கல்கி அவதாரம் பற்றிய உண்மை என்ன? (Kalki Avatar in Tamil)
கலியுகத்தில், விஷ்ணுவின் கடைசி அவதாரமாக கல்கி தோன்றுகிறார் என்று புராணங்கள் கூறுகின்றன. இதெல்லாம் எதைப் பற்றியது? சத்குரு பதிலளிக்கிறார்.

கேள்வி: கலியுகத்தில், விஷ்ணுவின் கடைசி அவதாரமாக கல்கி தோன்றுவார் என்று புராணங்கள் கூறுகின்றன. இதைப்பற்றி நீங்கள் விளக்கமுடியுமா?
சத்குரு: கலியுகம் என்றால் “இருளின் காலம்” என்று பொருள். கோள் பயணவழி மூலமாக, கிரகமானது ஒரு முழு சுழற்சி செய்வதற்கு 25,920 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது. நீங்கள் இந்த சுழற்சியை இரண்டு பாதிகளாகப் பிரித்தால், நான்கு யுகங்களும் இரண்டு முறை வருகின்றன, அல்லது மொத்தமாக எட்டு யுகங்கள் இருக்கின்றன. கலியுகங்களும், சத்யுகங்களும் மட்டும் இரண்டிரண்டாக இணைகின்றன – அதாவது இரண்டு சத்யுகங்களும் மற்றும் இரண்டு கலியுகங்களும் அடுத்தடுத்து இருக்கின்றன. ஆனால் மற்ற இரண்டு யுகங்களும் – துவாபரயுகம் மற்றும் திரேதாயுகம் – கலியுகங்கள் மற்றும் சத்யுகங்களால் பிரிக்கப்படுகின்றன.கலியுகம் – இருளின் காலம்
கலியுகத்தை எது வித்தியாசப்படுத்துகிறது என்றால், இந்த யுகத்தின்போது, மனித புத்திசாலித்தனம் மிகவும் குறைவாக இருக்கிறது. அதற்குப் பிந்தைய யுகத்தில், மனித புத்திசாலித்தனம் மலரத் தொடங்குகிறது. இது எப்படி நடக்கிறது என்றால், மனித உடலமைப்பில் இருக்கும் மின்காந்த ஆற்றல்களைப் புரிந்துகொள்ளும் திறனும், பயன்படுத்தும் திறனும் அதிகரிக்கிறது என்று கூறுகின்றனர்.
Subscribe
உங்களது மூளைக்குள் இருக்கும் நரம்பணுக்கள் மின்புலனுடன் எப்படி செயல்படுகின்றன என்பதைச் சார்ந்து உங்கள் புத்திசாலித்தனம் இயங்குகிறது. மூளை எப்படி செயல்படுகிறது என்பதன் மாதிரி படிவத்தை நீங்கள் பார்த்தால், அது உண்மையாகவே மின்சாரத்துடன் படபடப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். சூரிய மண்டலத்தை ஆட்சிசெய்யும் இயற்பியல் விதிகளைப் பார்த்ததில், மனித மூளையானது மேற்கொண்டு வளர்ச்சி பெறுவதற்கு வழியில்லை என்பதை இயற்பியலாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். இதனையே, மிக நீண்ட காலமாக யோக அறிவியல் கூறிக்கொண்டுள்ளது.
இது ஏனென்றால், நரம்பணுக்களின் அளவை அதிகரித்தால், மூளை அதிக திறனுடையதாக இருக்கும், ஆனால் அதற்கு மிக அதிகமான சக்தி தேவையாக இருக்கும். உங்களது இருபது சதவிகித சக்தியானது மூளையில் செலவழிக்கப்படுகிறது. அதாவது மூளைதான், உடலின் அதிகமான சக்தியை எடுத்துக்கொள்ளும் பாகமாக இருக்கிறது. மாறாக, நரம்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்தால், மேலும் கூடுதலாகச் செயல்பட முடியும், ஆனால் மூளையின் சமிக்ஞைகளில் நீங்கள் தெளிவை இழந்துவிடுவீர்கள். சில குழந்தைகள் இந்த விதமாக இருக்கின்றனர் - அவர்களது மூளையில் நரம்பணுக்களின் எண்ணிக்கை வழக்கமான எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கிறது. அவர்கள் அறிவாளியாக ஆனால் கவனம் சிதறிப்போய் இருப்பார்கள். அவர்களால் தெளிவாகவும், அமைதியாகவும் சிந்திக்கமுடியாது. மூளையில் தெளிவில்லாத காரணத்தால், அதிலிருந்து எதுவும் வெளிப்படுவதில்லை.
