ஹடயோகா - உடலிலுள்ள பலவீனமான பகுதிகளை எப்படி கையாளுவது?
ஹடயோகா செய்யும்போது உடலின் சில பகுதிகள் ஒத்துழைக்காதது போலத் தோன்றினால் என்ன செய்யமுடியும் என்பது குறித்து சத்குரு விளக்குகிறார்.

ஹடயோகா செய்யும்போது உடலின் சில பகுதிகள் ஒத்துழைக்காதது போலத் தோன்றினால் என்ன செய்யமுடியும் என்பது குறித்து சத்குரு விளக்குகிறார்.
சத்குரு:
Subscribe
ஹடயோகா என்பது, உடலின் பல்வேறு அடுக்குகளுக்கு கவனம் செலுத்தும் ஒரு வழிமுறை. அன்னமய கோஷா, மனோமய கோஷா, பிராணமய கோஷா, விஞ்ஞானமய கோஷா, ஆனந்தமய கோஷா - அதாவது பொருள் உடல், மன உடல், சக்தி உடல், பொருள்தன்மைக்கும் பொருளற்ற தன்மைக்கும் இடைப்பட்ட உடல், பொருளற்ற ஆனந்த உடல். நீங்கள் வெவ்வேறு ஆசனங்களைச் செய்யும்போது, பொருள் உடலில் கூட உடலின் சிலபகுதிகள் வளையாமலும் ஒத்துழைக்காமலும் இருப்பதை கவனித்திருக்கலாம். ஆனால் நீங்கள் MRI எடுத்துப்பார்த்தால் எல்லாம் சரியாகவே தோன்றும். உங்களுக்குள் இருக்கும் கர்மப்பதிவுகளின் அடிப்படையில் உடல் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை எடுத்துள்ளது.
இந்த விதத்தில் பார்த்தால், தகவல்களும் பதிவுகளும் பல நிலைகளில் உள்ளன. பரிணாமவளர்ச்சி சார்ந்த பதிவுகள் உள்ளன, மரபுவழி சார்ந்த பதிவுகள் உள்ளன, கர்மப் பதிவுகள் உள்ளன. ஒருவிதத்தில் பார்த்தால், பரிணாமவளர்ச்சி சார்ந்த பதிவுகளும் மரபுவழி சார்ந்த பதிவுகளும் கூட கர்மப் பதிவுகள் தான். உங்கள் கர்மப் பதிவுகளின் தன்மையைப் பொறுத்து, உடலின் குறிப்பிட்ட பாகங்கள் குறிப்பிட்ட விதங்களில் நடந்துகொள்ளும். நீங்கள் என்ன செய்தாலும் அவை ஒத்துழைக்காது. உங்கள் மருத்துவரிடம் சென்று பரிசோதித்துப் பார்த்தால், அவை சரியாக இருப்பது போலவே தெரியும். உங்கள் உடலை சற்று கூர்ந்து கவனித்தால், சில பாகங்களில் தொடு உணர்ச்சியே இல்லாததை நீங்கள் கவனித்திருக்கலாம். உங்கள் கர்மப்பதிவுகளின் அமைப்பால், உணர்ச்சி செயல்முறையில் தடைகள் அல்லது இடைவெளிகள் உள்ளன.
இந்த இடைவெளிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டாம். கவனம் செலுத்தி நீங்களாக அதற்கு எதுவும் செய்யமுடியாது. மிகவும் கஷ்டப்பட்டு அதற்கு ஏதாவது செய்ய முயன்றால், அவை அளவிலும் தீவிரத்திலும் அதிகமாகும் வாய்ப்பும் இருக்கிறது. உங்கள் சாதனாவைத் தொடர்ந்து செய்யுங்கள். சாதனா என்பது பொதுவாக ஒரு சுமுகமான சூழ்நிலை உருவாக்குவதற்கானது. ஒரு குறிப்பிட்ட பலனுக்காக அது செய்யப்படக் கூடாது. நீங்கள் முயன்று மாற்றமுடியாத சில அம்சங்கள் உங்களுக்குள் உள்ளன. அவற்றை மாற்றவே முடியாது என்று கிடையாது, ஆனால் நீங்கள் முயன்று மாற்றும் பரிமாணத்தில் அவை இல்லை. உங்களுக்குள் ஒரு சுமுகமான சூழ்நிலை உருவாக்குவதே உங்கள் முயற்சியாக இருக்கவேண்டும். உங்களால் முடிந்த அனைத்தையும் செய்தபிறகு, காலவரையறையற்றுக் காத்திருங்கள்.
