நான்கு யுகங்களின் சுழற்சியின் பின்னணியில் உள்ள அறிவியல் பற்றி விவரிப்பதுடன், குருச்சேத்திர போர் முடிவுற்று கலியுகம் துவங்கியது முதல் உள்ள காலவரிசையையும் கணக்கிடுகிறார் சத்குரு.

வானிலும் மனித உடலிலும் நிகழும் சுழற்சிகள்

சத்குரு: யோக வானியலில், சூரியனை சுற்றி வரும் பூமியின் சுற்றுப்பாதையை நாம் 27 பகுதிகளாக பிரித்துள்ளோம் - அவைகளே நட்சத்திரங்கள் எனப்படும். ஒவ்வொரு நட்சத்திரமும் மேலும் நான்கு சம பங்காக பிரிக்கப்பட்டுள்ளன - அவை பாதம் எனப்படும். நான்கையும் இருபத்தேழையும் பெருக்கினால் வருவது 108. விண்மண்டலத்தில் பூமி 108 படிகளை கடந்து செல்வதை இந்த 108 பாதங்கள் குறிக்கிறது. பூமியை சுற்றி வரும் நிலவின் சுற்றுப்பாதையின் ஒரு பாதி அளவுக்கு ஒவ்வொரு நட்சத்திரமும் ஒத்திருக்கிறது. மனித உடலில் நிகழும் சுழற்சிகள் அதற்கேற்பவும் அதற்கு பதிலளிக்கும் விதத்திலும் இருக்கிறது.

what is nakshatra and pada

நட்சத்திரங்களும் பாதங்களும்

ஒரு நல்ல ஆரோக்கியமான பெண்ணின் உடலில் சுழற்சிகள் வெளிப்படையாக 27.55 நாட்களுக்கு ஒரு முறை நிகழ்கிறது. இதுவே, ஒரு ஆணின் உடலில் நடக்கும் சுழற்சிகள் வெளிப்படையானதாக குறிப்பிடத்தகுந்த வகையில் நிகழாது - அது வேறு விதமானதாக நீண்ட கால அளவை எடுத்துக் கொள்வதாக இருக்கிறது. எது எப்படி இருந்தாலும், இந்த சுழற்சிகள் இந்த சூரிய மண்டலத்திலும், இந்த பிரபஞ்சம் முழுமையிலும் எல்லா காலங்களிலும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. நுண்ணுயிரும் பேரண்டமும் ஒரே விளையாட்டைத்தான் விளையாடுகின்றன. ஆனால் யார் விளையாட்டை யார் விளையாட வேண்டும்? உங்கள் விளையாட்டை பேரண்டம் விளையாடப்போகிறது என்று நீங்கள் நினைத்தால், உங்கள் வாழ்க்கையை நீங்கள் வீணடித்துவிடுவீர்கள். நீங்கள் பேரண்டத்தின் விளையாட்டை விளையாடினால், உங்கள் எதிர்பார்ப்புகளையெல்லாம் மிஞ்சும் வகையில் உங்கள் வாழ்க்கை நிகழும்.

நான்கு யுகங்களின் சுழற்சி

பூமியின் சுழற்சியால் துல்லியமாக நிகழும் இரு சம பகலிரவு நாட்களுக்கு (equinox) இடையே உள்ள கால அவகாசமே இராசி மண்டலம் முழுவதையும் ஒரு முறை சுற்றிவர பூமியின் அச்சு எடுத்துக் கொள்ளும் கால அளவு. இராசி மண்டலத்தின் ஒரு பாகையைக் கடக்க பூமிக்கு 72 வருடங்கள் ஆகிறது. 360 பாகைகளையும் கடந்து ஒரு சுழற்சியை முடிக்க 25,920 வருடங்கள் எடுத்துக் கொள்கிறது. இதில் ஒரு பாதியை கடக்க 12,960 வருடங்கள் பிடிக்கிறது. அதில் நான்கு யுகங்களும் அடங்கும். சத்தியயுகம் 5,184 வருடங்களும், திரேதயுகம் 3,888 வருடங்களும், துவாபரயுகம் 2,592 வருடங்களும், கலியுகம் 1,296 வருடங்களும் நிகழும். இந்த நான்கு யுகங்களை மொத்தமாக கணக்கிட மொத்தம் 12,960 வருடங்கள் வருகிறது.

