கேள்வி 1: சத்குரு, மருத்துவர்கள் நோயாளிகளை அணுகும்போது எந்த மனநிலையோடு அணுக வேண்டும்?

சத்குரு: நீங்கள் இந்த உலகத்திற்கு ஒரு தாயைப் போல இருக்க வேண்டும். ஏனெனில் ஒருவர் ஏதோ ஒரு நோயில் இருக்கும் போது அவர் ஒரு குழந்தையைப் போல் மாறி விடுவார். வேறெங்கோ அவர் ஒரு பெரிய மனிதராக இருக்கலாம். ஆனால் அவர் நோயுற்றால் ஒரு சிறு குழந்தையைப் போல் மாறி விடுவார். அவர்கள் அவ்வாறு மாறும் போது நீங்கள் ஒரு தாயை போல் மாற வேண்டும். இதை அணுகுவதற்கு இதைத் தவிர வேறு வழி இல்லை. 

கேள்வி 2: என்னிடம் மருத்துவம் பார்க்கும் நோயாளி களின் அனுபவத்தை நான் எவ்வாறு உணர்வது?

சத்குரு: உங்கள் மருத்துவ அறிவு ஒரு குறிப்பிட்ட நோயைப் பற்றி, ஒரு நபரின் இருதயத்தில் என்ன நிகழ்கிறது என்பது பற்றி, உங்களுக்கு கற்பித்து இருக்கலாம். மேலும் எல்லா பரிசோதனை முடிவுகளும் இருதயம், கல்லீரல் அல்லது பித்தப்பை என்ன நிலையில் இருக்கிறது என்று உங்களுக்கு எடுத்துக் கூறலாம். ஆனால் ஒரு பிரச்சனையை ஒரே விதமாக ஒவ்வொரு தனிநபரும் அனுபவிப்பதில்லை. ஒருவர் மிக குறைவான வேதனையை அனுபவிக்கலாம். ஆனால் மற்றொருவரோ அதே பிரச்சனைக்கு மிக அதிக அளவிலான வேதனையை அனுபவிக்கலாம். இது ஒவ்வொரு தனிநபரையும் பொறுத்தது. பரிசோதனை முடிவுகளையோ எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கொண்டோ வேறெந்த தகவல்களை கொண்டோ இதனை மதிப்பிட முடியாது. அந்த நோயாளியை கவனித்து நோக்கி அவர்களின் நிலைமை என்ன என்பதை உணர்ந்து அவர்கள் அனுபவிப்பதை அவர்கள் நிலையில் இருந்து புரிந்து கொள்ள முயற்சித்தால் தான் அவர்களுக்கு நிகழ்வதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.

ஒரு நோயாளிக்குள் நிகழ்பவற்றை உணர்ந்து கொள்ளும் சாத்தியத்தை தனக்குள் ஒரு மருத்துவர் உருவாக்கிக் கொண்டு, அந்த நோயாளியின் உடம்பை தன்னுடையது போல கருதி அவருக்கு சிகிச்சை அளித்தால் அது மிக அருமையான ஒன்றாக இருக்கும்

ஒரு மனித உடல் மற்றும் மனித அமைப்பின் நுட்பம் முற்றிலும் ஒரு இயந்திரம் போன்றது அல்ல. ஒரு இயந்திரத்தில் பழுதடைந்த ஒரு பாகத்தை மாற்றினால் அனைத்தும் சரியாகி விடும். மனித அமைப்பு அதைப் போன்றது அல்ல. மனித அமைப்பின் நுட்பத்தை எவரும் முற்றிலுமாக அறிந்துவிடவில்லை. ஒவ்வொரு பாகமாக தான் நம்மால் தலையீடு செய்ய முடியும். மருத்துவ நிபுணர்கள் பல அற்புதமான செயல்களை நிகழ்த்தி வருகிறார்கள். ஆனால் அந்த அற்புதங்கள் அனைத்தும் வரையறுக்கப்பட்ட அற்புதங்கள் தான். நான் மருத்துவ படிப்பையோ மருத்துவத்துறையையோ அவமதிக்க முயற்சிக்கவில்லை. அவர்கள் அருமையான செயல்களை புரிந்து வருகிறார்கள். இருப்பினும் அவர்கள் உயிரை படைத்தவர்கள் அல்ல. அவர்களுக்கு இயன்றளவு சிறந்த செயல்களை செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நிகழ்பவற்றை முழுவதும் சரியாக அறிந்து கொள்ளும் அறிவு என்று ஒன்று கிடையாது. ஏனெனில் ஒரே நிலையில் ஒரே பரிசோதனை முடிவுகள் கொண்ட இரண்டு நோயாளிகள் இருந்தாலும் ஒரு நபரின் நிலை மற்றோருவரை விட மிக வித்தியாசமானதாக இருக்கலாம்.