மூளையின் அளவை அதிகரிப்பதோ அல்லது நரம்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோ பலனளிக்காது. இயற்பியல் விதிகளின்படி, மனிதமூளை மேலும் பரிணாமம் அடைவதற்கு சாத்தியமில்லை என்று அவர்கள் கூறுகின்றனர் – ஆனால் மூளையை மேலும் நன்றாகப் பயன்படுத்துவதற்கு நாம் கற்றுக்கொள்ள முடியும். தற்போது, மனிதர்கள் மூளையை மிகவும் சாதாரண வழியில் பயன்படுத்துகின்றனர். நீங்கள் அதை அதிநவீனமான வழியில் பயன்படுத்தினால், உங்கள் மூளையின் ஆற்றலைப் பன்மடங்கு அதிகரிக்க முடியும்.
நீண்ட காலத்துக்கு முன்பே, யோக அறிவியல் கூறியுள்ளது என்னவென்றால், மனித புத்திசாலித்தனத்தையும், மனித உடலையும் மேற்கொண்டு வளர்ச்சியடையச் செய்யமுடியாது, ஏனென்றால் இயற்பியல் விதிகள் அவற்றின் வரம்புகளை எட்டிவிட்டன. சூரியனைச் சுற்றி பூமி சுழலும் முறையுடனும், மற்றும் பூமியைச் சுற்றி சந்திரன் சுழலும் முறையுடனும் தொடர்புகொள்ளும் மனித உடலானது முழுத்திறனை எட்டியுள்ளது. அது மேற்கொண்டு செல்லமுடியாது. ஆனால் அதேநேரத்தில், குறிப்பிட்ட விஷயங்களைச் செய்வதால் மூளையைப் பயன்படுத்தும் உங்களது திறனை மேம்படுத்த முடியும் என்று யோக அறிவியல் கூறுகிறது. தேவையான சக்தியை உற்பத்தி செய்வதால், குண்டலினியை எழுப்புவதால், உங்களது சக்திகளை முழு வேகத்துக்கு தூண்டிவிடுவதால், நீங்கள் விரும்பினால் உங்களைச் சுற்றியுள்ள ஆயிரம் மூளைகளுக்கு ஆற்றல் தரமுடியும்.
கல்கி அவதாரம்
இருளின் காலத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கல்கி வரவிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். உண்மையில், காலத்தின் இயல்பு எப்படிப்பட்டது என்றால், யாரும் அதை ஆரம்பிக்கத் தேவையில்லை, யாரும் அதை முடித்துவைக்கத் தேவையில்லை – அது எப்படியும் கடந்துசென்றவாறு உள்ளது. உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு எதுவும் நிகழாமல் இருக்கலாம் – இருப்பினும் காலம் கடந்துபோகும். இந்த ஒரு விஷயத்தில் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கமுடியும். ஒருவேளை நீங்கள் ஒரு வரம் பெற்று, அழிவற்றவராக ஆனால், அப்போதும் காலம் கடந்து செல்வதை உங்களால் நிறுத்தமுடியாது. ஆகவே, காலத்தை யாரும் ஆரம்பித்துவைக்கவோ அல்லது முடித்துவைக்கவோ தேவையில்லை. “கல்கி ஒரு வெண்ணிறச் சிறகுகொண்ட குதிரையில் வருவார்”, என்று அவர்கள் கூறியபொழுது, அது உருவகமாக குறிக்கப்பட்டது. யுகம் மாறும்தருவாயில், வெளிச்சம் வந்து, இருளை அழிக்கும்.
அறை இருளாக இருந்து, நான் ஒரு விளக்கை ஒளிரச்செய்தால், அது இருளை அழிக்கிறது. முட்டாள்தனமான அறிஞர்கள் அல்லது சுரண்டல்வாதிகள், ஒரு உருவக வெளிப்பாட்டை அப்பட்டமான கருப்பு-வெள்ளை உண்மைகளாக அளித்துள்ளனர். அதாவது, கல்கி அவதாரம் என்பது ஒரு உருவக வெளிப்பாடு. யுகங்கள் இருண்ட கட்டத்திலிருந்து வெளிவருகையில், வெளிச்சம் எழுகிறது. அது நம்மீது பொழியும். அதனை நீங்கள் விரும்பாவிட்டாலும்கூட, திடீரென்று உங்களது மூளை வெடித்தெழுந்து, மேலானமுறையில் செயல்படும், ஏனென்றால் நீங்கள் ஒரு வித்தியாசமான காலத்துக்குள் நகர்ந்துவிட்டீர்கள். “எனக்கு ஒரு பிரகாசமான யோசனை கிடைத்தது”, என்று கூறுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். மனிதர்கள், எப்போதும் புத்திசாலித்தனத்தை ஒளியுடன் தொடர்புபடுத்தியுள்ளனர்.