கலியுகம் எப்போது துவங்கியது?

மஹாபாரத கதையை ஒரு குறிப்பிட்ட சூழலோடு நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. கி.மு.3140-ல் குருச்சேத்திர போர் முடிவுற்றது. கி.மு.3102-ல் கிருஷ்ணர் தன் உடலை நீங்கினார். போர் முடிந்து மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு பிறகு கலியுகம் தொடங்கியது. கி.பி.2012 வரை கிருஷ்ணரின் காலம் முடிவுற்று 5,114 ஆண்டுகள் ஆகிவிட்டன. நீள்வட்டமாக திகழும் பூமியின் அச்சு சுழலோட்டத்தின் முடிவுப் பகுதியில் நிகழும் கலியுகங்கள் இரண்டையும் கூட்டினால் வரும் 2,952 வருடங்களை 5,114-ல் இருந்து கழித்தால் வருவது 2,522 வருடங்கள். இதற்கு அர்த்தம், நாம் ஏற்கனவே துவாபரயுகத்தில் 2,522 வருடங்களை கடந்துவிட்டோம் என்பதுதான். துவாபரயுகத்தின் மொத்த காலம் 2,592 வருடங்கள் என்பதால், அந்த யுகம் முடிய இன்னும் நமக்கு 70 வருடங்கள் உள்ளன. 2082-ஆம் ஆண்டில் துவாபரயுகத்தை பூர்த்தி செய்து நாம் திரேதயுகம் நோக்கி நகர்வோம். இந்த உலகம் மற்றுமொரு எழுச்சியை சந்திக்கும். அது போராக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. நல்வாழ்வு மற்றும் மேழெழுந்த விழிப்புணர்வை மனிதர்களுக்கு நல்கும் புது யுகத்தில் நுழைவதற்கு முன் அநேகமாக பெரும் மக்கள்தொகை அதிகரிப்பு மற்றும் இயற்கை பேரழிவுகள் நிகழக்கூடும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

யுகங்களும் மனித விழிப்புணர்வும்

Cycles of yugas - when will kali yuga end

இந்த சூரிய மண்டலமும், சூரியனை மையமாகக்கொண்டு சுழலும் அதன் கோள்களும் இணைந்து விண் மண்டலத்தில் பெரும் நட்சத்திரம் ஒன்றை மையமாகக்கொண்டு சுழன்று வருகிறது. நம் சூரிய மண்டலம் ஒரு முறை அந்த பெரும் நட்சத்திரத்தை வலம் வர 25,920 வருடங்கள் பிடிக்கிறது. இந்த பூமியின் மீது அது ஏற்படுத்தும் விளைவுகளை பார்க்கும்போது, நம் சூரிய மண்டலம் மையமாக கொண்டு சுற்றி வரும் அந்த பெரிய நட்சத்திரம் அல்லது பெரிய அமைப்பானது, சுற்றுப்பாதையின் மையத்தில் அமையவில்லை, ஆனால் ஒரு பக்கமாக இருப்பதாக நம்பப்படுகிறது. நம் சூரிய மண்டலம் எப்போதெல்லாம் இந்த பெரிய அமைப்பின் அருகாமையில் செல்கிறதோ அப்போதெல்லாம் நம் அமைப்பில் வாழும் எல்லா உயிரினங்களும் ஒரு உயர்ந்த சாத்தியத்தை நோக்கி எழுகிறது. எப்போதெல்லாம் நம் அமைப்பு அதிலிருந்து விலகிச் செல்கிறதோ அப்போது இங்கு வாழும் உயிரினங்கள் மிகத் தாழ்ந்த நிலையிலான சாத்தியத்துக்கு செல்கின்றன - இதையே நாம் கலியுகம் என்கிறோம்.

