ரன்வீர் சிங்: ஐயா, தொழில்நுட்பம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. நம் வாழ்க்கை முறையையே அலைபேசி மாற்றிவிட்டது என்று நான் நினைக்கிறேன். இப்போது கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் அவை பங்காற்றுகின்றன. இந்த அளவு தொலைத்தொடர்பில் ஈடுபடுவது அவசியமா என்று நான் சிலசமயம் சிந்திப்பதுண்டு. நான் ஆப்பிரிக்க காட்டில் இருந்தபடி, வடதுருவத்தில் இருக்கும் ஒருவருடன் பேசமுடியும். அவர் முகத்தைப் பார்த்தபடி பேசமுடியும்!

அதோடு இப்போது சமூக ஊடகங்களும் இருக்கின்றன. இது எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. பதினெட்டு பத்தொன்பது வயதில் இருப்பவர்கள் இதில் இப்போது அதிகமாக ஈடுபடுகிறார்கள். இவற்றை நன்றாக பயன்படுத்துவது எப்படி என்று அவர்களுக்குத் தெரிகிறது. லேண்ட்லைன் ஃபோன் பயன்படுத்திய காலத்தில் நான் பிறந்ததால், இப்போது FaceTime பயன்படுத்துவது எனக்கு பெரிய விஷயமாக இருக்கிறது. அதனால் மொபைல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் பற்றிய உங்கள் கருத்து என்ன? மனிதர்கள் முன்பு இருந்த நிலை வேறு, இப்போது நமது நீட்டிப்பாக செல்ஃபோன் இருப்பது பரிமாண வளர்ச்சியின் புதிய படிநிலையா?

சத்குரு: நாம் உருவாக்கியுள்ள ஒவ்வொரு இயந்திரமும் ஏதோவொரு விதத்தில் நமது புலன்களை நீட்டிக்கும் விதமாகவே உருவாக்கப் பட்டுள்ளது. நமக்கு கண்பார்வை இருக்கிறது, அதனால் டெலஸ்கோப், மற்றும் மைக்ரோஸ்கோப் இருக்கிறது. லேண்ட்லைன் ஃபோனில் பேசியபோது நன்றாகவே இருந்தது. ஆனால் இப்போது மொபைல் ஃபோன் அதனினும் வசதியாக இருக்கிறது, ஆனால் அது ஒரு பிரச்சனையா? இல்லை, அதில் எந்த பிரச்சனையும் இல்லை.

cellphone-smartphone-sadhguruquote-sgtamilfbpage-img

தோராயமாக முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால், நான் தொடர்ந்து பயணம் செய்துகொண்டே இருந்தபோது, எப்போதும் சாலையில் இருப்பேன், தேசம் முழுக்க வண்டி ஓட்டிச் சென்றபடி, கிராமம் கிராமமாக, ஊர் ஊராக சென்று ஈஷா அறக்கட்டளையை வளர்த்துக் கொண்டிருந்தேன். அப்போது தொலைபேசி பயன்பாட்டுக்கென சில நாட்களை ஒதுக்கியிருப்பேன். அந்த பெரிய நீலவண்ண பெட்டிகளை நீங்கள் பார்த்திருப்பீர்களா என்று எனக்குத் தெரியவில்லை - அந்த டெலிஃபோன் பூத்களில் Local, STD, ISD என்று எழுதியிருப்பார்கள். அழைப்புகள் செய்யும் நாளில், நெடுஞ்சாலையில் இப்படி ஒரு பெட்டியை கண்டுகொள்வேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

என்னிடம் நம்பர்களை குறித்துவைக்கும் டெலிஃபோன் புத்தகம் இருந்ததில்லை, ஆனால் நான் 800 முதல் 900 நம்பர்கள் வரை சுலபமாக நினைவில் வைத்திருந்தேன். அங்கு சென்றதும் 5000 ரூபாயை எடுத்து அங்கு இருப்பவரிடம் கொடுத்துவிடுவேன். அவருக்கு எதுவும் புரியாமல் திகைப்பார், நான் அவரிடம், "இதை முன்பணமாக வைத்துக்கொள்ளுங்கள்" என்பேன். சாதாரணமாக ஒரு அழைப்புக்கு ஐந்து அல்லது பத்து ரூபாய் செலவாகும். அவரிடம் நான் 5,000 ரூபாய் கொடுப்பேன் - அவருக்கு என்ன நினைப்பதென்றே புரியாது!