இருள் மிகவும் மெல்லிய விஷயம், ஆனாலும் மக்கள் தவறான வழிமுறைகளைப் பயன்படுத்துவதால் அதைத் தவிர்க்கமுடியவில்லை. நீங்கள் ஒரு சிறு விளக்கை ஒளிரச்செய்தாலே, இருள் அழிக்கப்பட்டுவிடுகிறது. ஒளியோ அல்லது புத்திசாலித்தனமோ, உங்களிடமிருந்து வரவேண்டிய கட்டாயமில்லை – அது ஒரு விண்ணுலக சாத்தியத்திலிருந்து எழுகிறது. சூரிய மண்டலமானது, கலியுகத்தின் காலகட்டத்துக்கு வெளியே நகர்ந்துசெல்லும் காரணத்தால், ஒரு விண்ணுலக அன்பளிப்பாக, உங்களுடைய புத்திசாலித்தனம் பிரகாசமாக மாறும். ஒரு பறக்கும் குதிரையாகப் பார்க்கப்படுகின்ற சில விண்மீன் கூட்டங்கள் இருக்கின்றன. நீங்கள் உங்களுக்குள் இருள் வாழ்வதற்கு அனுமதித்திருந்தால், ஒரு பறக்கும் குதிரையில் கல்கி உங்கள் மீது இறங்கி, உங்களது இருளை அழிப்பார் என்று அதனால்தான் அவர்கள் கூறினர்.
சத்யுகம் – மனதின் மூலம் தொடர்புகொள்வது
வெவ்வேறு யுகங்களில், மனிதர்கள் புத்திசாலித்தனத்தின் வெவ்வேறு பரிமாணங்களையும், தகவல் பரிமாற்றத்தையும் பயன்படுத்துகின்றனர். சத்யுகத்தில், மனம் - காரண அறிவு அல்ல – மனம் தான், பரஸ்பரம் தொடர்புகொள்ளவும், வாழ்தலுக்கும் மிக முக்கியமாக இருக்கும். அதாவது, தொலைவிலிருந்து உங்களுக்கு நான் ஏதோவொன்றைக் கூறுவதற்கு விரும்பினால், எனக்கு ஒரு மைக்ரோஃபோன் தேவையில்லை, நான் உரக்கக் கத்தவும் வேண்டாம். நான் அதைப்பற்றி நினைத்தாலே, நீங்கள் அதைப் புரிந்துகொள்வீர்கள். சத்யுகத்தில், மக்கள் அரிதாகவே பேசினார்கள், ஏனென்றால் மனதின் வழியாக பரஸ்பரம் தொடர்புகொண்டனர். செய்யப்படவேண்டிய அனைத்தும் மனதளவில் செய்யப்பட்டன. இது எந்த அளவுக்கு என்றால், அங்கு உடல்ரீதியாக கருத்தரித்தல் நடக்காது – மனதளவில்தான் அது நடக்கும் என்று கூறப்படுகிறது.
திரேதாயுகம் - காட்சிப்புலன் புரிந்துணர்வு
திரேதாயுகத்தில், கூர்கவனம் மனதிலிருந்து இறங்கி கண்களுக்கு இடம்பெயர்ந்தது. கண்கள் மிகுந்த ஆதிக்கம் செலுத்தியது என்பது திரேதாயுகத்தில் மக்கள் பயன்படுத்திய மொழியில் பிரதிபலிக்கப்பட்டது. அந்தக் காலத்தில் இந்தியாவில் அடிப்படையான அறிமுக சொல் “நான் உன்னைப் பார்க்கிறேன்” என்பதாகவே இருந்தது. அதன் பொருள் “நான் உன்னை முற்றிலுமாகப் பார்க்கிறேன்.” அவர்கள் தங்களது கண்களை ஆற்றல்மிக்க வழியில் பயன்படுத்தினர். இது நேத்ர ஸ்பரிசம் என்று அழைக்கப்படுகிறது, அதாவது நீங்கள் யாரோ ஒருவரை உங்களது கண்களால் தொடமுடியும்.