நம் சூரிய மண்டலம் அந்த "பிரமாண்ட சூரியன்" னுக்கு நெருக்கத்தில் இருக்கும்போது சத்திய யுகம் துவங்கும். மனித மனம் அதனுடைய மிக உயர்ந்த சாத்தியத்தில் திகழும். மக்களது உயிரை உணரும் தன்மை, மக்களின் தொடர்புகொள்ளும் திறன், மக்கள் ஆனந்தமாக வாழும் சாத்தியம் என அனைத்துமே மிக உயர்ந்த நிலையில் இருக்கும். இதையே வேறுவிதமாக கூறுவதென்றால், மக்கள் விழிப்புணர்வுள்ளவர்களாக இருப்பார்கள். இந்த உலகில் நல்முறையில் வாழ தேவைப்படுவதெல்லாம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் விழிப்புணர்வான மக்கள்தான்.

சத்திய யுகத்தில் மனிதர்களின் தொடர்புகொள்ளும் திறன் தலைசிறந்த முறையில் இருக்கும்; ஏனெனில் ஈதர் மண்டலம் நெருக்கமாக இருக்கும். தற்போது ஈதர் மண்டலம் ஒரு குறிப்பிட்ட புள்ளியளவு உயரத்தில் உள்ளது. ஒரு காலத்தில் அது இன்னும் உயரத்தில் இருந்தது - இப்போது அது கொஞ்சம் நெருங்கி வந்துள்ளது. ஈதர் வெகு நெருக்கத்தில் இருக்கும் போது நாம் உங்களிடம் ஏதேனும் தெரிவிக்க நினைத்தால், நான் அதை வாய் திறந்து பேசத் தேவையில்லை. என் கண்கள் மூடியிருக்கும் நிலையிலும் நான் சொல்ல வருவதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். ஈதர் சற்று உயரத்தில் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட தொலைவிற்குள் இருந்தால் நான் கண்களை மூடியிருந்தால் உங்களால் உணர முடியாது, ஆனால் நான் கண்களை திறந்து உங்களைப் பார்த்தால் நான் தெரிவிக்க விரும்புவதை உங்களால் அறிய முடியும்.

ஈதரும் ஆன்மீக சாத்தியங்களும்

ஈதர் இன்னும் கொஞ்சம் அதிகரித்தால் உங்களால் சுவாசத்திலேயே அறிய முடியும். நீங்கள் காட்டுக்குள் பயணிக்கும் போது இதை உணர்வீர்கள், உங்கள் பார்வை ஒருவிதமாக தடைபடுவதால் எதையாவது அறிந்துகொள்ள வேண்டுமென்றால் வாசனையே மிகச் சிறந்த வழி என்பதை சிறிது நேரத்திலேயே உணர்ந்து கொள்வீர்கள். அங்கு வாழும் பெரும்பாலான பிராணிகள் நுகர்வதன் மூலமே விஷயங்களை அறிந்து கொள்கிறது. உயிர்சக்தி அங்கு மிக அதிக அளவில் குவிந்துள்ளதால் ஈதர் அதிக அளவில் இருக்கிறது. ஈதர் அதிகமாக இருப்பதால் அவைகள் எதையும் பார்க்க வேண்டிய தேவையில்லை. நீங்கள் பேசினால் அவை குழம்பிவிடும். ஈதர் குறைந்த நிலையில் இருக்கும் போது நீங்கள் எல்லா நேரங்களிலும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் - இல்லையெனில் மக்களுக்கு சென்று சேராது. நீங்கள் பேசினாலும் அவர்களுக்கு புரியாது. நீங்கள் லேசாக ஒரு தட்டுதட்டி அவர்களுக்கு விளங்கச் செய்யவேண்டும். வளிமண்டலத்தில் உள்ள ஈதரின் அளவு மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதில் நீங்கள் எவ்வளவு கூர்மையாக உணர்திறனுடன் இருக்கிறீர்கள் என்பதை தீர்மானிக்கிறது.

ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு பிறகு, பல ஆயிரம் வருடங்களுக்கு தொடரும் ஒரு அற்புதமான காலகட்டம் நிகழும் என்றும் கிருஷ்ணர் கூறினார்.