அந்த கருப்பான, துர்நாற்றம் வீசும் ஃபோன் அருகில் செல்வேன். சிலர் அதை வாசனை திரவம் தெளித்து சுத்தம் செய்திருப்பார்கள், ஆனால் பெரும்பாலும் அதில் பேசிச் சென்ற அனைவருடைய வாய் துர்நாற்றத்தையும் அது சுமந்திருக்கும். பிறகு நான் 4, 5 அல்லது 6 மணி நேரம் வரை பேசிக்கொண்டே இருப்பேன். ஒரு மாதத்திற்கு செய்யவேண்டிய அழைப்புகள் அனைத்தையும் செய்து முடிப்பேன்.

அழைப்புகள் செய்ய விரும்பும் மற்றவர்கள் அங்கு வருவார்கள், வெளியே இருந்து என்னை வரச்சொல்லி கையசைப்பார்கள், ஆனால் நான் ஏற்கனவே 5,000 ரூபாய் முன்பணம் கொடுத்திருப்பதால் அவரே அவர்களை கவனித்துக்கொள்வார். நான் என் அழைப்புகளை முடித்து காரில் ஏறி மீண்டும் பயணமாவேன். அவ்வளவு அழைப்புகளை முடித்தபிறகு என் விரல்களெல்லாம் வலிக்கும்.

ஆனால் இன்று யாரோ ஒருவரின் பெயரைச் சொன்னால், என் அலைபேசியே அழைத்துவிடுகிறது.

ரன்வீர் சிங்: ஆம்!

சத்குரு: இது அற்புதமானது. நான் தொழில்நுட்பத்தை பெரிதும் பாராட்டுகிறேன். சிலர் குறை சொல்கிறார்கள் என்றால், அவர்கள் தொழில்நுட்பத்தை குறை சொல்லவில்லை. அவர்கள் தத்தமது கட்டுப்பாடுகளினால் குறைபட்டுக் கொள்கிறார்கள்.

நிர்பந்தத்தினால் தவறாக பயன்படுத்துவது அலைபேசிக்கு மட்டும் பொருந்தும் விஷயமல்ல. அவர்கள் சாப்பிடத் துவங்கினால், எப்போது நிறுத்துவது என்று அவர்களுக்குத் தெரியாது. குடிக்கத் துவங்கினால், எப்போது நிறுத்துவது என்று தெரியாது. இந்த நிர்பந்தநிலை அவர்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் இருக்கிறது. இப்போது இந்த தொழில்நுட்பத்தின் கருவி ஒரு போதைப் பொருளாகிவிட்டது. ஆனால் இது பலரை குடிப்பழக்கத்திற்குள் செல்லாமலும் பார்த்துக் கொள்கிறது.

ரன்வீர் சிங்: இதில் ஒரு நல்ல விஷயமாவது இருக்கிறதே.

சத்குரு: நிர்பந்தைகளைத்தான் நாம் கையாளவேண்டும். தொழில்நுட்பம் மாபெரும் வல்லமையை வழங்குவது - அதை எவரும் குறை சொல்லலாகாது. இல்லாவிட்டால் உங்களை அந்த கருப்பு ஃபோனுடன் நீலப்பெட்டியில் போட்டுவிடவேண்டும், அப்போது உங்களுக்குப் புரியும்!

ஆசிரியர் குறிப்பு: சர்ச்சைக்குரிய சிந்தனையா, பேசினால் பிறர் தூற்றக்கூடிய விஷயம் பற்றி குழப்பமா, எவரும் பதில் சொல்ல விரும்பாததால் உங்களைத் துளைக்கும் கேள்வியா, கேட்பதற்கு இதுதான் நேரம்! சத்குருவிடம் நீங்கள் கேட்க விரும்புவதை UnplugWithSadhguru.org வலைதளத்தில் பதிந்திடுங்கள்!