ஒரு நோயாளிக்குள் நிகழ்பவற்றை உணர்ந்து கொள்ளும் சாத்தியத்தை தனக்குள் ஒரு மருத்துவர் உருவாக்கிக் கொண்டு, அந்த நோயாளியின் உடம்பை தன்னுடையது போல கருதி அவருக்கு சிகிச்சை அளித்தால் அது மிக அருமையான ஒன்றாக இருக்கும். இது உணர்ச்சிவசப்படுவதோ, அவரோடு பச்சாதாபம் கொள்வதோ அல்ல. நீங்கள் உங்கள் நோயாளிகளைப் பற்றி உணர்ச்சிவசப்பட்டால் செய்ய வேண்டியத்தைப் பற்றிய சரியான மதிப்பீட்டை உங்களால் எடுக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. உணர்ச்சி வசப்படுவது நோயாளிக்கு சிறு ஆறுதலைத் தரலாம். ஆனால் தீர்வை அளிக்காது. அவர்கள் நலமாக உணர அது உதவி புரியாது. அவர்கள் பிரச்சினையையும் தீர்த்து வைக்காது. ஆனால் நீங்கள் அவர்களோடு 'யோகா' வைத்துக்கொண்டால் – யோகா என்பதற்கு நீங்கள் சிகிச்சை அளிக்கும் மக்களோடு ஒன்றியிருத்தல் என்று பொருள் – அப்போது மிக ஆழமான தொடர்பு ஒன்று உருவாகும். அதன் பின்னர் தீர்வுகள் சாத்தியமாகும். மேலும் அந்த நோயாளிக்கு ஆறுதலும் கிடைக்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இது முக்கியமானது. ஏனெனில், முதலில் ஒரு நோயாளிக்கு ஆறுதல் தேவை. அவர்கள் அந்த மருத்துவரோடு நிதானமாக தளர்வான நிலையில் இருந்தால் தான் அந்த மருத்துவர் அளிப்பதை ஏற்கும் தன்மைக்கு அவர்கள் மாறுவார்கள். இன்று அனைத்துக்கும், வெறும் இரசாயன அல்லது அறுவை சிகிச்சையை மட்டுமே சிகிச்சை முறையாக நாம் கருதிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் மனிதத் தொடர்பு என்னும் பரிமாணம் ஒன்று உள்ளது. அது இரசாயன மருந்தைப் பற்றியதோ அறுவை சிகிச்சை பற்றியதோ அல்ல. நமக்கும் உலகிலுள்ள அனைத்துக்கும் ஒரு தொடர்பு உள்ளது – நாம் நடக்கும் இந்த பூமி, நாம் சுவாசிக்கும் காற்று மற்றும் நாம் குடிக்கும் நீர். அதைப் போலவே நமக்கு முன்னால் இருக்கும் இன்னொரு ஒரு உடலோடும் ஒருவித தொடர்பு உள்ளது. ஒரு மருத்துவர் தன் நோயாளிகளிடம் ஆழமான ஒரு தொடர்பு வைத்திருக்கும் போது தான் அவர் கொண்டுள்ள அறிவு சிறந்த வகையில் உபயோகப்படும். மேலும் அந்தத் தொடர்பு உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இல்லாமல் இருந்தால் அது அந்த மருத்துவருக்கும் நோயாளிக்கும் மிகுந்த, மகத்தான, நிறைவான அனுபவத்தைக் கொடுக்கும்.

