இந்திய விவசாயத்தின் எதிர்காலம்
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாடியபோது, பழங்காலம் முதல் செழித்த நம் விவசாயப் பாரம்பரியம் ஆக்கிரமிப்பினால் மாறிய அவலம் முதல், இன்றைய சூழ்நிலையில் சந்திக்கும் சவால்கள் வரை விரிவாக சத்குரு விளக்குகிறார். இன்றைய விவசாயிகளின் வாழ்க்கை முன்னேறவும், விவசாயத்தை நம் தேசத்தில் பாதுகாத்து வளர்க்கவும் என்ன செய்யலாம் என்று தெளிவு தருகிறார்.
சத்குரு, நாங்கள் வேளாண் பல்கலைக்கழகத்தில் படிப்பதால் கேள்வி விவசாயம் சார்ந்தது. இடைக்காலத்தில் நமக்குக் கிடைத்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தால் கிடைத்தது 30 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருந்தது, ஆனால் இன்று 16 முதல் 17 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. ஆனால் இந்த ஒரு தொழிலில் மட்டும்தான் ஜனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேலான மக்கள் ஈடுபட்டுள்ளார்கள். இந்த முரண்பாடு தேசத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையாக இருக்காதா?
சத்குரு: விவசாயத்தை நாம் ஒரு தொழில் என்று அழைப்பதே மிகவும் முற்போக்கானது. விவசாயம் செய்யும் மனித ஆற்றல்தான் நமது நாகரிகத்தின் அடிப்படையே. நாம் வேட்டையாடி உணவு சேர்ப்பவர்களாக இருந்திருந்தால், இந்த நாகரிகம் வளர்வதற்கு நாம் அனுமதித்திருக்க மாட்டோம். மண்ணிலிருந்து உணவை எடுக்கும் திறனால்தான் நாம் நகரங்களையும் ஊர்களையும் கட்டமைத்து நிலைபெற்றோம். பல்வேறு கலைகளும் அறிவியலும் வளர்தோம். உணவுக்காக விலங்குகளைத் துரத்தியபடியே வாழ்ந்திருந்தால், ஒரு நாகரிகமாக நாம் வளர்ந்திருக்கவே மாட்டோம்.
விவசாயத்தின் மாயாஜாலம்
விவசாயம்தான் நமது நாகரிகத்தின் அடிப்படை. இதை நாம் மறக்கக்கூடாது. இது ஒருவித மாயாஜாலம் போன்றது. நீங்கள் கால்வைத்து நடக்கும் மண்ணை உணவாக மாற்றுகிறீர்கள். நான் சொல்லும் மாயாஜாலம் உங்களுக்குப் புரியவில்லை என்றால், இன்று இரவு உணவின்போது, எப்போதும் போல எல்லா உணவையும் சாப்பிடுங்கள், ஆனால் ஊறுகாய்க்கு பதிலாக ஒரு சிட்டிகை மண்ணை வைத்துக்கொண்டு அதைத் தொட்டு உணவை உண்ணுங்கள். மண்ணை உண்பது எவ்வளவு கடினம் என்பதை அப்போது புரிந்துகொள்வீர்கள். இப்படி உண்ணமுடியாத மண்ணை அற்புதமான உணவாக மாற்றுகிறோம், அந்த உணவு நமக்கு ஊட்டமளித்து நம் சதையாகவும் இரத்தமாகவும் மாறுகிறது. இது சாதாரண விஷயமில்லை.
மண்ணை உணவாக மாற்றுவதே விவசாயம். செடிகொடிகளின் வாழ்க்கையை கூர்ந்து கவனித்து அதை நமக்கு பலனளிக்கும்விதமாக உபயோகப்படுத்தி இந்த அபாரமான செயல்முறையை மனிதர்கள் கண்டுபிடித்தனர். எனக்குத் தெரிந்தவரை, தென்னமெரிக்காவின் சில பகுதிகளைத் தவிர, 12,000 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்த பாரம்பரியம் கொண்டது நம் தேசம் மட்டும்தான். நான் சொல்வதில் பிழையிருந்தால் விவசாயக் கல்லூரியில் பயிலும் நீங்களே சொல்லுங்கள். தென்னிந்தியாவில், அதிலும் தமிழகத்தில், இதே நிலத்தை நாம் 12,000 ஆண்டுகளுக்கு மேலாக உழுதிருக்கிறோம். அமெரிக்காவில் மண்ணை 'Dirt' என்கிறார்கள், அதற்கு அழுக்கு என்று அர்த்தம். இங்கு நாம் மண்ணை 'தாய்மண்' என்கிறோம், ஏனென்றால் மண்ணுடன் நமக்கு ஆழமான உறவு உண்டு.