பொருள்தன்மையைக் கடக்க பொருள்தன்மையை பயன்படுத்துவது
எப்படி காத்திருப்பது என்று தெரியாவிட்டால், உங்கள் வாழ்க்கை முழுவதும் பொருள்தன்மையின் எல்லைக்குட்பட்டு இருக்கும். எப்போதும் ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளிக்கு எப்படிச் செல்வது என்றே நினைத்துக்கொண்டு இருப்பீர்கள். நீங்கள் எங்காவது போக விரும்பினால், ஒரு தூரத்தைக் கடக்க விரும்பினால், அது பொருள்தன்மையின் பரிமாணத்தில் இருக்கிறது என்று அர்த்தம். ஒருவிதத்தில் காலம் கூட பொருள்தன்மை தான். தூரத்தை நீங்கள் நீளத்தை வைத்து அளக்கலாம், அல்லது அதைக் கடந்திடச் செலவாகும் நேரத்தை வைத்து அளக்கலாம். உங்கள் தினசரி செயல்களுக்கு நீங்கள் நேரம் குறிப்பது தேவையாக இருக்கலாம். ஆனால் உங்கள் உள்வளர்ச்சிக்கு நேரம் குறிக்காதீர்கள். உதாரணத்திற்கு, ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் எவ்வளவு ஆசனங்கள் செய்யலாம் என்று நீங்கள் கணக்குப்போடத் துவங்கிவிட்டால், யோகா சர்க்கஸ் ஆகிவிடும். நீங்கள் செய்யும் ஆசனத்திற்குள் கரைந்துபோவது தான் முக்கியமானது. அப்போது ஒவ்வொரு ஆசனமும், நீங்கள் இலகுவாகி அந்த ஆசனத்தின் ஒரு அங்கமாகிடுவதற்கான வழியாக மாறும்.
பொருள்தன்மையை வலுப்படுத்துவதற்கு அல்லாமல், பொருள்தன்மையைக் கடப்பதற்கு நாம் பொருள்தன்மையை பயன்படுத்துகிறோம். ஆனால் நமக்கு இதுவும் தெரியும், பொருள்தன்மைக்கு இருப்பதற்கான உரிமை இருக்கிறது, அதை நாம் மதிக்கிறோம், அதற்கென ஒரு சக்தியும் இருக்கிறது. ஆனால் அதை நாம் முழுவதும் இலகுவாய் வைத்துக்கொள்ளாவிட்டால், அது நம் வழியில் தடையாக நிற்கும். உங்கள் உடல் நல்ல நிலையில் இல்லாவிட்டால், அது உங்கள் முழு கவனத்தையும் ஈர்த்துக்கொள்ளும். எல்லாம் நல்லபடியாக இருந்தால் மட்டுமே அதற்குத் துளியும் கவனம் செலுத்தாமல் இருக்கமுடியும். அது ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக நாம் அதை நல்ல நிலையில் வைத்துக்கொள்கிறோம்.
யோகாவிற்கும் உடற்பயிற்சிக்கும் இடையே அவற்றின் அடிப்படையிலேயே வித்தியாசம் உள்ளது. நம் தசைகளை வளர்த்து, அழகுபார்த்து, காட்சிக்கு வைப்பதற்கு நாம் யோகா செய்யவில்லை. ஹடயோகா என்பதை, உடலை மிகவும் பலமாக்கி சூட்சுமமாக்கி அது இருப்பதே தெரியாதது போலச் செய்வதற்கானது. உடல் இங்கே உட்கார்ந்தால், தண்ணீர், உணவு, கழிப்பறை என்று எதையும் கேட்காமல் சும்மா இங்கே உட்கார்ந்திருக்கும். அப்போது அதற்கான பராமரிப்பு மிகக்குறைவாக இருக்கும். அதுதான் ஒரு நல்ல இயந்திரத்தின் தன்மை, அதுதான் ஒரு நல்ல உடலின் தன்மையும் கூட, அது உங்கள் கவனிப்பைக் கேட்காமல் இருக்கவேண்டும். ஆனால் உலகம் தலைகீழாக மாறிவிட்டது - பெரும்பாலான மனிதர்களுக்கு, நல்ல உடல் என்றால் அதை எப்போதும் கவனிக்கவேண்டியதாக இருக்கிறது.
உங்கள் உடலின் ஏதோவொரு பாகம் ஒத்துழைக்காவிட்டால் கவலைப்படாதீர்கள். மற்ற பாகங்களை நல்லபடியாக பயன்படுத்துங்கள், உங்கள் ஆன்மீக சாதனாவைச் செய்து உங்களுக்குள் ஒரு சுமுகமான சூழ்நிலையை உருவாக்குங்கள். அப்போது லேசாக உந்தித்தள்ளினாலே தடைகள் தகர்ந்துவிடும்.
ஆசிரியர் குறிப்பு: ஹடயோகா நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களுக்கும் தேதிகளுக்கும் ishayoga.org வலைத்தளத்திற்குச் செல்லவும்.