நான் பள்ளிக்கூடம் செல்வதற்கு முன்பு, நான் ஒவ்வொன்றையும் உற்றுப்பார்ப்பேன். அதேநிலையில், நான் பள்ளிக்கூடத்துக்கும் சென்றபோது – நான் உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தேன். ஆரம்பத்தில், எனக்கு வார்த்தைகள் கேட்டன; சிறிது காலத்துக்குப் பிறகு வார்த்தைகள் எனக்கு எந்த அர்த்தமும் தரவில்லை, ஏனென்றால் நான்தான் அர்த்தங்களை உருவாக்கிக்கொள்கிறேன் என்பதை அறிந்தேன். பிறகு சப்தங்களும்கூட எனக்கு அர்த்தமற்றவை ஆகிவிட்டன. மற்றவர்களுக்கு காதுகொடுத்துக் கேட்பது ஒருபோதும் எனக்கு அர்த்தமுள்ளதாக இல்லை. அவர்களை உற்றுப்பார்ப்பதனால் மட்டுமே, நான் அவர்களைப் பற்றி அதிகம் அறிந்துகொண்டேன். நான் உற்றுப்பார்த்தது ஏனென்றால், நான் கூர்ந்து உற்றுப்பார்க்கும்போது, அவர்களை முழுமையாக அறிந்தேன். அவர்களேகூட அறிந்திருக்காத அவர்களது வாழ்க்கையைப் பற்றிய விஷயங்கள் அனைத்தையும் அறிந்தேன். அது மென்மேலும் ஆழமானது – நான் ஏதோவொன்றை மணிக்கணக்காக முடிவில்லாமல் உற்றுப்பார்ப்பேன். நான் எதையாவது அறிந்துகொள்ள வேண்டும் என்றால், அதை உற்றுப்பார்ப்பது வழக்கமானது. சிறிது காலம் கழித்து, அதைச் செய்வதற்கு இன்னும் மேலான வழிகள் இருப்பதை உணர்ந்தேன் – ஏதோவொன்றை அறிந்துகொள்ள வேண்டும் என்றால், நான் என் கண்களை மூடிக்கொள்வேன்.
துவாபரயுகம் – வாசனை உணர்தல்
துவாபரயுகத்தில், வாசனை உணர்வு மிகுந்த ஆதிக்கம் அடைந்தது. உயிர்சக்திகள் எங்கெல்லாம் உயர்ந்திருக்கிறதோ, அங்கெல்லாம் வாசனையின் உணர்வு மிகவும் பலமாகவும், உணர்திறனுடனும் இருக்கும். உதாரணத்துக்கு, காட்டில் உங்களது கண்கள், காதுகள், மற்றும் உங்கள் மூளையைவிட உங்களுடைய வாசனை உணர்வு அதிக முக்கியமாக இருக்கிறது. நுகர்தலினால், ஒரு நபரிடத்தில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியும்.
சிறிது காலத்திற்கு முன்னர், ஒரு ராஜநாகம் நம் ஆசிரமத்திற்கு விருந்தினராக வந்தது. அது பூமியிலேயே மிக அற்புதமான படைப்புகளுள் ஒன்று. அது சுமார் 12 அடி நீளத்தில், ஆறு அடி உயரம் நிற்கக்கூடியதாக இருந்தது. உங்களை அது தொலைவிலிருந்து சுவைப்பதற்கு தனது நாக்கைப் பயன்படுத்தி, உங்களது இரசாயனத்தை அறிந்துகொள்கிறது. ராஜநாகம் அதிவேகமாக நகரமுடியும் என்பதுடன், அது உங்களைக் கடித்துவிட்டால் உங்களுக்கான நேரம் எட்டிலிருந்து பத்து நிமிடங்கள்தான். அதனால் அது மிகவும் அபாயகரமானது. ஒரு யானையைக் கொல்லப் போதுமான விஷம் அதனிடம் உள்ளது, ஆனால் நாம் அதனுடன் மிகவும் இயல்பாக இருப்பது ஏனென்றால், நமது உடலில் தவறான இரசாயனத்தை நாம் உருவாக்கவில்லை என்றால், அது நம்முடன் நன்றாக இருக்கிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். எல்லா மாமிச உண்ணிகளும், உண்மையில் ஏறக்குறைய எல்லா காட்டுயிர்களும் உங்களது இரசாயனத்தை உணரக்கூடியவையாக உள்ளன, ஆனால் குறிப்பாக பாம்புகள் மிகவும் கூர்மையான உணர்வுடையவை. நீங்கள் முழுமையான தளர்வு நிலையில் இருந்தால், நீங்கள் காட்டுக்குச் சென்று ஒரு விஷப்பாம்பைக் கையில் எடுக்க முடியும். உங்களது இரசாயனம் சிறிதேனும் படபடப்பு அல்லது பயத்தை வெளிப்படுத்தினால், அது உங்களை முடித்துவிடும், ஏனென்றால் உங்கள் உடலமைப்பில் என்ன நிகழ்கிறது என்பதை அது உடனடியாகப் புரிந்துணர்கிறது.