பிழைப்பு நோக்கி நகர்ந்த விவசாயம்
170, 180 வருடங்களுக்கு முன்பு, இந்தியா தொழில்ரீதியாக மிகவும் முன்னேறிய தேசமாக இருந்தது. 300 ஆண்டுகளுக்கு முன்பு, உலகிலேயே தொழில்துறையில் மிகவும் முன்னேற்றமான தேசமாக இருந்தோம். நெசவுத்தொழில் ஒரு பெரும் தொழிலாக இருந்தது. உலகம் முழுவதிற்குமான ஜவுளித் தேவைகளில், 60% ஜவுளிகளை இந்தியாவிலிருந்தே ஏற்றுமதி செய்தோம். 1800 ஆண்டிலிருந்து 1860ற்குள், ஜவுளிகள் வாங்குவதற்காக மட்டுமே ஐரோப்பாவிலிருந்து பெருந்தொகை இந்தியாவை அடைந்தது என்பதை ஆங்கிலேயர்கள் கண்டறிந்தனர். அரேபியர்கள் இந்திய ஜவுளிகளை வாங்கி பத்து மடங்கு அதிக விலை வைத்து ஐரோப்பிய தேசங்களில் விற்பனை செய்தனர். எனவே அவர்களின் தங்கமும் வெள்ளியும் இந்தியாவை வந்தடைந்துகொண்டு இருந்தது. அப்போதுதான் அவர்கள் இந்தியாவைத் தேடி கடல்வழிப் பயணங்கள் மேற்கொண்டனர். கொலம்பஸ், வாஸ்கோடகாமா, மற்றும் இன்னும் பலர், அரேபியர்களிடம் பத்து மடங்கு விலைகொடுத்து வாங்குவதை தவிர்ப்பதற்காகவே, தங்கள் உயிரைப் பணயம் வைத்து கடல்வழியாக இந்தியா வந்தடைய ஒரு பாதையைத் தேடினர்.
அவர்கள் இங்கு வந்தபோது இந்தத் தொழில் இவ்வளவு எளிமையாகவும் அற்புதமாகவும் இருப்பதைக் கண்டனர்: ஒரு மனிதர் தரியின் முன் அமர்ந்து, 'டக் டக் டக்' என்று செய்தால் அதிலிருந்து அழகான துணி வெளியே வந்தது. இது இவ்வளவு எளிமையான தொழிலாக இருப்பதைக் கண்டு, இதை நாம் இயந்திரங்கள் கொண்டும் செய்யமுடியும் என புரிந்துகொண்டு அப்படியே செய்யத் துவங்கினர். 60 ஆண்டுகாலத்தில், இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் ஜவுளிகள் 98% வரை குறைந்தது. இரண்டே சதவிகிதம் மட்டுமே எஞ்சியிருந்தது, ஏனென்றால் நம் ஜவுளிகளை ஏற்றுமதி செய்ய அந்த அளவு அதிகப்படியான வரிவிதித்தனர். மிகவும் நேர்த்தியான நெசவுகளைத் தயாரித்த சில இடங்களில், நெசவாளர்களின் கட்டைவிரல்களை வெட்டி தரிகளை அழித்தனர்.
Subscribe
1830களில் ஒரு ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் கூறுகையில், "இந்தியாவின் விளைநிலங்களை கைத்தரி நெசவாளர்களின் எலும்புகள் நிரப்பின" என்றார். அவர்களின் வாழ்வாதாரமான நெசவுத்தொழில் அழிக்கப்பட்டதால், லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் உயிரிழந்தனர். அப்போதுதான் ஜனத்தொகையின் பெரும்பகுதி விவசாயத்திற்கு மாறியது. அப்போது விவசாயம் பெரும்பாலும் உயிர்பிழைப்பதற்கான வழியாக மாறியது, தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் கொஞ்சம் உணவு உற்பத்திசெய்வதற்காக நிலத்தை உழுதார்கள். அதனால்தான் 1947ல் இந்திய ஜனத்தொகையின் 77% விவசாயத்தில் ஈடுபட்டிருந்தது.
