றிருக்கவேண்டும். அந்தப் பரிமாணத்தை நீங்கள் உங்களுக்குள் திறந்து வைத்தால்தான், வாழ்வை அதன் பரந்த தன்மையில் நீங்கள் சுவைப்பீர்கள். இல்லையெனில் வாழ்வின் பொருள்தன்மையான விஷயங்களை மட்டுமே நீங்கள் அறிவீர்கள். எண்ணங்களால் நீங்கள் பொருள்தன்மையை அறிந்துகொள்ள முடியும், பொருள்தன்மையை உபயோகிக்க முடியும். ஆனால் பொருள்தன்மை தவிர வேறு எதிலும் நீங்கள் ஆழமாக ஊடுருவிச் செல்ல மாட்டீர்கள்.

அரிஸ்டாட்டில் மற்றும் அவரது வழியில் வந்தவர்களுக்கு உலகம் பெரும் முக்கியத்துவம் அளித்துள்ள காரணத்தாலேயே, அனைத்து அறிவியல்களும் பொருள்தன்மையின் பரிமாணத்திலேயே முன்னேற்றம் கண்டுள்ளது. இதனால் பெருமளவு வசதிகள் ஏற்பட்டுள்ளன. உங்களுடைய கணினியும், இணையதளமும் செய்கின்ற விஷயங்களைக் கண்டு நீங்கள் சிலிர்ப்படையலாம், புளகாங்கிதம் அடையலாம். ஆனால் உண்மையாகப் பார்த்தால், உங்கள் வாழ்வின் உயிர்த்தன்மைக்கு அது எதுவும் செய்திருக்கவில்லை. ஆடம்பர வசதிகள் மற்றும் சௌகரியங்களை அது அளித்துள்ளது. ஆனால் முடிவில், அது உங்களுக்கு எந்த விதத்திலும் ஆனந்தத்தைக் கொண்டு வரவில்லை. உணர்தலின் அல்லது படைப்பின் எந்த உயர்நிலைப் பரிமாணங்களுக்கும் அது உங்களை அழைத்துச் செல்லவில்லை. நீங்கள் முன்பிருந்த அதே இடத்தில்தான் இருக்கிறீர்கள். ஒரு மாட்டு வண்டியில் பயணிப்பதற்குப் பதில், நீங்கள் இப்போது மெர்ஸிடிஸ் கார் ஓட்டுபவராக இருக்கக்கூடும் அல்லது அதைப்பற்றிய கனவில் இருக்கக்கூடும். எந்த வகையில் பார்த்தாலும் நீங்கள் இன்னமும், புள்ளி Aயிலிருந்து, புள்ளி Bக்குத்தான் நகர்ந்து கொண்டிருக்கிறீர்கள். வேறொரு புள்ளிக்கு நீங்கள் செல்லவில்லை. நீங்கள் அதிவேக விமானத்தில் பறந்தாலும் அல்லது மாட்டு வண்டியில் பயணம் செய்தாலும், அது பக்கவாட்டான நகர்வுதான். நீங்கள் விண்வெளியில் பயணம் செய்தாலும், அப்போதும் கூட அது புள்ளி Aயிலிருந்து, புள்ளி Bக்கான பயணமாகவே உள்ளது.

இவ்வளவு ஆராய்ச்சிகள் இருந்தபோதும், உங்களுக்குள் புதிய பரிமாணம் சம்பவிக்காதது ஏனென்றால், ஆராய்ச்சிக்காக நீங்கள் பயன்படுத்தும் கருவிகள் மிகவும் குறுகியவை அல்லது எல்லைக்குட்பட்டவையாக இருக்கின்றன. அவைகள் காரண ரீதியானதாகவும், அறிவு சார்ந்தவையாகவும் மட்டும் இருக்கின்றன. ஆகவே வாழ்வின் வேறு எந்தப் பரிமாணத்தையும் நீங்கள் எட்டுவதற்கு வழியில்லை. அதற்கு சாத்தியமில்லை. உங்கள் ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். ஆனால் நீங்கள் சந்திரனுக்குச் செல்ல ஒரு மாட்டு வண்டியில் பயணிக்க முயல்வதைப் போன்றது அது. நீங்கள் எவ்வளவுதான் மாட்டை அடித்து விரட்டினாலும், அது சந்திரனை எட்டப் போவதில்லை. ஒருவேளை நீங்கள் இந்த மாட்டு வண்டி வைத்து ஒரு மலை மீது ஏறமுடியும், ஆனால் சந்திரனுக்குச் செல்லமுடியாது. இதை நீங்கள் உங்கள் மதிநுட்பத்தினால் கற்றுக்கொள்ளலாம் அல்லது வாழ்க்கை உங்களைக் கிழித்து, காயப்படுத்தி மெல்ல மெல்ல பாடம் கற்றுத்தரும். எப்படிப் பாடம் கற்பது என்பது உங்களது தேர்வு மற்றும் விருப்பத்திற்கு உட்பட்டது.