அதே சமயம், எந்த நேரமாக இருந்தாலும், எந்த யுகத்தில் இருந்தாலும், எத்தகைய கிரகநிலையில் நாம் தற்போது இருந்தாலும், ஒரு தனிமனிதனால் இவை எல்லாவற்றிலிருந்தும் மேலெழும்ப முடியும். எது எப்படியிருந்தாலும் தங்களுக்குள் ஒரு பொன்னான காலத்தில் தனிமனிதர்களால் வாழ முடியும். மிகச் சோதனையான காலத்தில் கூட அதற்கு மேலான நிலையில் வாழும் சாத்தியம் என்றுமே ஒரு தனிமனிதனுக்கு உண்டு.

ஈதரை மேம்படுத்த அல்லது ஈதரிய தன்மையை உருவாக்க ஒருவர் பல விஷயங்களைச் செய்ய முடியும். அதனால்தான் கிருஷ்ணர், கலியுகத்தில் "பிரமாண்ட சூரியன்" பூமியிலிருந்து வெகுதொலைவில் இருக்கும்போது யோகா, தியானம், மந்திரம் அல்லது யந்திரம் என எதையும் கற்றுத்தருவது வீண் வேலை, அது அவர்களுக்கு புரியாது, ஏனென்றால் ஈதர் அளவு மிகக்குறைவாக இருக்கும். பக்தியை மட்டும் கற்றுக் கொடுத்தால் போதும் என்றார். அவர்கள் பக்தியோடு இருந்தால் அவர்களுக்கு வேண்டிய ஈதரை அவர்களே உருவாக்கிக் கொள்வார்கள். வளிமண்டலத்தில் ஈதரின் தன்மை இருப்பதால் அவர்களால் கண்டுணர முடியும்... பக்தி முட்டாள்களுக்கானது இல்லை - ஆனால் நீங்கள் வடிகட்டிய முட்டாளாக இருந்தாலும், அப்போதும் நீங்கள் அடைந்துவிடுவீர்கள்.

ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னரே, சூரிய மண்டலம் பிரமாண்ட சூரியனுக்கு நெருக்கமாக வரும்போது மனித புத்திசாலித்தனம் மலரும் என்றார்கள். சூரிய மண்டலம் நெருக்கமாகச் செல்லச்செல்ல, இந்த முழு உடலும், முழு பிரபஞ்சமும் ஒரு மின் அமைப்பு என்ற புரிதல் இயற்கையாகவே நிகழும். தற்போது நாம் திரேதயுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். இது யுகங்களின் சுழற்சியில் நிகழக்கூடிய இரண்டாவது சிறந்த காலம் ஆகும்.

ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு பிறகு, பல ஆயிரம் வருடங்களுக்கு தொடரும் ஒரு அற்புதமான காலகட்டம் நிகழும் என்றும் கிருஷ்ணர் கூறினார். நாம் அதுவரை இருக்க முடியாது. ஆனால் அதற்கான அடித்தளத்தை நம்மால் அமைக்க முடியும். இந்த பூமியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு தொடரப்போகும் பொற்காலத்திற்கான சூழலை உருவாக்கிய ஆனந்தம் நமக்கு இருக்கும். இது ஏதோ ஒரு கணிப்போ அனுமானமோ இல்லை, நாம் வாழும் இந்த உலகத்தோடு சம்மந்தப்பட்டு மனித மனதில் என்ன நிகழும் என்பதைப் பற்றிய ஆழமான புரிதலே இது. நாம் இந்த பூமியில் வாழவில்லை - நாம்தான் இந்த பூமி. இது இன்று உங்களுக்கு புரியவில்லையெனில் மண்ணில் புதைக்கும்போது இதை புரிந்து கொள்வீர்கள். இந்த பூமி உங்களை அதன் ஒரு அங்கம் என்று புரிந்துள்ளது - நீங்கள் மட்டும்தான் உங்களை வேறென்னவாகவோ நினைத்துக் கொண்டு இருக்கின்றீர்கள்.