நம் மனித வளத்தை ஒருங்கிணைப்பது
இன்று விவசாயம் 60 சதமாகக் குறைந்துள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால், 10 பேர் உண்பதற்கு 6 பேர் சமைக்கிறார்கள். மனித வளத்தை உபயோகிக்க இது செயலாற்றல்மிக்க வழியல்ல. சொல்லப்போனால், நம் தேசத்தைப் பார்த்தால், நம்மிடம் இருக்கும் ஒரே வளம் மனிதவளம் தான். நம்மிடம் பெரிதாக எதுவும் இல்லை, ஆனால் நம்மிடம் மனிதர்கள் இருக்கிறார்கள். இந்த ஜனத்தொகையை நாம் ஒருமுகமான, ஊக்கம்நிறைந்த ஜனத்தொகையாக மாற பயிற்சியளிக்க முடியுமென்றால், நாம் அபாரமான அதிசயமாக உருவெடுக்கமுடியும். அதை நாம் செய்யத் தவறினால், நாம் பேரிழப்பாக மாறிவிடுவோம்.
60 சதம் மக்கள் விவசாயத்தில் இருப்பது சரியான விஷயமல்ல. நாம் இதை மாற்றவேண்டும். மாற்றவேண்டும் என்றால் ஜனங்கள் இடம்பெயர்ந்து நகரங்களுக்குச் செல்லவேண்டாம், ஆனால் அவர்கள் பிற வர்த்தகத்திற்கும் கைவினைக்கும் தொழில்களுக்கும் மாறவேண்டும். இதற்கு உறுதியான, ஒருங்கிணைந்த முயற்சி இன்னும் எடுக்கப்படவில்லை.
வளர்ச்சி-குன்றிய மனிதகுலம்
தோராயமாக 45 - 50 ஆண்டுகளுக்கு முன்பு, உயிர்பிழைப்பதற்காக செய்யும் விவசாயத்திலிருந்து, பணத்திற்காகவும் பொருளாதாரத்திற்காகவும் செய்யும் விவசாயத்திற்கு மாறியபோதுதான், விவசாயத்தில் நமக்கு பெரும் பிரச்சனை ஆரம்பித்தது. இது ஒருங்கிணைவாக நடத்தப்படாததால் பொருளாதாரரீதியாக இலாபமீட்டும் தொழிலாகவும் இது மாறவில்லை. இதனால் நீங்கள் கவனிக்கக்கூடிய இன்னொரு விஷயம், கிராமப்புறங்களில் மக்கள் மிகுந்த ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருக்கின்றனர். 40 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் ஏதாவது கிராமத்திற்குச் சென்றால், அவர்கள் கிழிந்த துணிகளை அணிந்திருந்தாலும், குடிக்க சுத்தமான தண்ணீர் இல்லாதிருந்தாலும் - கால்நடைகள் தண்ணீர் குடிக்கும் அதே குட்டையிலிருந்துதான் அவர்களும் தண்ணீர் குடிப்பார்கள் - எல்லாவித பிரச்சனைகள் இருந்தாலும் ஆண்களும் பெண்களும் உடல்பலத்துடன் இருந்தார்கள். இன்று ஏதாவது கிராமத்திற்குச் செல்வீர்களானால், 60 சதம் கிராம மக்களுக்கு, அவர்களுடைய எலும்புகள்கூட முழுமையாக வளர்ச்சியடையவில்லை. பிழைப்பிற்காக செய்த விவசாயத்திலிருந்து பணப்பயிர்களுக்கு மாறியதால் அவர்கள் உடற்கட்டே சுருங்கிவிட்டது.
பிழைப்பிற்காக விவசாயம் செய்தபோது, அவர்களிடம் பணம் இல்லாவிட்டாலும் பலவகையான உணவு உண்டனர். இன்று தென்னிந்தியாவில் பிரதான உணவு அரிசி, புளி, வெங்காயம், மிளகாய் என்றாகிவிட்டது. இதை வைத்தே ருசியாக சமைப்பது எப்படி என்று அவர்களுக்குத் தெரியும், ரசம் சாதமே போதும் என்றாகிவிட்டது. வடக்கில் கோதுமையும் மிளகாயும் வெங்காயமும் இருந்தால் போதும் என்றாகிவிட்டது. இதனால் ஊட்டச்சத்தில் பெரிய அளவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது நாம் கவனிக்கவேண்டிய மிகப்பெரிய பிரச்சனை, ஏனென்றால் வளர்ச்சி-குன்றிய ஒரு மனிதகுலத்தை நாம் உருவாக்குகிறோம்.