கேள்வி 3: ஒருமருத்துவருக்கும் குணப்படுத்தப்பவருக்கும் உள்ள வித்தியாசம் என்ன? என்னிடம் சிகிச்சை பெற வரும் நோயாளியிடம் ஒரு குணப்படுத்தபவராக நான் எவ்வாறு விளங்குவது?

சத்குரு: தற்போது இந்தியாவில் ஒரு நகைச்சுவையான செய்தி உலவி வருகிறது. தன்னை குணப்படுத்துபவர் என்று கூறிக் கொள்ளும் அனைவரும் இந்த ஊரடங்கினால் மிகவும் விரக்தி அடைந்துள்ளனர். அவர்கள் வெறுமனே காத்திருக்கின்றனர், "இந்த ஊரடங்கு முடியட்டும்! இந்த நோய்த் தொற்று முடியட்டும்! அதற்குப் பின்னர் நாங்கள் அனைவரையும் குணப்படுத்துகிறோம்." நீங்கள் ஒரு குணப்படுத்துபவராக இருந்தால் அதை செய்வதற்கு இது தான் தக்க சமயம். மிக அதிக அளவிலான மக்கள் இப்போது நோயுற்று இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் இந்த நோய்த் தொற்று கடந்து போவதற்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் மருத்துவராக இருப்பது மகத்தானது. ஆனால் நீங்கள் குணப்படுத்துபவராக இல்லாமல் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. "குணப்படுத்துவது" என்பது தவறான வார்த்தைக் கிடையாது. ஆனால் சிலர் அதை தவறான பின்னணியில் உபயோகிக்கின்றனர். "அற்புத குணமளிப்பவர்கள்" பலரும் பல விதமான வேடிக்கையான செயல்களை செய்து வருகின்றனர்.

நீங்கள் ஒரு மருத்துவமனையில் ஒரு மருத்துவராக இருப்பது குறித்து எனக்கு மகிழ்ச்சி. மிக முக்கியமான விஷயம் யாதெனில் உங்களிடம் இருக்கும் செயல்திறனும் ஆற்றலும் தான், உங்களின் இரக்கம் அல்ல. ஆனால் இரு உயிர்களிடம் இருக்கும் தொடர்பு எப்போதும் இருந்துகொண்டே தான் இருக்கிறது. அதை எவராலும் மறுக்க முடியாது. இந்த நிலையில் உங்கள் ஆற்றல், செயல் திறன் மற்றும் நோயாளியின் கிரகிக்கும் தன்மை என அனைத்தும் மேம்படும். அதன் மூலம் அனைவருக்கும் சிறந்த பலன்கள் கிடைக்கும்.

கேள்வி 4: நோய்த் தொற்றுக்கு பின்னர் வரும் காலத்தில் எவ்வாறு எங்கள் சக்தியை மறுகுவிப்பு செய்து அனைவருக்குமான மீட்பு செயல்களை எவ்வாறு துவக்குவது?

சத்குரு: மருத்துவ பரிமாணத்தில் உள்ள பிரச்சனைகளை மட்டும் கையாளாமல் மருத்துவர்கள் இதை ஒரு மனிதநேயத்தோடு அணுகுவது வியக்கத்தக்கதாக இருக்கிறது. தனக்கு அன்பான ஒருவர் மருத்துவமனையில் எந்த தொடர்பும் இல்லாமல் அடைபட்டிருக்கும் போது அவர் உயிரோடு இருப்பாரா என்று எவருக்குமே தெரியாமல் இருக்கும் போது அவர் குடும்பங்களில் நிலவி வரும் பதட்டம், கவலை அவர்களுக்கு தாங்க முடியாததாய் இருக்கும்.

