ஆடிப்பெருக்கு விழா எதற்காக? (Aadi Perukku in Tamil)
உலகின் பெரும்பாலான மக்கள் அதிசயத்தக்கதாக கருதும் பலவும் மிகச் சாதாரணமாக தமிழ் மக்களின் அன்றாட வாழ்வியலோடு கலந்துவிட்டிருக்கும். அப்படிப்பட்ட ஒரு விழாதான் ஆடிப்பெருக்கு. இந்த மண்ணோடு தொடர்புடைய இந்த ஆடிப்பெருக்கு விழாவின் முக்கியத்துவத்தை பற்றி, இளைஞர்கள் இந்த மரபை தக்கவைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி நமக்கு விளக்குகிறார் சத்குரு.

மண்ணும் நீரும் மகத்தான சொத்து
சத்குரு: வணக்கம். தமிழ் மக்கள் அனைவருக்கும் ஆடிப்பெருக்கு வணக்கங்கள், வாழ்த்துக்கள். இந்த ஆடிப்பெருக்கு விழா என்பது நம் தமிழ் கலாச்சாரத்தில் மிக முக்கியமானது. மற்ற எல்லாவற்றையும் விட நமது மண், நீர் - இந்த இரண்டுமே நமக்கு மகத்தான சொத்து என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ளும் விதமாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. எப்படி என்றால், இது மழை, நீர் மற்றும் மண்ணுடன் சம்பந்தப்பட்ட ஒரு விழா. நாம் விவசாய கலாச்சாரமாக இருப்பதால், மழையால் நமது ஆறுகள் அனைத்தும் முழுமையாக பொங்கி பாயும் இந்த நேரம், இந்த பருவ மழைக்காலமானது, விவசாயம், விவசாயி மற்றும் இந்த விவசாயமே மூலமாக இருக்கும் இந்தக் கலாச்சாரத்துக்கும் மிக முக்கியமான நாளாக இருக்கிறது.
தலைமுறைகளை கடந்து பாயட்டும்
இந்த வருடத்தில் நமக்கு ஓரளவு நல்ல மழை கிடைத்திருக்கிறது; ஆறுகள் முழுமையாக ஓடுகிறது. ஆனால், இந்த ஆறுகள் எப்போதுமே இப்படி கண்ணுக்கும் நெஞ்சுக்கும் நிறைவாக இருப்பது போல நாம் வைத்துக்கொள்ள வேண்டுமென்றால், இதற்கு நாம் சிறிது செயல் செய்யத் தேவை இருக்கிறது. நம் அடுத்த தலைமுறைகளுக்கு கூட இந்த ஆறுகள் முழுமையாக கிடைக்க வேண்டும். இந்த நாட்டில், இந்த மண்ணில் - இந்த தமிழ் மண்ணில் - நமது கலாச்சாரம், நமது விவசாயம், நமது தெம்பு என அனைத்தும் பல தலைமுறைகளுக்கு நல்லபடியாக நடக்க வேண்டுமென்றால், நமது மண் மற்றும் ஆறுகளை நாம் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்.
Subscribe
மரமே வரம்
இந்த நோக்கத்தில் - உங்களுக்கு ஏற்கனவே தெரியும் - இந்த காவேரி கூக்குரல் என்ற ஒரு இயக்கம் நடந்திருக்கிறது. மிக வெற்றிகரமாக நடந்திருக்கிறது. கடந்த வருடத்திலிருந்து இந்த வைரஸ் எனும் ஒரு மஹாமாரி (தொற்று நோய்) இருந்தாலும்கூட, நமது தன்னார்வத் தொண்டர்கள் தொடர்ந்து இந்த நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். 2020ம் ஆண்டில் ஒரு கோடியே பத்து லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு நமது விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வருடம், இரண்டு கோடி இருபது லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க இருக்கிறோம். இந்த காவேரி வளையபகுதியிலயே இவ்வளவு நடக்கப்போகிறது. இதில் நீங்கள் அனைவருமே எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு ஈடுபடவேண்டும்.
இனி இளைஞர்கள் வசம்
நமது இளைஞர்கள் மாதத்தில் ஒரு நாள் விவசாயிகளை அணுகி, அவர் என்ன செய்கிறாரோ, அவருக்கு உதவி செய்யும் விதமாக அவருடன் இருந்து, விவசாயம் என்றால் என்ன என்பதை நாமும் புரிந்து கொள்வதைப் போல ஒரு செயல் செய்தால், மிக நன்றாக இருக்கும்.
தமிழ் இளைஞர்கள் அனைவரையும் நான் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் மாதத்தில் ஒரு நாளாவது ஒரு கிராமத்துக்கு சென்று, அங்கே என்ன நடக்கிறது, மக்கள் எந்த மாதிரியான வாழ்க்கையை வாழ்கிறார்கள், விவசாயம் எப்படி நடக்கிறது, நமது ஏழை மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை கொஞ்சம் நீங்கள் கவனிக்க வேண்டும். இது ரொம்பத் தேவையானது. இந்த ஆடிப்பெருக்கு என்பது, இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் இந்த சம்ருத்தியை கொண்டாடும் ஒரு நாள். இந்திய தேசத்தின் இந்த தென் பகுதியில் இவ்வளவு சம்ருத்தியான ஒரு இயற்கை நமக்கு கிடைத்திருக்கிறது. இதை நாம் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். இதை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால், நமக்கு மண்ணுடன், நீருடன், இயற்கையுடன் ஒரு தொடர்பு வரவேண்டும். எனவே இளைஞர்கள் கட்டாயமாக இந்த ஒரு படி எடுக்க வேண்டும் என்று நான் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்.
நமது நீர், நமது மண் இதை நாம் காப்பாற்றிக் கொள்ளவில்லை என்றால் நமக்கு எதிர்காலம் இல்லை. இது சம்ருதியாக இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என பார்க்க வேண்டும்.
அனைவரும் ஏற்க வேண்டிய உறுதி
நமது வாழ்க்கை மற்றும் தமது வருங்கால சந்ததியினரின் வாழ்க்கையையும் கவனத்தில் வைத்து இந்த ஆடிப்பெருக்கு நாளில் தமிழ் மக்கள் அனைவரும் ஒரு உறுதி எடுக்க வேண்டும். நமது நாட்டில், நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஆறுகள், குளங்கள், கிணறுகள் என நீர்நிலைகள் அனைத்தையும் நாம் ஒரு நல்ல நிலையில் வைத்துக் கொள்வதை உறுதி செய்யவேண்டும். நம்மால் எந்தளவு முடியுமோ, அந்தளவுக்கு செய்து இவற்றை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவருக்கும் ஆடிப்பெருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்புடைய பதிவு:
ஈஷா வித்யா பள்ளியில் ஆடிப்பெருக்கு திருவிழா… சில பதிவுகள்
ஆடிப்பெருக்கு திருவிழா தமிழகம் முழுவதும் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டுவரும் நிலையில், ஈஷா வித்யா பள்ளியில் மாணவர்கள் ஒன்றிணைந்து கொண்டாடி மகிழ்ந்த ஆடிப்பெருக்கு விழா பற்றி புகைப்படங்களுடன் சில வரிகள் உங்களுக்காக!