இந்த தேசத்தின் பெருவாரியான மக்கள் தங்கள் வாழ்க்கையின் முற்பகுதியில் சரியாக சாப்பிடாமல் வளர்ச்சி-குன்றியவர்களாய் வளர்கிறார்கள், ஆனால் அதை அவர்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில் அவர்களால் ஈடுகட்டமுடியாது. உடல் மற்றும் மூளையின் வளர்ச்சி அந்த கட்டத்தில் நிறைவடைந்திருக்கும். நம் விவசாயத்தை ஒருங்கிணைக்க நாம் செய்யவேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று, தொழில்நுட்பத்தை விவசாய முறைக்குள் எடுத்துவர வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, பொருளாதார இலாபத்திற்கு இது பெரிதாக வேண்டும். தற்போது ஒரு தனிமனிதர் வைத்திருக்கும் சராசரி நிலத்தைப் பார்த்தால், அது 1 முதல் 2.5 ஏக்கராக இருக்கிறது, இதை வைத்து இலாபகரமான எதையும் செய்யமுடியாது. இவ்வளவு சிறிய நிலத்தை வைத்து மகத்துவமான எதையும் செய்யமுடியாது. எனவே விவசாயிகள் ஒன்றுசேர்ந்து உருவாக்கும் விவசாயி உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள் மற்றும் தேவையான இன்னும் பல விஷயங்களை உருவாக்க முயற்சிசெய்து வருகிறோம். பயிர்செய்யவும், நீர்ப்பாசனத்திற்கும், விளைபொருளை சந்தைப்படுத்தவும் அளவு பெரிதாக இருப்பது அவசியம். இல்லாவிட்டால் விளைபொருளின் அளவும் குறைவாக இருப்பதால் இதற்கு வேறு தீர்வே கிடையாது.
தீர்வுநோக்கி செயலாற்றுவது
தற்போது 'நதிகள் மீட்பு இயக்கம்' மூலமாக விவசாயிகளின் வருமானத்தை பன்மடங்காகப் பெருக்க தீவிரமான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. சில தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினால், ஐந்து முதல் ஆறுவருட காலத்தில் வருமானத்தை நம்மால் வெகுசுலபமாக மூன்று முதல் எட்டு மடங்காகப் பெருக்கமுடியும். நீர்ப்பாசனத்தை ஒருங்கிணைப்பது இதற்கு மிகவும் முக்கியம். அதோடு நீர்வளத்தை சிக்கனமாக பயன்படுத்துவதும் விவசாய நிலங்களுக்கு கால்நடைகளை மீண்டும் எடுத்துவருவதும் அவசியம். ஒரு டிராக்டர் நிலத்தை உழுதிட மட்டுமே செய்யும், அதனால் நிலத்திற்கு உரம்தர இயலாது, உரத்திற்கு கால்நடைகள் தேவை. வருங்காலத்தில் கால்நடைகள் இல்லாவிட்டால் விவசாயமே செய்யமுடியாத நிலை வந்துவிடும்.
இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, ஆனால் இது மிகப்பெரிய தேசம், வேற்றுமைகள் நிறைந்த தேசம் - எனவே மாற்றம் எதுவாயினும், நேர்மறையாக இருந்தாலும் எதிர்மறையாக இருந்தாலும், அது எதிர்ப்பும் இடர்ப்பாடும் இல்லாமல் நடக்கமுடியாது. ஒவ்வொரு சின்னச்சின்ன விஷயத்திற்கும் போராட்டம் ஏற்படுகிறது. ஆனால் இதை நாம் இப்போது செய்யாவிட்டால், இந்தியாவில் விவசாயமே அழியும் ஆபத்தில் இருக்கிறது. எத்தனை விவசாயிகள் தங்கள் குழந்தைகள் விவசாயத்தில் ஈடுபட வேண்டுமென விரும்புகின்றனர் என்று நீங்கள் விவசாயிகளைக் கருத்துக்கேட்டு ஆய்வு மேற்கொண்டால், இது 2 முதல் 5 சதமாகத்தான் இருக்கும், அதற்குமேல் இருக்காது. இது நாட்டிற்கு நல்லதல்ல.
ஆசிரியர் குறிப்பு: சர்ச்சைக்குரிய சிந்தனையா, பேசினால் பிறர் தூற்றக்கூடிய விஷயம் பற்றி குழப்பமா, எவரும் பதில் சொல்ல விரும்பாததால் உங்களைத் துளைக்கும் கேள்வியா, கேட்பதற்கு இதுதான் நேரம்! சத்குருவிடம் நீங்கள் கேட்க விரும்புவதை UnplugWithSadhguru.org வலைதளத்தில் பதிந்திடுங்கள்!