இந்த தேவையை நோக்கி மருத்துவர்கள் அணுகுவது உண்மையில் மகத்தானது. ஆனால் இதில் எதுவும் அர்த்தம் கற்பிக்க முடியுமா? இது அனைத்தும் சரி தான் என்று ஏதோவொரு வகையில் நம்மையே சமாதானம் செய்து கொள்ள முடியுமா? வாழ்க்கை அப்படிப்பட்டதல்ல. பல வழிகளில் இந்த வைரஸ் மற்றும் அதனைக் குறித்து உலகில் நடக்கும் உரையாடல்கள் இறப்பை ஒவ்வொருவரின் முகத்துக்கும் நேராக கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. ஒருவரும் இதில் இருந்து தப்ப முடியாது. உணர்தலுக்கான தருணமாய் இதை மாற்றிக் கொண்டு நாம் எவ்வாறு நம் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று அனைவரும் சிந்திக்க வேண்டும். இந்த உலகில் வித்தியாசமாக நாம் என்ன செய்ய வேண்டும்? நமக்குள்ளும் நம்மை சுற்றியும் நாம் வித்தியாசமாக என்ன செய்ய வேண்டும்? மனித நேயத்துக்கான மதிப்பு பிரதானமான காரணியாக தற்போது உருவாக வேண்டும்.

மனிதர்களாகிய நாம் தான் – வளர்ந்த அறிவுத் திறன் கொண்டு, விழிப்புணர்வு கொண்டு – நம்முடைய தடைகளை விரிவுபடுத்தி உடைக்க விரும்புகிறோம்.

உலகின் ஒவ்வொரு உயிரினமும், அதன் உள்ளார்ந்த உள்ளுணர்வில், தன்னைச் சுற்றி எல்லைகளை உருவாக்க கட்டமைக்கப்பட்டுள்ளது. அது எப்போதும் பாதுகாப்பு எல்லைக்குள் வாழ விரும்புகிறது. மற்ற எல்லா உயிரினங்களும் இப்படித்தான் வடிவமைக்கப்பட்டுள்ளன. மனிதர்களாகிய நாம் தான் – வளர்ந்த அறிவுத் திறன் கொண்டு, விழிப்புணர்வு கொண்டு – நம்முடைய தடைகளை விரிவுபடுத்தி உடைக்க விரும்புகிறோம். இந்த உலகில் இத்தகைய ஏக்கத்தோடு மனிதர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள்.

நம் எல்லைகளை விரிவுபடுத்துவது என்பதற்கு உள்ளடக்குதல் என்று பொருள். உள்ளடக்குதல் ஒரு மதிப்பு மிகுந்ததாக நமக்கு கற்பிக்கப்படவில்லை. இது இயல்பாகவே எல்லா மனிதருக்குள்ளும் இருக்கும் ஒன்று. ஒவ்வொரு மனிதரும் – எத்தகைய வாழ்க்கைச் சூழலில் அவர்கள் இருந்தாலும், இருப்பதை விட சிறிது மேம்பாடு அடைய விரும்புகின்றனர். நீங்கள் மதிப்பெண், செல்வம், அறிவு, ஆளுமை, அன்பு அல்லது புகழ் எதை அடைய விரும்பினாலும் சரி நீங்கள் அடிப்படையில் இப்போது இருப்பதை விட இன்னும் கொஞ்சம் அதிகமாக வாழ்வில் அனுபவம் அடைய விரும்புகிறீர்கள். இது மிகச் சிறிய அளவிலான தவணை முறையிலான விரிவாக்கம். ஆனால் தற்போது இறப்பு நம் முகத்துக்கு நேரெதிராக தெரிகிறது. உண்மையிலேயே விரிவடைந்து எல்லைகளை தகர்க்க விரும்பினால் இது தான் சரியான தருணம். இது உணர்தலுக்கான தருணம், ஆறுதலுக்கானது அல்ல. நமக்கு அன்பானவர்களை நாம் இழந்து விட்டோம், நம் பொருளாதாரம் அடிபட்டுள்ளது மற்றும் நம் வாழ்க்கைத் தரத்தை இழந்து விட்டோம். ஆனால் இந்த நோய்த் தொற்றுக்கு பின்னர் உயிரோடு இருக்கும் அனைவரும் உணர வேண்டிய மிக முக்கியமான மதிப்பு என்னவென்றால் நாம் மனிதர் என்பது தான். அதற்கு அர்த்தம் நாம் அனைத்தையும் உள்ளடக்கி வாழ முடியும், விலக்கி வைத்து அல்ல.