யோகிகள் எப்போதும் ஏன் ஒரு நாகப்பாம்பை அருகில் வைத்துக்கொள்கின்றனர்; மற்றும் சிவன் தன்னருகில் நாகப்பாம்பைக் கொண்டிருப்பதற்கு என்ன காரணம் என்றால், இந்த பூமியின் உயிரினங்களுள், நாகப்பாம்பு அதைச் சுற்றியுள்ள ஈதெரிக் ஒளிவட்டத்தை அதிக அளவில் கொண்டுள்ளது. அதாவது, அது அற்புதமான புலனுணர்வுடன் இருக்கிறது. புலனுணர்வு பெறுவதற்கு, இந்தக் குறிப்பிட்ட உயிரினம் உதவிகரமாக உள்ளது, மற்றும் அதனுடைய புலனுணர்வு யோகிகளே தலைவணங்கும்படியாக இருக்கிறது. தன்னைச் சுற்றிலும் அது உருவாக்கும் ஈதெரிக் ஒளிவட்டத்தினால் அதனுடைய புலனுணர்தல், பெரும்பாலான மனிதர்களுக்கு இருப்பதைக்காட்டிலும் மேலானதாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட அளவுக்கான ஈதெரிக் ஒளிவட்டத்தை உருவாக்குவதற்காக, அதற்குத் தேவையான சாதனா செய்யும் ஒரு குறிப்பிட்ட பழங்குடியினர் இந்தியாவில் இருக்கின்றனர். இதனால் மற்றவர்களின் புலனுணர்வில் இல்லாதவற்றை அவர்களால் உணர்ந்துகொள்ள முடிகிறது. உங்களால் உணரமுடிவது என்னவோ, அதைதான் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் – மற்றவை அனைத்தும் அர்த்தமற்றவையே. அது என்னால் கூறப்படலாம், ஒரு கடவுளால் கூறப்படலாம், வேதத்தில் எழுதப்பட்டிருக்கலாம், ஆனால் உங்களது புலனுணர்வில் இருந்து நீங்கள் அறிந்துகொள்ளும்வரை, அவையனைத்தும் அர்த்தமில்லாதவையே.
கலியுகம் – வாய்மொழி வெளிப்பாடு
மனோரீதியான, காட்சியளவிலான, மற்றும் நுகர்தல்ரீதியான புலனுணர்வின் பரிமாணங்களில் இருந்து நகர்ந்து – கலியுகத்தில், மனிதர்கள் முற்றிலுமாக வாய்மொழி சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களது வாய் மிகப்பெரிய விஷயமாகிறது. சூரிய மண்டலம் யுகங்களைக் கடந்து செல்லும்பொழுது, நீங்கள் அதனுடன் லயத்தில் இருந்தால், நீங்களும் இந்த யுகங்களின் வழியே பயணப்படுகிறீர்கள். நீங்கள் அதற்கும் மேலே இருந்தால், உங்களுக்கு விருப்பமான எந்த இடத்திலும் நீங்கள் தங்கிவிடமுடியும். உங்களுடைய விஷயங்களிலேயே நீங்கள் தடைப்பட்டுக்கிடந்தால், பூமி சத்யுகத்தில் இருக்கலாம், ஆனால் நீங்கள் உங்களது கலியுகத்தில் இருப்பீர்கள். அதாவது, ஒவ்வொரு தனிமனிதரும், ஆணோ அல்லது பெண்ணோ, அவரவர் இருக்கும் யுகத்தைக் கடந்து செல்லலாம் அல்லது யுகத்தினால் நசுக்கி மிதிக்கப்படலாம் அல்லது எந்த யுகத்தையும் சவாரி செய்யலாம். இங்கு இந்த மூன்று சாத்தியங்களும் இருக்கின்றன.