மஹாபாரதம் - ஒவ்வொரு மனிதனின் கதை

உங்களைப் பற்றியே உங்களிடம் தவறான அனுமானங்கள் இருப்பதால்தான் இந்த கதை துவங்குகிறது. வாழ்க்கையைப் பற்றி மனிதர்கள் கொண்டுள்ள மிகப்பெரிய தவறான கருத்துக்களை; அவர்களின் வேதனைகள், அவர்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை மஹாபாரதம் குறிக்கிறது. இது தொடர்ந்துகொண்டே இருக்கிறது, ஏனெனில் வாழ்க்கையோடு இசைந்து இருக்க முடியாமல் மனிதர்கள் தடுமாறுகிறார்கள். வாழ்க்கையோடு ஒத்திசைவாக இருக்கும் ஒருவர் ஏதாவது சொல்ல முயற்சித்தாலும் மற்றவர்கள் அதை தவறாகவே புரிந்துகொள்வார்கள். ஒளி என்பதை வார்த்தையால் விவரிக்க முடியாது. ஆனால் உங்கள் கண்களை நீங்கள் திறந்தால், உங்களால் ஒளியைப் பார்க்க முடியும். அதேபோல நீங்கள் மலர்ந்தால் உயிரை உணர முடியும், உயிராக மாற முடியும்.

உயிர் என்பதை வார்த்தைகளால் விளக்கிட முடியாது. அதைப்பற்றி பேசுவதெல்லாம் உத்வேகமூட்டுவதற்காக மட்டுமே. உங்களுக்கு நீங்களே ஏற்படுத்திக் கொண்டுள்ள சுய-வசியத்தில் இருந்து உங்களை விடுவிப்பதற்காகத்தான். ஒவ்வொரு மனிதரும் தங்களின் வரையறைக்குள் தாங்களாகவே ஏற்படுத்திக்கொண்டுவிட்ட சுய-வசியத்தில் சிக்கி, அது மட்டுமே உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர். அந்த வசியத்தை நீங்கள் அகற்றினால் அவர்கள் பயத்தால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். ஏனெனில், இந்த படைப்பின் இருப்பு எல்லையில்லாதது. எனவே அவர்கள் ஒரு பக்கமாக சுழன்று கொண்டு இருந்தால் அவர்களை அதற்கு எதிர்ப்பக்கமாக சிறிது காலம் சுழல வைத்து, அவர்கள் வேறெங்கோ சென்று கொண்டிருக்கிறார்கள் என்ற உணர்வை அவர்களுக்கு கொடுக்க வேண்டியிருக்கிறது.

முழு மஹாபாரதமுமே இந்த முயற்சிதான். அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தாலும், ஒவ்வொருவருமே அதை நன்மைக்காக செய்வதாகவே எண்ணிக் கொண்டார்கள். அது "எனது நன்மை", "உங்கள் நன்மை", "வேறொருவரின் நன்மை" அல்லது "அனைவரின் நன்மை" - என எப்படி பார்த்தாலும், அனைவருமே நன்மைக்காக செயல்படுவதாகத்தான் எண்ணினார்கள். ஆனால் ஒருவரும் நல்லவரும் இல்லை கெட்டவரும் இல்லை, அவர்கள் செய்தது சரியோ தவறோ இல்லை - கதை அப்படியே தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

இந்த கதை ஒரு குறிப்பிட்ட மனிதரைப் பற்றியது அல்ல - மஹாபாரதம் இதிகாசம் என்ற பிரிவின் கீழ் வருகிறது. இந்தியாவின் பெரும் நூல்கள் மூன்று பிரிவுகளில் இருக்கிறது: இதிகாசம், புராணம் மற்றும் வேதம். நுண்ணிய கருத்துக்கள், அறிவியல் கோட்பாடுகள் மற்றும் வானவியல் விளக்கங்களை கொண்டது வேதம். மனிதர்கள் அல்லாத உயிர்களைப் பற்றி விவரிப்பது புராணம். இதிகாசம் என்பது மனிதரின் கதை - வரலாற்றைப் போல அல்ல; ஆனால் வரலாறு சம்பந்தப்பட்ட கூறுகளைக் கொண்டது. இது உண்மை வரலாற்றின் அடிப்படையில் உள்ளது, ஆனால் இதுதான் ஒவ்வொரு மனிதனின் கதை - உங்கள் வாழ்க்கையின் அர்த்தம் பற்றியது இது. இது உங்களின் கதையாக இருந்தால்தான் இது உங்கள் வளர்ச்சிக்கான செயல்முறையாக இருக்கும்.