கேள்வி 5: கடுமையான முடிவுகளை எடுப்பது மற்றும் அந்த முடிவுகளின் முழுமையற்ற விளைவுகளுடன் வாழ வேண்டிய தார்மீக துயரத்தை மருத்துவர்கள் எவ்வாறு கையாள வேண்டும்?

சத்குரு: துரதிஷ்டவசமாக இது போன்ற காலக்கட்டத்தில் நம்மில் பலரும் நாம் விரும்பாத பல முடிவுகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஆனால் மிகக் கருணையுள்ளவர்கள், அடிப்படை மனிதாபிமானத்தைக் கொண்டு இத்தகைய முடிவுகளை எடுப்பது மிக முக்கியம், பொருளாதாரம் சார்ந்தோ வணிக மதிப்பைக் கொண்டோ அல்ல. இதில் மிக முக்கியமான அம்சம் யாதெனில் நாம் மிகக் கடினமான முடிவுகள் எடுத்தாலும் அதை முற்றிலும் மென்மையான இதயம் கொண்டு எடுக்க வேண்டும் – அதற்கு அதிகமாகவோ குறைவாகவோ இல்லாமல், எந்த அளவு தேவையோ அந்த அளவு மட்டும்

நமது அறிவும் திறமையும் சார்ந்த சிறந்த முடிவைத் தான் நாம் எடுப்போம். ஆனால் நம் முடிவுகள் நம் மனிதாபிமானத்தை மையமாக வைத்து எடுக்கப்படவேண்டும்

சரியான முடிவு என்று ஒன்று இல்லை. சிலரை நாம் நோய்த் தொற்றுக்கு உள்ளாக்குகிறோம், சிலரை இறக்கும் படி விடுகிறோம், காப்பாற்றப்பட்டிருக்க வேண்டியவர் இறந்து போகிறார், இறந்திருக்க வேண்டிய ஒருவர் காப்பாற்றப்படுகிறார் – இவை அனைத்தும் நிகழும்.

எந்த சூழலிலும் எவரும் சரியான முடிவு என்ற ஒன்றை எடுப்பதில்லை. நமது அறிவும் திறமையும் சார்ந்த சிறந்த முடிவைத் தான் நாம் எடுப்போம். ஆனால் நம் முடிவுகள் நம் மனிதாபிமானத்தை மையமாக வைத்து எடுக்கப்படவேண்டும். நாம் முன்னேறி செல்வதற்கு இதுவே சிறந்த வழி. அது சரியான முடிவா என்று நமக்கு தெரியாது. ஆனால் நம்மால் இயன்ற சிறந்ததையே எப்போதும் நாம் செய்திருக்கிறோம் என்று நமக்குத் தெரிய வேண்டும். அதற்கு குறைவான ஒன்றை எப்போதும் செய்திருக்க கூடாது.

 

ஆசிரியர் குறிப்பு: கொரோனாநோய்த் தொற்று குறித்து பதட்டமாக உள்ளீர்களா? உங்கள் உள்சூழலை நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இதுவே சரியான தருணம். ஈஷா யோகா ஆன்லைன் வகுப்பு கோவிட் வீரர்களுக்கு கட்டணமின்றி இலவசமாக வழங்கப்படுகிறது. மற்ற அனைவருக்கும் பாதி விலையில் இது வழங்கப்படுகிறது. இன்றே பதிவு செய்யுங்கள்!